Monday, August 31, 2020

 கௌஸல்யா மகாராணியார்

 

நாட்டின் முன்னேற்றம் அதன கண் வாழும் மக்களின் போறிவையும் ஒழுக்கத்தினையுமே அடிப்படையாகக் கொண்டெழுவதென்பது பொதுவான உண்மை. அப்பொது வுண்மையிலும் அந்நாட்டில் தோன்றும் பெண்மக்களின் நற்குண நல்லொழுக்கங்களே சிறந்த பயன் தருவனவாகும். மக்கள் இனமே தாய் கருப்பத்திலூறி அத்தாய்ப்பாலுண்டு தாயின் தளிர்க்கைகளில் வளர்ந்து தகுகிபெற வேண்டியிருப்பதினால் அறிவுடை நல்லாரிடமே அறிவுடை மக்கள் தோன்றுவதை எதிர்பார்க்க முடியும். இதற்கு எண்ணிறந்த சான்றுகள் உள. எனினும் குறிப்பாக மகா புருஷர்களில் முதலாக வைத்துப் போற்றப்படும் இராமபிரானை ஈன்றெடுத்த தாயாகிய கௌஸல்யா தேவியாரின் இயற்கை மாண்புகளைச் சிறிது ஆராய்வோம். “அமுதைப் பிரையிட்டுக் கடைந்தால் வெண்ணெய் எழுவ தன்றித் தண்ணீரிற் பவரயிட்டுக் கடைந்தால் வெண்ணெய் புறப்படுவதுண்டோ? உத்
தமோத்தமமான சந்ததி பரமதுல்யமான பதிவிரதையின் கருப்பத்திலிருந்து
தானே உதிக்கக்கூடும். இராமான் குணாத சயங்கள் அவ்வளவையும் அவரைக் கருவுற்ற தாயினிடம் அமைந்திருப்பதைக காண்கின்றோம். கம்பர் இவ்வருமையை முதலிலிருந்து கடைபோகுமட்டும் நன்கு அமைத்துக் காட்டியுள்ளார்.

 

அவற்றுள் சில வருமாறு: - அரசர்க்கரசனாகிப் பெருந்திறல் பெரும் புகழ் பெற்று ஒருவருக்குத் தான் மூத்த பட்டத்தரசியாக அமைந்த பெரும் பேறுடையவர் இக்கௌஸல்யா தேவியார். இவரை மணந்த தசரத சக்கரவர்த்தி எக்காரணம் கருதியோ இவர்க்குப் பின்பு பல ஆயிரக்கணக்கான மங்கையர்களை மணம புரிந்தாரென்பது சரித்திர வண்மை. இவைகளினால் ஒரு சிறு மன மாற்றமும் இன்றிச் சாநதம் தழைத்த காதலுடன் தனது கணவனை உயிரினும் மேம்படப் போற்றி அன்பும இன்பமும் ததும்பக் குறிப்பின் வழி ஒழுகி வாழ்ந்து வந்தனர் என்பது எவர்க்கும் திகைப்பூட்டுவதாகும்.

 

கடலனைய அன்பும் புவியனைய பொறையும் உடைய இவரது இயற்கையை எண்ணுந்தோறும், தெய்வப் புலவரின் "பெண்ணிற் பெருந்தக்கயாவுள? கற்பென்னும் திண்மையுண்டாகப் பெறின்' என்னும் பொய்யாமொழி நினைவில் எழுகின்றது. இத்தகைய பெருமித குணத்தின் பிரதிபலிப்பாகவே பின்னர் இவர்பாற் றோன்றிய இராமபிரான் வனம் போகுமாறு சிற்றன்னை பணித் தமாற்றம் கேட்டதும் அப்பொழுதலர்ந்த செந்தாமரையினும் அழகிதாகப் பொலிந்ததெனக் கவியரசர் சித்தரித்துள்ள இடமும்,


"மன்னவன் பணியன்றாகில் நின்பணி மறுப்பனோ?
என் பின்ன வன் பெற்ற செல்வம் யான் பெற்ற செல்வமன்றோ?"


என விடையிறுத்ததாகக் காட்டியுள்ள பகுதியும், பொலிவுறுவதாகச் சிந்திப்போர்க்கு விளங்கும்.

