Sunday, August 30, 2020

 

கல்வியால் தீங்கு

 

இத்தலையங்கத்தைக் கண்டதே நமது நண்பர்கள் முதலில் மிக்க வியப்படைவார்கள். சிலர் இதென்ன நேர்மாறான விஷய மாயிருக்கிறதென்று கருதுவார்கள். ஏனெனில் சாதாரணமாய்க் 'கல்விச்செல்வமே செல்வத்துளெல்லாந் தலை'யென்று எல்லா நூல்களும் கூறுகின்றன. ஆன்றோர்கள் கல்வியே கண் என்று அதை யெவ்வளவோ சிறப்பித்துக் கூறியிருக்கின்றனர். கல்வி அத்தகைய பெருமையுடைத்தாதலின்'' கற்றோர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு' என்றும் ''மன்னனிற் கற்றோன் சிறப் புடையன்'' என்றும் கூறப்பட்டிருக்கிறது,

 

அனுபவத்தில் கல்வி இருவகைத்தா யிருக்கிறது. ஒன்று இலக்கிய இலக்கணக் கல்வியாகிய பாஷைக்கல்வி - மற்றொன்று ஆன்மார்த்தக்கல்வி - இவற்றில் முன்னர்க் கூறப்பட்ட சாதாரணக் கல்வி ஒருவனது இயற்கைக் குணத்தை யதிகப்படுத்த மட்டும் வல் லது. அது கத்தியைக் கூர்மைப்படுத்துவது போன்றது. அக்கத்தி யால் நல்ல காரியமும் செய்யலாம், கெட்ட காரியமும் செய்யலாம். பொருட் செல்வமும் இப்படியே.

 

இது ஒருபக்கமிருக்க, ஒருவன் எக்காலத்தில் எத்தகைய கல்வி கற்கின்றானோ அதற்குத் தக்க பலனையே யடைவான். கமத் தொழில் செய்யவேண்டிய சிறுவன் உலக சரித்திரத்தை வாசித் தால் என்ன பயன்? அனாவசியமானதும், பின்னால் கற்போனுக்கு அவசியமான பலனை யளிக்கக்கூடாததுமான கல்வியால் ஒருவன் பயனடைவதற்குப் பதிலாகத் தீமையே யடைவான்.

 

ஒரு தனி மனிதனுக்கு எப்படியோ அப்படியே ஒரு ஜாதியாருக்கும் ஒரு தேசத்திற்குமாகும். இப்போது நம்நாடு அடைந்திருக்கும் பரிதாபமான ஏழ்மை நிலைமைக்குக் காரணம் இப்போது நாம் அனுசரிக்கும் கல்வி முறைமையேயாகும். கல்வியா லேயே ஒரு தேசம் மேலான நிலைமையை யடைகிறது என்ற உண்மை ஒருவராலும் மறுக்கொணாதது. அப்படியிருக்க அக் கல்வி தகுதியற்ற கல்வியாயின் அதைக் கையாடும் தேசம் க்ஷணித் துப்போகத் தடையேயில்லை. மேலுக்குப் பளபளவென்று தோன்றிக்கொண்டு உள்ளே யழுகிக்கொண்டே போகும் ஒரு கனியைப்போல் ஆய்விடும்.

 

ஒருவனுக்கு அல்லது ஒரு ஜாதியாருக்கு உணவு உடை செல்வம் இவற்றிற்குக் குறைவின்றி, தெய்வ பக்தியும் ஆன்மார்த்த விசாரணையும் இருந்தால், அதற்குமேல் ஒரு வண்டி ஜடசாத்திரங் களும், வெளிப்பகட்டாகத் தோன்றும் வீண் நாகரீகப் படாடோ பங்களும் என்னத்திற்கு வேண்டும்? அவற்றால் மனம் வெளித் தளுக்குகளில் நாட்டங்கொண்டு, மயங்கச்செய்து முன் இருந்த போதும்'என்ற திருப்தியை யழித்து, வீணான பல ஆவல்களையும், கிடைக்காததில் ஏக்கத்தையும், பொறாமையையும், போட்டி யையும் உண்டாக்கிக் கடைசியில் மிக்க துன்பத்தையே விளைக்கும்.

 

 

முற்கால நிலைமை.

 

முற்காலத்தில் நம் நாட்டில் கல்வியென்றால் ஈசுரபக்தியோடு பொருந்திய கல்வியாகவே யிருந்தது. கல்வியைக் கடவுளின் அருளாகிய ஒரு சத்தியாக மதித்துப் போற்றுவதும் உபாசிப்ப தும் நமது கொள்கை, நமது கல்வி மத சம்பந்தமானதாகவே யிருந்தது. அதனால் நம் நாட்டில் இருந்த வித்வான்கள் ஈசுவர அருள் பெற்றவர்களாய் இருந்தார்கள். அவர்கள் வாழ்த்துவதும் வைவதும் பலிக்கக்கூடியவைகளா யிருந்தன. அதனானே நாயனார்,


 'வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
 சொல்லே ருழவர் பகை''
                        - என்றனர்.

