Monday, August 31, 2020

 

சிவராத்திரி விரத மகிமை

 

சிவநேயச் செல்வர்காள்!

 

இம்மாதத்தில் மஹா சிவராத்திரி வருகிறபடியால் இம்மாதம் மற்றைய மாதங்களை விட மேலானதென்றே சொல்லலாம். இதனால் கடவுளாகிய சிவன் ஒருவர் உண்டென்று நாம் வருடத்தில் ஒரு நாளாகிலும் எண்ண வழியுண்டாம். சிவராத்திரியாகிய மஹா தினத்தில் சிவபூஜை செய்து, உபவாசமிருந்து, இரவு கண் விழித்து, சிவனைத்தியானித்தால், நம் பாவங்கள் நசியும் சிவ, சங்கா, சம்போ என்று பகவானுடைய நாமங்களை உச்சரித்த மாத்திரத்தினாலேயே நமக்கு பக்தி பிறந்து, நாடிநன்மார்க்கத்தில் திருப்பி, புண்ணியஞ் செய்தவர்களாவோமென்று சாஸ்திரங்களாலும், கற்றறிந்த மேதாவிகளினாலுஞ் சொல்லப்பட்டிருப்பதால், இந்த விரதத்தை யனுஷ்டித்தவர்களது நன்மையை அளவிட்டுச் சொல்லவுங்கூடுமோ! ஞானவான்களும், பகதிமான்களும், ஏனையோரும் இந்த மகிமையைச் செவ்வனே சாஸ்திரயுக்தமாய்த் தெரிந்திருந்தபோதிலும், என் போன்ற பாமரர்களுக்கும், கடவுளைத் தியானிக்கும் அப்பியாசத்தைச் செய்து வருவோருக்கும் இச்சிவராத்திரி விரதம் என்ன மகிமையை யுண்டுபண்ணுகிறதென்பதைப் புல்லறிவாளனாகிய அடியேன் வாசித்தபடியும், கேட்டபடியும், மிகவும் சுருக்கமாக, தமிழ்மக்க ளனைவரும் அறிந்துகொள்ளும்பொருட்டு, நமது "ஆனந்தபோதினி'' வாயிலாக வரையத் துணிர்தனன்,

 

ஒருகாலத்தில் ரைமிசாரண்ணிய வாசிகளாகிய மகரிஷிகள், ஸ்ரீ ஸுதமுனிவரைநோக்கி'' சுவாமீ! உலகத்தில் எந்த விரதத்தை ஆசிரயித்தால் சிவபெருமான் உவந்து சகல சுகங்களையும், புத்தி முத்திகளையும் கொடுப்பாரோ அந்த விரதத்தை எங்கட்குச் சாற்றுவீர் " என வினவ, அதற்கவர் உளம்பூரித்து, பூர்வத்தில் இதுவிஷயமாய், சிவபெருமான் தேவர்களின் வேண்டுகோளுக் கிணங்கிச் சொல்லியருளிய சாராம்சத்தை இயம்பலுற்றார்.

 

விரதங்களுக்கெல்லாம் சிவராத்திரி விரதமே முதல்தரமானதும், உத்தமமான துமாம். அன்றியும் இது வேதங்கள், உபவேதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், தர்மசாஸ்திரங்கள் ஆகிய இவற்றினுள் சொல்லியிருக்கும் இரகசியங்களிலும், அதிரகசியமான சாராம்சம். உலகத்தில் மோக்ஷங் கொடுக்கத்தக்கவை நான்கு. அவை: -


 1. சிவார்ச்சனை
 2. உருத்திரபாராயணம் அஷ்டமி சோமவாரம்.
 3. கிருஷ்ணபக்ஷம், சதுர்த்தசி (பிரதோஷம்) ஆகிய இம்மூன்று நாளுபவாசமும்,

 4. காசி க்ஷேத்திரத்தில் மரணமும் ஆம்.

 

ஆனால் இந்நான்கினும் சிவராத்திரி விரதமே அதியுக்தமானது. புத்தி முத்திகளை யடைய விரும்புவோர் இவ்விரதம் ஒன்றையே யனுஷ்டிக்க வேண்டும். இவ்விரதத்தை எந்த விதியால் எப்படி பூஜிக்கவேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இவ்விரதம் எல்லோருக்கும் தர்மசாதனமானது; எவ்வருணத்தாருக்கும், சிறியோர், பெரியோர், கற்றார், கல்லாதார், தேவர், தானவர் முதலியோருக்கும் தகுதியானது. இது மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி அர்த்தராத்திரி பதினான்குநாழிகையில் வருவது; கோடி பிரம்ம ஹத்திகளையும் நசிப்பிக்கும். ஆதலின் அப்புண்ணிய தினத்திற் செய்யப்படும் காரியமாவது:

