Sunday, August 30, 2020

 

கவியும் காதலும்

(ஜி. அழகிரிசாமி.)

குரு நாட்டுக்கும் அவந்திக்கும் நடக்கும் போர் உச்சநிலை அடைந்திருக்கும் சமயம்.
அவந்தி வேந்தன் அமரசிம்மனது மகன் குமாரசிம்மன் போர்க்களத்தில் எதிரிகள் வசம் அகப்பட்டு விட்டான். கடுமையான போரின் கெழ்ச்சி ஒருபுறம். இன்னொரு புறமாக, குருநாட்டுப் படையின் ஒரு பகுதியினர் இரகசியமாய் எப்படியோ அவந்தி மன்னன்
அரண்மனைக்குள் புகுந்து விட்டனர். அவ்வீரர்கள் கொள்ளை யடித்து வந்த விலை மதிப்பற்ற பல பொருள்களிலும் விசேஷமான வைரக்கல் ஒன்றிருந்தது. அந்த வைரமணி குருநாட்டு ராஜகுமாரி பிரேமாதிக்கு அனுபவிக்கக் கிடைத்தது.

குமாரசிம்மன் குருநாட்டில் சிறையில் அடைக்கப்பட்டான். அவன் ஒரு பிறவிக்கவிஞன்; கலைப்பித்தன். கடமைக்காக போர்க்களத்தில் சேனைத்தலைமையை வகித்தானே ஒழிய, அவன் மனம் கனவிலும் அற்ப சண்டை சச்சரவை, விரோதபாவமுள்ள அபிப்பிராய பேதத்தைக் காணச் சகியாது. இப்பொழுது அந்த இளவரசன் கைதியாய் விட்டான். அதனால் தன் கௌரவத்திற்குப் பங்கமென்று அவன் கருதவில்லை. எப்படியும்
தன் தாய்நாடு வெற்றி யடையவேண்டும் என்பதே அவன் சோக்கம். ஆனால் அவன் கவிதை யுள்ளத்தில் எழும் உணர்ச்சி அலைகளின் மோதலையும் இயற்கை யன்னையின் மேனிவனப்பை தன் நண்ணிய கண்களால் துருவிக் காணும் பார்வையும் தடுக்கும் சிறைக் கூடத்தின் சுவர் அவன் மனத்தை பாரக்கல் போல் அமுக்கிக் கொண்டிருந்தது. சிறைக்கதலின் கம்பிகள் வழியாகப் பார்த்தால் அரண்மனையின் மாடி தெரியும். அவன் புறக்கண்கள் வாசஞ் செய்யும் பிரதேசத்தின் எல்லை அதுதான். இனிமேல் சிறைக் கதவின் கம்பிகள் நாம் அவனுக்கு சோலை விருக்ஷங்கள்! கதவுகள் காற்றில் அசையுமபோது ஏற்படும் குரூர ஒலியைக் குயில் பாட்டாகப் பாவித்துக் கொள்ள வேண்டியது தான்.

ஒரு மாத சிறைவாசம் கழிந்தது. இன்னும் போர் நின்றபாடில்லை.

ஒருநாள் மாலை, அரண்மனை மாடியின் மீது மஞ்சள் வெயில் அடித்துக்
கொண்டிருந்தது. குமாரசிம்மன் தன்னை மறந்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவனாய் அரைப் பார்த்துக் கொண்டிருந்தான். இன்று தான் அவன் கண்கள் ஒரு இயற்கையின் சொரூபத்தைக் காணப்போகின்றன. மாடியில் பிரேமாதி அந்த மஞ்சள் வெயிலை வெல்லும் தன் மேனியின் பொன்னிறம் அழகு சிந்த, கண்களிக்கும் கோலத்தில் நடந்து சென்றாள். போகும் போது அவன் திரும்பிப் பார்க்கையில் குமாரசிம்மன் அவளுடைய வதன ஒளியையும் மனதைக் குளிர்விக்கும் கடைக்கண் நோக்கத்தையும் காண முடிந்தது. அவள் கூந்தலின் கருமையின் நடுவில் பிரகாசித்துக் கொண்டிருந்தது அவந்தி நாட்டு வைரமணி. அந்த மோஹனரூபி சிறிது நேரத்தில் அவன் காட்சியினின்றும் மறைந்தாள்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் இரவு வரும். அப்பொழுது வானத்தில் விண்மீன்கள் வெடித்தெழும். ஆனால் அவற்றிற்கு முன்னதாகவே கவிஞனது உள்ள வானில் கற்பனை நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெகு வேகத்தில் வெடித்து ஒளி வீச ஆரம்பித்தன. அன்று அவன் கண்ட ஜீவனுக்கு பெண் என்ற பெயரோடு வேறொரு பெயரும் உண்டு. அதுதான் 'இயற்கையின் உவமைப் பொருள்' என்பது. அதை இயற்கை யென்றே அழைக்கக் கவிஞன் தீர்மானித்தான். அவன் கருங்கூந்தலின் சுருள்களிடையே மிளிரும் நீல ஒளி மேற்பரப்பில் உருகி வழிந்தது. அதன் நடுவில் ஒளி வீசிய அந்த வைரத்தை, நீலவானின் நடுவில் பிரகாசிக்கும் சூர்யன் என்றால் பொருந்தாதா? அவள் கூந்தலில் சுருள்களால் ஏற்பட்ட மேடுபள்ளங்கள் மேக வரிசைகள் போலில்லை? அவளுடைய சரீரத்தின்
கனகவர்ணத்தின் சோபையைவிட குமாரசிம்மனுக்கு பாலசூரியப் பிரகாசம் விசேஷமாகத் தெரியவில்லை. பகற்காட்சிக்குப் பிரதிநிதியாக அவள் தலைக்கோலம் விளங்கியது. முகத்தை சிறிதே திருப்பினாள். அவள் முகத்தில் ஒளி உமிழும் சந்திரகலை வீசியது. அவள் பசும்பட்டு தரித்திருந்தாள். குமாரசிம்மன் அவளிடத்தில் கால வேறுபாடுகளை, பசும்புல் வெளியை, வானத்தின் பேரழகை எல்லாவற்றையும் பார்த்து விட்டான். இவ்வழகியின் குரலும் கானமும் எவ்வாறிருக்குமோ என ஏங்கினான்

