Sunday, August 30, 2020

 கவிபாடும் திறம்

 

கவி பாடுந் திறமே கல்வித்துறை அனைத்திலும் மேலானதென நன்குமதிககப்பட்டுள்ளது. மனிதர் கவிஞரை ஒருவாறு சுவர்க்கலோக வாசிகளைப் போல் எண்ணிப் போற்றிப் புகழ்கிறார்கள். எந்த நாட்டிலும் பழைய காலக் கவிஞர்களே மேலானவர்களெனக் கொண்டாடப்படுகிறார்கள். இது தீராத ஒரு விந்தையே!

 

மற்றக் கல்வித் துறை அனைத்திலும் மனிதர் நாளடைவில் தேர்ச்சி பெற்றுவரக் கவிபாடுந் திறம் ஒரே முறையில் இருந்தாற் போலச் சிலருக்கு முதிர்வரமாக அமைந்ததாலோ, அல்லது நானா தேசத்தாரும் அவரவர், பழங்காவியத்தைப் புதிதாய்க் கண்டு அகமகிழ்வடைய, அவர்கள் பின்னோரும் யாவரு மொப்ப அதன் அருமை பெருமையைக் கொண்டாடி வருவதாலோ, அல்லது எப்பொழுதும் வேறுபாடின்றி ஒன்றாயிருக்கிற உலக விநோதத்தையும், உள்ளத்தின் மாறுபாட்டையும் விவரிப்பதே செய்யுளிலக்கணத்தின் கருத்தாயிருக்கிறதால், பழங் கவிஞர்கள் முக்கியமாய்க் குறித்துக் கொள்ளத்தக்க பொருட்களைத் தப்பவிடாமல் கவிகளில் புனைந்துரைத்தும், நேரில் நிகழ்ந்த செய்திகளைப் புகுத்திக் கதை கட்டியும், புதிய கவிஞருக்கு முன்பாடிய சங்கதிகளைத் திருப்பிப் பாடவும், முன் உள்ள கற்பனைகளைப் புதிதாகப் புணர்த்தவும் வகையின்றி மூலகவி இயற்ற விஷய மொன்றும் விட்டிராததாலோ - யாது காரணத்தால் பழைய கவிஞருக்கு மேலான தன்மை அமைந்ததென்று அறியக்கூடவில்லை. எதுவானாலுஞ் சரி. பழங் கவிஞர்கள் நிகழ்ந்தசெய்திகளையும் நேரிற் கண்ட பொருட்களை யுங் கொண்டு கற்பனை நயஞ்சிறக்க, பொருள் செறிந்த மொழிகளைப் பொறுக்கி யெடுத்துப் பாடினர். புதிய கவிஞர் இல்லாத பொருட்களையும் சொல்லணி சிறக்கப் பாடுவர்.

 

இவ்வாறு கண்ணிய மிகுந்த கவிஞர் வகுப்பில் நானும் சேர விரும்பினேன், பழங் காவியங்கள் பல வாசித்தேனாயினும், உயர்பத வாஞ்சையானது பழைய செய்யுட்களை விட்டு உலக இயற்கையையும், மனித இயற்கையையும் உற்று நினைந்து ஆய்ந்தறிய என் உள்ளம் ஆவல் கொண்டது. நான்கவிபாடக் குறித்த விஷயம் உலகம். அதைக் கேட்போர் மனிதர். நான் முன்கண்டிராததை விவரிக்க வல்லவனாவது முடியாத காரியம். மனிதர் விருப்புவெறுப்பையும் சித்த விருத்தியையும் தெளிய உணர்ந்தாலன்றி, அவர்கள் உள்ளத்தில் உவப்புண்டாக்கவும், திகிலெழுப்பவும் ஆசைப்படுவது வீண்.

