Monday, August 31, 2020

 

கோபம் சண்டாளன்

 

அருளாளனும், அன்புடையோனுமாகிய ஆண்டவனின் திருநாமத்தைச் சிந்தித்து நான் இதனை எழுதத் தொடங்குகிறேன். எல்லாப் புகழும் அந்த ஆண்டவனுக்காயிருக்கும். மேலும் அந்த ஆண்டவன், நம்மைக் கோ பத்தினின்றும் விடுவித்துக் காத்தருள்வானாக. இன்னும் எல்லா மக்களுக் கும் அவ்விதமே கிருபை கூர்ந்தருளுவானாக. " கோபம் சண்டாளன்'' என்பதுயாவரும் அறிந்த விஷயமே. என்றாலும் அச்சண்டாளன் நம்மிலி ருந்து உண்டாகும் போது நம்மை அறியாமல் எவ்வளவோ கம்பீரமான வேகத்துடனும், அதிர்ச்சியுடனும் கிளம்பி எதிரில் நிற்பவனை ஒரு க்ஷணப் பொழுதில் தொலைத்துவிடச்செய்து விடுகிறான். இச்சண்டாளனுடைய மாயையில் அகப்பட்டவர்கள் எண்ணிறந்தவர்கள். அத்துஷ்டன் சிற்சில மகான்களையும் கூடமோசத்தில் இழுத்துவிட்டு விடுகிறான். அப்பெரிய மகான்களுடைய தபங்களெல்லாம் இச்சண்டாளனால் இழக்கப்பட்டுப் போய்விடுகின்றன. இவன் உள்ளிருந்து சில சமையம் வெளிக்கிளம்பும் பொழுது, பற்கள் நெற்நெற என்று கடிபட, மீசைகள் துடிக்க, உதடுகள் கடிபட, கண்கள் சிவக்க, அடடா! என்ன அட்டகாசம் செய்து வருகிறான்! அதைச் சொல்லி மாளாது. அப்படி அவன் உள்ளிருந்து வெளிக்கிளம்பினவுடன், எவ்வளவு பெரிய படிப்பாளிகளும், பெரிய தந்திரசாலிகளும், தெள்ளிய அறி வாளர்களும் கூட அச்சமயம் மெய்ம்மறந்து மதிமோசம் போகிறார்கள்; பெரிய பாதகங்களை யெல்லாம் செய்து விடுகிறார்கள்; அப்படிச் செய்தபின் சிலர், " ஏன் இப்படிச் செய்து விட்டீர்கள்?'' என்று அவர்களைக் கேட்டால், அவர்கள் " நான் என்ன செய்வேன்; எனக்கு அச்சமயம் அவ்வளவு கோபம் பிறந்து விட்டது'' என்கிறார்கள்.

 

பார்த்தீர்களா! அந்தோ! இவர்கள் இப்படி அவன் கொதித்தெழுந்த போது அச்சண்டாளனை எதிர்த்து நின்று அவனோடு போராடி, அவனை உள்ளே அடக்கமுடியாமல், அவனுக்கு அடிமைப்பட்டு இடங்கொடுத்து விடுகிறார்கள். அப்படி நாம் ஏன் அவனுக்கு அடிமைப் படவேண்டும்? நம் முன்னிருந்து கிளம்புகிற அவனை நம்மால் அடக்கமுடியாவிடில், அதன் பின் நம்மால் எதைத்தான் அடக்கமுடியும்? கடவுள் படைத்த அகிலாண்ட) இப்பெரிய பூவுலகின்கண் உள்ள மற்றவுயிர்களிடம் இருக்கிற தத்துவத்தைக் காட்டிலும் நம்முடைய தத்துவத்தையே அவர்மேலான தாக்கித் தந்திருக்கிறார். அப்படியிருக்க, நம்மால் ஏன் அச்சண்டாளனை அடக்க முடியாது? அவன் இஷ்டம் போல் எந்தச் சமையமும் மிதமிஞ்சிக் கிளம்பிக் கொண்டிருக்கும் போது அவன் போன போக்காகவே அவனை வெளியே நாம் விட்டுவிட்டால், முதலில் நாம் உண்கிற உணவுகள்தான் ஜீரணமாவ தெப்படி? நம்முடைய தேகம் தான் ஆரோக்கியமடைவதெப்படி? நம் உயர்ந்த தத்துவத்தை இவ்வுலகின்கண் உபயோகிப்ப தெப்படி?    