 

அன்று கதிரவன் உதிக்குமுன் எழுந்திருந்து சந்தோஷ மனதுடன், நதி முதலிய புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானஞ்செய்து, நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, சிவாலயஞ்சென்று, சிவபூஜைபுரிந்து, நமஸ்கரித்துத் தோத்திரஞ் செய்து மனம் அனலில் இட்ட மெழுகுபோல் உருக, அன்பினால் மூர்ச்சித்து, சுவாமியை நோக்கி, 'சிவபெருமானே! நின் திருக்கருணையால் இச்சிவராத்திரி விரதத்தை யனுஷ்டிக்க வேண்டு மெனறிச்சையுற்றேன். அது நிர்விக்கினமாக முடியுமாறும், விரதமுடியுமளவும், உலகப்பற்று என்னைத் துன்புறுத்தாமலிருக்குமாறும், ஐம்புலன் வழி மனதைச் செலுத்தல், பகல் நித்திரை முதலிய அபத்தியங்கள் விலகியிருக்குமாறும் அனுக்கிரகிக்கவேண்டுமென்று பிரார்த்தித்துக்கொண்டு, பூஜா திரவியங்களைச் சேர்த்துக்கொண்டு, சிவலிங்கத்திற்கு பூஜை செய்து, சிவமந்திரஞ் ஜெபித்து, பக்தியோடு கண்விழித்து ஜாமங்களைக் கழிக்க வேண்டும்.

 

இனி சிவலிங்க அபிஷேக, சைவேத்திய, காலமுறையை நான்கு ஜாமங்களிலும் எப்படிச் செய்யவேண்டுமென்பதைப்பற்றிச் சிறிது கூறுவாம்

 

முதன் முதலில் இலிங்கத்தை வைத்துச் சுத்தமான ஜலத்தாலும், பிறகு எண்ணெய், பால், தயிர், நெய், தேன், பழங்கள், சந்தனம், வாசனாகிகள் கலந்த தீர்த்தம் இவற்றாலும், கடைசியில் பஞ்சாமிர்தத்தாலும், அபிஷேகஞ்செய்து, பின்னர் உலர்ந்த வஸ்திரத்தினால் சிவலிங்கமூர்த்தியை உபசாரமாக ஒத்தி, சுகந்த பரிமள சந்தனஞ் சாத்தவேண்டும். முதலாம் ஜாமத்தில் சதபத்திரம், கமலம், காவீரம் முதலிய புஷ்பங்களும், இரண்டாம் ஜாமத்தில் கமலமும், வில்வமும், மூன்றாம் ஜாமத்தில் அறுகும், ஆத்தியும், நான்காம் ஜாமத்தில் நறுமணங்கமழும் மலர்களுங் கொண்டு சிவநாமங்களாலாவது, குரு உபதேசித்த மந்திரங்களினாலாவது அருச்சிக்கவும்; நிவேதனம், முதல்யாமத்தில் சுத்தான்னமும் கறிவகைகளும், பலகாரமும், இரண்டாம்யாமத்தில், பரமான்னமும், லட்டு முதலிய பலகாரமும், மூன்றாம்யாமத்தில் மாவாற்செய்த நெய்சேர்த்த பலகாரவகைகளும், பாயசமும், நான்காம் யாமத்தில், கோதுமை, சர்க்கரை, நெய் சேர்த்துச் செய்த மதுரமான பலகாரங்களும் நானாவித பழவகைகளும் நிவேதிக்கவும்; பழங்களில் முதலாவது வில்வப்பழமும், இரண்டாவது பலாப்பழமும் மூன்றாவது மாதுளங்கனியும், நான்காவது பலவித பழச்சுளையும் சமர்ப்பிக்கவும். தாம்பூல தக்ஷணைகளோடு ஜாமங்கள் நான்கிலும் பிராமணபோஜனம் முதலியவை யளிக்க வேண்டும்.