 

கவி வல்லோனாகும்படி பிரதிக்கினை செய்து, விஷய மனைத்தையும்புதிய அபிப்பிராயத்துடன் பார்த்தேன். என் கருத்தைக் கவரும் துறைகள் இருந்தாற்போல் விரிந்தன. எவ்வகை அறிவையும் அலட்சியமாய் விட்டு விடவொண்ணாதெனத் தோன்றியது. மனோ சங்கற்பங்களையும் உவமானங்களையும் நாடிக் காடேறி மலையேறித் திரிந்தேன். காட்டு மரமத்தனையும் மலர்வகையனைத்தும் என் மனதில் சித்தரித்தாற் போலப் பதிந்தன. எனக்குச்செங்குத்தான குன்றுக் குவடானாலுஞ் சரி- அரச மாட மாளிகைகளின் தூபியானாலுஞ் சரி - இரண்டையும் உயர்வு தாழ்வு பாராமல் ஒன்றுபடுத்தி நிதானமாய்க் கவனித்தேன். சில வேளை சுற்றிச் சுழன்று செல்லும் சிற்றாற்றங்கரை வழியாய்ப் போய் அலைந்து திரிந்தேன். சில வேளை வேனிற் காலத்துமேக மாறுபாட்டை உன்னிப்பாய்ப் பார்த்தேன். கவிஞனுக்கு எதுவும் வீணாய்ப் போகாது.

 

சிறப்புள்ளது எதையும், திகிலுண்டாக்குவது எதையும் அவன் சிந்தைதெளிய அறிந்திருக்க வேண்டும். அச்சமுண்டாகும்படி பருத்தும், விசித்திரமாய்ச் சிறுத்து மிருக்கும் எல்லாப் பொருட்களையும் அவன் பழகித் தெரிந்திருக்க வேண்டும். உத்தியானத்திலுண்டாம் மூலவர்க்கம், வனத்தில் திரியும் விலங்கினம், நிலத்தினுள் விளையும் தாதுவகை, விண்வீழ் கொள்ளிஇவை முதலிய எண்ணித் தொலையாப் பொருள் விகற்பங்களின் அறிவைஅவன் மனமெனும் பண்டசாலையில் சேமித்து வைத்திருக்க வேண்டும். நீதி சித்தாந்தத்தையும் மத சித்தாந்தத்தையும் வலியுறுத்திக் காட்டுதற்கும் அணிந்துரைப்பதற்கும் ஒவ்வொரு கருத்துப் பொருளும் பயன்படும். முதிர்ந்த அறிவுடையோருக்குத் தாமுணர்த்தும் விஷயத்தை அதன் உறுப்பு அனைத்தும் அணியாக விளங்குமாறு வருணிக்கவும், வாசிப்பவருக்கு தூரசம்பந்தமான குறிப்புகளைத் தோற்றுவித்து முன் நினைக்காத புதிய கல்விப் பொருளை யுணர்த்தி இன்பம் விளைவிக்கவும் மிக்க நாவளம் வேண்டும்.

 

ஆதலால் உலகப் பொருள் யாவற்றையும் கருத்தாய் ஆராய்ந்தறிந்தேன். நான் போய்ப் பார்த்த ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கவிபாடுந் திறம் அமைவதற்கு அனுகூலமான சாதனங்கள் சில அறிந்தேன்.

 

கவிவல்லோனுக்குரிய தொழில் பொருட்களைத் தனித்தனிப் பிரித்தல்ல, சாதி சாதியாய் வகுத்துணர்வது; எளியதையும் பெரியதையும் குறிப்பிடுவது; பூவரசம் பூவிதழில் உள்ள இரேகைகள் கவிராயன் நெஞ்சில் பதிந்திரா. மரச்சோலைப் பசுமையின் பற்பல வேறுபாட்டை அவன் விரித்துரைக்கிறதில்லை. உலகப் பொருளில் எளிதில் புலப்படும் முக்கிய குணங்குறிகளை அவன் சித்திரிக்கும் படத்தில் எத்திறமையோர்க்கும் தெளிய விளக்கவேண்டும்; நுணுக்கமாகப் பகுத்துணரும் நுட்பங்களை ஒருவன் கவனிப்பான், ஒருவன் கவனியான் - கவிஞன் அவைகளைக் குறிப்பிக்க வேண்டுவதில்லை. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் ஆகிய இருதிறத்தார்க்கும் தடையறப் புலப்படும் இலட்சணங்களைத் தப்பாமல் விளக்க வேண்டும்.

