Monday, August 31, 2020

 குமணன் கொடைத் திறனும் பாவலர் பண்பும்

 

செந்தமிழ் மணம் சந்ததமும் வீசப்பெறும் நந்தமிழ் நாட்டை பண்புடன் புரந்த பண்டைத் தமிழ் மன்னர் பலரும், தம்மிடம் 'இல்லை' யென்று வந்தார்க்கு 'இல்லை' என்னாது, இனி, அவர்க்கு வறுமையே இல்லை என்று கொடுக்கும் வள்ளன்மை வாய்ந்தோராய் விளங்கினர். தகையோர்களில் குமணன் என்னும் சிற்றரசனும் ஒருவனாவன். குமணன் என்பான் முதிரமலையடுத்த வளம் பெற்ற காட்டின் அரசன். முதிர்ந்த கல்வியறியுடையவன். இரவலர்க்கு இன்புடன் கொடுக்கும் புரவலன். பாவணர் மிடிக்குப் பகைவன். நாவலரும் பாவலரும் மகிழ்ந்து போற்றும் பேறு பெற்றவன். புலவர்தம் வருகையைக் காணின் புன்முறுவலுடன் அகமலர்ச்சி கொண்டு அவர் தம்மை எதிர்கொண்டழைத்து ஆதனத்திருத்தி உபசரித்து அருஞ்சுவை அமுது அருத்தி, பின்னர் அப்புலவருடன் தண்டமிழ் மொழியின் இனிய ஓசை, அமைதி, எழுத்து, சொல், பொருள் எனும் இலக்கண அழகு, சொன்னயம், பொருணயம் முதலிய பன்னயங்களைப் பற்றியும் நெடுநேரம் உரையாடி, புலவர் தம் மாட்சி உணர்ந்து, வியந்து, அகமகிழ்ந்து, புலவர் மிடியெவாம் அடியோடு தொலைய மணியும், பொன்னும், களிறும் வரையாதளிக்கும் வழக்கமுடையானா யிருந்தான். இவனது பெருங்குடைத்திறனைத் தமிழக முழுவதும் போற்றத் தலைப்பட்டது.

 

ஓர் தாய் வயிற்றில் பிறந்த இருவர் ஒற்றுமையில்லாது இருப்பது உலகில் காண்பதாகும். இவ்வள்ளல் தம் அருங்குணத்திற்கு நேர்மாற்றமாக இழிகுணங்கொண்ட இளவல் ஒருவன் இருந்தான். குமணனது புகழைக்கண்டு, நெஞ்சம் பொறாது இளங் குமணன் நஞ்சனைய வஞ்சனைச் செயல்களால் குமணனைக் காட்டிற்கு ஓட்டினன். குமணனோ அநித்தியமாகிய செல்வத்தில் ஆசைநீங்கித் தம்பிக்கே அவையனைத்தும் உரிமையாக்கி, காடு சேர்ந்து கார் துறைந்தான். நஞ்சினும் கொடிய நெஞ்சினனாகிய இளவல், அண்ணன் பொருளனைத்தும் தானே கவர்ந்து காட்டிற்கு ஓட்டியதோடமையாது தமையன் உயிரோடிருந்தால் என்றாவது, நாட்டைப்பெறும் முயற்சியில் நாடுவான் என்றெண்ணி, அவனை காட்டினின்றும் வீட்டிற்கே (விண்ணுலகு) அனுப்ப வேண்டுமென்னும் தீய எண்ணத்தினால், "குமணன் தலையைத் துணித்துக் கொணர்வார்க்குக் கோடி செம்பொன்'' என நாடு முழுவதும் பறையறையச் செய்தனன். அவ்வாணையைக் கேட்ட சான்றோர் இளையவனின் கயமையை வெறுத்தனர்.

