Sunday, August 30, 2020

 

கவி ரவீந்திர நாத தக்கோர்

 

முன்னுரை.

 

‘உயர் கம்பன் பிறந்த தமிழ் நாடு'என்றார் பாரதியார். கவிகளாற் சிறந்தது நமது பாரதபூமி. தென்னாட்டில் பண்டை நாட்களில் கம்பர், புகழேந்தி, இளங்கோவடிகள் போன்ற புலவர் பெருமக்கள் திகழ்ந்தனர். வடநாட்டிலும் பவ பூதி, காளிதாஸன், பாணன் முதலான கவிகள் புகழ்தாங்கிப் புண்ணிய காவியங்கள் பலவியற்றிப் போந்தனர். வாழையடி வாழையென வருமடியார் குழாம் போலக் கவிகளும் தோன்றா நின்ற இப்பாரதநாட்டில் 'தக்கோர்' எனுங் கவி மரபொன்றுண்டு. அதில், பத்தொன்பதாம் -நூற்றாண்டில் மகரிஷி தேவேந்திரநாத தக்கோர் என்ற பெரியாரொரு வரிருந்தார். இம்மகாநுபாவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் காலத்தேயிருந்தவர். இவரையே, ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் எனக் கீர்த்தி பெற்ற நரேந்திர நாதர் 'தாங்கள் கடவுளை நேருக்கு நேராகத் தரிசித் திருக்கிறீர்களா?' என்று வினாவினார். இப்பெரியாரே ஸ்ரீராஜாராம் மோகன் ராய் அவர்கள் தாபித்த பிரம்மசமாஜத்தின் இரண்டாவது தலைவருமாவார். இவரது தந்தையார் துவாரகாநாத தகிகோர் என்பார் விக்டோரியா மகாராணியார் செங்கோலோச்சிய காலத்தில், இங்கிலாந்துக்குச் சென்றிருந்த பொழுது அரண்மனையில் உபசரிக்கப் பெற்றார். மேலும் அக்குடும்பத்தாரே வங்காளத்தில் பெரிதும் கௌரவிக்கப் பெற்றவர்கள். துவாரகாநாதரின் மூத்த திருக்குமாரரான துவஜேந்திரநாத் தக்கோர் மகா ஞானியென்று பெயர் பெற்றவர். இரண்டாமவர் முதல் முதலாக இந்தியன் சிவில் சர்விஸில் தேர்ந்தவர்.


 
பால்யம்.

 

கவிரவீந்திரநாதர், மகரிஷி தேவேந்திநாத தக்கோரின் திருக்குமாரர்; 1861 - ம் ஆண்டு பிறந்தவர். அவருக்கிளமை முதல் கலாசாலையிற் சென்று கற்பதில் மிக்க வெறுப் பேற்பட்டிருந்தது. பள்ளிக்கேகுமாறு பெற்றோர் பலவந்தப்படுத்துவது கண்டு, அவர் சுரம் வரவேண்டிய துன்பங்களை யெல்லாம் தமக்குத்தாமே யிழைத்துக் கொள்வர். ஆனால் படிப்பில் அவருக்கு அளவற்ற ஊக்கமேற்பட்டிருந்தது. தாமாகவே பாண்டித்யமடைய அவர் இடைவிடாது முயற்சித்து வந்தார். அவர் இளமை முழுதும் எந்தக் கலாசாலைக்குஞ் சென்று வாசித்ததே யில்லை. சமய அறிவும், நல்லொழுக்கமும், இலக்கிய இலக்கண பாண்டித்யமும் அவருக்கு இயற்கையாகவே பெருகிவந்தன. அவருக்குச் சிறுபிராயம் முதல் கவி சேர்ப்பதிலும், எளிய நடையில் வசனம் வரைவதிலும் இயல்பான ருசி யேற்பட்டது. சில சிறு கவிகளும் வங்க மொழியில் வரைந்தார். ஆனால் முதலில் அவரது கவிகளுக்கு அதிகமதிப் பேற்படவில்லை சீமைக்குப் போய்ச் சட்டம் படித்துவர வேண்டுமென்ற ஆசை அவரையும் விடவில்லை. ஆகையால், அவர் சீமைக்குப் போனார். போனபின் அதில் சாரமேது மிருந்ததாக அவருக்குப் புலப்படாமையால், தமது இயல்பிற்குப் பொருத்தமற்ற அத்துறையில் புக மனமில்லாமல் திரும்பினார் இந்தியாவிற்கு. அதுமுதல் ஒரே முயற்சியாக அவர் நூல்கள் வரையத் தொடங்கிப் பிரசித்தரானார். அவருடைய கவித்திறமும் பழுத்துச் சமயமெய்ஞ்ஞான பாகாயிற்று. அவர் ஏனைய தலைவர்களைப் போலக் காங்கிரஸில் சேர்ந்தும், சுற்றுப் பிரயாணஞ் செய்தும், சிறை வாசம் புரிந்தும், தாய்நாட்டின் விடுதலைக்காகப் பாடுபடுமியல்பினரல்லர். தலைவர்களுள் பலர் பலவிதம். அவர்களுள் இவர் ஒருவிதம். இவர் சமயப்பற்றே சகல நன்மைகளையும் நல்குமென்னுந் தனி நோக்குடையவர். ஆனால் மனத்தில் மட்டற்ற தாபமுடையவர். கல்கத்தாவிற்குத் தொண்ணூற்று மூன்றுமைல் தூரத்திலுள்ள போல்பூரிலே இவர் ஓர் குருகுலத்தை நிறுவி நடத்தி வருகின்றார். அங்கு சமயக்கல்வியும், தேசபக்தியும், வங்காளி, ஹிந்தி முதலிய பாஷாஞானமும் ஊட்டப் பெறுகின்றன. தேசத்தின் எதிர்கால மகாபக்தர்களை ஆயத்தப்படுத்தும் நோக்கமுடையது இக்குருகுலம். இதில் இருநூற்றுக்கதிகமான மாணவர்களுளர். பரந்த மரங்களினடியிலே கல்வி போதிக்கப்படுகின்றது. போல்பூரிலே மகரிஷி தேவேந்திரநாத தக்கோரால் பயிர் செய்யப் பெற்ற மரங்களடர்ந்த அச்சோலையில், அதிகாலையில் மாணவர்கள் யோகாப்பியாசஞ் செய்வர். இக்கலாசாலை இப்பொழுது பிரசித்தியாக விளங்குகின்றது.


