Monday, August 31, 2020

 

சித்த வைத்தியத்தின் சிறப்பு

(கி. மகாலிங்கம்)

 

எல்லா வளங்களிலும் சிறந்து விளங்கிய நமது நாடு இன்று எல்லாராலும் "வறுமை நாடு” என்று சொல்லப் படுகிறது. ஆனால், இந்தப் பெயர் வெள்ளைக்காரன் வந்த பிறகு தான் வந்தது என்பதை நினைக்கும்போது எனக்கு, எவ்வளவோ சந்தோஷமா யிருக்கிறது. இருந்தாலும், இவ்வளவு காலமாக நமது நாடு அடிமைப் பட்டு இருந்தும் கலைகளில் மாத்திரம் வறுமை என்பது ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

 

“வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போய் விட்டால், இந்திய மக்கள் காலமெல்லாம் சண்டை போட்டுச் செத்துப் போவார்கள் என்பது நிச்சயம்'' என்று சில அரசியல் பிரஹஸ்பதிகள் அபிப்பிராயப் படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆங்கிலேயர் நமது நாட்டை விட்டுப் போய்விட்டால், அத்துடன் நமது மருத்துவக் கலையும் மாண்டுவிடும் என்று சொன்னால் நான் அதைப்பற்றி ஆச்சர்யப் படமாட்டேன்.

 

இன்று உலகில் பரவியுள்ள எல்லாவிதமான கலைக்கும் எப்படி நமது நாடு பிறப்பிடமா யிருக்கிறதோ, அதே போல, வைத்தியக் கலைக்கும் நமது நாடு தான் பிறப்பிடம். அது தோன்றிய இந்திய நாட்டிலேயே 'இந்திய மருத்துவத்தைப் பற்றிப் பேசுவது, தமிழ்நாட்டிலே தமிழ்ப் பாட்டுத்தான் பாட வேண்டும் என்று சண்டை போடுவது போல இருக்கிறது.

 

தர்மாமீட்டரும், ஸ்டதஸ்கோப்பும் வராத நாளிலேயே, நமது நாட்டு மருத்துவப் பெரியார்கள் நாடி பார்ப்பதன் மூலமாக, நாலாவித நோய்களையும் அறிந்து கொள்ளக் கூடிய நிலைமையி லிருந்தார்கள். இன்று மேற்படி துணைக்கருவிகளைக் கொண்டு கண்டு பிடிக்க முடியாத நோய்களைக் கூட அன்று அவர்கள் கைநாடி பார்ப்பதன் மூலம் கண்டு பிடித்து வந்தார்கள் என்றால் அதைக் கண்டு யாரும் ஆச்சர்யப் படாமலிருக்க முடியாது.

 

வைத்திய முறைகளிலேயே முதன் முதலாகத் தோன்றியது சித்த வைத்திய முறையே யாகும். இதை யாரும் மறுக்க முடியாது.

 

இது முறையே பரமசிவன், பார்வதி, கணபதி, கந்தன் முதலியவர்கள் நந்தியம் பெருமான், அகத்தியர் முதலான சிவகணங்களுக்குச் சொன்னதாக பழைய வரலாறுகள் சொல்லுகின்றன. அதை நமது தமிழ்க்குருவாகிய அகத்தியர் தமது பன்னிரண்டு சீடர்களுக்கும், திருமூலர் முதலான பதினெட்டு சித்தர்களுக்கும் உபதேசித்தார். அவர்கள் அந்த மருத்துவங்களைப் பற்றி எழுதி வைத்த நூல்கள் கணக்கில் அடங்கா. கால பேதத்தால் அவைகள் அழிந்து போயின. அன்றியும், நமது பழைய அரசர்கள் தன்னுடைய அமைச்சர் கூட்டங்களிலேயே வைத்தியர்களையும் வைத்து ஆதரித்து வைத்தியத்தை வளர்த்து வந்தனர்.

நமது நாட்டில் துலுக்கர்கள் படையெடுத்த போது கொள்ளை படித்துப் போன எவ்வளவோ செல்வங்களில் மருத்துவச் செல்வமும் ஒன்று. நமது சித்த வைத்திய நூல்களை எடுத்துக் கொண்டு போய், துளுவம், உருது, அரபி முதலிய பாஷைகளில் மொழி பெயர்த்து அதையே யூனானி முறை யென்று இன்றுவரை கையாண்டு வருகிறார்கள். இது ஒரு புறமிருக்க, வடமொழியில் கைதேர்ந்த பல மேதாவிகள் நமது சித்த வைத்திய நூல்களை வட்மொழியில் மொழி பெயர்த்து, வடமொழியில் இருந்து தான் வைத்தியமே வந்ததாகக் கூறி, அதையே ஆயுர் வேத முறைகளாகக் கையாண்டு வருகிறார்கள். இப்படி சித்த நூல்கள் மூலத்திலிருந்து பிற பாஷைகளில் மொழி பெயர்க்கப்பட்டு அவர்களால் மூல நூல்கள் அழிக்கப்பட்டது போக எஞ்சிய நூல்கள் வேற்றரசர்களுக்குப் பயந்து கொண்டு பூமியில் புதைக்கப்பட்டு அழிந்து போயின. இன்னும் சில சித்த நூல்கள் அதன் பெருமை தெரியாமல் ஆற்றிலே விடப்பட்டும் அழிந்து போயிருக்கிறது.

