Monday, August 31, 2020

 

சமய உணர்ச்சி

 

உண்டி, உறக்கம், விஷயசுகம் முதலியவற்றைப் பொறுத்தவரை மக்களுக்கும் பிறவுயிர் கட்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை. இன்ப துன்ப உணர்ச்சி எல்லா உயிர்கட்கும் பொது. நாம ரூப பேதந்தவிர எல்லா உயிர்களும் ஒன்றே. ஆனால் மக்கட்சாதி உயர்ந்ததாகமதிக்கப்படுகிறது. மனிதனுடைய தேகத்தைக் கொண்டோ அல்லது உயிரைக் கொண்டோ இந்த உயர்வு கற்பிக்கப்படுவதில்லை. உலகத்திலே மிகவும் பலம் பொருந்திய யானையையும் வீரஞ்செறிந்த சிங்கம் புலி முதலியவற்றையும் அடக்கி ஒடுக்கும் படியான விசேஷ அறிவு மனிதனிடம் அமைந்திருக்கின்றது. இதைத்தான் காரணகாரிய உணர்ச்சி அல்லது பகுத்தறிவு என்பார்கள்; இது ஆறாவது அறிவாகக் கொள்ளப்படுகிறது.

 

விலங்கு முதலிய பிற உயிர்கட்கு இந்த அறிவு இல்லை. இன்பதுன்ப உணர்ச்சியும் சாதக பாதகத்தைத் தெரியும் அறிவும் அவைகட்கிருந்தாலும் இன்னது செய்தால் இன்னது விளையும் என்ற பகுத்தறிவாகிய காரண காரிய உணர்வு அவைகளிடம் இல்லை. உடை உடுத்தத் தெரியாத இயற்கை நிலையிலிருந்த மனிதன் இப்போது நாழிகைக் கொருவித ஆடை ஆபரண அலங்கார பூஷிதனாக விளங்குகிறான்; ஆகாயத்தில் பறக்கிறான். மின்சார சக்தியால் வாழ்க்கையில் நலம் தேடுகிறான். இன்னும் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தக் கூடியவனாயும் இருக்கிறான். விலங்கு முதலியனவோ என்றால் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தனவோ அப்படியே இன்றும் இருக்கின்றன. இவைகளுக்கு ஆடை ஆபரணங்களில்லை. மாட மாளிகைகள் இல்லை. ஆகாய விமானம், ரயில், மோட்டார், வண்டி முதலிய வாகனங்கள் இல்லை. மின்சார இயந்திரங்கள் இல்லை. ஆகாராதிகளிலும் மாறுதல் இல்லை. இதிலிருந்து மனிதனுக்கும் பிற உயிர் கட்கும் உள்ள வேற்றுமை இனிது விளங்கும்.

 

சமயம், நாகரிகம் என்பன மனிதனுடைய பகுத்தறிவின் பயம்னாக ஏற்பட்டனவாகும். சமயமும் நாகரிகமும் ஒரு நியதிக்குறபட்டிருக்கவில்லை. காலதேச வர்த்தமானங்கட் கேற்ப வேறு வேறாக இருக்கின்றன. நமது நாட்டு நாகரிகம் மததத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

 

சமயம் என்பதற்குப் பலவித வியாக்கியானங்கள் சொல்லப்படினும் பேரின்ப நிலையைக் கண்டறியும் மார்க்கம் என்று கொள்ளுவது பொருந்தும். மனித ஜாதி தனது பகுத்தறிவின் பயனாக இயற்கையோடியைந்த வாழ்வினின்றும் மாறி, செயற்கை வாழ்வாகிய நாகரிகத்தில் உழலத் தலைப்பட்டு விட்டது. மனித வாழ்க்கையில் நாளாவட்டத்தில் அநாவகிய -தேவையில்லாத தேவைகள் பெருகின. ஐம்புலன்களையும் திருப்தி செய்தல் அசாத்தியமாக முடியவே வாழ்க்கையில் ஒருவித வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. மனிதனைப் பற்பல விதமான வேட்கையும் பற்றும் பற்றித் துன்புறுத்தின. இன்பசாதனங்களைத் தேடி அடைவதைக் காட்டிலும் அவனுக்கு அவற்றினின்றும் விடுபடலே இன்பமாகத் தோன்றிற்று. இந்த உண்மையை அவ்வப் போது தோன்றிய பெரியோர்கள் அறிவுறுத்தினர். இன்பத்திற்கு ஆதாரமாகவுள்ள கடவுள் நிலையை விளக்கினர். அப்பெரியோர் கூறிய உண்மைகளே சமய சாஸ்திரங்களாகும். மக்களுடைய வாழ்க்கை நிலை அவ்வந்நாட்டுச் சமய சாஸ்திரங்களைப் பொறுத்ததாயிருக்கும். இதுவே எல்லா நாடுகளிலும் சமயங்களைப் பற்றிய பொதுதருமமாகும்.

 

உலகத்தில் இந்தியாவின் நாகரிகமும் மதக் கொள்கைகளும் மிகவும் புராதனமானவை. இவற்றின் காலவரையறை எந்தச் சரித்திர நிபுணராலும் இன்னும் சரியாக நிர்ணயிக்கப்படவில்லை. மேனாடுகளில் லௌகிக விவகாரங்களின் அறிவு தீவிரமாகவும் நுணுக்கமாகவும் முன்னேறி யிருக்கிறது. இந்தியாவில் சமய சம்பந்தமான ஞானம் ஆழமாக வேரூன்றி அசைக்க முடியாத வகையில் பதிவு பெற்றிருக்கிறது. பெரும்பாலும் இந்தக் காரணத்தினாலேயே உலகியல் விஷயங்களில் நமது நாடு மேனாடுகளை விடப் பிற்போக்கான நிலைமையில் இருந்து வருகிறது எனலாம்.

