Monday, August 31, 2020

 கேகயர் கோமகள்  இழைத்த கைதவம்

 

இராமகாதையை அறிந்த அறிஞர் அனைவரும் தண்ணளி மிகுந்த தயரதன் மனைவியாய் அமைந்த மூவருள், கைகேயியை இரக்கமற்ற அறக்கொடியாள் என்றே குறிப்பாராயினர். கேகயர் கோமகள் இழைத்த கைதவத்தால், இராமன் நாடு நீங்கிக் காடு போகவும், அங்குத் துயர் பல உறவும், காதற்றிருமகனைப் பிரிந்த துயர் பொறுக்க ஆற்றாது மன்னர் மன்னன் உயிர் துறக்கவும், அரசனையும் அண்ணலையும் ஒருங்கே இழந்த பங்கமில் குணத்துப் பரதன் தவக்கோலம் பூண்டு அயிர்த்து நோக்கினும் தென்திசையன்றி வேற்றியாதவனாய் வாழவும் அமைந்த காரணங்களால் கைகேயியை இரக்கமற்ற அறக்கொடியாள் என்றும் வன்கட் கயத்தி என்றும் பலரும்கூற அமைந்தது. ஆனால் கம்பர் இவளையும் இவளது உள்ள நிலையையும் பற்றிக் கொண்டுள்ள கருத்தென்ன என்று பார்ப்பாம்.

 

இன்னல்செய் இராவணன் இழைத்த தீமையெல்லாம் திரண்டுருவெடுத்த கிழக்கூனி தன்னரசியை அணுகி இராமன் கோமுடி சூடுவன் நாளை என்றும், அதனால்


 “வீழ்ந்தது நின்னலம் திருவும் வீய்ந்தது
 வாழ்ந்தனள் கோசலை மதியினால்"


என்றும் கூறிய பொழுது, உவகை மிக்கடைந்தவளாய்க் கைகேயி சுடர்க்கெலாம் நாயக மனையதோர் மாலையை அவளுரைத்த நற்செய்திக்குப் பரிசாக நல்குகின்றாள். இவள் இராமன் பால் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை அறிந்த கூனிதான் சூழ்ந்த வினை பயன் பெறாதது கண்டு அதனால் வெகுண்டவளாய் அவள் தன் கைத்தந்த மாலையை நிலங்குழிய எறிந்து, இராமன் அரசபட்ட மெய்துவதால் கைகேயியும் அவள் மகன் பரதனும் பின்னர் தாழ்ந்த நிலையே எய்துவர் என்று பலதரம் இடித்துக் கூறியும் “இராமனைப் பயந்த எற்து இடகுண்டோ " என்று கேகயர் கோமகள் அவள் கூறியவற்றை யெல்லாம் தடுத்
 துப் பின்னும்


 "எனக்கு நல்லையு மல்லை நீ யென் மகன் பரதன்
 தனக்கு நல்லையு மல்லை அத்தருமமே நோக்கில்
 உனக்கு நல்லையு மல்லை வந்தூழ்வினை தூண்ட
 மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய்!"


உன் புன்புலைச் சிந்தையாலென் சொன்னாய் நின் புன்பொறி நாவைச் சேதியாது உன் முதுமை கருதி பொறுத் தருளுகிறேன். அறிவிலி! அடங்குதி என்று தன் கண் சிவப்புறக் கடிந்து கூறுகின்றாள். இவ் வெவ்வுரைகளுக் கெல்லாம் அஞ்சி அகலாத மந்தரையும் கடைசியாக,

 

''கெடுத் தொழிந்தனை உனக் கரும்புதல்வனைக் கிளர் நீர்

உடுத்த பாரக முடையவன் ஒரு மகற்கெனவே

கொடுத்த பேரரசு அவன் குலக் கோமைந்தர் தமக்கும்

அடுத்த தம்பிக்கும் ஆம் பிறர்க்கு ஆகுமோ "                          என்றாள்.