கைதி மாடியிற் சென்ற பெண்ணை யாரென்று ஒரு வேலைக்காரன் மூலம் அறிந்தான், அவன் மேலும், இரவில் நிலாமுற்றத்தி லிருந்து அவள் வீணை வாசிப்பது வழக்கம் என்றும் கூறினான். அவனால், கைதிக்குத்தான் விரும்பிய வண்ணம் எழுத்தாணியும் பனையோலையும் கிடைத்தன. அதில் தன் உள்ளத்தைச் சிந்தி எழுதினான். அதை அரசகுமாரியிடம் எப்படியா சேர்த்து விட வேண்டும் என்று என்று ஒரு வேலைக்காரனிடம் கொடுத்து வேண்டிக்கொண்டான்.

பஞ்சமளியில் படுத்திருக்கும் பிரேமாதி தன் கூந்தலிலிருந்து வைரக்கல்லை எடுத்துக் கையில் வைத்துத் திருப்பிப் பார்த்துக்சொண்டே. களித்தாள். சிறிது நேரத்தில் அவளுடைய உள்ளத்திற்கு அந்த வைரம் அவளது கற்பனை வாயிலாக மௌனமாகவே ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது.

"அவந்திநாட்டு வேந்தன் அமரசிம்மன் திருமணம் செய்துகொண்ட சிறிது நாட்களுக்குப் பிறகு அவனது பிறந்த தினக் கொண்டாட்டம் வந்தது. பற்பல நாட்டு
மன்னர்களிடமிருந்து பல உயர்ந்த பரிசுகள் அவனுக்குக் கிடைத்தன. நான் (வைரம்) ஒரு அரசனால் மனமுவந்து கொடுக்கப்பட்ட பரிசு. மகிழ்ச்சியோடு அமரசிம்மனது செங்கோல் தாங்கும் கரங்களில் விளையாடினேன்.

''அன்று இரவு வந்தது. அரசன் தன் தேவியோடு சயனகிருஹத்தில் குலாவிக் களித்துக் கொண்டிருந்தான். தன் மனம் தெவிட்டும் வரைக்கும் பெண்மையின் காதல் ரசத்தைப் பருகினான். இயற்கையின் கட்டளைக்கு இருவர்களும் அடிமைகள் ஆனார்கள். சிறிதுநேரம் சென்றது. ராணியின் கூந்தலில் இருந்த மலர்களை எடுத் தெறிந்துவிட்டு, அரசன் தன்னுடைய கைகளால் என்னை அவள் தலையில் சூட்டினான். அவள் தலையில்
இல்லற தர்மத்தின் நடுவில் ஒளிரும் பதிவிரதை போன்றிருந்தேன்.

''ஒருகாள் என்னை அரண்மனை பொக்கிஷத்தில் மூடி வைத்தார்கள். அதைச் சிலர் முரட்டுத்தனமாய் உடைத்துவிட்டு என்னையும், பொன் ஆபரணங்களையும், சில முத்தாரங்களையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். இப்பொழுது உன்னிடம் நான் ...