 

புலவர்க்கேற்ற புரவலனான புனிதக்கோமான் குமணவள்ளல், " இனிது இனிது, ஏகாந்தம் இனிது' எனும் மூதாட்டியின் மொழிப்படி காடுறைதல் நாடுறைதலினும் இனிதாகக்கொண்டு இருந்து வருவானாயினான்.

 

இது இவ்வாறாக, குமணனைப் பிரிந்த குடிமக்கள் துக்கத்தில் ஆழ்ந்தனர். இளையவன் கொடுமை கண்டு திகைத்தனர். புலவர்களும் ஆதரிப்பாரில்லை என்பதைக் கண்டனர்.


“பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்
தல்லலுழப் பதறிதிரேல் - தொல்சிறப்பின்
வின் கிழத்தி உறைதலாற் சேராளே
பூவின் கிழத்தி புலர்ந்து"


என்னும் நாலடியாரின் சீரடிகளின் உண்மைப்படி, இலக்கியக் கடல் கடந்தும் அலக்கணுறுத்திய வறுமைக்கடல் கடக்க வகை காணாது அல்லலுற்ற பெருந்தலைச் சாத்தனார் எனும் பெரும்புலவர் தமது மிடி தீரப் பரிசில் பெற்று வரலாமென்று கருசி குமணன் தம் நாட்டை நோக்கிச் சென்றார். ஆனால் ஆண்டு நடந்த வனைத்தும் செவியுற்றுத் திடுக்குற்று வருந்தி, அருங்குணச் செம்மல் குமணன் இருந்த காட்டை எளிதில் அடைந்து கண்டனன். காணலும் களிப்புற்று ''புலவர் குறை தீர்க்கும் புரவலனே! வாழிய! வாழிய!'' என்று வாழ்த்தினார். வாழ்த் தொலிகேட்ட வள்ளல் புலவரைக் கண்ணுற்று “செந்தமிழ்ச் செல்வீர்! வருக! வருக! கானுறை வாழ்க்கை கொண்ட என்னிடம் நீர் இது பொழுதுவா, யான் முன் செய்த தவப்பயன் தான் என்னையோ!'' எனப்
புலவர்க்கு முகமனுரைத்து அமரச் செய்தான். வள்ளலை நோக்கிப் புலவர் ''செந்தமிழ்ச்சுவை நன்குணரும் செம்மால்! சீரிய வள்ளலே! தீஞ்சுவைத் தேன், காட்டில் உயர்ந்த கொம்பிலிருப்பினும் அதைவிடுத்து, தம் அகத்தருகில் பழுத்திருக்கும் எட்டியை எட்டிப் பார்ப்பரோ?'' என்று கூறித் தமது வறுமை நிலையை விளக்கி வருந்தி நின்றார்.

 

செவியுற்ற குமணன் மிக்க துன்புற்றுச் சிந்தித்தான். பாவம்! என் செய்வான்? பலப்பல யோசித்தும் ஒன்றும் கையிலில்லை என்பதை உணர்ந்தான். தன் இளவல், தன் தலைக்கு கோடி பொன் கொடுப்பதாய் பறையறைவித்திருந்தது நினவிற்கு வந்தது. வரலும் 'இத்தகைய நிலையிலும் இலை என்று கூறாத பெரும்பேறு பெறச்செய்த எம்பியினும் இனியோர் உண்டோ?


''அந்தநாள் வந்திலீர் அருந்தமிழ்ப் புலவீர்
இந்தநாள் வந்து நீர் நொந்தனி ரடைந்தீர்
தலைதனைக் கொடுபோய்த் தம்பிகைக் கொடுத்ததன்
விலைதனைப் பெற்றும் வறுமைநோய் களைமின்"


என்று கூறி புலவரது கரத்தில் தன் உடைவாளைக் கொடுத்தனன். என் செய்வார் புலவர் இந்நிலையில்? துடித்தார்! வெருண்டார்.

