Sunday, August 30, 2020

 

கல்விப் பொருளும் காரிகையாரும்

 கா. நயினர் முகம்மது.

 

வான்கடல் சூழ்ந்த வையத்தே தோன்றிய மக்கள், "அரிதரிது மானிடராய்ப் பிறத்தலரிது'' என்ற ஒளவைப் பிராட்டியாரின் அரும் புகழ்ப்பாடல் பெற்ற மக்கள், தோன்றும் போழ்தே உடன்றோன்றியதூஉம், விலங்கையும் மக்களையும் வேறு பிரித்தறியக் கருவியாய் விளங்குவதுவும், மக்களை மறுமைக்கண் மாண்புறவைக்கும் வன்மை வாய்ந்ததுமாயுள்ள ஒன்றையே கல்வி, கல்வி எனக் கற்றோர் கூறுவர்.

 

இத்தகைய கல்வியின் இனிய மாண்பென்னை? இக்கல்வி ஏந்திழையார்க்கு இன்றியமையாததா? அவசியமின்றேல் நம் அரும் பெண்மணிகட்கு எத்தகைக் கல்வி வேண்டற்பாலது? என்பன பற்றி ஆராய்தலே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.


கல்வியின் கவின் பெருமாண்பு: -


உலகில் மக்கள் துய்த்தற்குரிய பண்புகள் பலப்பல. அவை; நல்லன, தீயன என இருவகைப்படும். இவ்விரண்டும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு பின்னிக்கிடத்தலான், இவ்விரண்டையும் பிரித்தறிய 'அறிவு எனும் அருங்கருவி யொன்று வேண்டற்பாலது. இக்கருவி, மக்கள் சிலர்க்கு இயற்கையிலேயே கைகூடினாலும், கல்வியின்றேல் விரைவில் அழிந்துவிடும். ஆகவே, இக் கருவி வலியுடனிற்க வேண்டுமேல், 'கல்வி' என்றவோர் துணையைப் பின்பற்றல் அத்தியாவசியம். இவ்வுண்மை யுணர்ந்த நம் பொய்யில் புலவரும்,


''தொட்டனைத் தூறுமணற்கேணி மாந்தர்க்குக்
 கற்றனைத் தூறுமறிவு "


எனப் புகன்ற பொன் மொழியும் உன்னுந் தகைத்து. எனவே, மக்கள் இம்மையிலேயே வெந்நெறி விடுத்துச் செந்நெறியில் நடக்கவேண்டுமேல் கல்வியெனும் ஊன்றுகோ லொன்று வேண்டற்பாலதென விளம்ப வேண்டுவதில்லை.

 

இம்மைக்குக் கல்வி அவசியமென இதுகாறுங்கண்டோம். இனி மறுமையையும் கல்வியே அளிக்கவல்லதாவெனச் சிறிது காண்பாம். ஆண்டவன்றிருவடியை யடைய வேண்டுமெனும் ஆர்வமுடைய ஆன்மாக்கள், அரியகல்வியிலையேல், அமலனின்றிருவடியை யடையவியலா. என்னை? ஆண்டவன் றிருவடியை யடையவேண்டுமேல், இடையில் அலகிலா அல்லல் விளையுமென்பது ஆன்றோர் தம் அனுபவத்திற் கண்ட உண்மை. அவ்வல்லலை யழிக்கக் கல்வியெனும் ஆயுதத்தைக் கைக் கொள்ள வேண்டும். இவ்வுண்மையை, நான் மணிக்கடிகை யாசிரியர்,

 

"கற்பக்கழிமட மஃமகுட மஃகப்

புற்கந்தீர்ந் திவ்வுலகிற் கோளுணரும் கோளுணர்ந்தால்

தத்துவமான நெறிபடருமந் நெறி

இப்பாலுலகத் திசை நிறீ இயுப்பால்

உயர்ந்தவுல கம்புகும்"

 