 

வேதத்தின் முதலெழுத்தாகிய பிரணவமே முதலில் கற்பிக்கப்படுவது நம் நாட்டு முறைமை. ''ஓம் நமசிவாயசித்தன்னம:'' என்பதே முதலில் போதிக்கப்படுவது. கற்பிக்கப்படும் நூல்களும் நீதி, நல்லொழுக்கம், ஈசுரபக்தி யிவைகனைப் போதிக்கும் நூல்களே. அவற்றைக் கற்கும் மாணவர்களுக்கு அச்சமயம் அவற்றின் பூரணப்பொருளும் அருமையும் விளங்காவிடினும் அவற்றைப் பெரும்பாலும் மனப்பாடம் செய்திருப்பதால், பிற் காலத்தில் அவை பயனளிக்கின்றன. அக்காலத்தில் மாணவர் களுக்குக் குருபக்தியிருந்தது. குருபக்தி கடவுள்பக்தி போன்றது. குருபக்தி மனத்திலுள்ள மாசை நீக்கி நற்புத்தி நன்னடக்கை முதலியவற்றை யளிக்கவல்லது.

 

நம் நாடோ நீர்வளம் நிலவளங்களில் குறைவில்லாதது. எந்தப் பொருளுக்கும் இன்னொரு நாட்டை யெதிர்பாராவண்ணம் நமது வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் அளிக் கக்கூடியது. நம் நாட்டிற்கு வேண்டிய அளவிற்கு அதிகமாகவே யாவும் உற்பத்தியான தால் எல்லா வஸ்துக்களும் மலிவாயிருந் தன. அன்னிய நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுவந்தன. பிற்காலத்தில் மகம்மதியர் வந்து அரசாண்ட காலத்தும் அந்த நிலை மாறவில்லை. அக்காலத்தில் பணம் அதிகமாக வேண்டியிருக்க வில்லை.

 

கைத்தொழிலோ - எல்லாவகைக் கைத்தொழில்களும் உயர்ந்த நிலைமையிலிருந்து வந்தன. நெசவு சிற்பம் முதலிய வேலைகள் உலகைப் பிரமிக்கச் செய்யத்தக்க நிலைமையிலிருந்தன. மேல்நாட்டார் மிக்க அற்புதமான காரியங்களைச் செய்யும் இக்காலத்திலும், அவர்களையே பிரமிக்கச்செய்யும் பூர்வ சிற்ப வேலைகள் நம் நாட்டில் ஏராளமாக விருக்கின்றன. நம்முன்னோர்கள் தொழில் முறைமையில் ஜாதிப்பிரிவினை யேற்படுத்தி யிருந்தார் கள். அவர்கள் மிக்க நன்மையை யெதிர்பார்த்தே அந்தப் பிரிவினையை யேற்படுத்தினார்கள். அதனால் பலவிதமான கைத்தொ ழில்களும் எப்போதும் நடந்து வந்ததோடு பரஸ்பர உதவியால் ஒற்றுமையான கூட்டுறவும் நிலைத்திருந்தது. வரவரப் பிற்காலத் தில் நமது அறியாமையால் நாம் சரியான கல்விப்பயிற்சியை விட்டு, அன்னிய நாகரீக ஆசாரங்களைக் கைப்பற்றத் தொடங்கிய தால் முன்னோர் நன்மை பயக்கும் வண்ணம் செய்த ஏற்பாடு தீமை பயக்கத்தக்க நிலைமைக்கு வருமாறு செய்துகொண்டோம்.

முதல் முதல் நம் நாட்டார்க்கு ஆங்கிலபாஷை கற்பிக்கப்பட்ட போது துரைத்தனப் பாடசாலைகளே தாபிக்கப்பட்டன. பெரும்பாலும் இலவசமாகவே கல்வி கற்பிக்கப்பட்டது. பிறகும் நெடுநாள் வரை கொஞ்சம் ஏழையாயுள்ளவர்கள் மக்களுக்கெல்லாம் இலவசமாகவும் அரைச்சம்பளத்திற்கும் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. நம் நாட்டார்க்கு ஆங்கிலம் கற்பிக்கப்பட்டதற்குக் காரணம் துரைத்தன காரியங்கள் நடைபெறுவதற்காகவே.

