Monday, August 31, 2020

 சமூக சீர்திருத்தத்தில் பெண்களுக்கு உள்ள ஸ்தானம்

தாய்மாரின் உயர்பதவி

 கட்டுரை எழுதுவோ ரெல்லாம் தாம் எழுதத் தொடங்கும் விஷயமே மிக முக்கியமானதென்று புகழ்ந்து கூறுவது சர்வ சாதாரண வழக்கம். மதுவிலக்கு விஷயத்தைப் பற்றி எழுதுவோர் உலக க்ஷேமத்துக்கு அதைவிடச் சிறந்த சீர்திருத்தமில்லை யென்று கூறுவர். கல்விவிஷயமாக எழுதுவோரும் கல்விப் பயற்சியே உலகத் துன்பங்களை ஒழிக்கும் சஞ்சீவியென மொழிவர். உண்மையில் உலகத்துக்கு நன்மை யளிக்கும் எல்லாச் சீர்திருத்தங்களும் மிகவும் இன்றியமையாதனவாகும்.

 

இப்பொழுது நமது ஜன சமூகத்தில் காணப்படும் ஊழல்களைச் சொற்ப கால உழைப்பினால் நீக்கிவிடலாமென்று எண்ணுவது பகற்கனவே யாகும். இந்த சமூக ஊழல்களுக்கு மூலகாரணமா யிருப்பது எது என்று நாம் நுட்பமாக ஆராய்ச்சி செய்தால், நமது சமூக வாழ்வில் பெண்கள் முக்கிய ஸ்தானம் பெறாமையே எல்லாத் தீமைகளுக்கும் மூலகாரணம் என்பது இனிது விளங்கும்.

 

ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடும்பத் தலைவி பெண்ணாகவே இருக்கிறாள். குடும்ப வாழ்வில் பெண்ணுக்கே புருஷனை விட ஜாஸ்தி பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது.


“இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாகில்''


என்னும் ஒளவை மொழியும் இதனையே வலியுறுத்துகின்றன.

 

குடும்ப அங்கத்தினரின் க்ஷேமத்தைப் பாதுகாப்பதும், குடும்பத்தாரை நல்வழிப் படுத்துவதும் பெண்கள் கடமையாக இருக்கிறது. ஒரு சமூகமக்களை நல்லவராக்கவோ தீயவராக்கவோ பெண்களுக்கு சக்தியுண்டு. ஒருசமூகத்தை உருப்படுத்தும் பொறுப்பு இயல்பாக மாதரிடமே அமைந்திருக்கிறது. உலகத்தில் பெயர் பெற்ற மகான்களின் சரித்திரங்களை நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் அவர்களுடைய உயர்ச்சிக்கும் புகழுக்கும் காரணமாயிருந்தது அவர்கள் தாய்மாரே என்ற உண்மை நிச்சயமாகப் புலனாகும். " என் 12 புத்திரர்களும் போர்க்களத்தில் இறந்தாலும், அவர்களில் ஒருவனாவது வீட்டில் சோம்பி யிருப்பதை நான் பொறுக்க மாட்டேன்'' என்று கூறிய ''வனப்னியோ'' என்ற உரோம மாதைப் போன்ற வீரத் தாய்மாரையுடைய சமூகம் முன்னேற்ற மடையா தொழியுமோ?

"நரம்பெழுந் துலறிய நிரம்பர மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறினனென்று பலர்கூற

மண்டமர்க்குடைந்தனனாயின் உண்டவென்

முலையறுத்திடுவன் யானெனச் சினை இக்

கொண்டவாளொடு படுபிணம் பெயராச்

செங்களந் துழவுவோள் சிதைந்து வேறாகிய

படுமகன் கிடக்கை காணூஉ

ஈன்ற ஞான்றினும் பெரிது வந்த".

 

வீரத்தாய்மாரும் பண்டைக் காலத்துத் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்தனர்.

 

வேறொரு வீரத்தாயைப் பற்றி ஒக்கூர் மாசாத்தியார் என்னும் பண்டைத் தமிழ்ப் புலவர் கூறுவதாவது:

 

      "கெடுக சிந்தை கடிதிலன் துணிவே

மூதின் மகளிராதல் தகுமே

மேனாளுற்ற செருவிற் கிவடன்னை

யானை யெறிந்து களத்தொழிந்தனனே

நெருநலுற்ற செருவிற்கிவள் கொழுநன்

பெருநிரை விலங்கி யாண்டுப் பட்டனனே

இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி

வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீ இப்

பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி
      யொரு மகனல்ல தில்லோள்
      செருமுக நோக்கிச் செல்கென விடுமே''

 

அத்தகைய வீரத்தாய்மார் இப்பொழுது தமிழ் நாட்டில் உரோ? குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் தேசத்துக்கும் அவமானத்தை யுண்டு பண்ணும் அதம புத்திரர்கள் தோன்றுவதற்குக் காரணம் உத்தமத் தாய்மாரின் குறைவேயாகும். மாத்ரு தர்மத்தைச் செவ்வனே யுணர்ந்த தாய்மார் வாழும் நாடே நன்னாடு - பொன்னாடு - புனிதநாடு.