என நன்கு நவில்வர். இத்தமிழ்ப்பாடையின் மட்டுமன்றி வேறு பாடைகளினும் இதன் மாண்பைத் தெரிவிக்கப் பற்பல சான்றுகளுள்ளன. எடுத்துக் காட்டாக, இற்றைக்குச் சற்றேறக்குறைய 750 வருடங்கட்கு முன் பாரசீகக் கவிகளுட்சிறந்து, தனது இஸ்லாமியச் சமயத்தையும் பிறசமயங்களையும் ஆராய்ந்து அடங்கிய பெரியாராகிய சஃதி (Sadi) என்பவர், தாமியற்றிய 'கரீமா' எனும் நூலில், 'சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைத் தெரிவிக்கும் ஈரடிகளில்' கல்வியின் மாண்பு குறித்து ஓர் செய்யுள் செப்புகின்றார். அறிஞர் அச்செய்யுளை யூன்றியாய்க. அச்செய்யுள்: -


 "பிரோதாமனே இல்முகீரஸ்த்துவார் - கே,
 இல்மத்ரசானத் பதாருல்கரார்''


இதன் பொருள்: - நீ கல்வியின் முன்றானையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொள். அஃது உன்னைத் துறக்கமடைவிக்கும்.'' ஆகவே, மக்கட்கு, இம்மையும் மறுமையும் வழங்கும் மாண்பே கல்வியின் மாண்பென்க.


 கல்வி காரிகையாருக் கவசியமா?


மக்கள் என்ற பொதுவில் மாதரும் அடங்குவர். மாதர்கள் மாண்புறவியற்றும் அறங்கள் பலவற்றுள்ளும் சிறந்தன இல்லற தர்மம், கணவனுடன் அன்போடொழுகல், கற்பைக் காத்தல் முதலியனவாகும். எனவே, இவ்வறங்களை யியற்றக் கல்வி அவசியமா? எனச் சிறிது காண்பாம்.


1. இல்லற மியற்றல்: =


இயற்கை யெழில் வாய்ந்த ஏந்திழையார், ஓர் ஆடவனை மணந்து இல்லறம் நடாத்த இறங்கும் போழ்து, அவ்வுளம் அன்னார்க்கு இருள் செறிந்தகாடாகவே தோன்றும். முதலில் அக்காட்டுள் பற்பல அல்லல் விளையம் என்பது அறிஞர் கண்ட உண்மை. ஆகவே, அவ்விருளிரிய அன்னார் கல்வியெனும் சுடர்விளக்கொன்றைப் பிடித்துச் செல்வரேல், அக்காடு இயற்கையெழில் வாய்ந்த இனிய நாடாய் முடியுமென்பதிலையமிலை. அஞ்ஞான்று அன்னார் அலகிலாவின்பந் துய்த்து இல்லறத்தை இனிதின் இயற்றுவர். இஃதன்றியும் இல்லறத்தின், உட்பிரிவுகளாகிய விருந்தோம்பல், மக்கட்பேறு முதலிய யாவற்றினுக்கும் 'கல்வி' அவசியமே. ஆகவே, இல்லறத்தை இனிதியற்றும் ஏந்திழையார்க்கும் கல்வி அவசியமே.



 

 

2. கணவனுடன் காதலோடொழகல்: -

 

கல்விகற்ற ஒருத்தி கணவனுடன் காதலன்போடு அன்னான் குறிப்பறிந்து நடப்பாள். அவ்வுத்தமியுடன் அவன் வாழ்தல் அலகிலாவின்பமமைந்த துறக்கத்தின் சுகத்தைத் துய்த்து வாழ்தலை யொக்கும். கல்வியில்லாக் காரிகையார், கணவனிடம் இன்னவாறொழுக வேண்டும் எனச்சிறிதும் அறியாது நாடோறும் அவனுடன் ஒற்றுமையின்றி அளவிலாக் கஷ்டமுடன் வாழ்கின்றனர். கணவன் ஓர் நெறியைக் கடைப்பிடித்தால், தான் அதற்கு முரணான வழியைப் பற்றுகிறாள். அதுபோழ்து கலகம் பலவிளைந்து அக்குடும்பமே அலைந்தழுகிறது. இஃதன்றியும் கணவன் மட்டும் கற்றிருக்கக் காதலிகல்லாதவளாக விருப்பின், அவளுடன் கூடிவாழ்தல், நிரயத்தில் வாழ்தற்கு நிகராகும். கற்றவளாயிருப்பின் கணவன் செய்யும் வேலைகளிற் றானும் ஈடுபட்டுழைப்பள். இவ்வுண்மையுணர்ந்தே நந்தமிழ் நாட்டுப் பெரியார்கள் "காதலர்கள், ஒத்த கல்வி, ஒத்தகுணன், ஒத்தநலனுடையரா யிருத்தல் வேண்டும்'' எனக்கூறினர் போலும்.