 

ஆகையால் அவனை வெளியே கிளம்பாமல் உள்ளே அடக்கிவைப்பது நம்முடைய முக்கிய வேலையாக இருக்கிறது. அவனை எப்படி அடக்குவ தெனில் ஒன்று செய்ய வேண்டும். அதாவது: அச்சண்டாளன் உள்ளிருந்து வெளியே வெகுவேகத்துடனும் அகங்காரத்துடனும் கிளம்பி வருகையில் மனதைச் சற்று அடக்கி, நிதானித்துப்பின் கடவுளின் சுத்த ஆகாயத்தைப் பலதரம் உள்ளுக்கிழுத்து வெளியே விடவேண்டும். அப்படிச் செய்தால் அந்தச் சமையம் மனதுக்கு ஓர் இனிமையான சாந்தம் உண்டாகும். பின்பு அவனை நோக்கி, 'தம்பி வாருங்கள்; வாருங்கள்; தங்களுக்கென்ன இவ்வளவு வேகம்! சற்று உள்ளேயே யிருங்கள்; வேகத்துடன் நீங்கள் வெளிக் கிளம்ப வேண்டாம்; உள்ளே புகுந்து கொள்ளுங்கள்'' என்று சொல்லி, ஆர்ப்பரித்து வந்த அச்சண்டாளனை சூன்யமாய்க் காணாமற் போகும்படி செய்துவிட வேண்டும். இவ்விதமாக வேகத்துடன் வெளியில் வருகிற கோபச்சண்டாள்னை உள்ளே அழிந்துபோகும்படி 10 - 15. அல்லது 20 தரம் ஒருவன் செய்து பழகிவிட்டால் போதும். அந்தச் சாந்தமான பழக்கத்தால் அவனுடைய தேகத்துக்கு அற்புதமான ஆரோக்கியம் உண்டாய் விடுகிறது. அற்புதமான வசீகரசக்தி அவன் மனதுக்கு ஏற்பட்டு விடுகிறது. அவனை எல்லோரும் நேசிக்கிறார்கள். அவன் சொல் வேதவாக்கியமாய் விடுகிறது. கொடிய துஷ்டமிருகங்களும் கூட அவனைக் கண்டு விசுவாசிக்கின்றன. பெரிய மகான்கள் இந்தக் கோபமென்ற சண்டாளனை அவர்கள் காலின் கீழ் அடக்கி அடிமையாக்கி வைத்திக்கிறார்கள். அவர்களிடம் இந்தச் சண்டாளனுடைய தந்திரம் ஒருகாலும் செல்லாது. இந்தச்சண்டாளன் நீற்றுப் பஸ்பமாகிற காலம் வந்தால்தான் அவர்களின் சமீபத்தில் நெருங்குவான்.

 

இவ்வாறு கோபத்தை அடக்கச் சொன்னதால் சிலர், நம்மை,'' நீர் கோபத்தை அடக்கிவிட வேண்டுமென்று சொல்கிறீரே; இரவில் வீட்டில் கள்ளன் வந்து களவாடும் போது ஒன்றும் செய்யாமல் கோபத்தை அடக்கிக் கொண்டு சும்மா இருந்து விடலாமோ?' என்று கேள்வி கேட்கலாம். அப்படி எல்லாவிடத்திலும் கோபங்காட்டாமல் சும்மா இருக்க வேண்டு மென்று நான் சொல்லவில்லை; இடங்களுக்குத் தக்கபடி அதனை உபயோகிக்க வேண்டும். கள்ளர் நமக்குத் தீங்கு செய்யும் போது, நாம் பொய்யான கோபக்குறியால் மாத்திரம் அவர்களை அடக்கலாம். ஆனால், மெய்யான விபரீத கோபத்தை அவர்களிடத்திலுங் காட்டக்கூடாது. அவ்வாறு காட்டினால், கொலை முதலியன நேர்ந்து துன்பத்திற் கேதுவாய்விடும். ஆகவே, எவ்விடத்துமே உக்கிரமான கோபத்தை அடக்குவதுதான் நலம். கோபமற்றவர்க்கு எப்பொழுதும் தீங்கில்லை. சாந்தமானவர்க்குத் துஷ்டர் தீங்கு செய்ய நினைத்தாலும் அவர்களுடைய எண்ணம் நிறைவேறாது. அத்தீயர்கள் தாமே ஒழிந்து போவார்கள். இவற்றை ஆராயும் போது கோபத்தை அடியோடொழிக்க வேண்டியது மனிதர்க்கோர் சிறந்த குணமாகிறது. ஆதலின் எல்லாம் வல்ல இறைவன், அவனை (கோபத்தை) விட்டு நீங்கியிருக்கும்படி நம் எல்லோருக்கும் கிருபை கூர்ந் தருளுவானாக.