இல்லறம் நடத்தல்

 

மாதர்களின் முதற்கடன் இல்லறம் நடத்தலே யாகும். மேனாடுகளில் பெண்கள் தேசிய விஷயங்களில் தாராளமாக ஈடுபட்டு உழைக்கின்றனர். கீழ்நாடுகளிலும் பெண்கள் ராஜீய விஷயங்களில் ஈடுபட முன் வந்திருக்கின்றனர். பெண்கள் ராஜீய உழைப்பில் ஈடுபட வேண்டியது தேசிய முன்னேற்றத்துக்கு இன்றியமையாதது என்று ஒரு சாரார் கூற்றம் செய்கின்றனர். ஆகவே மாதர்களின் முதற்கடன் இல்லறம் நடாத்தலே என்று கூறியது பொருந்துமா என்று சிலர் சந்தேகம் கொள்ளலாம். ஆனால் இல்லறத்தின் புனிதத் தன்மையையும், மேம்பாட்டையும் பற்றிச் சிறிது சிந்தனை செய்வோருக்கு இந்த சந்தேகம் உண்டாகவே செய்யாது. மனித வாழ்க்கையை நரகமாக்கவும் சுவர்க்கமாக்கவும் உள்ள சக்தி மக்களிடத்திலேயே இருக்கிறது. உலகம் தோன்றியது முதல் நாளதுவரை மகான்கள் செய்துள்ள அரும்பெரும் காரியங்களுக்கெல்லாம் மூல காரணமா யிருப்பது தாய்மாரே யாகும்.


கணவரைப் பேணல்

 

இல்லற மகிமையைச் செவ்வனே அறிய வேண்டுமானால், அதன் ஒவ்வொரு பகுதியையும் நாம் ஆராய்ந்துணரல் வேண்டும். மனைவியின் முதற்கடமை கணவரைப் பேணல்; இரண்டாவது கடமை மக்களைப் பேணல். கணவரைப் பேணல் மாதர்களின் முதற் கடமை என்று கூறும் போது தற்காலப் பெண்களுக்கு வெறுப்புண்டாகக் கூடும். அவ்வாறு அவர்களுக்கு வெறுப்புண்டாவதற்குக் காரணம் கணவரைப் பேணல் என்னும் சொற்றொடரின் உட்பொருளை அறியாமையே யாகும்.

 

கணவனுக்கு சதா அடங்கி நடப்பதும், அவனுக்கு மகிழ்ச்சி புகட்டுவதும், சிற்றின்ப சுகமளிப்பதும் பெண்களின் கடமை என்றெண்ணுவது முட்டாள் தனமாகும். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கும் சமூகமும் தேசமும் முன்னேற்றமடைவதற்கும் அல்லும் பகலும் உழைக்கும் ஒரு புருஷனைப் பேணுவது அவனது மனைவி கடமை யல்லவா? அத்தகைய புருஷனைப் பேணுவதைப் பெண்கள் ஒரு பெருமையாக மதியார்களோ? உலக முன்னேற்றத்துக்காக உழைக்கும் மகாத்மா காந்தியைப் பேணும் கஸ்தூரிபாய் தேவி, மறை முகமாக உலகத்தையும் பேணவில்லையா? ஒரு உத்தம கணவனுக்கு ஊழியம் செய்யும் மனைவி மறை முகமாக உலகத்துக்கே ஊழியம் செய்கிறாள் என்பதை யாவரும் மனதில் பதிக்க வேண்டும். ஹூக்கர் என்பார் ஒருநாள் தன் நண்பர்களோடு வார்த்தையாடிக் கொண்டிருக்கையில், தொட்டிலிற் கிடந்த குழந்தை அழுவது கண்டு கோபம் கொண்ட மனைவி தொட்டிலை ஆட்டும்படி கணவனுக்குக் கட்டளையிட்டதாகவும், உடனே ஹூக்கர் தன் நண்பர்களை அனுப்பி விட்டுத் தொட்டிலை ஆட்டியதாகவும் ஒருகதையுண்டு. அத்தகைய மாதர்களை நாம் உத்தம மாதாகக் கருதக் கூடாது. உத்தம மாதர்களைக் காண விரும்புவோர் புராண காலங்களிலும் சரித்திர காலங்களிலும் வாழ்ந்த வீரபத்தினிகளை ஞாபகத்தில் கொண்டுவர வேண்டும்.

