Monday, August 31, 2020

 

சான்றோர் அணி

(ரா. பி. சேதுப் பிள்ளை, பி. ஏ., பி. எல்.)

 

அழகிய பொருளைக் காண்பதே ஆனந்தமென்று ஓர் ஆங்கிலக் கவிஞர் அருளிப்போந்தார். இயற்கையில் இலங்கும் அழகினைக்கண்டு கழிபேருவகையுற்ற அறிஞர், தாம் பெற்ற இன்பத்தை ஏனையமக்களும் பெற்று இன்புறுமாறு எழுதி யமைத்தல் இயல்பாகும். நாநலம்வாய்ந்த நல்லியற் கவிஞர் இவ் வழகினை இனிய செஞ்சொற்களால் எழுயமைத்தார். இவ்வாறு வடித்த செஞ் சொற்களால் அழகிய பொருள்களைஉயிர் ஓவியங்களாகக் கற்போர் கண்ணெதிரே எழுதிக்காட்டுந் திறம் வாய்ந்தகவிஞர் பலர் தமிழகத்தில் திகழ்ந்தார்கள். உள்ளதை உள்ளவாறு எழுதியமைத்த அக் கவிஞரது கவிநலம் எஞ்ஞான்றும் உலப்பிலா இன்பம் பயக்கும்என்பது ஒரு தலையாம்.

 

தமிழ் மொழியில் விளங்கும் ஐம்பெருங் காவியங்களுள் ஒன்றாய சிந்தாமணி என்னும் செம்மை சான்ற நூல்செய்த தேவர் நல்லியற் கவிஞரே யென்பது நாடறிந்த உண்மையாகும். முல்லை நிலமகளாய ஓர் நங்கையை இக்கவிஞர் எழுதிக் காட்டும் முறை கற்போர் கருத்தைக் கவர்கின்றது. ஆநிரைகவர்ந்து முல்லை நிலமாந்தர்க்கு ஆறாத்துயர் விளைத்த குன்றக் குறவரை சீவகன் என்னும் சிறந்த வீரன் வில்லம்பால் அழித்து வென்றான். தாயைப்பிரிந்த கன்றுகளும் பசுவைக் காணாத பாவையரும் கவலை யொழிந்து களிப்பெய்துமாறு அவ்வீரன் ஆநிரையை மீண்டும் ஆயருக்கு அளித்தான். இவ்வாறு சீவகன் செய்யாமற் செய்த உதவியின் செம்மையை அறிந்த நந்தகோன்என்னும் முல்லைநில வேந்தன், தன் அருமைத் திருமகளை அவ் வீரனுக்குமணம்புரிந்து மகிழ்விக்கக் கருதினான். வீரருக்குரிய வட்டுடையிற் பொலிந்துநின்ற வள்ளலாய சீவகனிடம் தன் மங்கையின் வடிவழகினைப் பேசலுற்றான்.


 “வெண்ணெய்போன்று ஊறினியள் மேம்பால்போல் தீஞ்சொல்லள்
 உண்ண உருக்கிய ஆன்நெய்போல் மேனியள்''