 

வள்ளல் தலையினை வாளால் கொய்து என்று மழியாப் பழியினை ஏற்க ஒருப்படுவரோ புலவர் சிகாமணி? வாளைவரங்க மறுப்பின் தானே தலை
துணித்துக் கொடுப்பினும் கொடுப்பான் என்று உடனே வாளைக் கையில் வாங்கினார். ''தலைக்கொடையாளியே! ஓரிடத்திலும் நிலைத்திரா இச்செல்வத்தின் பொருட்டோ யான் நின் தலை துணிப்பது? அதினும் அழியாப்பழி வேறுண்டோ? உன் தலைபெறுதல் எனக்கு இன்றியமையாததாயின், யான் வேண்டும் போது தெரிவிப்பன். அதுகாறும் அதைக் காத்தல் வேண்டும்'' என்று கூறி அவனது அரும்பெருங் கொடைத்திறனைப் பலப்பட புகழ்ந்தார்.

 

"இந்த வாளுடன் இளங்குமணனிடம் சென்று வள்ளலின் கள்ளமில் பல நற்குணங்களை எடுத்துக்காட்டி இருவரையும் நட்பாக்குவித்து குமணனை மீண்டும் அரசு நிலையெய்தச் செய்வேன்" என்று தம்முள் அறுதியிட்டு, குமணனை நோக்கி, "அரசே! சின்னாளில் நின்னை வந்து காண்பேன்'' எனக்கூறி விடைபெற்றுச் சென்றார்.

 

இளங்குமணனோ செல்வக்களியாட்டயர்ந்து, இறுமாந்து அண்ணன் தலைகொணர்வார் ஒருவரையம் இன்னும் காணப்பெறாததால் கவற்சியுடன் கொலு மண்டபத்தில் வீற்றிருந்தான். அந்நாள் நம் புலவர் மண்டபவாயிலை அடைந்து தம் வருகையை அரசனுக்கு அறிவித்தார். "லாளுடன் ஒருவர் வந்துளார்" என்றலும் மிக்க மகிழ்ச்சியுடன் வரவிடுத்தான். புலவரும் அரசவை சென்று ஆங்கு ஆசனத்தமர்ந்து "இளங்குமணன்" முகத்தைப் பார்த்தார். தம் வாயினின்றும் வரும் வார்த்தையை வெகு ஆவலாக எதிர்பார்க்கின்றான் அரசன் என்பதை உணர்ந்த புலவர் புன் மதியாளனை நோக்கி,
இவ்வுலகில் நிலைபெற விரும்பினோர் தம் கொடையால் புகழை நிறுத்திச் சென்றனர் "அத்தகைய புகழ் உலகுள்ளளவும் நீங்காது. உன் அன்பிற்குரிய அண்ணலும் கொடையில் மிக்கோனாகிய குமணவள்ளலும் இது பொழுது காட்டிலுறைகின்றமைக்கு வருந்தாதிருக்கும் உன் கன்னெஞ்சம் இருந்தவாறு என்னே! இப்பொழுது தன்னிடம் ஒன்றுமிலை என்று, எனக்குப் பரிசிலாக தன் தலையினை கொண்டுவந்து கோடி பொன் பெறுமாறு வாளை என்னிடம் கொடுத்துள்ளான். நீ உன் அண்ணனை இழப்பின் அத்தகைய ஒருவனை இனிப் பெறுதல் முடியாதென்பது திண்ணம். ''உடன் பிறப்பால் தோள் வலிபோம்'' என்பதும் நீ அறியாததோ? பகையரசரெலாம் பணிந்து நிற்க, நீ உன் அண்ணனுடன் ஒத்து வாழ்தலன்றோ விழுமியதாகும். அதுவே புகழும் ஆகும்'' என்று பலவிதமாய் சகோதர ஒற்றுமையை எடுத்துக்காட்டி வாளை நீட்டினார்.

