Monday, August 31, 2020

 

சாந்தி

(D. ராஜகோபால்)

என் மனம் சதா சாந்தியை நாடிக்கொண்டிருக்கிறது. சாந்தி தேவியின் பாதங்களில் விழுந்து ஆர்வம் தீர வணங்க என் உள்ளம் துடி தடிக்கிறது. உள்ளம் எவ்வளவுக் கெவ்வளவு ஆவல் கொண்டு துடிக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு சாந்தி தேவியும் என்னை விட்டுத் தூர விலகி விடுகிறாள். கானல் நீரைக் கண்டு கலங்கும் கலை மானைப்போல் என் மனமும் கலங்கித் தவிக்கிறது. மனக்குகையின் அந்தகாரத்தினிடையே ஓரோர் சமயம் மின்னல் போலத் திடீரென்று தோன்றி மறையும் சாந்தியின் சின்னத்தைக் கண்டு சாந்தி தேவியின் சாந்நித்தியத்தையே அடைந்து விட்டதாக உள்ளம் துள்ள வாரம்பிக்கும். ஆனால் அந்தோ! மறு விநாடி ஒரே அந்தகாரம் தான். ஏங்கித் தவிக்கும் இந்த உள்ளத்திற்கு விமோசனமே - சாந்தியே - கிடைக்காதா?

மளித வாழ்விலே சாந்தி யென்பது குதிரைக் கொம்பாகத் தோன்றுகிறது. வாழ்க்கையே ஒரு பெரும் ஏமாற்றமா? கண், மண் தெரியாது மேடு பள்ளங்களை யறியாது வாழ்க்கைப் பாதையில் ஓட ஆரம்பித்து விடுகிறது அச்சில்லாத இந்த வண்டி, குடை சாயாமல் சிறு மேடு பள்ளங்களைச் சமாளித்துக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் வரை மனத்தில் ஆனந்தத் தாண்டவம் தான். சாந்தி கிடைத்து விட்டதாகக் கூறிக் களிப்படையும் பேதை மனம், திடீரென்று வண்டி கவிழ்ந்தடித்து விழுகிறது. சாந்திக் கனவு - ஆனந்தக் கனவு - கண்டு கொண்டிருந்த பேதை மனம் திடுக்கிட்டுத்துள்ளுகிறது. உலகமே ஏமாற்றமாகத் 'தோன்றுகிறது. மனதிலே வைராக்கியம் பிறக்கிறது. துக்கத்தை, வேதனையை மறைக்க உள்ளம் வேதார்தத்தை நாடுகிறது. உலகமே அநித்யம் என்று கூறிக் களிக்கிறது. என்ன ஆச்சரியம் காலக் கிரமத்தில் கவிழ்ந்த வண்டி நிமிர்ந்து செல்ல வாரம்பிக்கிறது, வேதாந்தம், ஞானம், பக்தி வைராக்கியம் எல்லாம் பறந்து விடுகின்றன. ஆனந்தக்களி நடம்புரிகிறது கள்ள உள்ளம்.

எனக்கு வாழ்க்கையே கசந்து விட்டது. மனம் சதா சலித்துக் கொண்டிருக்கிறது. எனக்கு உலகம் சாந்தி மயமான தாகத் தோன்றுகிறது. உலகத்திலுள்ள சகல ஜீவன்களும் - என்னைத் தவிர - சாந்தி மயமான சந்தோஷ வாழ்க்கையை அனுபவிப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் என் உள்ளம் மட்டும் காமக்குரோத லோப மோக மத மாச்சர்யங்களாகிய வைரிகளின் போர்க்களமாக விளங்குகின்றது.

அதோ போகிறாரே ஒரு பெரிய மனிதர். அவர் தான் இந்த ஊரிலேயே சிறந்த பணக்காரர். கவலையற்ற வாழ்க்கை. நினைத்ததை நினைந்தவாறு செய்யும் ஆற்றல் படைத்தவர். பணம் படைத்தவரால் ஆகாத காரியமும் உண்டா? அவரைக் காணும் போதெல்லாம் என் மனம் பொறாமை கொண்டு கொதித்தெழும். பொறாமை என்றால் கெட்ட எண்ணத்தினால் உண்டான பொறாமையல்ல. "அவருடைய வாழ்க்கையில் அவர் சாந்தியை அனுபவிக்கிறார். கவலையற்ற வாழ்வு வாழ்கிறார். அவரன்றோ, பாக்கியசாலி. நமக்கு மட்டும் சாந்தியின் சாயல் கூடச் கிட்டமாட்டேன் என்கிறதே" என்று என் மனம் ஏங்குகிறது. அவர் மட்டுமல்ல. நான் பார்க்கும் எல்லோருமே சாந்தி மயமான வாழ்வை அனுபவிப்பதாகவே தோன்றுகிறது. அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நானும் அவர்களில் ஒருவராக ஆகி விடக் கூடாதா என்று ஏங்குகிறது என் மனம். ஆனால் அது சாத்தியமா?

