Monday, August 31, 2020

 

கிருஷ்ண ஜயந்தி

 

தேகாரோக்கியத்திற்கும் சுகவாழ்விற்கும் இன்றியமையாதது விரதம். இடையிடையே உண்ணாதிருத்தலை அல்லது ஒரு மாதத்தில் குறைந்தது இரண்டு நாளாவது உண்ணாதிருத்தலைக் கடைப்பிடித் தொழுகுவது நமது கடமையாயிருத்தல் வேண்டும். விதிவிலக்குகளுண்டாக்கிய அறிவாளரும் இதனை வற்புறுத்துகின்றனர். ஏனெனில்,

 

நமது வயிற்றின் சம்பந்தமாக 32 - அடி நீளமுள்ள குழலொன்றிருக்கிறது. இந்தக் குழலில், நாம் உட்கொள்ளும் வஸ்துக்களில் தேக சம்ரக்ஷணைக் கவசியமில்லாத அசத்துப் பாகங்கள் நெடுநாள் தங்கியிருக்கும். அவ்வாறு தங்குவதால் அவை விஷமாக மாறிவிடுகின்றன. இம்மாறுதல் சரீரத்தின் சுகநிலையைக் கெடுத்துப் பற்பல நோய்கள் தலை யெடுப்பதற்கு ஆதாரமாகின்றது. இத்துர்க்கதி நேரிடாதிருப்பதற்கே விரதங்களை யனுஷ்டித்து வருமாறு பெரியோர்கள் திட்டஞ் செய்திருக்கின்றனர். அன்றியும் விரதப் பழக்கம் மனவொடுக்கத்திற்கும் சாதகமாகின்றது. மனவொடுக்கம் தெய்வ பக்தியை உறுதிப்படுத்தி நற்கதி பெறுதற்கும், இஷ்ட சித்தியடைதற்கும் துணைக்கருவியாய் விடுகின்றது. இத்தகைய உட்கருத்தைக் கொண்டே நமது பெரியோர்கள் விரதானுஷ்டானத்தைக் கட்டாயமான தெய்வ வழிபாடாக ஏற்படுத்தியிருக்கின்றனர்.
 

விரதம், இருபகல் உணவுகொண்டிருத்தல், நல்லுணவு கொள்ளுதல், வில்வம், அரசு, அத்தி இவற்றின் தளிர்களை யுட்கொண்டிருத்தல், ஒரு பகல் பிண்ணாக்கு, பால், மோர், நீர், பொரிமா இவற்றில் ஏதாவதொன்றை யுண்டிருத்தல், மூன்று நாள் ஒருபிடி அன்னத்தை யுட்கொண்டிருத்தல், இருபத்தொருநாள் பாலே குடித்திருத்தல், மூன்று நாள் காலை, மூன்று நாள் இரவு, 3 - நாள் இடைவேளை யுண்ணுதல், 3 - நாள் அல்லது 12 - நாள் உணவின்றி
யிருத்தல் முதலாகப் பலவகைப்படும்.

 

காலையிலெழுந்து நித்திய கடமைகளை முடித்துக்கொண்டு, முன்னாளும்
உபவாசியராயிருந்து, தீய நாட்களை விலக்கிக் குற்றமற்ற சுபதின நாட்களில் விரதங்களைத் தொடங்கல் வேண்டும் என்பர். சுமங்கலிகள் புருஷன் கட்டளையின்படி விரதங்களை யனுஷ்டித்து வருதல் வேண்டும்.

 

மக்களின் சரீர சுகத்தையும் ஆன்ம சுகத்தையும் கருதிய பேரறிவாளர் சுப விரதங்கள் பலவற்றை ஏற்படுத்தி, அவற்றை அனுஷ்டானத்தில் கொண்டு வரும் வழக்கத்தை விதிரூபமாக உண்டாக்கிவிட்டனர். அத்தகைய விரதங்களுள் கிருஷ்ண ஜயந்தி அல்லது கோகுலாஷ்டமியும், விநாயக சதுர்த்தியும் அடங்கியவை.

 

கிருஷ்ண ஜயந்தி இவ்வருடம் ஆவணி மாதம் 14 - ம் தேதி (30 - 8 - 1926)
திங்கட்கிழமை வருகிறது. அத்தினம் கிருஷ்ண பட்சத்தைச் சேர்ந்ததாயும், உரோகணி நட்சத்திரமும், அஷ்டமி திதியுங் கூடியதாயும் இருக்கின்றது. இந்தச் சுபதினத்தில் தான் கிருஷ்ண பரமாத்துமா,'' உலகத்தில் தருமங் குறைந்து அதருமம் மிகும்போது, பின்னுற்றதைப் போக்கி முன்னுள்ளதை நிலைநிறுத்த நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன் " என்று கீதையில் சொல்லியிருக்கிறபடி அவதரித்தருளினர்.