கீர்த்தி.

 

அவர் வரைந்துள்ள நூல்கள் முதலில் வங்காளி பாஷையிலேயே யிருந்தன. பின்னர், அவற்றை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதுமுதல் அவரது அதிமேதாவித்தன்மையைக் கண்டு மேல்நாட்டு அறிவாளிகள் அவரைப் போற்றுவாராயினர். அப்பால் 1913 - ம் ஆண்டில் நோபில்பிரைஸ்' என்னும் நன்கொடை அவருக்களிக்கப் பெற்றது. அவர் வரைந்த கீதாஞ்சலி, இளம்பிறைச் சந்திரன் (Crescent Moon) சித்ரா, சாதனா, கபீர்சதகம், பழக்கூடை முதலிய நூல்கள் ஆங்கிலத்தில் இனிய எளிய நடையில் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளன. 'நோபில் பிரைவில்' கிடைத்த 8000 பவுன்களையும் அவர் போல்பூர் குருகுலத்திற்கெனவே சிறிது செலவிட்டு எஞ்சியதை நிதியாக்கினார். மேன் மேலோங்கும் அவர் கவித்துவத்தை மெச்சி கல்வியில் டாக்டர் என்னும் பட்டத்தை அவருக்குக் கல்கத்தா சர்வகலாசாலையார் 1913 - ம் ஆண்டில் வழங்கினர். 1916 - ம் வருஷம் அவர் ஜப்பான் தேச விற்பன்னர்களின் அழைப்புக்கிசைந்து அத்தேசத்திற்குப் போய்ப் பலவிடங்களிலும் யாத்திரை செய்து பிரசங்கங்களியற்றித் திரும்பினார். அப்பால், பல ஆண்டுகள் சென்றபின் அரசாங்கத்தார் அவருக்கு 'நைட்'(Knight) எனும் பட்டமளித்துக் கௌரவித்தார்களேனும் 1919 –ம் ஆண்டைய பஞ்சாப் படுகொலைக்குச் சரியான விதாயமேற்படாததால், அவருக்கேற்பட்ட உள்ளக்கிளர்ச்சி காரணமாக அதனை அவர் ஏற்றாரில்லை. பின்னர், அவர் ரோமாபுரி, கிரீஸ், இத்தலி, பிரான்ஸ், இங்கிலாந்து முதலிய நாடுகளில் யாத்திரை செய்து விட்டு வெகு சமீபத்தில் இந்தியாவுக்குத் திரும்பினார்.

 

இனி, அவர் தேசாபிமானத்தை வெளியிடும் இரண்டொரு நிகழ்ச்சிகளைக் கூறுவோம். தென்னாப்பிரிக்காவில் குடியேறிய ஹிந்துக்கள் படுந்துயருக்காற்றாது வி. எப். ஆண்டுரூஸ் துரையவர்கள் வாயிலாக, தக்கோர் 'தேற்றுதல் பா' வொன்று வரைந்து விடுத்தார். கானடா தேசத்தார் அவரைப் பலமுறையுந் தம்நாட்டில் பிரசங்கிக்குமாறு வேண்டியும் 'இந்தியாவினிடத்து உங்களுக்கு சமதிருஷ்டி ஏற்படும் வரையில் யான் உபந்நியசிக்கமாட்டேன்' என்றவர் மறுத்து விட்டார்.