என்று அம் மங்கையின் மேனியின் மென்மையையும் சொல்லின் செம்மையையும் நந்தகோன் அறிவிக்கும் முறை அறிந்து மகிழத்தக்கதாகும். ஆயர் சேரியில் பாலும் தயிரும் பழமும் அருந்தி வண்ணமுற வளர்ந்த பெண்ணின் மேனி, வெண்ணெய் போல் மென்மையுற் றிலங்குமென்று ஆயர்கோன் அறிவித்தான். இன்னும் கரவறியாத அக் கன்னிகையின் சொற்கள் கறந்த பால் போல் காதுக்கினியவா மென்று அந்நங்கையின் சொல்லின் சுவையைப் புகழ்ந் துரைத்தான். அன்றியும் ஒளி கிளரும் வண்ணமும் மணம் கமழும் மேனியும் வாய்ந்த மங்கையின் உருவினை உருக்கிய நெய்யினுக் குவமை கூறினான். ஆகவே கதிரவன் எழுங் காலமுதல் விழுங் காலவரை பசுவின் பாலொடும் நெய்யொடும் பழகி அவற்றின் சுவையையும் மணத்தையும் செவ்வையாய் அறிந்திருந்த முல்லைநில மன்னன், தன் மஙகையின் சொல், பால் போன்ற தென்றும் மேனி நெய்போன்ற தென்றும் கூறுந்திறம் இயற்கையோடிசைந்து நின்று எல்லையற்ற இன்பந் தருவதாகும். உள்ளதை உள்ளவாறெழுதும் உயரிய நலம் அமையப் பெறாத கவிஞர் ஒருவர் இக்காரிகையின் வனப்பினை எழுதப் போந்தால் அவள் முகம் மலர் போன் றதென்றும், கண்குவளை போன்றதென்றும், பல் முத்துப் போன்றதென்றும், வாய் பவளம் போன்ற தென்றும், இடை கொடி போன்றதென்றும், தொடை தண்டு போன்ற தென்றும் இவ்வாறாக தலை முதல் தாள்வரை முறையாகப் புனைந்துரைப்பாரென்பதில் ஐயமொன்றுளதோ? வண்டறையும் வாவியினின்றும் மலர்களை வரவழைத்து மங்கையின் முகத்திற்கும் கண்ணிற்கும் உவமை கூறமுல்லை நில மன்னன் உன்னினானல்லன். நீலத்திரைக் கடலினின்றும் நித்திலமும் பவளமும் வரவழைத்து மங்கையின் பல்லுக்கும் வாய்க்கும் கூறக் கருதினானல்லன். வளமார்ந்த புலங்களில் வளரும் வஞ்சிக் கொடியையும் வாழைத் தண்டையும் வரவழைத்து இடை க்கும் தொடைக்கும் உவமைகூற இசைந்தானல்லன். இவ்வாறு புனைந்துரையில் முனைந்து செல்லாதுஆயர் குலத்திற் பிறந்து வளர்ந்த அருங்கன்னியை ஓர் முல்லை நிலமகளாகக்கற்போர் கண்ணெதிரே எழுதி யமைத்த சிந்தாமணிக் கவிஞரதுசுவையும் பொருட்சுவையும் அறிந்து போற்றத் தக்கனவாம்.

 

இனிச் சங்கச் சான்றோர்களில் ஒருவராகக் கருதப்படுகின்ற தாமோதரனார் என்னும் தமிழ்க் கவிஞர் தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரியற்றியதிருக்குறளின் பெருமையைப் பேசப் போந்த பொழுது,


 "சீந்தி நீர்க்கண்டம் தெரிசுக்கு தேனளாய்
 மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் - காந்து
 மலைக்குத்து மால்யானை வள்ளுவர் முப் பாலால்
 தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு"