 

தேவர்களும் மகரிஷிகளும் அசுராமிசர்களாகிய கம்சன் சிசுபாலன் முதலிய அதிக்கிரமித்தர்களால் தங்கள் கன்மானுஷ்டங்களுக்குப் பல வழியிலும் நேரிடும் இடையூறுகளை யொழித்துத் தங்களை ரக்ஷித்தருள வேண்டுமென்று செய்து கொண்ட வேண்டுகோளை நிறைவேற்றவும், தேவகி, பரமாத்துமாவை யொத்த ஒரு குழந்தையைத் தான் தன் வயிற்றிற் கொண்டு பெற வேண்டு மென்றெண்ணிய மனோ பீஷ்டத்தைப் பூர்த்தி செய்யவும், யசோதை, பர மாத்துமாவை நிகர்த்த ஒரு மகவின் திருவிளையாடல்களைக் கண்டு களிக்க வேண்டுமென்றுன்னிய உள்ளக்கருத்தை முடித்தருளவும், சில ரிஷிபுங்கவரின் கோரிக்கையை யொட்டி 'நான் கிருஷ்ணாவதார மெடுக்கும் போது நீங்கள் கோபிகாஸ்திரீகளாக ஆயர்பாடியில் அவதரிக்கக் கடவீர்கள்; அப்போது உங்கள் மனோரதங் கைகூடு " மென்று கொடுத்தருளிய வரத்தைப் பரிபாலனம் புரியவுமே, பரமாத்துமா இந்த அவதாரத்தை யுவந்தருளினன். உடைமையைக் காப்பது உடையவனுக்குரிய கடமையன்றா?

 

மேற்சொன்ன சுபதினத்தில் உலகோத்தாரணமாகப் பகவான் வடமதுரையின் கண் வசுதேவரென்னும் உத்தம புருடரின் இல்லக்கிழத்தியும், கம்ஸனென்னும் கொடுங்கோலரசனுக்குத் தங்கையுமாகிய தேவகியின் திருவுதரத்தில் மகவாய்ப் பிறக்கலானார்.

 

தேவகிக்கு விவாகமானபோது கம்ஸன் அவளை ஆடம்பரக் கோலத்துடன் ஒரிரதத்திலேற்றி நகர்வலம் வந்தான். வரும்போது அவ்வாசனை நோக்கி " அடே கம்ஸா! நீ எவளை இத்துணை அலங்காரத்துடன் தேரேற்றிச் செல்கின்றாயோ அவள் வயிற்றிற் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும் " என்று அசரீரி வாக்கொன் றுண்டாயது. இதைக் கேட்டதும் கம்ஸனுக்குக் கோபமுந் திகிலும் உண்டாயிற்று. உடனே அவன் தனது தங்கையைக் கொல்லத் துணிந்தான். ஆனால் வசுதேவரின் வேண்டுகோளின்படி தேவகி வயிற்றிலுதிக்கும் குழந்தைகளைக் கொல்லுவதென்கிற தீர்மானத்தைக் கொண்டு வசுதேவரையும் தேவகியையும் காராக்கிரகத்திலடைத்து
வைத்தான்.

 

இக்கிரகத்தில் தான் பரமாத்துமா ஸ்ரீகிருஷ்ணமூர்த்தமாகப் பிறந்து தேவகியின் விருப்பத்தைத் தலைக்கட்டினார்.

 

கம்ஸனுக்கு அஞ்சியிருந்த வசுதேவர், இத்தெய்வக் குழந்தையை அவனறியாதபடி ஆயர்பாடிக்குக் கொண்டு போய் ஆங்குத் தமது நண்பராகிய நந்தகோபரென்னும் ஆயர் வேந்தனுடைய மனைக்கிழத்தி யசோதையிடம் சேர்த்து விட்டு அம்மாதரசி பெற்ற மாயையாகிற பெண்குழந்தையை யெடுத்துக் கொண்டு வந்து கம்ஸனிடம் ஒப்புவித்தார். நிற்க,
 

பரமாத்துமா உலகரக்ஷணார்த்தம் அவதரித்த இந்தக் கிருஷ்ண ஜெனனத்தை ஆயர் பாடியில் வியக்கத்தக்கதோர் மகோற்சவமாகக் கொண்டு அங்குள்ளாரனைவரும் திரிகரண சுத்தியோடும் சந்தோஷசாகரத்தில் மூழ்கினவராய் ஓடுவதும், ஆடுவதும், பாடுவதும், ஒருவர்மீ தொருவர் விழுவதும், கலவைப்பொடி முதலியவற்றைத் தூவிக்கொள்வதுமாய் நின்று, மாதுரியமான பலவித பட்சண சித்திரான்னங்களைச் செய்து பகவத்பிரீதிக்கென்று அவற்றை யுட்கொண்டனர்.

 

இக்கொண்டாட்டம் அவ்வாறே அச்சுபதினம் வரும்போது ஸ்ரீகிருஷ்ணாபிமானமுள்ள உலகத்தவரால் கொண்டாடப்பட்டு, கிருஷ்ண விக்கிரகம் போன்ற புத்திரப்பேறு முதலிய இஷ்டசித்திகள் அடையப்பெற்று வருகின்றன.


நாமும் இந்தச் சந்தர்ப்பத்தைக் கொண்டாடிக் குறை தீர்ந்துய்வோமாக.

   
 "ஒருத்திமகனாய்ப் பிறந்தோ ரிரவில்
 ஒருத்திமகனா யொளித்து வளரத்
 தரிக்கில னாகித் தான் தீங்கு நினைந்த
 கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன்வயிற்றில்
 நெருப் பென்னநின்ற நெடுமாலே யுன்னை
 அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
 திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
 வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் " –

 
 ம. இராஜகோபால பிள்ளை,

 கோமளேசுவரன் பேட்டை, சென்னை.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஆகஸ்ட்டு ௴

 

 

 

 

No comments:

Post a Comment