Monday, August 31, 2020

 

சமயமும் சமூகமும்

 

ஒவ்வொரு நாட்டிற்கும், ஜனசமூகத்திற்கும் உயிர் நாடியாகிய ஜீவசத்து ஒன்று உள்ளதென்பது உண்மையாயின் இந்திய நாகரிகத்தின் ஆணிவேர் மதமென்பதை ஒருவரும் மறுக்க முடியாது. பாரத நாட்டைப் போல் மதத்தைப் பற்றிய ஆராய்ச்சி வேறு எந்த நாட்டிலும் அவ்வளவு தூரம் செய்யப்படவில்லை என்பது வாஸ்தவமே. நெப்போலியன், வாஷிங்க்டன், லெனின் என்னும் மேதாவியர் மேனாடுகளில் இவர்கள் தெய்வப் பிறவியரோ, என்று பிறர் போற்றத்தக்க பெருங் காரியங்களைச் செய்திருக்கின்றனர். ஆனால் இந்தியாவில் அத்தகைய மதிப்புக்குப் பாத்திரமாகக் கூடியவர்கள் சங்கரர், புத்தர், இராமா நுஜர் முதலிய ஆன்ம வீரர்களே யாவர். இத்தன்மை வாய்ந்த மகோன்னதமான சமயப் பெருமையாலேயே இந்திய நாடும் அதன் நாகரிகமும் பல்லாயிரம் வருடங்களாக எத்தனையோ எதிர்ப்புக்களினிடையிலும் தம் இளமை மாறாது தலைமையாய் நிற்கின்றன. மேல் நாட்டார் மேலே தமது உணர்வை நாட்டார்களென்றும், கீழ் நாட்டாராகிய நாம் கீழே நமது உணர்வை நாட்ட மாட்டோமென்றும் வெறுமனே விளையாட்டிற்காகச் சொல்லப்படும் கூற்றிலுங் கூட உண்மை யிருக்கிறது. பொதுவாக, ஒரே வார்த்தையில் கூறவேண்டுமாயின் நமது பூமியே ஞான பூமியாம்.

 

இத்தகைய உன்னதமான மத வாழ்க்கையில் வாழ்ந்து வந்தநமது புண்ணிய பூமியில் ஒரு பக்கம் மேனாட்டு நாகரிக வெள்ளம் நமது உள்ளத்தைத் தாக்குவதாலும், மறு பக்கம் நமக்குள்ளேயே இருக்கும் சமூகக் கொடுமைகளாலும் மனிதனுக்கு மதம் அவசியமா என்ற கேள்வி கூட நம்மிடையில் வந்து விட்டது. மதம் என்பது மனிதனைச் சேற்றில் நெளியும் புழுவைப் போன்ற உலகபோகப் புன்மை வாழ்க்கையினின்றும் விடுவித்து அழியாத பேரின்பப் பெருஞ்சித்திப் பெருவாழ்வில் இருத்துவதே யாகும். ஆங்கிலத்தில் மதம் என்ற சொல்லுக்கு 'மூலத்தை அடைதல்' என்று பொருள். மூலப் பொருளாகிய கடவுளை யடைந்தார்க்குத் துன்பமில்லை, கேடில்லை, அச்சமில்லை; ஆண்மையுண்டு, வீரமுண்டு, ஆனந்தமுண்டு. இத்தகைய பெருமை பெற்ற நிலையை யாவனேவிடத்துணிவன். ரோஜா மலர் முட்களால் சூழப்பட்டிருப்பினும் அதனுடைய அழகிற்கோ அன்றி மென்மைக்கோ கேடுண்டாவதில்லை. அது போன்று மதத்தைச் சூழ்ந்துள்ள சில குறைகளினால் மதமே பொய்யாகி விடாது. அச்சிறு காரணத்தைக் கொண்டு அதை முழுதும் விடத் துணிவோர் அறிவாளிகளாகார்.
 