 

இதனால் மக்களுடைய இன்பவாழ்க்கைக்கே சமயம் ஏற்பட்டது என்பது இனிது விளங்கும். உலகில் எப்பாகத்தை நோக்கினும் இப்போது சமயப் புறக்கணிப்புக் கிளர்ச்சி வலுத்து வருகிறது. தெய்வத்தன்மை பொருந்திய சமயங்களுக்கு விரோதமான இத்தகைய கிளர்ச்சி உண்டாவானேன்? என்ற கேள்வி சகஜமாக எழும்.

 

சமய விரோதமான கிளர்ச்சிகளுக்குக் காரணங்கள் பல உண்டு. சமயத்தின் நலந்தரத்தக்க உண்மை நோக்கங்களெல்லாம் காலக்கிரமத்தில் மறைந்து விட்டன. வெறும் சம்பிரதாயங்கள் மாத்திரம் நிலைத்து வழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்தப் போலிச் சம்பிரதாயங்கள் மக்கள் சமுகத்திற்குக் கேடு விளைத்து வருதல் பிரத்தியக்ஷம். இந்தப் போலி வழக்கங்களின் தீமைகளைச் சகியாதவர்கள்
சமயத்தையே அழிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்கின்றனர். இவர்கள் சமயங்களின் மாட்சிமிக்க உண்மைகளை அறிவதில் ஒரு சிறிதும் கவலை கொள்வதில்லை. சமயப்பற்றுடையவர்கள் எல்லாரும் அவர்களுடைய கண்களுக்கு அறியாமை யுடையவர்களாகவும் போலிகளாகவுமே காணப்படுகின்றனர். இம்மாதிரியான மனப்பான்மையுடன் கிளர்ச்சி செய்தல் ஆபத்தாக முடியுமென்றே யாம் கவலை கொள்ளுகின்றோம்.

 

சமய உணர்ச்சி ஒன்று மாத்திரம் இல்லாதிருந்தால் மக்கட்கும் விலங்கு கட்கும் ஒரு சிறிதும் வேற்றுமை இல்லை. இதனால் பொருளற்ற குருட்டு ஒழுக்க வழக்கங்களை நாம் ஆதரிப்பதாக வாசகர்கள் கருதிவிடக் கூடாது. சமயம் வேறு ஒழுக்க வழக்கங்கள் வேறு. சமயத்தோடு ஒழுக்க வழக்கங்கள் பிணைக்கப்பட்டு விட்டன. நெடுங்காலமாக வழக்கத்தில் வந்து கொண்டிருக்கிற ஒழுக்கங்களை திடும்பிரவேசமாக விட்டு விடும்படி வற்புறுத்துவதில் பல சங்கடங்கள் உண்டு. கிரமமான போதனையாலும் பிரசாரத்தாலும் மக்களுடைய மனப்பான்மையை மாற்ற வேண்டும். இம்முறையில் காலதேச வர்த்தமானங்கட் கேற்ப ஒழுக்க வழக்கங்களைத் திருத்தியமைத்தலே உசிதமாகும். இதை விட்டுவிட்டுச் சமயத்தையே அழிக்க வேண்டும் என்று துணிந்து கூறுவது நியாயமா? என்று கேட்கின்றோம். சமயம் இல்லையேல் மனிதத்தன்மையும் இல்லை. சமயம் ஒன்றே விலங்கினத்தினின்றும் மக்களை வேறு செய்து நிற்பதாகும். பகுத்தறிவு மேம்பட்ட எந்தநாட்டை நோக்கினாலும் அந்த நாட்டு மக்கள் ஏதோ ஒரு சமயத்தைப் போற்றி வருதல் கண்கூடு. சமய உணர்ச்சி மனிதனுக்குள் இருக்கிற மிருகசுபாவத்தை ஒடுக்கி மாட்சியுறச் செய்வதாகும். மனிதனைக் கடவுளாக்குவதும் சமயமே. சமயத்தை அழிக்க வேண்டும் என்ற பிரசாரம் உண்மையில் பயன்படாது. மக்களுக்குச் சமய உண்மைகள் விளங்காமல் இருக்கலாம். அவற்றை விளக்கிச் சமூகத்தை முன்னேறச் செய்தல் அறிஞர் கடமையாகும். இவற்றிற் கெல்லாம் கல்வி அடிப்படை. தக்க கல்வியும் மாசு போக்கிய சமய உண்மைகளும் மக்களிடம் சிறந்து விளங்க வேண்டும். சமய உண்மைகளைப் பரப்ப ஏற்பட்ட மடங்களெல்லாம் தந்தம் கடமைகளை மறந்து உறங்குகின்றன. சமய உணர்ச்சியை மேம்படச் செய்யும் படியான கோவில்களில் பல அக்கிரமங்கள் மலிந்து கிடக்கின்றன. இத்தகைய காரணங்களையே சமயத்தை அழிக்க வேண்டும் என்பவர்கள் தங்களுக்குச் சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ளுகின்றனர். ஆதலால் சமூக சீர்திருத்தப் பெரியாரும் அறிஞரும் சமய உண்மைகளைச் சாதாரண மக்களுக்கு அறிவுறுத்திச் சீர்திருத்தம் செய்வார்களாக. எல்லாம் வல்ல திருவருள் நமது வேட்கையை நிறைவேற்றுவதாக.

ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - மார்ச்சு ௴

 

 

 

 

No comments:

Post a Comment