பிறகு,


''விராவரும் புவிக்கெலாம் வேதமேயன இராமன்''

 

என மாற்றாந்தாயினாலே சிறப்பாகப் பாராட்டப் பெற்ற ஒப்பற்ற தனது தவப்புதல்வன் முடிபுனைவிக்கப்போகும் செய்தியைச் சிலதியராற் செவியுற்றபோது தனது கான்முளை பாராளும் பொறுப்பினை ஏற்கப் போகின்றதாகிய பேறு குறித்தெழுந்த மகிழ்ச்சிப்புனல் பொங்கி யெழுந்த தாயும், அதே தருணத்தில் நாயகனாகிய மன்னர் மன்னன் துறவு மேற்கொண்டு வனம்புகுவாரென்று எழுந்த துன்பவுணர்ச்சியாகிய பெருந் தீ அம்மகிழ்ச்சிப் புனலை வற்றச் செய்ததென்று அரசியாரின் உள்ள நிலையை விளக்கி


"சிறக்கும் செல்வ மகற்கெனச் சிந்தையில்
பிறக்கும் பேருவகைக்கடல் பெட்பற
வறக்கு மாவடவைக்கன லான தால்
துறக்கு மன்னவன் என்னுந் துணுக்கமே.''


என்று கவியரசர் காதலனுக்கும், காதல் மைந்தனுக்கும் அன்பில் வேறுபாடறியாத அவ்வரசியாரின் தூய உள்ளத்தினைப் படம்பிடித்துக் காட்டியிருக்கின்றார். இளமை காரணமாக தம்பதிகளுக்குள் ஏற்படும் பாஸ்பர உணர்ச்சி முதுமைப் பருவத்தில் மறைந்து போவதும், மக்களின் ஆக்கவளர்ச்சியே தலை சிறந்து நிற்பதும் முதுமகளிரிடை இயல்பாகக் காணலாம். இத்தகைய நிலைமை பொதுவாகுமன்றிச் சிறப்பாகமாட்டாது. கற்பிற் சிறந்தவர்களாயும் விரத சீலைகளாகவும் முற்காலம் விளங்கிய பெருந்தகைப் பெண்பாலர்களிடை இத்தகைய காரணம் கருதாத தூய அன்பே உரம் பெற்றிருந்ததாகும். கேவலம் சிற்றின்ப நுகர்ச்சிக்காகவே சிருஷ்டிக்கப்படும் அன்பு வாழ்விற்கால் கொள்வாது வீழ்ச்சியுறுதல் கண்கூடே. இருமைக்கும் துணையாகிய கற்புடை மகளிர்க்கும் விலைமாதர்க்கும் உள்ள வேற்றுமை இதுவே யாகும். ஆனால் விலைமாதரின் இயல்புடைய சிலர் குலமாதரிலும், குலமாதரின் குணப் பண்புடைய சிலர் விலைமாதரிலும் இருக்கின்றனர் என்பதை ஈண்டு குறிப்பிடவேண்டிதும் அவசியமாகும். இதை மறைப்பது உண்மைக்குத் தவறிழைப்பதாகும். இது நிற்க இன்பம் துன்பம் ஆகிய இரண்டு வகை யணர்ச்சிகளின் இடைப்பட்ட நமதரசியார் கடமை கருதி மனதைத் திடப்படுத்திக்கொண்டு சுபச்செய்தி வழங்கிய மகளிர்க்குப் பண்டை இந்திய மன்னர்களின் முறைப்படி "அரும் பெறலாரமும், நன்னிதிக்குவையும் நனி நல்கி அவர்களை மகிழ்வித்துத் தனது முதற் கடமையாகிய தெய்வ வழிபாட்டினைச் செய்யும் பொருட்டுத் தனக்கு உயிரினுமினிய சுமித்திரை யென்னும் இளைய அரசியொடும் அரண்மனையில் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் பரவாசுதேவனைத் தொழுது வணங்கி

 

"என்வயிற் றருமைந்தற் கினியருள் உன்வயிற்ற தென்றாள்"

 

என்று வேண்டியதாகக் கூறப்பட்டுளது.