என்று அருளிய வெண்பாவிலும் இத்தகைய இயற்கை நலம் அமைந்திலங்கக் ஓதற்கெளிதாய் உணர்தற்கரிதாய் அமைந்த திருக்குறளின் செம்மையை, சங்கப் புலவராய சான்றோர் பலவாறு புகழ்ந்துரைத்தார்கள். இவ்வாறு பொது மறையைப் புகழ்ந்துரைக்கும் பேறு பெற்ற புலவர்களில் மருத்துவன் தாமோதரனா ரென்னும் கவிஞரும் ஒருவராய் விளங்கினார். இவ்வறிஞர் மருத்துவ நூலில் நன்கு பயின்று, நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்யும் நுண்ணறிவும் பெற்றிருந்தமையால் மருத்துவன் தாமோதரனா ரென்று அக்காலத்தில் வழங்கப் பெற்றார். இப்புலவர் தாம் பல்காற் பயின்ற மருத்துவ நூலினின்று ஓர் உவமை எடுத்து ஆளும் அழகு அறிந்து மகிழத் தக்கதாகும். சீந்தியின் பாலும் சுக்கின் பாலும்தேன்பாலும் ஒன்றாய்க் கலந்து மோந்தால் தலைக் குத்துத் தீரும் என்பபண்டை மருத்துவ நூலோர் கருத்தாகத் தெரிகின்றது. இம் மூன்று பாலையும் கலந்து மோந்த பொழுது, மாந்தர் தலைக்குத்துத் தீர்ந்து மகிழ்வுறுதல் போன்று அறப்பால் பொருட்பால் இன்பப்பால் என்னும் முப்பாலுங் கலந்த திருக்குறளின் மணம் வீசியபோது து சீத்தலைச் சாத்தனாரென்னும் சிறந்த புலவரது தலைக்குத்துத் தீர்ந்தது என்று மருத்துவனார் கூறி மகிழ்ந்தார். அமிழ்தினும் இனிய தமிழ் மொழியில் மணிமேகலை என்னும் சிறந்த காவியம் இயற்றிய சீத்தலைச் சாத்தனார் தமிழ் மொழியில் தலையாய அன்பு வாய்ந்த புலவராய் விளங்கினாரென்றும், பிழை மலிந்த தமிழ் நூல்களைக் காணுந் தோறும் தவறிழைத்த புலவர்களை நோவாது தம் தலை விதியை நோவார் போன்று கையிலமைந்த கூரிய எழுத்தாணியால் தலையில் குத்திக்கொள்வ ரென்றும், இவ்வாறு பலகால் குத்தி வந்த பான்மையால் குருதி மாறாது பெருகி சீப்பிடித்த சிரமுடையவராய் சாத்தனார் சிந்தை தளர்ந்திருந்தாரென்றும், நிறைமொழிச் செல்வராய வள்ளுவனாரியற்றிய மறை மொழியைக் கேட்டபோது இக்கவிஞர்தலைக் குத்துத் தீர்ந்து களிப்பெய்தினாரென்றும் கர்ண பரம்பரைக் கதை கூறுகின்றது. இக்கதையைப் பொதிந்து வள்ளுவர் அருளிய திருக்குறளைவாயாரப் புகழ்ந்துரைத்த மருத்துவனார் மொழிகள் அவர் மனத்தில் எழுந்தகருத்தை இயற்கை முறையில் எடுத்துரைக்க காணலாம்.

 

இனி இத்தமிழகத்தில் வாழ்ந்த அறுபான் மும்மை அடியாரது பெருமையை, தேன்பிலிற்றும் தீந் தமிழ் மொழிகளால் எழுதியமைத்த சேக்கிழார்பெருமானும் இத்தகைய இயற்கை உவமைகளை ஆங்காங்கு அருளிப் போர்தார். காளத்தி வேடனாய திண்ணனென்பான் காடன் நாணன் என்னும்நண்பரோடு கன்னி வேட்டைக்குச் சென்றபோது அக்குன்றில் அமர்ந்திருந்தகுடுமித் தேவரைக் கண்டு அகங்குழைந் துருகிப் பற்றற்ற பெருமானைப் பற்றிநின்ற பான்மையை எழுதப்போந்த கவிஞர் “வங்கினைப் பற்றிப் போகா வல்லுடும் பென்ன நின்றான்'' என்று அறிவிக்கும் திறம் அழகுவாய்ந்ததாகும். காளத்தி மலையில் கல்லதிர ஓடும் வல் விலங்குகளையும், விடர்களில் அமைந்தஉடும்புகளையும் நன்றா யறிந்திருந்த வேடனாய நாணன் திண்ணனது திறத்தினை இவ்வாறு அறிவிக்கின்றான். குடுமித் தேவரைப்பற்றி விடாது கிடந்ததிண்ணனை வங்கினைப் பற்றிக் கிடக்கும் வல்லுடும்புக்கு உவமை கூறினான். இத்தகைய உவமை வேடர் நாவில் இயல்பாக எழுவதாகும் என்பது சொல்லாமலே அமையும். இவ்வாறு இயற்கை அணிகளால் தமிழ் அன்னையின் அழகினுக் கழகு செய்யும் செஞ்சொற் கவிஞரது செம்மைசான்ற மொழிகள் எஞ்ஞான்றும் நயந்தேரும் மாணவர்க்கு நல்விருந்தாகும்.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - ஆகஸ்ட்டு ௴

 

No comments:

Post a Comment