என்ன ஆச்சரியம்! நான் பறக்கிறேன். என் உடல் எங்கே? உடலில்லாமல் நான் மட்டும் பறக்கிறேன். பறந்து பறந்து சாந்தி தேவியின் பிரதிநிதியாகத் தோன்றிய அந்தச் செல்வரின் இல்லத்திற்குச் செல்லுகிறேன். இது என்ன? கனவா அல்லது நனவா! நான் அவருடைய உள்ளத்தின் ஒவ்வொரு துடிப்பையும் நன்றாக அறிகிறேன். நான் அவராகி விட்டேன். அவர் நினைப்ப தெல்லாம் என் மனதில் நினைப்பதாகவே தோன்றுகிறது. ஆஹா! ஆனந்தம்! ஆனந்தம்! சாந்தியின் சாந்நித்தியம் கிடைக்கா விட்டாலும் சாந்தி தேவியின் அத்யந்த அன்பரின் மனதில் வாசம் செய்யும் பாக்கியமாவது கிடைத்ததே. அதுவே போதும் என்று அகமகிழ்கிறது என் மனம். ஆனால் அந்தோ! என்ன பரிதாபம்? இவருடைய ஹிருதயம் - சாந்தியின் சந்நிதானம். உளுத்தல்லவோ இருக்கிறது. புத்தகத்தை செல்லரிப்பது போல் உள்ளத்தைக் கவலைகள் அரித்துக் கொண்டே யிருக்
கின்றன. எண்ணற்ற எண்ணங்கள் எழுகின்றன. “வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகப் பரவிவரும் இந் நாட்களில் கொள்ளைக் கூட்டம் பெருகும் போலத் தோன்றுகிறதே. என்ன செய்வது? ஊரில் நாம் தானே பணக்காரன். நம் வீட்டில் கொள்ளைக்காரர்கள் புகுந்து விட்டால்......" மேலே நினைக்கக் கூட முடியவில்லை. நெஞ்சு துடி துடித்தது. அத் துடிப்பைத் தாங்காமல் மூர்ச்சையடையும் நிலைமையை அடைந்து விட்டது மனம், இது கவலைக் கடலின் ஒரு அலை. உடனே தொடர்ந்து வேறு அலைகள் அலைக்க வாரம்பிக்கின்றன. "விலைகள் ஏறு மென்று இத்தனை சாக்குகளைக் கொள் முதல் செய்து வைத்திருக்கிறோமே. ஆனால் நிலைமை மோசமாக இருக்கிறதே. திடீரென்று நிலைமை மோசமாகி விலைவாசி குறைந்து விட்டால் சம்
சதி...!........." அப்பா! போதும் போதும்
இந்தத் தொல்லை. அவருடைய கவலைகள் எல்லாம் என் கவலைகள் போலத் தோன்றி என்னை வருத்துகின்றனவே. வேண்டவே வேண்டாம், இந்த வாழ்வு. பணத்தினால் அல்லவா இத்தனை கவலை. வாழ்க்கைத் தேவைக்கு மட்டும் தகுந்த பண வருவாயுள்ள உத்தியோகஸ்தனின் வாழ்வே மேல். இவ்வாறு எண்ணுகிறது என் மனம்.

நான் மறுபடியும் பறக்கிறேன். அதோ போகிறானே அந்த மனிதன். “ஆபீஸில்” வேலை. எதோ வருவதை வைத்துக்கொண்டு சாந்தியுடன் வாழ்கிறான். நான் அவனானால், .... அடே! இது என்ன? நான் அவனாகி விட்டேன் ஆஹா! என்ன ஆனந்தம்? - கவலையற்று சாலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்லுகிறேன். அதோ ஒரு தெரிகிறதே! அது இப்பொழுது என் வீடு, என் மனம் மகிழ்ச்சி யடைகிறது. கடைசியில் சாந்தியின் கடாட்ச வீட்சண்யத்தை அடைந்து விட்டேன். ஆனந்தமாக அகத்தில் நுழைகிறேன். கட்டுக்கடங்காத மகிழ்ச்சியில் திளைக்கு மனம் கடிவாளம் போட்ட குதிரை போல் ‘தட்' டென்று நின்று விடுகிறது. வீட்டில் ஒரேடரகளை. பக்கத்துவீட்டுப் பருவதம் சாப்பிட்ட பாதாமி ஹல்வா வேண்டுமாம் பெண்ணுக்கு. தாயார் எவ்வளவு சமாதானம் செய்தும் கேட்கமாட்டே னென்கிறது. தாயார் வைக்கிறாள் ஒரு பூசை. குழந்தை 'வீல்வீல்' என்று கத்துகிறது. மற்ற குழந்தைகளும் சூழ்ந்துகொண்டு, அது வேண்டும் இது வேண்டும் என்று நச்சரிக்கின்றன. சாப்பாட்டிற்கே சரிக்கட்ட முடியாத வரும்படியில் ஆடம்பரச் செலவுக்கு எங்கே போவது? வறுமைப் புயவின் வலிமையைச் சாந்திச்சுடர் எதிர்க்க முடியாமல் கீழ்ப்படிகிறது. சாந்திச் சுடர் அவிந்து அந்தகாரம் பரவுகிறது. மனம் சலிக்கிறது. 'சீசீ! இதுவும் ஒரு வாழ்வா'!
'ஆபீஸில்' தான் சதா 'சள்ளுபுள்' ளென்று சினந்து விழும் முதலாளிபிடம் ஒரு நாள் கழிவது ஒரு யுகமாகத் தோன்றுகிறது. வீட்டிலாவது நிம்மதியுண்டா வென்றால் அதுவுமில்லை. போதும் போதும் இந்த வாழ்வு'' என்று மனம் வாய் விட்டலறுகிறது. என் மனமும் வருந்துகிறது. இந்த இடத்தை விட்டு அகன்றால் போதுமென்று தோன்றுகிறது.