நான் பெற்ற மகன் என்று எண்ணாமல், என்பால் திருவருள் வரவிடுத்த மைந்தன் எனக்கருதிக் குறிப்பிட்டது அரசியாரின் பேரறிவிற்கும் தெய்வப்பற்றிற்கும் ஓர் அரிய சான்றாகும். நீர்மேற் குமிழியன்ன புன்மைச் செல்வத்தினையும் துய்க்கும் போகத்தினையும் பெரிதாக மதித்திருந்தால் கௌஸல்யாதேவியார் கடவுள் வழிபாடு அந்நிலையில் செய்திருக்கவே வேண்டியதில்லை. இயல்பாகவே ஆண்பாலர்களை விடப் பெண்பாலார்கட்குத் தெய்வ வழிபாட்டில் பற்று அதிகம் என்பதையும் இது குறிப்பிடுவதாகும்.

 

பிறகு பலவகைத் தானங்களும் வழங்கி விழாவெடுப்பித்து அரண்மனையில் முன்னுள்ள பெரியோர்களால் தொடங்கி யநுஷ்டிக்கப்பட்டதாகிய (முடிமங்கலம் குறித்து ஆற்றப்படும்) நோன்புகள் யாவும் செய்யத் தொடங்கினார் எனக் கவி கூறுகின்றார். மணாளருடையவும் மக்களுடையவும் மேன்மைக்ளைக் கருதி நோன்பிழைத்து விட்பிரதமிருப்பவர்கள் இன்றும் இந்திய மாதர்களே யென்பது வெளிப்படை. இது கொண்டே மனைக்கு விளக்க மடவார் என்றனர் மூதாட்டியாரும்.

 

பின்னர் முடிமங்கலத்திற்குக் குறித்த நன்னாளும் போந்தது. லிருந்தே தன் அருந்தவ மைந்தன் பூதேவியை மணந்து அம் மணக் க்கோலமாகிற முடி, குடை சாமரம் முதலிய சின்னங்கள் பொலிய ஈன்றெடுத்த தாயாகிய தன்னை வந்து வணங்கி ஆசிபெற வருவான் வருவான் என்பதைத் தன்னுள்ளேயே பலகாலும் எண்ணி எண்ணி இன்பந்தழைத்த தாயன்புடன் எதிர்நோக்கி பிருக்கின்றார். எதிரில் வந்தெய்தும் ஓர் நிகழ்ச்சி யுண்டெனில் அதையே முற்கூட்டிச் சிந்தித்துக் கொண்டிருப்பது மகளிரின் பிறவிக் குணம். அதைக் கூடக் கம்பர் குறிப்பிடத் தவறினாரில்லை.

 

இவ்வாறு பேராவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்த பேராசியாகிய அன்னையார் முன்பு, இராமன் தான் வனம்புக விடையளிக்குமாறும், மன்னர் மன்னனின் துன்பந் தீர ஆறுதல் கூறுமாறும் வேண்டும் பொருட்டுப் போதரலானார்.

 

தான் மனதினாலேயே பாவனை செய்து கண்ட, முடிமங்கலச் சின்னங்கள் எவையுமின்றிச் சாதாரணத் தோற்றத்துடன் வந்து பாதங்களில் வணங்கிய மைந்தனை மனம் குழைந்து வாழ்த்திய பின்னர் படபடப்பின்றி அமைதியான முறையில்

 

''நினைந்ததென்? இடையூறுண்டோ? நெடுமுடி புனை தற்கு''

 

என வினவியதாகக் காட்டிய பகுதி அரசியாரின் அடக்கத்தின் அழகைப் புலப்படுத்துவதாகும்.

 

உடனே இராமன் இருகரமும் கூப்பித் "தாயே தமது காதல் மைந்தனும், குறைகாண முடியாத குணமுடைய என் தம்பியும் ஆகிய பரதனே முடி சூடுகின்றான்' எனக் குறிப்பிடுகின்றார்.