 

இதுவரை அறநெறி பிறழாது உண்மையில் உறுதியாய் நிலைத்த தெய்வக் கற்பினளது தூயசிந்தையும் தீய மந்தரை இவ்வுரை செப்பலும் திரிந்தது என்று அழகொழுக எழுதி அமைக்கின்றார் கவியரசர். 'அயோத்தியை யாளும் தயரத மன்னன் அவன்றன் ஒப்பற்ற திருமகனான இராமனுக்குக் கொடுக்க விருக்கும் இறைமையாக்கம், அதைப் பெறும் இராமனுக்கும் அவன் வழிப் பிறக்கும் மக்களுக்கும் அவனை யடுத்து நிற்கும் தம்பி இலக்குவனுக்கும் உதவுவதல்லாமல் பரதன் முதலாய பிறர்க்கு உதவுதல் இல்லை. உன்னுடைய கையறவால் உன்னரும் புதல்வன் பரதனுக்கே கேடு சூழ்கின்றாய் என்ற முறையிலேயே இச்செய்யுளுக்குப் பலர் பொருள் கொள்ளக் கேட்கின்றோம். இவ்வாறு பொருள் கொண்டால் இதுவரை கூனி சொன்ன ''இராமன் கோமுடி சூடுவன் நாளை", "பேரிடர் பிணிக்க நண்ணவும் உணங்குவா யல்லை உறங்குவாய்'' என்று சொல்லிய உரைகளுக்கும் இவ்வுரைக்கும் வேற்றுமை ஒரு சிறிதும் இல்லாதிருக்க இவ்வுரையால் மட்டும் கேகயர் கோமகள் தூயசிந்தை திரிவானேன்? என்பது கேள்வியாக எழுகின்றது. கேகயர் கோமகளோ, தன் மக்கள் எனவும் மாற்றார் மக்கள் எனவும் வேற்றுமை காணாத செவ்விய உள்ளத்தாள்


 “தெவ்வடு சிலைக்கை என் சிறுவர் செவ்வியர்
 அவ்வவர் துறைதொறும் அறந்திறம் பலர் ஆதலின்
 எவ்விடர் எனக்குவந் தடுப்பது"


என்றும் " இராமனைப் பயந்த எற்கு இடருண்டோ' என்றும் செம்மை சான்ற மொழிகளில் தன் மனநிலையை விளக்குகின்றாள். இத்தகைய தொருதாய் இராமன் நாடாளப் போகின்றான், அதனால் பரதன் நலமிழந்து நலிவான் என்று ஒரு கிழக்கூனி கூறக் கேட்ட காலத்துச் சிந்தை திரிந்து சற்றும் அயர்வாளோ என்பது ஐயமேயன்றோ? ஆதலின் இச்செய்யுளில் ஒழிந்து கிடக்கும் மறை பொருள் ஒன்று உள்ளது. அப்பொருளையே கம்பர் கவிதையுணர்ந்த பெருமக்கள் ஏற்றுக் கொள்வர். அப்பொருள் கண்டு குறிப்பதே முறையாகும்.

 

இவ்விடத்து இராமகாதை முதன் முதல் எழுதிய வான்மீகர் சுட்டும் சுல்க வரலாற்றைக் குறிப்பது அவசியமாகும். கோசல நாட்டு மன்னனாய் விளங்கிய தயரதன் கைகேயியை விரும்பி மணம் பேசுங்காலையில் அயோத்தியின் அரசப் பட்டத்தையே கன்யாசுல்கமாகத் தந்து மணம் முடிக்கின்றான் என்பர் வான்மீகர். இம்முறையில் அயோத்தி அரசு கேகயர் கோமகளின் பரியப் பொருளாகி அவளுக்கும் அவள் வயிற்றில் தோன்றும் தநயனுக்கும் அவன் மைந்தருக்குமே வரன் முறை வழக்கால் உரிமையுடையதாகும். அவளுக்கும் சந்ததியற்ற காலையில் அயோத்தி யரசு அவளுடன் பிறந்த கேகயநாட்டு அரச குமாரனான யுதாஜித்துக்கு உரித்தாமல்லாமல் தயாத குலத்தாரெவர்க்கும் இல்லை. நீதியின் நிலையமாய பரதனை கேகயர் கோமகள் பயந்த பிறகு அயோத்தியாசுக்குத் தயா தன் உடையவனுமல்லை, அதை யவன் கோசலை மகனான இராமனுக்குக் கொடுக்கும் உரிமையுடையவனுமில்லை; இக்கருத்தைச் சுட்டாது சுட்டிக் கூறும் கம்பர் கவிநலம் அழகுடையதேயாகும். இக்கருத்தை நம்மனத்தகத்தே கொண்டு “கெடுத் தொழிந்தனை'' எனதொடங்கும் செய்யுளுக்கு உரை காணப் புகுந்தால் உண்மை காண்போம். ''உன்னுடைய அருமை மைந்தன் தன்னுரிமை இழந்து தவிக்குமாறு கெடுத்தவளும் நீயேயாகின்றாய்; முன்னரே சுல்கமாகக் கொடுத்த அயோத்தியரசு உன்மகனான பரதனுக்கும் அவன் கால் வழி வரும் மைந்தர்தமக்கும் அவனும் அவன்வழித் தோன்றினோரும் இல்வழி அடுத்த சுல்கக் கிரம வாரீசான உன் தம்பிக்கும் உரியதல்லாமல் பிறர்க்கு ஆவது அறமாமோ ஆதலால் பரதனுரிமையைப் பாதுகாத்து அரசன் அருளிய வாக்கைக் காத்து அவனை அறத்துறையில் நிறுத்துங் கடன் நின்ன தேயாகும் " என்று கூனி அறிவூட்டும் மாற்றமாக இப்பொருள் தெளியுங்கால் கம்பர் கவியின் செம்பொருள் இன்பம் விளங்கக்காணலாகும்.