நான் மறுபடியும் பறக்கிறேன். பறந்து பறந்து நாட்டின் எல்லையைத் தாண்டி காட்டின் எல்லையைக்கூட அடைந்து விட்டேனே. ஆம், நாட்டி லகப்படாத சாந்தி காட்டில் தான் இருக்கவேண்டும். பெரியோர்கள் கூடச் சொல்லியிருக்கிறார்களே. ஆஹா! இதுவரை அது நினைவிற்கு வரவில்லையே. அதோ! அந்தக் குகையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கும்
அவர் ஒரு பெரிய தவசியாகத் தானிருக்கவேண்டும். சித்தத்தைக் கட்டுப் படுத்த வல்ல சித்தரிடம் சாந்தியில்லை யென்றால் வேறு எங்கே அது இருக்கப்போகிறது? அவர் கண்டிப்பாக சாந்தியின் சிகரத்தை யடைந்த சித்த சுத்தாய்த்தா னிருக்கவேண்டும். என் மனம் ஆனந்தமடைகிறது. இதோ நான் அவரேயாகி விட்டேன்.

இது என்ன? உள்ளிருந்து உணர்வது நானா அவரா? அவரானால் ஏனிந்த நீ புத்தி? உணர்வது நானாகத்தா னிருக்க வேண்டும். இல்லா விட்டால் என் கள்ள உள்ளத்தின் கறைதான் அவர் மனத்திலும் உறைத்து இம்மாதிரி நினைக்கத் தோன்றுகிறதா? இல்லை. நிஜமாகவே அவர் தான் இப்படி நினைக்கிறார். அவருக்குத் தனி வாழ்வு சலித்து விட்டதாம்.
நாளையே நாட்டிற்குச் செல்லவேண்டுமாம். எத்தனை நாளைக்குத் தான் தனியாக இருந்து துன்புறுவது! இல்வாழ்க்கையி லிறங்கி இன்பங் வேண்டுமாம். பேயறைந்தவன் போல ஓடுகிறேன் நான்.

ஏமாற்றம் ஏமாற்றம். எங்கும் ஒரே ஏமாற்றம். பணக்காரன், ஏழை, முதலாளி, தொழிலாளி, கிழவன், குமரன், சந்நியாசி, சம்சாரி எல்லோகுடைய வாழ்வும். ஒரே மாதிரி துன்பக்காடாக வன்றோ இருக்கிறது? சாந்தியின் சாயல் கூடக் காணோமே. அலைந்த சிரமம் ஆளைக் கிழே தள்ளி விடுகிறது.

கனவு காண்கிறேன். ஆம். கனவு தான் காண்கிறேன். யாரோ ஒரு திவ்ய புருஷர் என் காதில் உபதேசிக்கிறார்.

"அன்பனே! சாந்தி மார்க்கத்தைக் கூறுகிறேன். கேள். உயிர்களிடத்தில் அன்பு காட்டு. அன்பே சிவம்; அதுவே சாந்தி, பற்றை நீக்கி எண்ணம் நிறைவேறுவதும் நிறைவேறாததும் ஒன்றெனக் கருதித் தொழில் செய். தோல்வியைக் கண்டு கலங்காமலும், வெற்றியைக் கண்டு மகிழ்ச்சிக் கூத்தாடாமலும் இருக்கக் கற்றுக்கொள். ஆசையே கவலையின் வித்து.
செய்யும் செயல்களை முற்றும் ஈசனுக்கெனத் துறந்துவிட்டுச் செய். அதுவே சாந்தி யோகம். அதையே கண்ணன் கீதையில் இசைத்தார்.''

சாந்திக்கு வழி கிடைத்துவிட்டது. வழி என்னவோ சுலபமாகத் தான் தோன்றுகிறது. ஆனால் அதன்படி நடக்க முடியுமா என்று மனம் மறுபடியும் ஐயுறுகிறது. பார்ப்போம். கூடிய வரை முயன்று பார் என்று யாரோ என்னுள்ளிருந்து கூறுகிறார். அவர் சொன்னபடி அவருக்கே என் முயற்சியை அர்ப்பணிக்கத் தீர்மானித்து விட்டேன்.

ஆனந்த போதினி – 1942 ௵ - ஏப்ரல் ௴

 

No comments:

Post a Comment