Sunday, August 30, 2020

 

கல்வியின் போக்கு

 

கண் மூடித்தனமாய் ‘கொக்குக்கு ஒரேவழி' என்ற பழமொழிக்கிணங்க நடைபெற்ற கல்வி முறையி லிருந்து, சுவாதந்தரியமும், சுயேச்சையும், விசால வீக்ஷண்யமும் உள்ள நவீன கல்வி முறைக்குச் செல்வதென்றால், ஒரு பெரிய ஆரவாரம் நடந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை. முக்கியமாய் அதன்பிறகு உறுத்தலான ஒரு நோக்கமிருப்பின், கல்வியின் முன்னேற்றம் தடைபடாது என்பதற்கு நாளடைவில் தக்க சான்றுகள் ஏற்படும்.

 

மஹா கவியான நவீந்தரநாத டாகூருடைய 'போல்பூர்'' கலாசாலையை இந்திய கல்லூரிகளுக்கு எல்லாம் ஒரு வழிகாட்டி எனவே கூறவேண்டும். எது எப்படி யிருந்தபோதிலும், கல்விக்கும் ஆத்ம தத்வ நூலுக்கும் விசேஷ சம்பந்தம் இருக்கிறதென்று மென்மேலும் அங்கீகாரமாகி வருகிறது. கல்வி நிபுணராகிய, ஸமைகேல் ஸாட்லரும் இதைத்தான் விசேஷமாகக் கூறுகின்றார். இனி, போல்பூர் பள்ளிக்கூடத்தைப் போல் கல்லூரிகள் ஏற்படக்கூடும்.

 

மேல் நாட்டிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்களுக்கு, தலைமை உபாத்தி யாயாது ரிகார்டுகள் முதலியவை, வைப்பதற்கு மாத்திரம் கட்டிடம் தேவையென்பதும், மற்ற வேலைகள் பரிசுத்தமான காற்றுள்ள இடங்களிலேயே நடப்பது உசிதம் என்பதுமாகிய கொள்கை மென்மேலும் முன்னேற்ற மடைந்து வருகிறது. ஏனெனில், ஆரம்பக் கல்வி விஷயத்தில் துன்ப முறுத்துவதே அறியாத இளைஞர்கள் பரிசுத்தமான ஆகாயத்தில் (Open air system) படிப்பது தான் வெகு இயல்பு.

 

இங்குதான் கடவுள் விஷயமே அறியாத நமது கல்விமுறைச் சீர்திருத்தமிருக்கிறது. நல்ல மனிதர்களிடமிருந்து மறுதளிப்புகள் வரக்கூடிய கட்டாயமான கல்வி முறையேயிப்போதுள்ளது; ஏனெனில், கடவுள் விஷயம் வேண்டும் என்ற வாய்ப்பேச்சுக்கூட இதிலில்லை; 30 மணியுள்ள ஒரு வாரத்தில் 30 நிமிஷநேரம் போதிக்கக் கூடிய மதக்கல்வி தானு மில்லை; ஆனால் நமது புராதனமான "குருகுல" முறையில் தான் அதற்கு மார்க்க மிருக்கிறது.

 

இப்படிக் காற்று வீசவேண்டி யிருக்கையில், நம் மாகாணத்தில் சில அடிப்படையான மாறுதல் அடைய வேண்டி யிருக்கிறது. கட்டாய ஆரம் பக்கல்வி மசோதாவில் நடப்பில் கலகாஸ்பதமாய் விளையக்கூடிய சில ஷராக்கள் எடுபடவேண்டும். எனெனில், கட்டாய மதக்கல்வியில் இஷ்ட மில்லாவிட்டால் புதுப் பள்ளிக்கூடங்கள் ஸ்தாபிக்கப்படும் என்பது சட்ட பூர்வமாய் ஆக்ஷேபனைக்கிடமில்லாத தாயினும், நடப்பில் விஷயங்கள் உண்டாக்கக் கூடியது. எல்லாவற்றிற்கும் நமது குடியானவர்கள் எக்கோயிலுக்குப் போயினும், அவர்களது ஐயனாரையும் எசக்கி யம்மனையுமே தொழுகின்றனர். அதுவும் நமது மதத்தின் ஒரு பாக்கியமே.