 மு. நா. செய்யது முகம்மது,

 47 / 28 ரங்கூன்.

 

குறிப்பு: - கோபம் சண்டாளம் என்று நண்பர் கூறியதை விளக்க ஒரு கதையுண்டு. அதாவது -வைதிக அந்தணரொருவர், ஒருநாள் காலை தமது நித்யானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, தம்முடைய கிராமத்தினின் றும் புறப்பட்டு அடுத்த கிராமத்திற்கு ஓரவசர வேலையாகப் போய்க்கொண்டிருந்தார். இவருடைய எண்ணமெல்லாம். தாம் போகும் வேலை மேலிருந்த படியால் வழியில் எதிராக இன்னார் வருகின்றனர் என்பதை இவர் கவனிக்கக்கூடவில்லை.

 

இப்படி இவர் போம்போது இவருக் கெதிராக ஒரு புலைச்சி வந்து கொண்டிருந்தாள். அவளும் தன் எண்ணத்தைத் தான் போகும் வேலையில் செலுத்தி யிருந்தபடியால் வேதியர் வருவதைக் கவனிக்கவில்லை. தெய்வா தீனமாய் இருவரும் ஒருவரையொருவர் நெருங்கிவிட்டனர். அப்போது ஐயர் அந்தப் புலைச்சியைப் பார்த்து,

 

''அடி பாபி! தோஷி! உனக்குக் கண் குருடாகவா போய் விட்டது. கொஞ்சமும் பயமில்லாமல் என்னைச் சமீபித்தாயே'' என்று பலவாறு இகழ்ந்து பேசிக்கூச்சலிட்டார். புலைச்சி தான் அறியாமற் செய்த பிழையைப் பொறுத்தருளும்படி எவ்வளவோ கெஞ்சிக் கேட்டாள். ஐயர் அடங் கினாரில்லை; வரவர அவருக்குக் கோபம் பெருகிக்கொண்டே வந்தது. பார்த்தாள் புலைச்சி, "இனி நாம் சும்மா இருப்பது நல்லதல்ல. இவருக்குப்
புத்திபுகட்ட வேண்டு'' மென்று நினைத்து ஐயரது கைகளைப் பிடித்துக் கொண்டு "துரையே! ஏன் கூச்சலிடுகிறீர்? எவராவது கண்டால், நம்மை ஏளனஞ் செய்வார்கள்'' என்று அவர்மேல் விழுந்து கட்டிக்கொண்டாள். ஐயருக்கு ஒன்றுந் தோன்றவில்லை. 'இந்த அநியாயமுமுண்டா?'' என்று கதறினார்.

 

இவர்களுடைய கூக்குரலைக்கேட்டு அக்கம் பக்கத்திருந்தவர் கும்பு கூடி இருவருடைய வாக்குமூலத்தையும் கேட்டு, புலைச்சியைக் கண்டித்தார்கள். அவள் 'ஆண்டமாரே! இவரோ எல்லாக்கலைகளையும் ஓதிவைதிக சிகாமணியா யிருந்தும் நான் தெரியாமற் செய்த குற்றத்தைப் பொறுக்கும் எண்ணங் கொள்ளாமல் என்னை மென்மேலும் தூஷித்து அடங்காக் கோபத்திற்கு இடந்தந்தபடியால் நான் இவரை என் பர்த்தாவாகக் கொண்டு தழுவிக்கொண்டேன். நானோ சண்டாளத்வம் படைத்தவள். இவரோ கோபமாகிற பரமசண்டாளத்வத்தைக் கைக்கொண்டவர். ஆகையால் நாங்களிருவரும் ன் சமத்வமடைந்து ஒருவரை யொருவர் நேசிக்கலாகாது'' என்றாள்.

 

இதுகேட்ட அனைவரும் ஐயரின் அவிவேகத்திற்கு இரங்கி அவருக்கு வேண்டிய புத்திமதி சொல்லி அவரையனுப்பி விட்டனர். இதனால் "கோபம் பரமசண்டாளம்'' என்பதை நாம் அறியலானோம் - தீண்டப்படாதார் வகுப்பைச் சேர்ந்த இதனையும் நாம் தீண்டாதிருத்தலன்றோ உத்தமம்?

ப - ர்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - ஜுலை ௴

 

 

 

No comments:

Post a Comment