 

ஆகவே தன்னல விருப்பாலேனும், தன்னொரு மகன் அரசெய்தி வாழவேண்டும் என்னும் ஆசையாலேனும் கைகேயி இராமன் முடி சூடுதலைத் தடுக்கத் துணிந்தனள் அல்லள். தானடையும் நலங்களையெல்லாம் கூனி எடுத்துக் கூறியும் அதற்கு ஒரு சிறிதும் இசையாத உத்தமி கடைசியாகத் தன்காதலன் அறநெறி பிறழ்ந்து தீவினை நயந்து செய்கின்றான் என்பதை அறிந்த காலையில் அவனை அறநெறி நிறுத்தல் தன் கடன் எனக் கொண்டு அதற்காகத்தான் ஏற்கவேண்டிய பெரும் பழியையும் அஞ்சாது எதிர் செல்கின்றாள். தான் வறிதே யிருப்பின் தசரதன் தன் காதல் மைந்தன் இராமன் மேல் கொண்ட காதலால் முன்னர் கேகயர் கோமகனுக்குக் கொடுத்த சூளறம் தவறிப் பாவமும் பழியும் எய்துவன், அதனால் தன் தலைவன் சொல்லறங்காத்து அறநெறி யோம்புதலே கற்புடைப் பெண்டிர் கடன் எனக் கொண்ட கைகேயி அம்முடிசூட்டை இடைநின்று தடுக்கத் துணிகின்றாள். இவ்வாறு துணிந்து வந்த கைகேயியும் தயரதனிடம் சுல்கச் சூளைச் சுட்டிக் கேட்க விரும்பினளில்லை. சுல்கச் சூளைச் சுட்டிக் கேட்டு அதனால் அரசன் அமைத்துள்ள முடி- சூட்டலை நிறுத்தினால், தன்னளிமிகுந்த தயரதமன்னன், தன் சொல்லற மறந்து நெறிதுறந்து முறையிறந்தான் என்னும் பழியினின்றும் தப்புமாறில்லை என்பதை உணர்ந்த கேகயர் கோமகள் அவன் அப்பழி யெய்தாத முறையில் அவனை அறநெறி நிறுத்த நினைக்கின்றாள். தன் காதற் கிழவனுக்கு எவ்வகை ஏதமுமின்றி அவன்றன் புகழ் காத்தலையே தன் கடனெனக் கொண்ட தெய்வக் கற்பின் பேர்மகளான கைகேயி தான் முன்னர் சம்பராசூர யுத்தத்தில் தயரதனுக்கு உடனிருந்து உதவி அவன் உவகையால் தந்த வரங்களிரண்டையும் கேட்டு, ஒரு வரத்தால் பரதன் அரசாளவும், மற்றொரு வரத்தால் இராமன் பதினான்காண்டு காடெய்தி வாழவும் வேண்டுமென இறைஞ்சு கின்றாள். இவ்வாறு சமயமறிந்து வாங்கேட்டதை உணர்ந்த மாந்தர் பலரும் தன்னை அறக்கொடியார் என்று தூற்றிய போதிலும், தன் கணவன், தன் காதலன்- தன் தலைவன் பழியெய்துமாறில்லை என்பதை உணர்ந்த மங்கை உவகை மிக்கடைகின்றாள். அரசன் தனக்குரிய பழி யெய்தாததுடன் அமையாமல், எக்காலத்தும், எவ்விடத்தும் சொற்காத்த வீரனாகப் புகழப்படுவான் என்ற ஓர் எண்ணமே அவனை அவன் கொண்ட கருமத்தில் ஊக்கியதாகும். என்னே! கேகயர் கோமகள் இழைத்த போறம்! இதுவோ கைதவம்! அன்று அன்று இதுவே போறம்!

