Sunday, August 30, 2020

 

கவிஞர் கண்ட கழைக் கூத்தாட்டம்

[கனி]

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் சாட்டில் பிரசித்தி பெற்றிருந்த ஆட்டங்களுள் கழைக் கூத்தாட்டம் ஒன்று. இவ்வாட்டமாவது ஒரு மூங்கிற் கழையில் பலவித வித்தைகள் செய்வதாம். திருவாரூரில் ஒருநாள் இந்த ஆட்டம் நடைபெற்றது. சுவாமி கோயிலின் முன் ஒரு உயர்ந்த மூங்கிற் கழை கடப்பட்டிருந்தது. அதன் உச்சியில் கட்டப்பட்டிருந்த கயிற்றின் மற்றொரு நுனி கழைக்குச் சிறிது தூரத்தில் அறையப்பட்டிருந்த ஆணியில் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. கழைக் கூத்தாடி தன் பரிவாரம் புடைசூழ வந்தான். அவனைச் சுற்றி மக்கள் சூழ்ந்திருந்தனர். சிறு பெண்ணைக் கலை கழைக் கூத்தாடி அம்மூங்கிற் கழையில் ஏற்றினான். அவள் எப்படியோ அதன் உச்சியை அடைந்தா அங்கு நின்று கொண்டு தன் உடம்பை வளைத்து வேடிக்கை காட்டினாள். அதே சமயத்தில் கழைக் கூத்தாடி ஆணியிற் கட்டப்பட்ட கயிற்றில் ஏறி அவன் தலையில் ஒரு குடம் இருந்தது. அவனுடைய ஆட்களில் ஒருவன் மத்தளத்தை எடுத்துத் தட்டினான். மூங்கிலின் உச்சியில் பெண்ணின் ஆட்டம்; அதனுடன் சேர்க்கப்பட்டிருந்த கயிற்றுப் பாலத்தில் கழைக் கூத்தாடி கயிற்றைப் பிடியாது மேல் நோக்கி ஏறுவது; கீழே இவர்களை உற்சாகமூட்டக் கொட்டு முழக்கம். இவற்றைக் கண்ட மக்கள் உற்சாகங் கொண்டு கைதட்டிக் குதூகலித்தனர்.