 

ஆயினும் இயற்கை யறிவு என்பது கவிஞனுக்குத் தெரிந்திருக்கவேண்டிய கல்வியில் ஒரு பாதியாகும். அவன் நானாவிதமான உயிர்பிழைத்தற்குரிய வழிகளையும் உணர்ந்திருக்க வேண்டும். அந்தந்த நிலைக்குரிய இன்பதுன்பங்களை அளவிடுவதும், காமக்குரோத முதலிய விகாரங்களின் சக்தியை அவற்றின் புணர்ச்சிகள் யாவற்றிலும் கண்டறிவதும், ஊக்கம் வளரும் இளம்பருவந் தொடங்கி, ஊக்கந்தளரும் முதிர்பருவமளவும் குலாசாரசார ஏற்பாடுகளாலும், தேசாசார தேசோஷ்ண சீதசித்தியாய் விளையும் அனுகூல பிரதிகூலங்களாலும் மனதிற்குண்டாகும் விகாரங்களைத் தொடர்ந்து அறிவதும் கவிவாணர் தொழிலுக்கு இன்றியமையாததாம்.

கவிஞன் தன் தேசத்திலும் காலத்திலும் தலைப்படும் துரபிமானத்தைக் களைந்து விட வேண்டும். பொருந்தும் - பொருந்தாத் தன்மைகளைக் கண்டு சிந்திக்க வேண்டும். தற்கால விதிகளையும் அபிப்பிராயங்களையும் கவனிக்காமல், எப்பொழுதும் மாறாதிருக்கும் நல்ல முடிவுகளை நினைக்க வேண்டும். அதனால் அவன் பெயர் பிரசித்தியாகாததை நினைத்து உள்ளஞ் சலிக்காமல் ஊக்கமே கொண்டு உழைத்திடவேண்டும். தன் காலத்திலுண்டாம் புகழைப்பெரிதெனப் பாராட்டக்கூடாது. தன் செய்யுளின் சுவையைப் பின்னோர் கண்டு இகழ்ந்தாலுஞ் சரி, புகழ்ந்தாலுஞ் சரி என்று சமசித்தமாயிருக்க வேண்டும். தன் செய்யுளைப் படிப்பவர்கள் அதன் அருமை பெருமைகளைக் கண்டு, 'இந்தக் கவிஞன் உலக விரிவுரையாளன்; மக்களுக்கு உறுதிகாட்டுவோன்' என்று மனமொத்துக் கொண்டாடும்படி அவன் செய்யுள் இயற்ற வேண்டும். காலம் இடம் எனும் இரண்டின் பற்றறுத்து உயர்ந்து, பின்னோர் மனப்போக்கையும், ஒழுக்க வழக்கங்களையும் செம்மைப்படுத்துபவன் நானே யென்று அவன் நினைத்துக் கொள்ளவேண்டும்.

 

கவிஞன் தொழில் இம்மட்டில் ஒழிந்து போகவில்லை. அவன் பல மொழிகளிலும் நூல்களிலும் பயின்றிருக்க வேண்டும். தன் கருத்துக்கேற்பப் பெருமிதமான மொழி நடை தனக்கு அமையும்படி அவன் இடையறாது எழுதிப்பயின்று, அடுக்கடுக்கான அழகிய மொழித் தொடர்களையும், இன்சொற்புணர்ச்சி எழிலையும் வழக்கப்படுத்தியிருக்க வேண்டும். (இது ஜான்ஸன் பண்டிதர் வாக்கு.)

 

ஆனந்த போதினி – 1931 ௵ - ஜுலை ௴

 

No comments:

Post a Comment