 

அன்பர்காள்! இவ்விடம் ஓர் ஐயம் எழுகின்றது. சுல்கச் சூளால் பரதன் நாடு பெற வேண்டுவது தான் இன்றியமையாதது. இராமன் காடு போகவேண்டியது அவசியமின்றே எனினும் அவ்வாறு விரும்பிய கேகயர் கோமகளின் உள்ளக் கருத்தென்னை என்னும் கேள்வி எழலாம். கைகேயி இராமன்பால் இறவாத காதல் மிகவுடையாள் என்பது நாமறியாத தொன்றன்று. இத்தகையதொரு தாய் இராமனைக் காடுபோக்கக் கருத்துக் கொண்டதும் தன் காதலன் புகழ் நிறுவக் கருதியேயாகும் என்று கூறினால் அது ஒரு சிறிதும் மிகையாகாது. பரதன் நாடெய்தி அரசாள அவனுக்கு முன்னவனான இராமன் அவ்வரசிலேயே வறிதேயிருக்க நேருமாயின் அதனால் இராமன்பால் அன்பு பூண்டொழுகும் பலரும் உண்மை உணராது ஏதம் - பல விளைப்பர். அதனால் அரசன் அறநெறி தவறிய ஒரு செயலை வெளிப்படையாய் உணர்த்த நேரிடினும் நேரிடலாம். அவ்வாறமைந்தால்தான் இதுவரை எடுத்த முயற்சிகள் பலவும் பயனற்றுப் போகும். இராமனும் எக்காலத்தும் காட்டில் உறைந்து வருந்தவேண்டிய அவசியமின்று. பதினான்காண்டு காட்டில் வதிந்து வந்தானானால், அவன்மேல் அளவிலா அன்பு பூண்டொழுகியவரும் நாளாவட்டத்தில் பரதனது ஆட்சியில் அடைந்த நலங்கருதி வறிதே யிருப்பர். ஆதலின் கொஞ்சகாலத்திற்கு இராமன் அயோத்தியை விட்டுப் பிரிந்து இருத்தல் அவசியம் என்பதை உணர்ந்த மங்கை அவ்வாறே பணிக்கின்றாள் “இராமா! நீபோய், தாங்கரும் தவமேற்கொண்டு, “பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகளாடி ஏழிரண்டாண்டில் வா'' என்று இயம்பிய சொற்களில் மங்கையின் நிறைந்த உள்ளம் கனிந்து விளங்கக் காணலாம் ஆதலின், கொடியதொரு எண்ணத்தாலாவது அன்றி இராமன் பால் கொண்டுள்ள ஓர் வன்கண்மையாலாவது இராமனை வனம் போக்க விரும்பினாளில்லை என்பதும், சுல்கச் சூளறத்தால் நாடு பெற்ற பரதனது அரசு ஏதமின்றி இயங்கவும், மன்னர் மன்னவள் சொல்லறம் சோர்விலா நிலை நிற்கவும் விரும்பியே மன்னவன் மனைவி இராமனை வனம் போக்கக் கருத்துக் கொண்டாள் என்பது ஊன்றி ஆராயும் எவர்க்கும் புலனாகும்.

 

இனி, "கன்யா சுல்கம்'' இந்நாட்டினர்க்கு உடன்பாடன்று என்று கருதுபவரும் சிலர் உளர். இப்பாரத நாட்டிடையே, நளனும், தருமனும் தம்தம் நாட்டையே பணயம் வைத்துச் சூதாடித் தோற்றதும், மாவலியும் அரிச்சந்திரனும் தமையடுத்த வாமனர், விசுவாமித்திரர்களுக்கு முறையே தம்தம் நாட்டையே நல்கியதும் அறிந்த பெருமக்கள் அரசர்கட்கு அவர் தம் தேயத்தின் முழு உரிமை உண்டென்பதை உணர்வர். குரிசிலர் நாட்டில் கொடை யுரிமை கோடல் வரன் முறை வந்த வழக்கறமாகும். இவ்விடத்து தயரத மன் னன் தான் மணக்க விரும்பிய பெண்ணிற்குப் பரிசமாகத் தன் நாட்டையே கொடுத்தனன் என்பது முறையோ அன்றோ என்று அன்பர்கள் ஆராய்வார்க இவ்வாறு தயரதன் தன் நாட்டைப் பெண்ணின் பரிசமாகக் கொடுத்ததை இராமன் அறியாதிருந்தான் என்று சொல்வதற்கு இடனில்லை.