3. கற்பைக் காத்தல்: -

 

பெண்மணிகள் தான்றோன்றிய காலத்து உடன் றோன்றியதாய கற்பைக் காக்கவும் கல்வி வேண்டும். என்னை? காரிகையார் கணவர் இருக்கும் போழ்து உடன் வாழ்ந்தும், காதலன் பிரிவுற்றுழி, கணவன் மேற் பதித்த சிந்தையினராய், நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு எனும் நாற்குணங்களில் வழுவாதொழுகிச் செந்நெறியிற் சிந்தையைச் செலுத்தக் கல்வியையே பற்றல் வேண்டும். கல்வியின்றேல் அன்னாரைக் கலி சூழும். கல்வியிலா மனம் வெந்நெறியில் வீழ்ந்து படும். எனவே, கற்பென்பது மனநிறையைப் பொறுத்து நிற்பது. ஆகவே, மனதைத் தீயநெறியிற் செலுத்தாது கற்புடன் வாழ வேண்டுமேல் நம் பெண்மணிகள் கல்வியைக் கடைப்பிடித்தல் வேண்டும். பின், எத்துறையில் ஆராய்ந்தாலும் அரிவையர்க்கு அருங்கல்வி அத்தியாவசியமென அறியலாம் இவ்வுண்மை பற்றியே நீதிநூலார்,


 "அல்வளர் கூந்தலா ரறிய நூலின்றி.
 நல்லறி வுணர்ந்ததி னடக்கற்பாலரோ''  
- என இசைப்பர்.


இஞ்ஞான்றுள கல்விழறை ஏந்திழையார்க் கின்றியமையாதா?

 

இதுபோழ்து நாகரீகக் கல்வியென்று தவறாய்க் கருதப்படுகின்ற ஆங்கிலக் கல்விமுறை யாதொரு நலனும் பயப்பதில்லை. ஆனால் தீமையையேயளிக்கிறது. அது தன் மோகவலையில் ஆடவரை யழுத்தினதோடமையாதுநம் அரிவையரையம் அழுத்தி விட்டது. ஆங்கிலம் கற்கப்புகும் ஆடவரும் அரிவையரும் ஆதியில், (கற்கப்புகும் தொடக்கத்தில்) நம் ஆன்மா ஆண்டவன் திருவடிகளிற் சாந்தியடைய வேண்டும். அளாவிலா ஞானத்தையடைய வேண்டும் என்ற உணர்வோடு கற்கப்புகுவதிலை. ஆனால், பொருள் ஈட்டல் ஒன்றையே - வயிற்றுப்பிழைப் பொன்றையே - பட்டம் பதவிகளை விழைந்தே கற்கின்றனர். கற்பிக்கும் ஆசிரியரின்மாரும் அத்தன்மையரே. எனவே, இக்கல்வி நாளுக்குநாள் நம் அருமைப் பெண்மணிகளின் நாற்குணத்தையும் நலியச் செய்து, நல்லோர் பார்த்து நகைக்கும் அநாகரீகப் படுகுழியில் ஆழ்த்தி விடுகிறது. ஆங்கிலம் படித்த அரிவையரின் உடையோ, மேனாட்டு உடை. உண்டியும் அந்நாட்டு முறைப்படி. இத்துடன் இக்கல்வியின் நலனின்று விட்டதோவெனில்,


 "கொழுநனுண்ட பின்றானுகர் கொள்கையும்,''
 "கொழுநன் சொற்கடவா துறை கொள்கையே''


