Sunday, August 30, 2020

 

கவிஞன் ஒரு பிரமனல்லவா!

(வி. செல்வராஜ்.)

வானத்தை வேண்டுமென்றாலும், அளந்து விடலாம், கவிஞனின் கற்பனையை மட்டும் அளந்துவிட முடியாது என்றே சொல்லுவேன். நஞ்சிலும் அமிர்தம் எடுப்பான், அமுதிலும் நஞ்சு காண்பிப்பான் தன் திறமையினாலே. எங்கும் நிறைந்த ஆண்டவனை ஒரு சிறு துரும்பாகவும், துரும்பைத் தூணாகவும் ஆக்கவல்ல ஆற்றல் கவிஞனுக்கே உண்டு. நீங்கள் கவனியாது காலாலே மிதித்துச் செல்லும் ஒரு சிறு பசும்புல்லை, உங்கள் முன்னே ஒரு பெரு வள்ளலாக மாற்றிக் காண்பித்து விடுவான். அது அவனின் ஜால வித்தையல்ல, மந்திர சக்தியுமல்ல. எல்லாம் அவனின் அளவிட முடியாத கற்பனை. அவனின் கற்பனையின் முன் இவ்வுலகம் ஒரு சிறு அணுவளவுதான். சாதாரண
விஷயங்களையும் நாம் கூர்ந்து நோக்கி மகிழும்படி நம்மை மயக்கி விடுவான். அனேகமாக எல்லாவற்றையும் இனியவையாக காண்டலே அவனின் இயல்பு.

அதற்கு ஒரு சான்று இங்கே காண்போம். வயல்களிலே
வண்டுகள் சுற்றித் திரிகின்றன. அதன் பக்கத்திலே உள்ள சோலையில் கிளிகள் பறக்கின்றன. அந்தப் பக்கமாக நாம் போக நேரிடுகின்றது என்று வைத்துக் கொள்ளுவோம். நாம் காண்பது இவற்றைத்தான். ஏன் அதுவுங் கவனிக்கமாட்டோம் என்றே எண்ணுகிறேன். ''எதோ இருந்தது, வயலுக்குப் பக்கலிலே மரங்களிருந்ததாக ஞாபகம்” என்று கூட சந்தேகத்தோடு தான் கூறுவோம். 'அந்தத் திருட்டு ராஸ்கலைப் போய்ச் சொல்லுகிறேன். ஏய்த்துக்கொண்டே வருகிறான்” என்றாவது "வட்டியையாவது காலாகாலத்திலே கொடுத்து விட்டானானால் சும்மா யிருக்கலாம்; பெரிய ஆசாமியாக வல்லவா இருக்கிறான்? பயல்" என்றாவது தான், அவ்வழியாகச் செல்லும் நாம் நம் வேலையைப்பற்றி எண்ணிக்கொண்டு செல்லுவோம். இதோ ஒரு கவிஞன் அவ்வழிச் சென்றான். அவன் பார்த்தவற்றைக் கூறுகின்றான் கவிரூபமாக.

பச்சைக்கம்பளம் விரித்தது போன்று வயல்கள் கண்ணுக் கெட்டிய தூரம் பச்சைப் பசேலென்று தோன்றுகிறது. தூரத்தே தெரியும் அடிவானமும் இப் பச்சை நிறத்தோடு கலந்து கலந்து தோன்றுகின்றது. இந்த அழகு பொருந்திய வயல்களிலே தேன் வண்டுகள் பண்ணிசைக்கின்றன. அதன் இன்னிசை தான் தேவகானம்போல் கேட்பவரின் இதயத்தைப் புளகாங்கித மடைவிக்கின்றது. அதன் இனிய கானத்தை அந்த அத்துவானத்திலே யார் கேட்டு மகிழப் போகின்றார் என்று சந்தேகப்பட வேண்டாம். அதோ பற்பலவித வர்ணப்புடவைகள் அணிந்த இளம் பெண்களாகிய பூக்கள் மனமிளகக் கேட்டுக்கொண் டிருக்கின்றனர். தங்கள் மனமாகிய இதழ்களை விரித்து வண்டுகளின் ரீங்காரத்தைக்
கேட்டு ஆனந்தித்திருக்கின்றன.

சங்கீத வித்வான் சரமாரியாக ஒரு ராகத்தை செய்து முடித்தவுடன் என்ன செய்கிறோம். அவரின் சாமர்த்தியத்திற்கு மெச்சி, பரிசில் கொடுக்கின்றோம். பரிசில் அளிக்க முடியாதவர்கள் கையைத் தட்டியாவது உற்சாகப் படுத்துகிறோம். பூக்கள் என்ன நம்மிலும் தாழ்ந்தவைகளா என்ன? தேவமங்கைகளின் பிரதிநிதிக ளல்லவா அவைகள்? ரீங்கார கானம் தந்த வண்டுகளாகிய பாடகர்களுக்கு சரியான பரிசில் ஈய எண்ணின.
பூக்களிடத்தில் உள்ள மதிப்புள்ள பொருள் எது? நம்மைப் போல் கேவலம் மெடல்களையாவது, பணத்தையாவது பரிசிலாக அவை கொடா! தன்னிடத்துள்ள
மதிப்பான ஒன்றையே அவை ஈயும். ஆமாம். தன் விலைமதிப்பற்ற கடிமணத்தை வீசி அவ் வண்டுகனை தன்னிடத்தே தலையசைத்து அழைத்து வெகு நாட்களாக வெகு அருமையாகச் சேகரித்து வைத்திருந்த தேவாமுதம் போன்ற தன் தேனை அவைகளுக்கு நல்குகின்றது. வண்டுகளும் தங்கள் ரீங்காரத்தை மறந்தனவாய், பூக்களின் மடிகளிலே தங்கி, அங்கு எழுந்தென்றலிலே, பூக்கள் மெல்லென தொட்டில்போல்
ஆடிக் கொண்டிருக்கும் போதே அத்தேனை வயிறார உண்டு மகிழ்ந்து திரிகின்றன.