 

அன்னியபாஷை கற்கத் தொடங்கியது முதல் அந்த ஆசாரங்களின் வாசனையும் நம்மவர்மேல் தாக்கத் தொடங்கியது. மேல் நாட்டு நாகரீக மயக்கம் மெல்ல மெல்ல இவர்களைப்பற்றத் தொடங்கியது. கிழக்கிந்திய கம்பெனியார் காலம் முதல் நெசவு முதலிய நம் நாட்டுக் கைத்தொழில்கள் அன்னியரால் அடக்கப்பட்டும் நம்மவரது அசாக்கிரதையால் கைவிடப்பட்டும் அழியத் தொடங்கின. இங்கு உற்பத்தியாகும் மூலப்பொருள்களனைத் தும் ஏராளமாய் மேல் நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. அதனால் அங்குள்ளவர்களுக்கு நல்ல தொழில் கிடைக்கத் தொடங்கியது.

 

இதனோடு அங்கு எந்திரங்களால் தொழில் செய்வது அதிகரித்தது. இங்கிருந்து செல்லும் மூலப்பொருள்கள் அவர்களுடைய கைத்தொழில்களையும், வர்த்தகத்தையும், அவற்றின் செல்வத்தையும் பெருகச்செய்தன. இதனால் எந்திரங்களின் உற்பத்தியால் அந்த நாட்டாருக்கு நன்மையே பெருகியது. எந்திரத்தால் வேலையிழந்தவர்கள், தொழிற்சாலைகளில் நல்ல ஊதியம் பெற்றும் வர்த்தகம் செய்தும் முன் நிலைமையிலும் மேலோங்கத் தொடங்கினார்கள். சிலர் விவசாயத் தொழிலில் மனத்தைச் செலுத்தி அதில் நல்ல இலாபம் பெறத் தொடங்கினார்கள்.

 

நம் நாட்டிலோ, மேல் நாட்டு எந்திரங்களில் செய்யப்பட்ட துணி முதலியவைகள் இங்குக் கொண்டுவரப்பட்டுக் குறைந்த விலைக்கு விற்கப்படத் தொடங்கியதால், இங்கு வீடுகளில் செய்து வந்த நூல் நூற்றல், நெசவு, சாயம் போடுதல் முதலிய பலவிதக் கைத் தொழில்களும் அழியத் தொடங்கின. மேல்நாட்டுக் கல்வி யேற யேற நம்மவர்கள் ஒழுங்காய் மேல் பகட்டான உடைகளை யணிந்து துரைத்தனத்தாரிடம் சேவகம் செய்வதே மிக்க கௌரவமான தொழில் என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டார்கள். மற்ற விவசாயம், வர்த்தகம், கைத்தொழில் முதலிய கௌரவத்தொழில்களனைத்தும் இழிவான தொழில்கள் என்று மதிக்கத் தொடங்கி விட்டார்கள்.

 

பரம்பரையாய் விவசாயம், கைத்தொழில் செய்துகொண் டிருந்தவர்களுடைய புத்திரர்கள் ஆங்கிலப் பாடசாலைகளுக்கு அனுப்பப்படத் தொடங்கினார்கள். கடவுள் சிந்தனை இல்லாக் கல்வி அவர்கள் கற்க நேரிட்டது. அதனோடு அவர்கள் பிற்காலத்தில் செய்யவேண்டிய தொழில் அவர்களுக்குக் கற்பிக்கப்படுவ தில்லை. அத்தொழில்கள் தான் கௌரவத் தொழில்கள் என்ற உணர்ச்சியும் அவர்களுக்கு ஊட்டப்படுவதில்லை. சரியான தாய்ப் பாஷைக் கல்வியாவது மதக் கல்வியாவது போதிக்கப்படுவதில்லை. அவர்கள் வாசிக்கும் புத்தகங்களில் அவர்கள் மேல் நாட்டு ஆசாரம் ஒழுக்கம் நடையுடை பாவனைகளைப்பற்றியே வாசிக்கிறார்கள். நம் முன்னோர் நூல்களில் சிலசில பொருக்கிப் போதிக்கப்படி னும் கடவுள் சம்பந்தம் மதசம்பந்தமான பாகங்கள் நீக்கப்படு கின்றன.

 

இத்தகைய கல்விபயின்றவர்கள் பாடசாலையை விட்டவுடன் தங்கள் பாட்டன் பூட்டன் செய்த தொழில் அவர்களுக்கு இழிவான தாய்த் தெரிகிறது. அத்தொழிலைச் செய்யும் தங்கள் பெற்றோரையும், சுற்றத்தாரையும் இழிதொழில் செய்பவர்களென்று அலட்சியமாய் நடத்தத் தொடங்குகிறார்கள். தாங்கள் கல்வி கற்று நாகரீகமடைந்து மேல் அந்தஸ்தில் ஏறிவிட்டதாக எண்ணி விடுகிறார்கள். விவசாயியின் மகன் ஏரைத் தீண்டவும், கழனியில் கால்வைக்கவுமே அசங்கியப்படுகிறான். பெற்றோர் கஷ்டப்பட்டு உழுது பயிர் செய்து கொண்டிருந்தால் இவன் துரைத்தனத்தாரிடம் 15 ரூபாய் சம்பளம் கிடைத்தால் போதுமென்று நகரத்தில் சென்று வேலையிலமர்ந்து விடுகிறான்.