என்ற சிறந்த அறங்கள் பறந்து விட்டன. ஆங்கிலக் கல்வியிற் சிறந்த அரிவைமார் தமது அருங்கணவன் உண்டியருந்தினாலும், இல்லாவிடினும், தாம் நன்றாகப் புசித்து விட்டு நாற்காலியில் சாய்ந்து விடுகின்றனர். கணவன் கதிரவன் கண் நிமிட்டி எழுந்தது முதல் மறையும் வரை யுழைத்து விட்டுத் தன்மனைக்குவரின் அடிசில் சுட்டோன் (பரிசாரகன்) இலையில், ஏதோ சிறிதும் அன்பிலாமற் சாதமிட்டுச் செல்கிறான். அதை அவன் உண்டு செல்வதே. இவ்வாறு உண்பதில் காதலர்களுக்கு ஏதேனும் இன்புண்டோ? எனக்கூர்ந்து பாருங்கள். இத்தகைய பெண்மணிகளை நோக்கி, நீங்கள் உங்கள் கணவர்க்கு, அசனத்தை அன்புடனிட்டாலென்? என யாராவது வினவின்," என்ன? அவர்கட்கு நாங்கள் அடிமைகளா? எங்கட்கும் இட்டம் போல் நடக்க உரிமையுண்டு'' எனச் செப்புகின்றனர். என்னே! இவர்களின் அறியாமை. கணவற்குத் தான் பக்குவமாய்ச் சமைத்து அறுசுவையுண்டி யூட்டுதலில் அவர்க்கு அன்பு பெருகி வளர்கிறது.

 

ஆங்கிலக் கல்வி கற்ற அரும் பெண்மணிகாள் எடுத்துக் காட்டாக, பண்டே உங்கள் வழியிற்றோன்றிப் பண்புளத் தமிழ்க்கல்வி பயின்ற இளைய தமிழ்நங்கை யொருத்தி தன் கணவற்கு எவ்வாறு அசனமிட்டு மகிழ்ந்தாள், என்பதைக் கீழே தருகிறேன். ஊன்றி ஆராய்ந்து அவளின் ஒழுக்கத்தைப் பின் பற்றி யொழுகுங்கள்.

 

"தன் மகள் தனது இன்னுயிற் கணவனது இல்லின் கண் எப்படியிருக்கின்றான் என்பகைக் காணும் பொருட்டுச் சென்ற செவிலித்தாய், அவ்விருவரும் ஒத்த அன்பினராய் வாழக்கண்டு தன்னுண் மகிழ்ந்து கீழ்க்கண்டவாறு பாகின்றாள்.''


 "முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
      கழுவறுகலிங் கழா அது உடீஇ
 குவளையுண்கண் குய்ப்புகை கமழத்
      தான் துழந்து அட்ட தீம் புளிப்பாகர்
 இனிதெனக் கணவன் உண்டலின்
      நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல்முகனே."    
(குறுந்தொகை 167.)

 

இதன் பொருள்: - எனது அருமந்த மகள் (தன் கணவன் மேலுள்ள ஆராவன்பினால் ஏவலரும் பிறரும் சமையல் செய்வதற்கு இசையாதவளாய்) வற்றக் காய்ச்சிய கட்டித் தயிரைப் பிசைந்த காந்தள் மலர் போன்ற சிவந்த மெல்லிய விரல்களால் இடுப்பில் கட்டிய உயர்ந்த வெண்மையான ஆடை (சமையல் செய்யும் விரைவால்) அவிழ்ந்து விழ (கையினைக் கழுவிக்கட்டலா மென்றால் காலந்தாழ்க்கும், அதனால் கணவன் பசியால் வருந்த நேருமெனக் கருதி அதன் கண் அழுக்குப்படி தலையும் பொருட்படுத்தாது) அதனைக் கழுவாமல் உடுத்துக் கொண்டு, குவளை மலர் போன்ற மைதீட்டிய கண்களிலே தாளிப்புப்புகைபட (அப்புறம் திரும்பினால் பாகம் தவறிவிடக் கூடுமேயென்று அதனையும் பாராமல்) தான் துடுப்பினால் துழாவி மிக்க அன்போடு ஆக்கிய தித்திப்பான புளிக்குழம்பினைத் தனது கணவன் இனிது இனிதெனச் சொல்லிக் கொண்டு உண்ணுதலைப் பார்த்து எழில் மிக்க என்மகளின் முகம் உள்ளுக்குள்ளே மகிழ்வடைந்தது.