 

இவ்வாறு ஒற்றுமையாகிய தெள்ளமுதத்தைத் தம் செஞ்சொற் குழுவாகிய சங்கால் எடுத்துப்புக்கட்டி இளவலின் வஞ்சம் நெஞ்சம் விட்டு அகலும் படி செய்தார். உடனே அவனிடம் சகோதரவாஞ்சை யெனும் வெள்ளம் ததும்பலாயிற்று. அவ்வளவில் தன் தமையனுக்குத் தானிழைத்த தீங்குகளை யெல்லாம் நினைத்து இரங்கி, புலவரையே அடைந்து தமையனை அழைத்து வந்து முன்போல் அரியணையில் அமரச் செய்யும்படி வேண்டி நின்றான்.

 

புலவரும் தாம் கொண்ட கருத்து கைகூடுமென மனமகிழ்ந்து அவ்வாறே செய்வதாக இளங்குமணனைத் தேற்றி அவனைத் தமையன் இருக்குமிடம், நகரமாந்தரும் அமைச்சரும் உடன்வர, அழைத்துச் சென்றார். இளவல்தன் ஆருயிர்த்தமையனைக் கண்டதும் விரைந்தே தோடி அவனது அடியில் தன் முடிபடிய நெடிது வீழ்ந்து "அண்ணலே! அறியாது அடியேனிழைத்த தீங்குகளைப் பொறுத்து மன்னித்தல் வேண்டும். தாங்களிருந்த தாங்களிருந்த அரியாசனத்தில் யானிருத்தல் அரிமாவிருந்த இடத்தில் நரிமா விருப்பதையன்றோ யொக்கும். இனித்தாழ்க்காது நாடு போந்து முடிசூடாவிடின் நின் அடியில் வீழ்ந்து உயிர் துறப்பன்'' தானறு கதறி வேண்டி நின்றான்.

 

குமணன் புலவனரயும் தம் பியையும் இனிது நோக்கி ''காடுறை வாழ்க்கையே சாலவும் நலம் பயப்பது எனக் கண்டேன். தம்பி! நீ நாடுபோந்து அரசுரிமைந்தாகி ஆள்வாயாக! இதுகாறும் நீ எனக்கு இன்னல் செய்ததாக என்மனம் எண்ணியதில்லையே. என்னை நாட்டிற்கு அழைப்பதே பெருந்துன்பம் விளைவிப்பதாகும்'' என்று விடையிறுத்தான்.

 

கேட்ட இளங்குமணனும் நகரமக்களும் புலவர் முகத்தை ஒரு முகமாய் நோக்கினர். நோக்கலும், புலவர் குமணனைப் பார்த்து ''-ஏ! தலைக் கொடை யாளியே! நீ எனக்கு நின் தலையை அளித்ததை மறந்தனையோ; அத்தலையீல் உனக்கு உரிமையாதுளது? என் தலையில் முடிபுனைய நான் விரும்பின் அதற்குத் தடை யாதுனது என உரைக்கவே, குமணன் மறுத்தற்கின்றி அவர் வேண்டு கோட் கிணங்கினான். புலவர் புரவலரிருவரையும் நாட்டிற்குக் கொண்டுபோய் குமண வள்ளலை அரியணை யேற்றி மணி முடி கவித்து அரசியல் தாங்கவும், இளவல் தமையனுடன் இருந்து மூத்தோன் ஏவல் வண்ணம் நடந்து வரவும் செய்தார். நகரடாந்தரும் உவகைக்கடலுள் மூழ்கினர்.