 

போதுமான கல்வியில்லாதார் நகரங்களில் மேல் நாட்டார் தாபித்திருக்கும் எந்திரத் தொழிற்சாலைகளில் கூலி வேலை செய்யச் செல்கிறார்கள். இக்காரணங்களால் கிராமங்களில் கல்வியிலும் சாத்திர ஆராய்ச்சியிலும் பயிற்சியடைந்தோர் கிடையாமற் போனதோடு, சரியாய்ப் பயிரிடவும் ஆட்களின்றி ஏராளமான பூமி தரிசாய்க்கிடக்க நேர்வதோடு விளைவும் வரவரக் குறைந்து கொண்டே போகிறது. நகரங்களிலோ ஜனநெருக்கம் அதிகமாகிச் சுகாதாரங் கெட்டுக் கனவிலுங் கண்டிராத வியாதிகள் உற் பத்தியாகத் தொடங்கிவிட்டன.

 

உயர்தரக் கல்வி கற்றோரோ தாங்கள் செய்யும் தொழிலையே கௌரவமானதெனக் கருதி தொழில் செய்து பணம் சம்பாதிப்பதும் உலகபோகங்களை யனுபவிப்பதும் மட்டுமே தாங்கள் உலகில் செய்யவேண்டிய காரியம் என்று கருதுகிறார்களேயன்றித் தாய் நாட்டைப்பற்றியாவது தாய்ப்பாஷையைப்பற்றியாவது எள்ளள வும் சிந்திப்பதேயில்லை. பெற்றோர்களே தங்கள் பிள்ளைகள்'' நாலு கோணை யெழுத்து கற்றுக்கொண்டால் தான் இக்காலத் தில் ஜீவனம் செய்யலாம்'' என்று கருதுகிறார்கள். வயிற்றுக் குச் சரியாய் உணவு கிடைப்பது கஷ்டமாயினும், தீபப் பிரகாசத் தைக்கண்டு மயங்கி அதில் வீழ்ந்து மடியும் விட்டில் போல், மேல் தளுக்கையே கௌரவமென மதித்து அதில் மகிழ்ச்சி யடைகிறார் கள். நம் நாட்டில் செய்யப்பட்ட பொருள்களை யிழிவாகக்கருதி, மேல் தளுக்கில் மயங்கி மேல்நாட்டுச் சாமான்களையே யதிக விலை கொடுத்து வாங்கத் தொடங்கிவிட்டார்கள். இதனால் நம் நாட்டில் பொருள் வருவாய் குறைவதோடு, போதுமான வருமானமில்லா திருந்தாலும் வீண்செலவு அதிகமாகிவிட்டது. இவற்றால் பல விதத் துன்பங்களே நமக்குப் பலனாகக் கிடைப்பதன்றி நன்மை கிஞ்சித்துமில்லை. நம்மவர்களுக்கு இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்து நல்வழித் திருப்ப அவகாசமில்லையோ, அல்லது நம் நாட் டுக்கு இன்னம் நற்காலம் வரவில்லையோ அதனைக் கடவுளே யறிய வேண்டும்.

 

நம் க்ஷேமத்திற்கு வேண்டிய கல்வியைக் கற்காதது நமது குற்றமேயாகும். மேல் நாட்டார் எம்மாதிரி நடந்து முன்னேற்ற மடைந்தார்கள் என்ற வழியை யறிந்து அவ் வழியில் செல்ல நம் மவர்கள் இன்னம் முயலவில்லை. பகவான் அறிவைக் கொடுத்திருக்கிறார். அதைச் சரியான வழியில் உபயோகிக்காதது நமது குற்றமன்றோ. இனியேனும் பெற்றோர் தம் மக்களுக்கு இக் காலத்திற்குத் தகுதியும் அவசியமுமான கல்வியைக் கற்பிப்பதில் சிரத்தை யெடுத்துக்கொண்டாலன்றி நாம் க்ஷேமப்படுவது அரி தேயாகும். விரிவஞ்சி இதனோடு நிறுத்துகின்றோம். ஆண்டவன் அருள்புரிவாராக.

ஓம் தத்ஸத்.

ஆனந்த போதினி – 1923 ௵ - செப்டம்பர் ௴

No comments:

Post a Comment