 

உபயோகமற்ற மேனாட்டு முறைகளைக் கண் மூடித்தனமாய்ப் பின்பற்றுதல் மனுஷ்யகுணமன்று. இது', ''நாட்டுவழக்கங்கள்'' என்ற அடிஸன் துரையது வியாஸ மூலமாய் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. இது நிற்க, ஒரு புது முறையில் சுமார் 10 வருஷங்களுக்குமேல் பயின்ற பிறகு, பழய மெட்ரிகுலேஷன் " அருகில் தான் வந்து கொண் டிருக்கிறார்கள். நமது போர்டார்களோ, இப்பொழுது தான் மேனாடுகளில் தள்ளப்பட்ட முறைகளில் பள்ளிக்கூடங்கள் கட்டி வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் நமது தேசத்தில் மேனாடுகளின் பிரதிபிம்பம் ஸ்தாபனம் செய்வதிலேயே முயற்சியை வீணாக்கப் பட்டதுதான்.

 

ஒவ்வொரு இடத்தின் அவசியத்திற்கு ஏற்றவாறு (Local Needs) பாட ஜாப்தா பின்பற்றப்பட வேண்டும். இந்த நியாயத்தை ஒட்டி, எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் ஒரே விதமான பாடஜாப்தா வரைவது அவ்வளவு உசிதமில்லை. அதாவது, நம் நவீன முறையில், இக்கோடுகளுக்குள்ளடங்கிய பாடமுறை (Fabular Statements) பொருந்தவே பொருந்தாது. ஒவ்வொரு பருவமும் (Season) வெவ்வேறு பாட முறைகளுக்கு உசிதமானது என்ற கொள்கை அங்கீகாரமானால் நலமே. மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கையில், இனிய கோகிலம் பாட, போல்பூரில், எல்லாக் குழந்தைகளும் இக்கு தூஹலமான தூதனை நோக்கிச் செவி சாய்க்கவில்லையா? நமது செவியும் ஹிருதயத்திற்கு ஒரு வாசலல்லவா?

 

இது நிற்க, வேளாண்மையே முக்கிய ஜீவனமாகக்கொண்ட நமது கிராமங்களில் விவசாயக் கல்வி அவசியமல்லவா? இல்லாவிடில், விரைக்குங்காலம் வரும்பொழுது குடியானவர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பமாட்டார்களா? இதை அனுசரித்து. ஐந்தாவது வகுப்புக் குழந்தை உடனேயே விவசாயக் கல்வி ஏன் ஆரம்பிக்கக்கூடாது? அதே மாதிரி நெசவுத் தொழிலுள்ள ஒரு கிராமத்தில் அக்கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்டால் நலமே. இம்மாதிரி சீர்திருத்தங்கள் ஏற்பட்டால் தான், கட்டாய ஆரம்பக் கல்விச் சட்டம் இனிது நிறைவேறும்.

 

மேலும், கல்வி முறைகளில், எதேச்சையான (Voluntary) கல்வி முறையா, அல்லது இராஜாங்கக் கல்வி ஸ்தாபனங்கள் வேண்டுமா, என்ற கேள்வி முன்னுக்கு வரலாம். இயற்கையாகவே, ஸ்வயராஜ்யக் கோரிக்கையும், ஸ்வய பாஷையின் முன்னேற்றத்திலுள்ள ஆசையும், ஸ்வேச்சையான ஸ்தாபனங்களை ஏற்படுத்தக்கூடும். எல்லாவற்றையும் ராஜாங்கமே செய்யவேண்டும் என்ற கோரிக்கை சற்று பலஹீனம் அடையக்கூடும். இம்மாதிரிக் கல்வி ஸ்தாபனங்கள் எற்படுத்துவதில் இப்பொழுது வீணாகச் செலவழிக்கப்படும் முயற்சிகளைப் புகவிடுவோமேயானால், நவீனமாயிருக்க வேண்டு மென்கிற ஆசை மாத்திரம் நமது புராதனக் கல்வி முறைகளை ஆராய்ச்சி செய்வோமேயானால், வரிவேண்டாம் என்ற முதிய கூக்குரல் மாத்திரம் நமது தனவந்தர்களைச் சற்று சமூகவிஷயங்களில் சிரத்தை காண்பிக்கத் தூண்டுமேயானால், இதற்குள்ளாக நமது கிராமங்களில் உண்மையான கல்வி முறை ஏற்பட்டிருக்கக்கூடும்.