இத்தகைய கழைக் கூத்தாட்டம் கண்ட பலருள் ஒரு கவிஞரும் இருந்தார். அவர் நெல்லை ஜில்லாவைச் சேர்ந்தவர். தாம்பிர பரணிக் கரையில் வாழ்ந்தவர்.
சிவபக்தர். நல்ல கவிதா விலாஸமுடையவர். தமிழ்மொழிப் புலமையுடன், வடமொழி துருக்க பாஷை ஆகியவற்றிலும் வன்மையுடையவர். முருகன் அருளை முற்றும் பெற்றவர். இத்தகைய கவிஞர் கழைக் கூத்தாட்டத்தை நன்கு ரஸித்தார். அவர் கண்ட காட்சி அவர் மனதில் பதிந்துவிட்டது. அன்று மாலை வழக்கம் போல் அவர் தியாகப் பெருமான் கோயிலின் பின் புறத்தேயுள்ள சோலையுட் புகுந்தார். சூர்யனின் பொற் கதிர்கள் புகாதது அச்சோலை; கனிதரும் மரங்களும், மலர் தரும் செடி கொடிகளும் நிறைந்தது. கமுகு மரங்கள் பல நிறைந்து நின்றன. அவற்றின் முத்துப்போன்ற பூக்களும், மரகதம் போன்ற காய்களும், பவழம் போன்ற பழங்களும் வனப்பு வாய்ந்து விளங்கின. பலாமரங்களில் பலாப்பழங்கள் அதிகமாக இல்லை. பிஞ்சுகளும் காய்களுமே நிறைந் திருந்தன. இவற்றை எல்லாக் கவனித்துக்கொண்டே கவிஞர் ஓரிடத்தில் அமர்ந்தார். ஒரு கமுகின் உச்சியை அவர் நயனங்கள் பார்த்தன. அங்கு ஒரு ஆண் மயில் அமர்ந்திருந்தது. வானத்தில் செல்லும் கார்மேகத்தைக் கண்ட அது தன் தோகையை விரித்து ஆடியது. கமுகின் அடியை நோக்கினார். அங்கு ஒரு முல்லைக் கொடி தெரிந்தது. அது கமுகைப் பற்றுக்கோடாகக் கொண்டு மேலே சென்றிருந்தது கமுகின் ஓலை ஒன்றைப் பிடித்து அதை
யும் சுற்றி வளைத்து வளர்ந்து பின்னும் கீழ்நோக்கிப் போய் பக்கலில்
இருந்த வாழை மாத்தை எட்டிப் பிடித்து அதையும் சுற்றிக் கொண்டிருந்தது அந்த முல்லைக் கொடி. அது கமுகு மரத்திலிருந்து வாழை மரத்திற்கு ஒரு பாலம் போட்டிருந்தது போல் தோன்றிற்று. இதே சமயத்தில் அங்கே ஒரு குரங்கு வேகமாக ஓடி வந்தது. அது தன் கைகளில் நன்றாய்ப் பழுத்த பலாப்பழம் ஒன்றை வைத்திருந்தது. அதைத் துரத்திக்கொண்டு பல மந்திகள் பின் வந்தன. ஓடி வந்த குரங்கு ஒரே தாவில் வாழை மரத்தின் உச்சியைப் பிடித்தது. பலாப்பழத்தைத் தலையில் வைத்து ஒரு கையால் பிடித்துக்கொண்டு முல்லைக் கொடியில் ஏறத்தொடங்கிற்று. பின் தொடர்ந்து வந்த மந்திகள் கீழேயே நின்றன. என்ன ரமணியமான காட்சி! கமுகின் உச்சியில் ஒரு மயில் தோகை விரித்தாடுகிறது. அக்கமுகிலிருந்து வாழையைத் தாவிப் பிடித்திருக்கும் முல்லைக் கொடியில் மந்தி ஏறுகிறது தலையில் பலாப்பழத்துடன், கீழே பல மந்திகள் நின்று கைகொட்டிக் குதிக்கின்றன. இவற்றை எல்லாம் கண்ட கவிஞருக்கு அவர் கண்ட கழைக் கூத்தாட்டம் மறுபடியும் கண் முன் வருகிறது. பெண்ணுக்குப் பதில் மயிலும், கூத்தாடிக்குப் பதில் குரங்கும், மருங்கினர்களுக்குப் பதில் மந்திகளும், மூங்கிற் கழைக்குப் பதில் கமுகும், வடத்திற்குப் பதில் முல்லைக்கொடியும் இருப்பதைக் காண்கிறார். அதை அப்படியே ஒரு பாட்டில் வெளியிடுகிறார்: -

“.....................................தடமலர்ப் பொதும்பரின்

விழுக்குலை தெரிப்ப விட்புலத்தவர்க்குப்

பழுக்காய் தூக்கும் பச்சிளங் கமுகிற்

செடிபடு முல்லைக் கொடிபடர்ந் தேறித்

தலைவிரித் தென்னக் கிளை தொறும் பிணைத்து

மறிந்து கீழ் விழுந்த நறுந் துணர்க் கொடிகள்

................................................................................

தாற்றிளங் கதலித் தண்டினிற் படரவப்

பைங்குலைக் கமுகிற் படர் சிறை விரித்தொரு

கண்செய் கூந்தல் களிமயி(ல்) கடிப்ப

................................................................................

வானரமொன்று வருக்கைத் தீங்கனி

தானெடுத் தேந் திபு தலைமேற் கொண்டு

மந்திகள் தொடர மருண்டு மற்றந் தப்

பைந் துணர்க் கொடியிற் படர் தரு தோற்றம்

வடஞ்சூழ்ந்து கிடந்த நெடும்பெருங் கம்பத்(து)

அணங்கனா ளொருத்தி ஆடின(ன்) நிற்பப்

பெரும்பணை தாங்கி மருங்கினர் கொட்டக்

குடத்தலைக் கொண்டொரு கூன் கழைக் கூத்தன்

வடத்தனி னடக்கும் வண்ணம தேய்க்கும்

பூம்பணை மருதத் தீம்புனற் கமலை"

(திருவாரூர் நான்மணி மாலை.)

 

ஆனந்த போதினி – 1942 ௵ - ஜனவரி ௴

 



 

No comments:

Post a Comment