 

பின்னர் குமணன் புலவரது ஒப்பிலா அறிவாற்றலுக்கும் அருட் பெருங்குணத்திற்கும் வியந்து. மகிழ்ச்சியுடன் புலவர் வறுமை தலைகாட்டா தொழியும்படி பொன்னும் மணியும் விளை புலங்களும் அளித்தான். புலவரும் விடை பெற்று மகிழ்வ பூத்து வறுமைப்பிணி நீங்கி இனிது வாழ்ந்திருந்தார். தமிழின் இனிமையில் ஆர்வ முற்று மகிழ்ந்து வாழ்ந்த வள்ளல், தான் காட்டிலிருக் கையிலும் தன்னிடம் ஒன்றுமில்லை என்பதைக் கண்டும், புலவர் வருகையினால் பெரிதும் உலகை கொண்டான். புலவர் வறுமையைப் போக்க வழிகாணாவிடத்து, புலவரின் வறுமைகண்டு வருந்தி தம் இயற்கை வண்மையினால் தம் தலையையே துணித்து சென்று கோடி பொன் பெற வாளைக் கொடுத்தான். இவனது கொடைத்திறம் என்னே! கடை யெழு வள்ளல்களில் மயிலுக்குப் போர்வை யீந்த பேகனும். காட்டின் கொழு கொம்பின்றி வாடிய முல்லைக் கொடி படர்வதற்கு தன் பொற்றேரை அதன் அருகே நிறுத்தி தான் இணையடி சிவக்க நடந்த வள்ளலும், 'கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரில்லை' எனச் சிறட்பிக்கப்பட்டவனும், தன் வரையா வீகையால் உலகுள்ளளவும் ஓங்கு புகழ் பெற்றவனும் தமிழ் வள்ளல்களில் முதன்மையானவனுமான பாரி என்பானும் செய்த கொடை குமணன் கொடைத் திறத்திற்கு ஒப்புமோ. இவன் கொடைத்திறத்தின் முன் அவர்கள் தம் கொடை இரவி முன் மின்மினியே யாகுமன்றோ? தன்னை வந்தடைந்தோர் இன்னல் போக்கத் தன்னையே நல்கிடத் துணிந்த நம் வள்ளல் அருட்டிறத்தை நோக்கின் எவரை ஒப்பிடுவது!

 

தம் தீராவறுமைப் பிணி போக்கதக்க நன்மருந்து பெறவந்த புலவர் தம் அருங்குணங்களை உன்னுர் தோறும் உவகை பொங்கும். வறுமையால் வாடிப் பரிசில் பெறவந்த புலவர், காவலன் கரந்துறைவதைக் கண்டார். வறுமை நிலைக்கு ஆற்றாது மன்னன் வாள் கொடுத்தான். புலவரோ புன்மதியாளர் அல்லர். வள்ளல் தலைதுணித்துப் பசும்பொன் பெறுதல் எத்துணை வசைக்கு ஆளாக்கும் என்பதை உன்னி, தாம் தாழ்ப்பின், தானே துணித்து கொடுக்கும் வள்ளன்மை வாய்ர் தோன் குமணன் என்பதை நன் குணர்ந்த புலவர்தாமே அதை வாங்கிச் செய்த சூழ்ச்சி போற்றற்குரி பதாம். காட்டினின்றும் இளவலிடம் சென்று அவனது தீய குணங்களைப்போக்கி தூயனாக்கிய அவரது அறிவின் மாட்சியும், செஞ்சொல் வன்மையும் கண்டு களிக்கத் தக்கது. மற்றும் குமணன் செங்கோல் கொள்ள மறுத்தபோது அவன் மாற்றம் உரையாவண்ணம் முடிபுனைந்து தாம் கொண்ட காரியம் முற்று வித்த புலவரின் ஆற்றலும் அளந்துரைக்கற்பால தன்று. இத்தகைய அன்பு, அருள், வாய்மை, தூய்மை முதலிய அருங்குணங்களுக்கு இருப்பிடமாயிருந்தனர்
பண்டைப் புலவர் பெரு மக்கள் என்பது கண்டு ஆனந்திக்கத்தக்கது.


ஆனந்த போதினி – 1932 ௵ - ஜனவரி ௴

 

 

 

No comments:

Post a Comment