மனிதன் உலகத்தின் போகங்களினால் திருப்தி யடைவதில்லை. எப்பொழுது பார்த்தாலும், இன்பத்தை நாடிப் பேய் போலலைகின்றான். ஆனால் இன்பமும் இவனை விட்டு ஓடிக்கொண்டே யிருக்கிறது. ஒரு பொருளைப் பற்றுகின்றான். ஆங்கு மனப் பூரணமான இன்ப மடைந்ததாக நினைக்கின்றான். அடுத்த விநாடி அதுதுன்பக் களமாய் விடுகின்றது. இமாலயத்தில் இன்பம் பயக்கும் கம்பளிப் போர்வை சகாராப் பாலை வனத்தில் துன்பம் பயப்பதாய் விடுகின்றது. அருணகிரியார் இவ்வுலகை 'பிரபஞ்ச மென்னும் சேறு' என்கின்றார். உண்மையில் இவ்வுலகமே பெரும் சேறு. அதனுள் ஒரு காலை வைத்தாற் போதும். அதை எடுக்க மற்றொரு காலை வைக்க வேண்டும். இவ்வாறே குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்ட கதையாய் இன்பந் தேடித் துன்பமடைவதே மிச்சமாக இருக்கிறது. ஒன்றை விட்டொன்று பற்றி எப்போதும் ஆசைக் காற்றில் அலையும் பஞ்சாக மனிதன் விளங்குகின்றான். அழியும் பொருள் யாவையிலும் அவனுக்குச் சாந்தி யுண்டாகவில்லை. இவ்வுலகத்தின் பொய் நடிப்பு, ஏமாற்றம், வஞ்சனை, பொறாமை முதலியவைகளை அறவே ஒழிக்க யோசிக்கின்றான். அப்போதுதான் அவன் தெய்வீகச் சமய வாழ்க்கைப் பாதையில் புகுந்தவனாவான். அன்று முதல் அவனுக்கு இவ்வுலகமே ஓர் கற்பகக் காவாய் விடுகின்றது. எல்லாம் ஒன்றென்று சமரச சுபாவத்தோடு கூடி அசையாது, கலங்காது ஆனந்தத்தில் திளைத்து எல்லோரும் இன்புற்றிருக்க'ப் பாடு படுகின்றான். அன்பே சிவம், அருளே அதனை அடையும் வழி எனத் தெரிந்து நடக்கின்றான். இவ்வாறான தெய்வ வொழுக்கமே சமய வாழ்க்கை; அடங்காத ஆர்வத்தோடு ஈசனைத் தேடி அவனோடு ஒன்றாகும் அருள் நெறி.

 

உலகப் பொருள்கள் ஒன்றிலும் திருப்தியும், அமைதியும் காண
 முடியாத திறத்தினாற்றான் மனிதன் கடவுளைப் பற்றுகின்றான் என்று மேலே கூறினோம். இதனால் உலகத்தை வெறுப்பவனே ஞானி எனக் கொள்ளலாகாது. வெறுப்பென்பது அணுவளவேனும் கொள்பவன் ஞானியாகான். உலகத்தைப் பொய்யாகவும், துன்பமாகவும் கருதுவதை விட்டு உண்மையாகவும், இன்பமாகவும் காண்பதுவே ஞானம். 'உண்ணும் உணவும் பருகு நீர் தின்னும் வெற்றிலை யெல்லாம் கண்ணன்' என்னும் உணர்ச்சியே சமயத்தின் பெரும் உணர்ச்சி.  சுகப் பிரம்மரிஷி கடவுளே! கடவுளே!' என்று கூப்பிட்டுக் கொண்டே காட்டில் ஓடினார். அப்போது ஆங்குள்ள கல், மண், மரம், மலர், செடி, கொடி, ஊற்று எல்லாம் ஏன்! ஏன்! என்று கேட்டனவாம். 'சர்வ மிதம் பிரமா' என்பது எல்லாம் கடவுள் என்னும் வேதவாக்கு. ஆகவே உலகத்தை வெறுப்பவன் அறிஞனாக மாட்டான். ஆனால் அதைப் பொய்யாகப் பாராமல் உண்மையாகக் கண்டு விருப்பத்தோடு அணைத்துக் கொள்பவனே அறிஞன்.

 

நாம் மேற் சொல்லி வந்த உயரிய நிலையே மதத்தின் உண்மையான உச்ச நிலை. இதனை அடைவதற்கான ஒழுக்கங்களைப் பல் வேறுசமயங்கள் பல் வேறு வகைகளாற் கூறுகின்றன. சமயங்களை ஏற்படுத்திய ஒவ்வொரு பெரியாரும் இந்நிலையை அடைந்தவரே யாவர். ஆனால் அவர்களுக்குப் பின் வந்தோர் அச்சமயக் கோட்டத்தைத் தந்நயங் கருதிப் பாழாக்கி விட்டனர். அதனுடைய புனிதமான பெயரால் பல கேடுகளைப் புகுத்தி விட்டனர் என்பது உண்மையே. இக் கேடுகளெல்லாம் ஒரு மதத்தில் மட்டு மன்று - எல்லா மதங்களிலு முண்டு. ஒரு சமூகத்தில் மதத்தால், அதனுடைய சீரிய ஒழுக்கத்தால் பெருமை யடைந்த ஒரு வகுப்பாரால் சமூகச் சட்டங்கள் பல சமூக நன்மையைக் கோரி ஏற்படுத்தப் படுகின்றன. சிறிது காலத்துள் அச்சட்டம் பழமையால் பெருமையுற்று மக்கள் உள்ளத்திற் பதிந்து அவரது மேனோக்கமாகிய முன்னேற்றத்திற்குத் தடையாக நேருதலும் சாத்தியம். நமது நாட்டிலும் அவ்வாறே நடந்துள்ளது. ஆனால் ஒன்று மட்டும் எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது மதம் வேறு, சமூக சாஸ்திரங்கள் வேறு. மத உண்மைகள் மாறாதவை. சமூகக் கட்டுகள் மாறுபடுபவை. மாற வேண்டுவது அவசியமே. நமது சமூக சாஸ்திரங்களும் மாறிக் கொண்டே ஒவ்வொரு தரும் சாத்திரமாகப் பல தர்ம சாஸ்திரங்கள் ஏற்பட்டுள்ளன. மனுமுதல் பராசரர் வரை நாற்பதுக்கு மேற்பட்ட ஸ்மிருதிகள் உள. ஆனால் இவைகளெல்லாம் மதமல்ல. நாம் ரோமாபுரிச் சட்டப் புத்தகங்களையும், கிரேக்க நியாய வாதங்களையும், ஆங்கில சமூகத் திட்டங்களையும், திருக்குறள் முதலிய நீதிநூல்களையும் சமய சாத்திரங்களாகப் பாராட்டுவதில்லை. மனு தர்மம்' முதலிய தரும சாஸ்திரங்களும் அவ்வாறானவையே. ஒருவன் சாப்பிட வேண்டுவது இவ்வாறு, குளிக்க வேண்டுவது இப்படி, உட்காருவது இம்மாதிரி, வெளிக்குப் போவது இவ்விடத்தில் என்பவையெல்லாம் கூடவா மதம்? ஆகவே மறுமுறையும் மதத்திற்கும் சமூகக் கட்டுப் பாடுகளுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதை வற்புறுத்துகின்றோம். இவை யிரண்டையும் ஒன்று என நினைக்கும் பிறழ்ந்த உணர்ச்சியால் மதமே பொய்யென்றும், அவசிய மில்லையென்றும் கூறுவது தகாது.

