Sunday, August 30, 2020

கல்விச் செருக்கு 

 

உற்றுப் பார்க்கு மளவில் எவரும் செருக்கடைய ஏது ஒன்று மில்லை. எதற்காகச் செருக்கடைந்தாலும் தன் சொந்த முயற்சியாலேயே வருந்தி அறிந்த சொற்ப விஷயங்களைத் தவிர மற்றபடி கற்ற வித்தையைப் பற்றிப் பெருமை பாராட்ட நியாயம் சிறிதுமில்லை. வேறொருவன் கற்றறிந்த கல்வியில் ஒரு சிறிது நாம் பெற்றுக் கொள்வதனால் செருக்கடையலாமோ? அப்படி கர்வப் படுவது ஒருவனிடத்தில் ஒரு காசு பெற்றுக் கொண்டு அதனால் கர்வப்படுவதை ஒக்கு மன்றோ. தங்களுக்கு எவ்வளவு பிச்சை அதிகமாகக் கிடைத்தாலும் இரப்போன் அகந்தை அடைய நீதியோ. கல்வியறிவு கை வழங்கும் நாணயத்தை ஒத்தது.

 

ஒருவன் தானே முதலில் வருந்திப் பொன் சம்பாதித்துப் பின் அதைச் செவ்வையாகச் சுத்தி செய்து தானே முத்திரை யிட்டு நாணயமாக்கிக் கொண்டாலும், அல்லது இவ்வாறு ஒருவன் ஏற்படுத்திய பொருளை தன் புத்திசாமர்த்தியங்களைக் கொண்டு விசேஷமாகச் செய்து நல்ல வழியில் பாடுபட்டுச் சிறிது பொருளைச் சேகரித்தாலும் சிறிது செருக்கடைய நியாய முண்டென்றுரைக்கலாம். இவைகளில் எள்ளளவேனும் செய்யாதிருக்க, வழியிற் செல்வோன் தன் கைப்பொருளை முகத்தில் எறிந்து விட்டுப் போனால் அதைப் பற்றிப் பெருமைபட ஏது உண்டோ? ஒருவன் இவ்வகையாய் பிச்சை எடுத்துக் குபேரனைப் போன்று கோடி ரூபாய் குவித்தாலும் அவன் அற்பமாயினும் தன் உழைப்பினாலேயே சம்பாதித்துக் கொள்பவனுக்குச் சற்றேனும் சமமாகான்.

 

இத்திருஷ்டாந்தத்தின் படியே சூரியன் பூமியை விட பெரிதென்று ஒரு மனிதன் போதித்தால் அதை அறிந்து கொண்டதற்காக நாம் என்ன ஏதுவைக் கொண்டு கர்வப்படுகிறது? அப்படியே பலபண்டிதர்கள் தாம் கற்றறிந்த பற்பல விஷயங்களையும் நமக்குக் கற்பித்துக் கொடுத்து தமது கல்விச் பொருட்சுமையை நம் தலைமேல் சுமத்தினாலும் அப்படி வரப்பெற்ற கல்விச் சுமைக்காகத் தானாகட்டும் நாம் பெருமை பாராட்ட நியாயம் என்னே? இக்காலத்தில் நமக்குத் தெரியுமென்று நாம் அகங்காரம் கொள்வதற்குக் காரணமான கல்வி அறிவெல்லாம் இத்தன்மையான கேடுகெட்ட வழியில் வந்தவையேயாம். முன் யாரோ ஒரு வித்துவான் வருந்திப் பாடுபட்டு ஸ்தாபித்திருக்கிற சித்தாந்தங்களை வேறொருவர் நமக்குச் சம்மதமில்லாமலிருக்கப் பலவந்தமாகவும், நல்லது பொல்லாது என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளத் திறமை யற்றிருந்த நம் சின்னஞ் சிறு பிராயத்தில் அடித்துப் புடைத்து நமக்கு வெறுப்பாகவும் பாடம் செய்வித்திருக்க அவைகளுக்காக நாம் கர்வப் படுவதற்கு என்ன நியாயம்?

 

ஆ! ஆ! நாம் வருந்தி பொருள் தேடியதற்காக எவ்வளவு கர்வப் படுகிறோம்! உண்மையாய் நோக்குமளவில் நாமே பாடு பட்டுத் தேடிக் கண்டறிந்த கல்விச் செல்வம் ஒன்று தவிர மற்ற வழியால் வரப் பெற்ற எவ்வகைக் கல்வியும் நாம் பெருமை பாராட்டும்படி ஏற்ற அணிகலமாக மாட்டாது.

 

ஒருவன் பாலை வனத்தில் சிறியதாய்க் குடிசை ஒன்று போட்டு அதிற்குடியிருப்பதற்கு வேண்டிய பாய், படுக்கை, பலகை, பீடம் முதலிய பல உபகரணங்களையும் வருந்திச் செய்து கொள்வானானால் அவன் தனக்குத் தானே சிறு வீடு ஒன்று கட்டிக் கொண்டதற்காகக் களிப்படைவது போல சற்று செருக்கு மடையலாம். வெகு நேர்த்தியாக நிருமித்துச் சகல விதசாமான்களும் ஒன்றாலொன்று குறைவில்லாமல் சேகரிக்கப் பெற்ற திவ்விய மாளிகை யொன்று ஒருவனுக்குத் தன் முயற்சி சிறிது மின்றி அமையுமாயின் அவன் முன்னவனை விடப் பன்மடங்கு அதிகமாகச் சுகங்களை அனுபவிக்க இடமுண்டாயினும் எள்ளளவேனும் அகங்காரம் கொள்வதற்கு ஏதுவில்லை. அம் மாளிகையைக் கட்டினவன் திரமைக்காகவோ இவன் கர்வமடைகிறது? பிறர் தேடிய தந்கக் கட்டிலில் படுப்பவனுக்கு உண்டாகு மானந்தம், தானே தேடிய தாழம் பாயிற் படுப்பவனுக்கு உண்டாகுமானந்தத்தில் பாதியாவது இருக்கு மென்பது பத்தில் ஒரு பங்கும் நிச்சய மில்லை.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜுன் ௴

 

 

   

No comments:

Post a Comment