"அவந்தி மன்னனுக்கு சிற்றாசன், என் மூலம் தன் நட்பைத் தெரிவித்தான். பின் நான்
காதலின் மேன்மையை உணர்ந்த ராணிக்குக் கொடுக்கப்பட்டேன். இப்பொழுது ராணியின் காதற்பொருள் பறிக்கப்பட்டது. அவள் படும் துன்பம் உனக்குத் தெரியுமா? உனக்கு எவ்வளவு கல்மனம். ராஜ குடும்பத்து ஜன்மங்களுக்கே மனிதக் கஷ்டத்தின் குரூரம் தெரியமாட்டேன் என்கிறது. சீ, நீங்களும் ஒரு பிறவி.......”

கதை ஒரு தோழியின் பிரவேசத்தால் நின்றுவிட்டது. கதைக்கும் உண்மை நிகழ்ச்சிக்கும் சம்பந்த முண்டா இல்லையா என்பது நமக்குத் தெரியாது.

தோழி, “அம்மா, உங்களிடம் கொடுக்கும்படி ஒரு சேவகன் இதைக் கொடுத்தான்" என்று குமாரசிம்மன் எழுதிய கடிதத்தைக் கொடுத்தாள். அதில் கீழே காணும் பாட்டு எழுதப்பட்டிருந்தது.

"மாலை வெயில்படியும் மணிமாடம் மீதின்று

நீலக்கருங் கூந்தல் நெளிவால், கடைச்சுருளால்

என்னை மயக்கி, ஏதுமறியா நிலையால்

தன்னை மறந்து தவித்து பலவாய் உழலும்

உள்ளம் எனக்கீந்த ஒண்ணுதலோய்! யௌவனத்தின்

வெள்ளப் பெருக்கே! என்வேட்கை மிகுதியினை

துள்ளியெழும் கவியிற் சொல்லுவேன், சோலைகளில்

கள்சொறி பூச்சூடும் கமலமலர்க் கண்ணோய்! கேள்.

மதியின் ஒளிவீழும் மாடத்தே நீங்கி எந்தன்

எதிரிருந்து இன்பவழ எழிலார் இதழ்விரித்து,

கவிஞன் மனமகத்தே கனிந்தூறும் சொல்ரசம்போல்

புவியோர் மனம்கவரும் பூங்குயில்கள் நாணமுற,

எந்தன் மனத்தின் இருளும் மறைந்தொழிய

சுந்தரச் சொல்லொன்று நீ சொல்லுகையில் யான் கேட்க

பலகணமும் காத்திருப்பேன் பாவாய்! ஒருமொழியும்

சொலநானும் பேதையர் நீர்; சொல்லுவதால் குற்றமிலை

ஆசைநிறை வேறாதென் ஆருயிரே மாய்வதினும்,

பேசிஉந்தன் நாணில் பிழைத்தாற் வழியுமுண்டோ?"

 

கன்னியின் குரலை, வார்த்தையைக் கேட்கக் கவிஞனுக்குத் தாகமாய் விட்டது.

அரசகுமாரியின் உள்ளத்தில் பற்பல அர்த்தமற்ற உணர்ச்சிகளின் வேகம், படபடப்பு, அவளுக்கும் கவிதை யுள்ளமுண்டு. இருவருடைய உள்ளங்களும் ஒன்றோடொன்று தழுவ ஆரம்பித்தன. ஏன்? மறுநாள் இருவருந்தான். இது வரைக்கும் அரசகுமாரி கைதியைப் பார்க்கவும் இல்லை.

அன்றிரவே கைதியைச் சந்தித்தாள். அப்பொழுது என்ன நடந்த தென்பதைத் தெரிவிக்கவும் இயறுமோ? காதல் சம்பாஷணையை ஒருவன் வாயிலாக அறிவதைக் காட்டிலும் ஊகித்துக்கொள்வது எவ்வளவு மேன்மை!

யுத்தம் சமாதானத்தில் முடிந்தது. சமாதான நிபந்தனைகளில் நாம் அறியவேண்டியது இவை தாம். ''அவந்தியில் கொள்ளை யடித்த பொருள்கள் திருப்பிக் கொடுக்கப்படவேண்டும். அவந்தி இளவரசன் குமாரசிம்மனுக்கு குருநாட்டு ராஜகுமாரி பிரேமாதியை இரு வேந்தர்களின் நட்பிற்கறிகுறியாய் மணம் முடித்துக்கொடுப்பது." பழையபடி தனது நாட்டுக்கே வைரக்கல் போய்ச் சேர்ந்தது.

திருமண நாள், சடங்குகள் எல்லாம் முடியும் சமயம். அவர் திராணிதன் மருகி பிரேம ரதி தலையில் வைரத்தைச் சூட்டினாள். ராணி தன் நாயகனோடு அனுபவித்த காதல் மாயும்போது, உலகத்தில் அந்த இடத்தை நிரம்ப அவ்விரு யௌவன சொரூபங்களும் காத்திருந்தன போலும்.

ஆனந்த போதினி – 1942 ௵ - பிப்ரவரி ௴

 

No comments:

Post a Comment