 

இது ஒருபால் இருக்க, நமது மத வணக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கோயில்களும், அவற்றின் பிரசாரத்திற்காக ஏற்பட்ட மடங்களும் மக்களுக்குச் சரியான வகையில் பயன்படுவதில்லை. தீண்டாமை, பாராமை முதலிய நச்சுப் பாம்புகள் நம் சமூக நந்தவனத்தில் மிகுந்து விட்டன. பெண்ணடிமைப் பேய் ஒருபால் தலை விரித்துக் கூத்தாடுகின்றது. சாதிச் சண்டைகள் ஒருபக்கம் மண்டையைப் பிளக்கின்றன. ஒருவருக் கொருவர் பொறாமையும், வெறுப்பும், வஞ்சகமும் கொண்டு அமைதியை அழிக்கின்றனர். எங்கு பார்த்தாலும் ஆடம்பரமான, அமைதியற்ற வாழ்க்கை நாட்டைப் பாழ்படுத்துகிறது. நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு உண்ண உணவில்லை, உடுக்கத் துணியில்லை. கன்னம் ஒட்டிக் கண் குழிந்து போயிருக்கும் அடிமை மக்கள் வெறுக்கத்தக்க வாழ்க்கையில் வாழ்கின்றனர். இச் சமூகக் குறைபாடுகளைக் கண்டு ஒவ்வொரு இந்தியர் மனமும் புழுங்குகின்றது. ஆனால் இவைகள் மக்களின் அறியாமையின் விளைவேயன்றி மதத்தின் விளைவன்று.

 

மற்றும் மேற்சொல்லப்பட்ட இழிந்த நிலை ஒழிய வேண்டுமானால் அன்பு நெறி எங்கணும் பரவவேண்டும். அவ்வன்பு நெறியே மதத்தின் சாரம். 'அன்பே சிவ' மென்றும் இன்பமே என்னுடை யன்பே' என்றும் பெரியோர் கடவுளைப் போற்றுகின்றனர். இவ்வன்பு நெறியாகிய உன்னதமான நெறியை பரமார்த்திகத்தில் மட்டுமல்ல விவகாரத்திலும் செலுத்துவோ மாயின் உலகத் துன்பங்கள் உடனே ஒழிந்து விடும். ஆகவே முதன்மையாய் நின்று இந்திய நாட்டைக் காப்பது மதநெறியே. 'அரசியல், சமூகம், பொருளாதாரம் முதலியவை யெல்லாம் இரண்டாம் படியே, அவை மதத்தைச் சூழ்ந்தே விருத்தி யடைய வேண்டும்' என்று ஸ்வாமி விவேகானந்தர் இந்தியாவைப் பொறுத்த வரையில் சொல்லுகின்றார். இதை விட்டு வேறு வழிகளிற் செல்லுவோமானால் நமது சீர்திருத்தங்க ளெல்லாம் அசாத்தியமாகி விடும். மகாத்மா காந்தியடிகளும் அதையறிந்தே மதவாழ்க்கையின் உயரிய தத்துவமாகிய சத்யாக்ரக நெறியை அரசியலிற் புகுத்திப் பெருமை பெற்றார். நாம் மதவாழ்க்கையில் வாழ்ந்துவர நமக்குக் கடவுள் அருள் செய்வாராக; இச்சமூகக் கட்டுகளையும் அன்பு நெறியோடு சீர்திருத்த வலிமையும் அருள்வாராக.

 

ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஏப்ரல் ௴

 

No comments:

Post a Comment