குண விசேஷங்கள்.

 

ரவீந்திரநாத தக்கோர் மிக்க தயாள சிந்தையுள்ளவர்; அடக்கமாயிருப்பவர்; சாத்வீகி; தன்னலம் பேணாத்தகைமை யுடையவர்; மிக்க வைதீகமானவர். அவர் தமது முப்பத்தைந்தாம் பிராயத்தில் தமது தாரத்தையும் குழந்தைகளையுமிழந்தார். அது முதல் அவருக்கு தயாள குணம் சிறந்தோங்குவதாயிற்று. பிறரைத் தூஷியாப் பெருங்குணம் அவரிடம் பெரிதுமுண்டு. சங்கீதத்தில் அவர் வெகு பிரியமுடையவர். காலை முதல் மாலைவரையில் அவர் பாடக் கேட்டுக் கொண்டே யிருப்பார்.

 

அவரது நீண்ட தாடியைக் கண்ணுறுங்கால், எனது தாய்நாடு விடுதலையடையும் வரை நான் தீக்ஷை வளர்ப்பேன் 'என்ற விரதம் பூண்டிருப்பது போற்றோன்றும். நீந்துவதில் அவர் மகாப்பிரியர். தமக்குக் கடிதம் எழுதும் அன்பர்களுக்கு அவர் சிறிதும் காலந்தாழ்க்காமல் தம் கைப்படக் கடிதம் வரைவார். அவர், பாவிசைக்கும் போது முதலிரண்டு சீர்களை மட்டும், வெகு நாட்கள் யோசித்து அமைப்பது வழக்கம். அமைத்தபின் விரைவில் அக்கவியை முடித்து விடுவார். தனிமையாயிருந்து தியானஞ் செய்வதிலும், ஆலோசித்துப் பல அருங்கவிகளை யமைப்பதிலும் அவர் அளவற்ற பழக்கமுடையவர். அவர் அமர்ந்து ஆலோசிக்கு மிடத்திற்குச் சாந்த நிகேதனம் (அமைதியை விரும்பும் ஆசனம்) எனப்பெயர்.


தேசபக்தி.

 

கவி ரவீந்திரரின் தோற்றத்தால் வங்காளி பாஷைக்கே யுரிய ஓர் தனியுயர்வு வெளிப்படையாயிற்று. அவர் வங்காளியிலும், ஆங்கிலத்திலும் வரைந்துள்ள நூல்களை ஏனைய பாஷா நிபுணர்கள் தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்துப் போற்றி வருகின்றனர். அவர் வரைந்துள்ள 'கீதாஞ்சலி' யெனும் நூலிலிருந்து சில பாகங்கள் இவ்வாண்டைய எஸ். எஸ். எல். ஹி மாணவர்கட்குப் பாடமாக வைக்கப் பெற்றுள்ளன. அவர் வரைந்துள்ள கவிகளில் ஆங்காங்கு தேசாபிமானமும், மதாபிமானமும் பொங்கி வழிகின்றன.


''எங்கு மனமானது நிர்ப்பயமாயிருக்கின்றதோ,

எங்கு முடி வணங்காமலிருக்கின்றதோ,

எங்கு அறிவானது அளவுகடந்து வியாபித்திருக்கின்றதோ,

எங்கு தன்னலமும் தரித்திரமும் அற்றிருக்கின்றனவோ,

எங்குஉண்மையின் உட்பொருளாய் அருள்வாக் கெழுகின்றதோ,

எங்கு முடிவில்லா ஆர்வம் முத்தி யின்பத்தை நோக்கித் தன்னிரு கரகமலங்களையும் விரிக்கின்றதோ,

எங்கு அடிமைத்தன்மை அழிவுற்று வீரஞ்செறிந்துவிளங்குகின்றதோ,

எங்கு உனதருள் வெள்ளத்தால் எனது மனமானதுமுன்னடையவும், ஜன்மம் நசிக்கவும் ஹேதுவுண்டோ, பரிபூர்ண சுதந்திரமும், பரிசுத்தமும் எங்குள்ளனவோ

அங்கு எனது தாய்நாடு ஸ்தாபிக்கப்படட்டும்''


என்று கீதாஞ்சலியிற் காணப் பெறுஞ் சில அரிய கவிகள் அவரது சுதந்திரதாகத்தை வெளியிடும் மாண்புடையனவாய் இலங்குகின்றன. இந்தியத்தாயின் செல்வப் புதல்வரான இப்பெரியார் நீடூழிகாலம் வாழ்ந்து நம் பாரதநாட்டின் சீர்பாடி, விடுதலைக் குழைக்குமாறு இறைவன் அருள் புரிவானாக.


 சம்பூர்ணம்.


 ஸ்ரீ லக்ஷ்மீ காந்தன்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - ஜுலை ௴

 

 

 

No comments:

Post a Comment