 "வரனில் உந்தைசொல் மரபினால் உடைத்
 தாணிநின்ன தென்றியைந்த தன்மையால்
 உரனில் நீ பிறந்துரிமை யாதலால்
 அரசு நின்னதே யாள்க"


என்று பரதனிடம் இராமன் கூறும் செஞ்சொற்கள் கவிஞர் உள்ளத்தைத் தெள்ளிதில் விளக்குவதாகும். " உந்தை சொல் மரபினால் ", " நீ பிறந்துரிமையாதலால்'' என்னும் சொற்றொடர்கள், சுல்கவரலாற்றைச் சுட்டாது சுட்டுகின்றன என்று கூறுதல் மிகையாது. “பார் என்னதாகில் யானின்று தந்தனன் மன்னா! போதி நீ மகுடஞ்சூடு'' என அன்பின் மிகுதியால் பரதன் நெகிழ்ந்து கூறிய காலத்தும் இராமன்,


 "எந்தையேவ ஆண்டு ஏழொடு எழெனா
 வந்தகாலம் நான் வனத்துள் வைக நீ
 தந்தபாரகம் தன்னை மெய்ம்மையால்
 அந்தநாளெல்லாம் ஆள் என் ஆணையால்"


என்றே கூறுகின்றான். கோசல நாடும் அயோத்தியரசும், இராமனுக்கு எக்காலத்தும் உரிமையுடைய தன்று என்பதும் பரதன் தந்தநாட்டையே பதிநாம்னான்காண்டு கழிந்து பரிபாலிக்கப் புகுந்தனன் இராமன் என்பதும் “ நீ தந்த பாரகம்'' என்று இராமன் கூறும் செஞ்சொற்களால் இனிதே விளங்கும்.

 

இனி கைகேயியைப்பற்றிக் கம்பர் குறிக்குமிடமெல்லாம் " தூயவள்', " தெய்வக்கற்பினள்'' "தெய்வக்கற்பின் பேர்மகள்" என்றே குறிப்பாராயினர். பாத்திரங்கள் வாயிலாய் அவரவர் கருத்திற்கேற்பப் பழித்தும் கூறும் இடங்களை விடுத்துக் கவிக்கூற்றாக ஆரோய்வோமாயின்

 

“சுடுமயானத்திடைதன் துணை எகத் தோன்றல் துயர்க் கடலின் ஏகக்

கடுமையார் கானகத்துக் கருணை ஆர் கலியேகக் கழற்கால் மாயன்

நெடுமையால் அன்றளந்த உலகெலாம் தன்மனத்தே நினைந்து செய்யும்

கொடுமையால் அளந்தாளை யாரிவரென்று உரையென்னக் குரிசில் கூறும்"

 

என்ற செய்யுளில், கைகேயியைத் திண்ணமாகக் கொடியவள் என்றே கருதும்படி கவியாற்றுகின்றார் கவியரசர் என மயங்குவோர் பலர் உளர். மாவலியினது ஆட்சியிலிருந்த மண்ணையும் விண்ணையும் ஈரடியால் அளந்து மூன்றாம் அடியால் மாவலியை ஆட்கொண்ட திருமாலின் நெடுமை தோற்றத்தில் கொடுமையாயும் உண்மையில் மாவலியைத் தன்னடிக்கீழ் அமைத்த ஒருபெரும் அருளாயும் இருப்பது போல, இராமனை வனம் போக்கி அது காரணமாய் மன்னன் உயிர் குடித்த மங்கை இயற்றிய கைதவம், தன் தலைவன் புகழ்காத்த பேரறமாயும் இராமன் பிரதாபம் உலகறியச் செய்த ஒரு திறமாயும் அமைந்தது என்று கொள்வோமேயானால் கம்பர் தம் கவிநலம் கைவரப் பெற்றவராவேம் என்பதே எம்முடைய தாழ்ந்த கருத்தாகும் என்று கூறி என் பணி முடிக்கின்றேன்.

 

குறிப்பு: - [இக்கட்டுரைக் கருத்துக்கள் மதுரை வழக்கறிஞர் திருவாளர் ச. சோமசுந்தர பாரதியார் B. A. B.L. அவர்களியற்றிய “தயரதன் குறையும் கைகேயி நிறையும்'' என்னும் புத்தகத்தினின்றும் எடுத்தாளப்பட்டுள்ளன.)

 

ஆனந்த போதினி – 1931 ௵ - அக்டோபர் ௴

 

 

 

No comments:

Post a Comment