மேற்சொன்ன சங்கீதக் கச்சேரியைப்பற்றிக் கேட்டோம். அவ்வியற்கை எழிலிலே அங்கு மட்டும் அக் கச்சேரி நடந்து கொண்டிருந்ததாக எண்ண வேண்டாம். அதேபோல அவ்
வயல்களை யொட்டிய ஒளிர் சோலையிலும் நடந்து கொண்டிருந்தது. ஒரே இடத்தில் ஒரே பாகவதரின் சங்கீதத்தையே கேட்டுக் கொண்டிருக்கவும் முடியாது. அப்பாடகர் என்ன தான அருமையாகப் பாடினாலும், ''அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகி விடு மல்லவா! வேறு வேறு சக்தி வாய்ந்த பாடகர்களை வரவழைத்துக் கேட்கிறோ மல்லவா! இது தவிற ஓவ்வொரு கூட்டத்தாருக்கும் வெவ்வேறுவிதமான இசையே இன்பத்தைத் தரும்.
சிலருக்குச் சினிமாப் பாடல்கள் தான் பிடிக்கும். சிலர் தியாகராஜக் கீர்த்தனங்களைக் கேட்க விரும்புவார்கள். இது இயற்கை. இதுபோலவே தான் எங்கும்.

பூக்கள் வண்டுகளின் ரீங்காரத்திலே தான் இன்பங் கண்டன. அச் சோலையிலுள்ள மரங்களுக்கும் அதுபோலவே இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அவைகள் விரும்புவது வேறு பாடகர்களை. அவர்கள் தான் இனிய சொற்கிளியும், கம்பீரமான கீத மெழுப்பும் நாகணவாய் பறவையு மாகும். அங்கு சோலையிலே அவைகள் கீதங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. மனத்தை உருக்கும் அவற்றின் இனிய பாடல்களை கேட்டு ஆனந்தத்திலே தலையசைத்து ஆமோதிப்பது போல மரங்களின் கிளைகளெல்லாம் காற்றிலே ஆடிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு ஆர்வத்துடன் பாடல் கேட்டு மகிழ்ந்த சோலை பாடகர்களாகிய கிளிக்கும் நாகணவாய் பறவைக்கும் ஏதாவது பரிசில் கொடுக்கமலா இருந்திருக்கும்? அவைகளும் மனமுவந்து தந்தன. எவற்றைத்தான் தந்திருக்கும்? பலவிதமான கனிந்த பழங்களை வெகுமதியாகக் கொடுத்தன. எவ்வளவு கொடைத்தன்மை? பாருங்கள்.

இவ்வளவையும் கண்டு களிக்கும் கற்பனாசக்தி வாய்ந்த கவிஞன் யார் தெரியுமா? 'அரிச்சந்திர புராணம்' பாடிய நல்லூர் வீரஆசு கவிராயன். காசிமாநகரை அவன் வருணிக்கும்போது: -

''மாவெலாம் அரிகள் பாட

மகிழ்ந்து நல் வாச மன்றும்

பூவெலாம் செழுந்தேன் நல்கப்

பூவையுங் கிளியும் ஓதும்

பாவெலாம் உருகக் கேட்டுப்

பலக்னிப் பரிசில் நல்கிக்

காவெலாம் தலையசைக்கும்

காசிநாட் டியல்பு சொல்வாம்.”

என்று காசிநாட்டின் இயற்கை வளத்தை வானளாவக் கொண்டு செல்லுகின்றான். கவிஞன் முன் எல்லாம் இனிதே என்பது இபொழுது தெரிகின்ற தல்லவா? இன்றும் மணலை மாணிக்கக் கற்களாகவும். உதிர்ந்த சருகுகளை ஆத்மத் தியாகிகளாகவும் நம் முன் தோன்றச் செய்யக் கவிஞனால் முடியும் என்று இப்போதாவது ஒத்துக் கொள்ளுகின்றீர்களா? இல்லையாயின் இந்த மனித ஜன்மத்தையே வேறொரு பிரயோஜனமற்ற ஜன்மமாகப் படைத்து விடுவான், ஜாக்கிரதை! ஒவ்வொரு கவிஞனும் ஒவ்வொரு பிரமனல்லவா!

ஆனந்த போதினி – 1943 ௵ - அக்டோபர் ௴

 



No comments:

Post a Comment