 

மாண்பமைந்த மாதுசிரோன்மணிகாள்! உங்களுடைய சோதரி கணவனிடம் எத்துணையன் பினளாய், எந்நிலையில் மகிழ்ந்தாள் என்பதையும் கூர்ந்து பாருமின்கள்.

 

ஆகவே, இவ்வாங்கிலக் கல்வி முறை இவ்வாறு உங்களை ஆக்கிவிடவே நம்மைக் குறைகூறுதல், " எய்தவர் தம் மருகிருக்க அம்பை நொந்த கரும்மாக " வன்றோ முடியும். இக் கல்விமுறையை முதன் முதலிற் கண்ட 'லார்டுமெகாலே' என்பவரே, இக்கல்வி எந் நோக்கத்துடன் இந்தியர்களுக்களிக்கப்பட்ட தென்பதை அன்னாரே கூறுவதைக் கூர்ந்து பாருமின்கள். அவர் கூறுவது: -

 

''இந்தியர்களை நடையுடை பாவனைகளில் ஆங்கிலர்களாக்கக் கூடிய கல்வியை நாம் இந்தியர்களுக்குப் புகட்ட வேண்டும்.''

 

சோதரிகாள்! அன்னார் எத்துணைச் சூழ்ச்சியாக இக் கல்விமுறையை நிறுவியுள்ளார்க ளென்பதையும், நீங்கள் இஞ்ஞான்று எந்நிலை யுற்றுள்ளீர்களென்பதையும் கூர்ந்து நோக்குங்கள். அதுபோழ்துதான் லார்டு மெகாலேயுடைய சூழ்ச்சித்தன்மை நன்கு விளங்கிவிடும். எனவே, இக்காலக் கல்வி நம்மாது சிரோன்மணிகளை அடியோடு கெடுத்துத் தம் அநாகரீகத்தில் ஆழ்த்தித் தமக்கு அடிபணியச் செய்து விடுகிறது. நம் பெண்மணிகள் கள்ள மற்ற உள்ளமுடையவர்களாதலின் விரைவில் அப்படுகுழியில் விழுந்து விடுகின்றனர். அன்னார் நடையுடை பாவனைகள் முற்றிலும் மாறி அறிஞர் கண்டு இரங்கத்தக்க அநாகரீக ஆங்கிலமயமாய் விடுகின்றனர். ஆதலால் நமது நாட்டுப் போக்குக்கு ஏற்ற குடும்ப நிர்வாகத்திற்குரிய நல்ல கல்வி கற்று நாட்டை அலங்கரிப்பார்களாக.


 
பெண்மணிகட்கு எத்தகைய கல்வி வேண்டற்பாலது?

 