 

மற்றைய நேரங்களில், சிவமகிமையைப் பிறர்க்குச் சொல்லவேண்டும். அல்லது பிறர் சொல்ல சிரவணஞ்செய்யவேண்டும். இவ்வாறு நான்கு ஜாமங்களிலும் நான்கு பார்த்வலிங்கங்களை ஆவாஹநாதி விசர்ஜனானந்தமான பூஜைசெய்து, நித்திரையின்றி, சிவபணிவிடைகளுடன் விழித்திருந்து இரவைக்கழித்து, விடியுமுன் மீண்டும் ஸ்நானஞ்செய்து நித்திய விதியை முடித்துச் சிவனை ஸ்தோத்திரித்துச் சிவபெருமானிடத்தில், ''சுவாமி! தேவரீரது கிருபையால் யான் விரும்பிய சிவராத்திரிவிரதத்தை முடித்தேன். என் சக்திக்கேற்ப யான் செய்த தவத்திற்குத் தேவரீர் சந்தோஷித்து நற்பயன்களைக் கொடுக்கவேண்டும். அடியேன்மீது கருணைபுரிந்து தயை வைக்க வேண்டும்'' என்று புஷ்பாஞ்சலி சமர்ப்பித்து நமஸ்கரித்து, பார்வதி தேவியாரையும் நமஸ்கரித்து: தான் செய்த பூஜாபலனைச் சிவப்பிரீதி செய்து, ஜலபானம் பண்ணி அவ்விரதநியமத்தை விடவேண்டியது.

 

இப்படி விரதஞ்செய்தவர்களுடைய சமீபத்திற் சிவபெருமான் எழுர் தருளியிருப்பார். இதன் பலத்தைப் பல்லாயிரவருடம் சொன்னாலும் முடி எனயாது. இவ்விரதத்தைப் பக்தியின்றிச் செய்தவர்களுக்கும் முக்தியுண்டாகும். இப்படியே, பிரதி சிவராத்திரியிலுஞ் செய்யவேண்டும். அடியார்களுள்ளத்தில் சதா வாசஞ் செய்யும் சிவன் நம்மை நல்வழிப் படுத்துவாராக. 'மருமல ரெடுத்துனிரு தாளையர்ச் சிக்கவெனை வாவென் றழைப்ப தெந்நாண் மந்த்ர குருவே யோக தந்த்ரகுருவே. மரபில் வரு மௌன குருவே

 

 

பூ. அமிர்தலிங்கம்.

 

குறிப்பு: - மாசிமாதம், கிருஷ்ணபக்ஷம் சதுர்த்தசி இரவு பதினான்கு நாழிகை லிங்கோற்பவகாலம் இதுவே மகாசிவராத்திரி புண்ணியகாலம்; கிருஷ்ணபக்ஷம் திரயோதசி 30 - நாழிகைக்குச் சதுர்த்தசி வியாபிப்பது உத்தமம்; திரயோதசி இரவு பதினொன்றேகால் நாழிகைக்குச் சதுர்த்தசி வியாபிப்பது மத்திமம்; திரயோதசியில்லாமல் சதுர்த்தசி வியாபிப்பது அதமம். ஒருகாலம் அன்றையிராத்திரிக்கு அமாவாசை பிரவேசிப்பது பரியாய சிவராத்திரி. இந்த மகாசிவராத்திரி தினத்தில் நேரிடும் திரயோதசி சிவபெருமானுக்குத் தேகமாகவும், சதுர்த்தசி தேகியாகவும் அல்லது சத்தியாகவும் சிவமாகவும் கூறப்படும். இதையனுஷ்டிப்பதால் வரும் பலன் இம்மையில் சற்சன தானாதி சௌபாக்கிய சம்பத்தும், மறுமையில் சுவர்க்காதி போகமுமாம். இது காமியம். நிஷ்காமிகள் இகத்தில் புத்தியும், பரத்தில் முத்தியும் பெறுவர். பிரமகற்பமொன்றில் சத்தி நாற்சாமத்திலும் சிவபூசை செய்து தாம் பூசித்தகாலம் சிவராத்திரியாகவெனச் சிவமூர்த்தியை வரம் வேண்டிப் பெற்ற நாள் எனவும், சத்திவிளையாட்டாகச் சிவமூர்த்தியின் திரிநேத்திரங்களை மூட உலகங்கள் இருண்டன. அப்போது தேவர்கள் சிவபிரானை வணங்க அக்காலமே சிவராத்திரியாயிற்றென்றும், திருப்பாற் கடலிற் றோன்றிய விஷத்தையுண்ட சிவமூர்த்தியை அந்த விஷம் பீடிக்காமலிருக்கத் தேவர்கள் இராமுழுதும் பூசித்தனர். அதுவே சிவராத்திரி யெனவும், மற்றும் பலவாறாகவும் புராணங்கள் கூறும். சதாகாலமும் தியானித்தற்குரிய சிவபெருமானை மாந்தரிற் பலர் சரிவரத் தியானியாதிருத்தலின், வருடத்தில் ஒரு நாளாவது சிரத்தையோடிருந்து அப்பெருமானை வழிபடும் பொருட்டு இம்முக்கிய தினம் ஏற்பட்டிருக்கின்றது.

ப - ர்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - பிப்ரவரி ௴

 

No comments:

Post a Comment