 

இப்படி பல வகையில் அழிந்ததும் அழிக்கப் பட்டதும் பேர்க, மிகவும் சிதைவர்ன சில பாக்களினால் சில சித்த வைத்திய நூல்கள் தலை காட்டி யிருக்கின்றன.

 

பரம்பரையாகச் சிலர் தங்களிடமுள்ள வடமொழி, தமிழ் மருத்துவ நூல்களைப் பொக்கிஷம் போல் காப்பாற்றி, தானும் அனுபவியாமல், பிறரையும் அனுபவிக்க விடாமல் செய்து வருகிறார்கள். அவர்கள் தான் அப்படி யென்றால் படித்து, உலகம் தெரிந்த ஒரு சிலர் தமக்குத் தெரிந்த சில விஷயங்களை பிறருக்குச் சொல்லவோ, 'மருத்துவப் பொழில்' போன்ற மருத்துவப் பத்திரிகைகளுக்கு எழுதவோ முன்வர மாட்டேன் என்கிறார்கள்.
கேவலம் பணத்தின் மேல் ஆசை கொண்டு நமது உயர்ந்த மருத்துவக் கலை இப்பொழுது சில படித்த, விஷயம் தெரிந்த அறிவாளிக
ளாலேயே அழிக்கப்படுவதை நினைக்கும் போது வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

 

அந்த நாளில் நம் மூதாதையர் நோய்களுக்குத் தகுந்த வைத்தியங்களை கண்டு பிடிப்பதிலேயே வாழ்நாளைக் கழித்து வந்தார்கள். ஆனால், இன்று மேனாட்டு முறைப்படி வைத்தியம் படித்த சில மேதாவிகள் புதுப்புது விதமான வியாதியைக் கண்டு பிடிப்பதில் தங்களுடைய வாழ்நாளைக் கழித்து வருகிறார்கள். இதைப்பற்றி அவர்கள் மேல் குற்றங் கூற நான் தயாராயில்லை. வெள்களக்காரர்கள் தாங்கள் தயார் செய்யும் மருந்தை விற்பனை செய்யும் ஏஜண்டுகளாகத் தானே இவர்களை நியமித்திருக்கிறார்கள்.
அவர்களும் புதுப்புது விதமான மருந்துகளைக் கண்டு பிடித்துக் கொண்டே யிருப்பார்கள். இவர்களும் அதற்குச் செலவுக்கு வேண்டிய வகையில் புதுப்புது விதமான வியாதிகளைக் கண்டு பிடித்துக் கொண்டேயிருப்பார்கள்.

 

எனக்குத் தெரிந்த வரையில் இந்திய மருத்துவத்தை விட மேனாட்டார் பிரமர் தமாக மருந்து வகைகளைச் செய்து விட்டதாகச் சொல்ல மாட்டேன். வேண்டுமானால் இந்திய மருத்துவ முறைப்படி நாம் சொல்லும் வியாதிகளின் பெயர்களை புதிதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

 

மருந்து எல்லாம் ஒன்று தான். அதைக் கையாளும் முறை தான் வேறு. நமது முன்னோர்கள் கையாண்ட முறைப்படி இவர்களும் கையாண்டிருந்தால் அவர்களுடைய வைத்தியத்தில் நம்நாட்டு மக்களுக்கு மோகம் உண்டாகியிருக்காது. அந்த வைத்தியமும் இவ்வளவு பிரசித்தி அடைந்திருக்காது.

 

ஆனால், “எங்களுடைய வைத்தியம் உங்களுடைய இந்தியநாட்டிலிருந்து தான் இரவல் வாங்கியது" என்று ஒப்புக்கொள்ளக் கூடியவர்களும் மேனாட்டில் இருக்கிறார்கள். அவர்களுடைய புண்ணியத்தினால் தான் இந்த இந்திய வைத்தியக் கல்லூரியாவது இருக்க முடிகிறது. அதைப் பொறுத்த வரையில் நாம் எல்லாரும் சந்தோஷப்பட வேண்டியது தான்.

 

அது எப்படியோ போகட்டும். நம் ஒவ்வொருவருடைய முக்கிய கடமை என்ன வென்றால், நம் நாட்டுக்கே சிறப்பாக உரிய சித்த வைத்திய முறைகளை மறைந்து போகாமல் பாது காக்கவேண்டும் என்பது தான். இதை உங்களுக்கு நினைவூட்டுவதே எனது இக் கட்டுரையின் நோக்கமாகும்.


[குறிப்பு: - இது சமீபத்தில் டாக்டர் திருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்திய வைத்தியக் கலாசாலைக் கூட்டமொன்றில் பேசியதன் சுருக்கமாகும்.]

 

ஆனந்த போதினி – 1944 ௵ - ஏப்ரல் ௴

 

 

 

No comments:

Post a Comment