மேனாட்டுக் கல்வி முறை ஆடவரின் இயற்கைக்கும் பெண்களின் இயல்புக்கும் தக்கவாறு போதிப்பதில்லை. ஆனால், இருவர்க்கும் ஒரே மாதிரியான கல்வியே கற்பிக்கப்படுவதாற்றான், நம் பெண்மணிகள் தம் இயற்கைக்கு மாறான பழக்கவழக்கங்களைக் கையாள நேர்கிறது. இயற்கையமைப்பிற்கியைய நம் மாது சிரோன்மணிகட்குச், சமையன் முறை, இல்லற மியற்றல், பிள்ளைப் பேறு, மனைப்பண்பு, தையல், இசைஞானம் முதலியவற்றைப் போதிக்கும் நூல்களையே கற்பித்தல் அத்தியாவசியம். அவைதான் அன்னார்க்கு நலமளிக்கும். இம்முறையைக் கையாள ஆங்கிலங் கற்க வேண்டுவதில்லை. இம்முறைகளை யுணர்த்தும் நூல்கள் அவரவர் தாய்பாஷையிலேயே அளவிறந்தன கிடக்கின்றன. எடுத்துக் காட்டாகா தமிழ்நாட்டுப் பெண்மணிகளை யெடுத்துக் கொண்டால், அன்னார், கல்வி கற்ற கவிஞானிகளாய், கண்ணியமிக்க புண்ணிய சீலர்களாய், இல்லறஞானிகளாய், இசை ஞானிகளாய்வரற்கு அன்னார் தமிழ்ப் பாடையிலுள் நூல் கற்றலே சாலும். அப்பாடையில், கடவுளைக் காணும் நெறியையுணர்த்தும் கவினுடைக்கலைகளிலையா? இல்லற ஞானத்தை இனிதினுணர்த்தும் இங்கித நூல்களிலையா? அடிசில் அடும் அமைவைக் கூறும் அருமைக் கலைகளிலையா? என்ன இல்லை? எல்லா நூல்களுமிருக்கின்றன.

 

எனவே, நம்பெண்மணிகட்கு இயற்கைக்கேற்றவாறு போதிக்கும் கல்வி முறையே வேண்டற்பாலது. எடுத்துக்காட்டாக இஞ்ஞான்று இரவீந்திரரால் ஏற்படுத்தப்பட்டுள 'சாந்திநிகேதனில்' எத்தகைக் கல்விமுறை அமைந்துளதெனப் பார்ப்பீர்களேல், ஆங்கு ஆடவரின் இயற்கைக்குத்தக சிலம்பவித்தை, தொழின் முறை முதலியவற்றையும் அரிவையர் இயற்கைக்குத்தக சமையன் முறை, மருத்துவம், மனைப்பண்பு முதலியவற்றையுணர்த்தும் நூல்களே அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஆகவே, நம்பெண்மணிகட்கு அவர்களின் இயற்கைக்குத் தக்க முறையான கல்வியே இஞ்ஞான்றும் எஞ்ஞான்றும் வேண்டற்பாலதென்பது நனிவிளங்கும்.

 

கண்ணியமிக்க காரிகைகாள்! இஞ்ஞான்று ஆங்கிலங்கற்று வெறும்பட்டம் பதவிகளை வேட்டு, அறிஞர்களால் அநாகரீகமெனக் கருதப்படும் மேனாட்டுப் பழக்கத்தை யறவே யொழித்து நுங்கள் பரதநாட்டுத் தாய்மார்களின் எளிய வாழ்க்கையை மேற்கொள்ள முன்வாருங்கள். இதுவே நீங்கள் அடைய வேண்டிய முன்னேற்றத்திற்கு வழி. இஞ்ஞான்று பாரதமாதாவின் பழம்புதல்வியாய் நுங்கள் சோதரியாய்த் தோன்றியுள், திருநிறைசெல்வி, 'சரோஜனிதேவி' யவர்கள் தமது வாழ்க்கையின் உயர்வைக் குறித்து என்ன கூறுகின்றார் என்பதைக் கூர்ந்து பாருமின்கள்.

 

"நான் யார்? நான் இந்தியக் கிராமங்களில் வசிக்கும் மாதர்களின் சின்னமாவேன். நதியில் ஸ்நானம் செய்துவிட்டு இடுப்பில் தண்ணீர்க் குடத்துடன் வருபவள் நான். பனையோலை வேய்ந்து குடிசையில் அடுப்பு மூட்டுபவள் நான்.'' (இஃது கல்கத்தா சர்வகலாசாலைப் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு.)

 

அருமைச் சோதரிகாள்! அம்மாளின் எளிய வாழ்க்கையைப் பின்பற்றி அறிஞரால் அநாகரீகமெனக் கருதப்படும் தற்காலக் கல்வி முறையை யொழித்து அமைதியுடைய கல்வியைக் கற்க எழுமின்; எழுமின். இளம்பெண்காள் எழுமின்

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஆகஸ்டு ௴

 

 

No comments:

Post a Comment