 

எதார்த்தவாதியானவன் தனது குற்றங்களை ஒரு நாளும் மறைக்க மாட்டான். இவ்வாண்டு வரையில், மேடைகளிலும், சபைகளிலும், நமது வாசாலார்கள் வெகு நன்றாய்க் கண்டனம் செய்திருக்கிறார்கள். நமது கல்விமான்களும், பரிபாலகர்களும், ராஜாங்கப் பள்ளிக்கூடங்களின் பிரதி பிம்பங்களையே ஸ்தாபித்திருக்கிறார்கள். இதுவும் ஒரு நன்மைதான்; ஆனால், மேடைகளில் கிருத்திரேதாயுகங்களைப்பற்றியும், ராமராஜ்யத்தைப் பற்றியும் சவிஸ்தாரமாக எடுத்துரைத்து விட்டு, நடப்பில் விசேஷசி ரத்தையில்லாவிடில் என்னே பயன்? ஹரித்வாரத்திலுள்ள “குருகுல ஸ்தாபனமும்,'' போல்பூரிலுள்ள டாகூர் பள்ளிக்கூடமுந் தவிர வேறு எங்கு பார்த்தாலும் ஆடுபோன வழியாய்த்தான் தென்படுகிறது. இறுதியில் கலாசாலைத் தொகுதி விருத்தியடையினும் கல்விமான்களது அதிருப்தியும் வளர்ந்து ஓங்கி வருகின்றது. தொகுதி மாத்திரம் போதவே போதாது. இயல்பு முக்கியமாய்க் கவனிக்கப்பட வேண்டும். மேல் நாடுகளில் யுத்தத்தை வென்ற வாலிபர்கள் மைதானத்திலும் முன்னேற்றம் அடையும் பொழுது, நமது சிறந்த கல்வியாளர்க்கோ, குமஸ்தா, வக்கீல், அல்லது வெகு பரிதாப நிலைமையிலுள்ள உபாத்திமைத் தொழில் இவை மூன்றே முன் நிற்கின்றன. ஆனால், இதற்கு ஆஸ்பதமாக நாமும் நமது கல்விமான்களும் பரிபாலகர்களும் இருந்திருக்கிறோம். இராஜாங்கத்தை மாத்திரம் குற்றம் சொல்வதில் பயனில்லை. இப்பொழுது தான், பரோடா, மைசூர், காசி, முதலிய இடங்களில் சற்று விழித்திருக்கிறார்கள். எவ்வாறாயினும், சென்ற நாட்களில் நமது கடமையைச் சரிவரச்செய்தோம் என்று சொல் வதற்கில்லை.

 

அறிஞர்கள் அவசியம் ஆராயவேண்டிய விஷயங்களில் சிலவற்றை மாத்திரம் இங்கு வரைந்தோம். தேர்ச்சியுள்ள கல்வியாளர்களும் விவேகத்துடன் பரிபாலனம் செய்யக்கூடிய ஜனஸமூஹங்களும், இம்முறையில் முன்னேற்றம் காண்பிப்பாரேயாகில் நமது குறைகள் நீங்கும் என்பதற்கு ஐயமே இல்லை.

 

க. மு. இராமபத்திர சாஸ்திரி.

பி - ஏ; யல். டி.

 

குறிப்பு: - நண்பர்கள் இவ்வரிய வியாசத்தைக் கவனம் வைத்து வாசித்து நன்குணருமாறு வேண்டுகிறோம்.

 

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - பிப்ரவரி ௴

 

 

No comments:

Post a Comment