 

மக்களைப் பேணல்

 

மக்களைப் பேணல் மாதர்களின் நீங்காக் கடன். பெண்கள் இந்தக் கடனை மிக்க பயபக்தி விசுவாசத்துடன் ஆற்ற வேண்டும். இந்தக் கடன் ஜாதிமத வித்தியாசமின்றி எல்லா மாதர்களுக்கும் பொதுவானதாகும். உலகத்தின் பிற்கால நிலை பெண்கள் கையிலேயே அடங்கியிருக்கிறது. லோகநாயகனாகிய கடவுள் மக்களைப் பேணும் உயரிய - பரிசுத்தமான – கடமையை மாதர்களிடம் ஒப்படைத்திருக்கிறார். அடிமை நாடான இந்தியாவை சுதந்தர நாடாக்கும் உபாயம் பெண்களிடத்திலேயே இருக்கிறது.

 

இந்த சந்தர்ப்பத்தில் காலஞ்சென்ற தேசபக்தர் வ. வெ. சுப்பிரமணியய்யர் இந்தியத் தாய்மாரை, நோக்கிக் கூறிய பொன் மொழிகள் என் ஞாபகத்துக்கு வருகின்றன. அவையாவன: - ''குழந்தைகள் துஷ்டர்களாய் வேண்டுமானாலும் போகட்டும், ஆனால் அவர்களைப் பங்காளிகளாக மட்டும் ஆக்கி விடாதீர்கள். ''நெல்சன் என்னும் ஆங்கிலக் கப்பல் வீரன் சிறு பையனாக இருக்கும் போது ஒரு நாள் முழுதும் காட்டிலும் மேட்டிலும் அலைந்து விட்டுச் சாயங்காலந்தான் வீட்டுக்கு வந்தானாம். அவன் பாட்டியார் "தெரியாத இடங்களெல்லாம் சுற்றினாயே. உனக்குப் பயமாக இல்லையா, அப்பனே? "என்று அவனைக் கேட்டதற்கு "பயம் எப்படி யிருக்கும்? பாட்டி சொல்லு!'' என்று நெல்சன் பதில் சொன்னானாம். ஜப்பானில் சாமுராயர்களின் குழந்தைகளுக்கு ஐந்து வயதானதும் அவர்களைத் துணையின்றிச் சுடுகாட்டங்கரைக்கு அனுப்பி அங்கிருக்கும் எலும்புகளைப் பொறுக்கி வரச் சொல்லுவார் களாம். ஸ்பார்த்தாவில் மனவுறுதி காட்டாத குழந்தைகளை ஜாதியிலேயே சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஜப்பானிய ஸாமுராயர் தங்கள் நாட்டை விட 20, 30 மடங்கு பெரிதான ருஷிய நாட்டு ஜனங்களை இரண்டு வருஷங்களில் வென்று, அழியாப்புகழ் தேடிக் கொண்டார்கள். நம்முடைய முன்னோர்களும் வீரத் துறைகளில் தங்களுக்கு யாரும் நிகரில்லை என்று சொல்லும்படி நடந்து கொண்டார்கள். நீங்களும், உங்கள் பிள்ளைகளை சிவாஜி போலவும், ஹைதர் ஆலி போலவும், பிருதிவிராஜன் போலவும், நானா பர்னாவிஸ் போலவும், வேஸ்பாரியைப் போலவும், தேசிங்கைப் போலவும் பிரகலாதனைப் போலவும், துருவனைப் போலவும், குரு கோவிந்தன் புத்திரரைப் போலவும், தயாநந்த ஸரஸ்வதி போலவும், நிர்ப்பயர்களாய், தைரிய லக்ஷ்மி ரெசன்னர்களாய் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வளர்த்தீர்களானால், நாட்டில் தீரம் பெருகும்; உங்களுக்கும் வீரத்தாய்மார் என்ற பெயருண்டாகும்.

 

''மக்களை உத்தமர்களாக வளர்ப்பதே பெண்கள் சமூக முன்னேற்றத்திற்காகச் செய்ய வேண்டிய பெரிய வேலை. டாக்டர் பெசண்டு அம்மாள் ஒருசந்தர்ப்பத்தில் கூறியிருப்பதாவது: ''மக்களைப் பேணும் மேலான கடமையைப் பெண்கள் சரிவர நிறை வேற்றா விட்டால், புருஷர்கள் எவ்வளவு தைரியசாலிகளா யிருந்தாலும் சரி, அவர்கள் ஒரு நாளும் கயேச்சை யடைய மாட்டார்கள்.''

 

நன்நெறி, சுதந்தரம், தைரியம் ஆகிய குணங்கள் மாதர்களின் பாதகமலங்களில் சரணமடைந்து கிடக்கின்றன என்று உலகப் பெரியார்களெல்லாம் ஒரு முகமாக அபிப்பிராயப்படுகிறார்கள். ஆகையால் மக்களைப் பேணும் விஷயத்தில் இந்திய மாதர்கள் பிரத்தியேக கவனம் செலுத்த வேண்டும்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜுலை ௴

 

 

No comments:

Post a Comment