 

இதனைக் கேட்டதும் அன்னையாகிய கௌஸல்யா தேவியார் திடுக்குற்றாரில்லை. வெறுப்புற்றாரு மல்லர். அம்மட்டோ “நின்னினும் நல்லன் மும்மையின் நிறைகுணத்தவன" குறைவிலன், எனத் தனது வேற்றுமை யறியாத அன்பினால் அங்கீகரித்தனர். உன்னைவிட நல்லவன். யாவரினும் மும்மடங்கு நிறைந்த குணமுடையவனாதலின் அவன் அரசர்க்கரசனாவது தகுதியுடையதே எனப் பாராட்டி, அதனை ஆமோதித்தனர் என்னில் அவர் பெருந்தகையை எவ்வாறு வழுத்துவது? இம்மாதரசியின் கருப்பத்தி றிய இராமன் “என்பின்னவன் பெற்ற செல்வம், யான் பெற்ற செல்வம் அன்றோ?" எனக் கைகேசியிடம் புகன்றதில் வியப்புமுண்டோ?

 

ஆனால் பழமை பாரட்டும் குணம் மாதர்கட்குத் தலை சிறந்த தாதலினால், முறைமை யன்றென்ப தொன்றுண்டு என மூத்தவனிருக்க இளையவன் முடிசூடுதல் ஆன்றோர் வழக்கிற் கொத்ததன்று எனவும் எண்ணினார். ஆயினும் அவ்வெண்ணம் அரசிற்குரியவனாகிய தன் மகன் மனதில் பதியக் கூடாதென்று கருதியவர் போல "மன்னவன் ஏவிய, தன்றெனாமை மகனே யுனக்கறன், நன்று நம்பிக்கு நானிலம் நீ கொடுத் தொன்றி வாழுதி யூழிபல'' என்னும இரண்டு விடயங்களை எடுத்துக்கூறி ஆசி வழங்குகிறார்.

 

அரசர் கட்டளைப்படி நீ ஒழுகுதல் கடமை யாகுமன்றி முறைமையன்றென்பதை நீ எண்ணுதல் கூடாதென்னும் குறிப்பும் இதனால் உனது உரிமை புறக்கணிக்கப்பட்டதாக வருந்தாமல் உனதுடமைப் பொருளாகிய இவ்வரசினை நீயே உன் தம்பிக்கு உவப்பின் அளித்ததாக எண்ணிக் கொடுத்து, இதனால் வேறுபடாமல் ஒற்றுமையாகிப் பல ஊழிகாலம் உலகம் வியக்க வாழ்வாயாக என்று முடிக்கின்றார்.

 

இவ்வாறு முரண்பாடின்றி அரசிழந்ததை ஏற்றுக்கொண்ட அன்னையின் பெருந்தகை யுணர்ச்சியைக்கண்டு பொங்கித் தழைத்த மகிழ்ச்சியுற்றுப் பிறகு வனம் புகுமாறு தனக்கிடப் பட்ட இரண்டாவது கட்டளையை முந்தக் கூறுவது உசிதமன்றெனக் கருதியவர் போல, அன்னையே, மன்னர் மன்னன் என்னை நன்னெறியிற் செலுத்தும் எண்ணத்தினால் ஏவிய ஓர் கட்டளையுண்டு எனக் குறிப்பிடுகின்றார். அதுகேட்ட அன்னையார் ஈண்டுரைத்த யென்னை? இப்போது உனக்கு அவ்வாறு இடப்பட்ட கட்டளை யாது? எனவினவவே, இனி மறைத்துரையாட இடமின்றிப் பதினான்கு வருடம் என்பது அதிக வருடங்களாக மனதிற்படுமோ? என்றஞ்சி, ஏழினோடேழு' ஆண்டுகள் வனவாசிகளான தவ சிரேஷ்டர்களுடன் அளவளாவிப் பின்பு திரும்பவும் நீ வருதல் வேண்டுமென்றும் கூறியுள்ளார் எனத் தந்தை மீது தாய் மனதில் வருத்தம் எழாவண்ணம் புகல்கின்றார்.

 

''அரச செல்வத்தை ஒரு பொருளாக மதியாமல் ஐயன் ஆணைப்படி நட'' என ஆண்மையோடும் அறிவுறுத்திய இவ்வரசியார் தமது செல்வச் சிறுவன் சகல சுபங்களை யும் துறந்து வனவாழ்ககையை மேற்கொள்ள ஏற்பட்டது அரசர் கட்டளை யெனக் கேட்டபோது அச் சொல்லாகிய அனல் தன திரு செவிவழிப் படர்ந்து உள்ளத்தைச் சுட உணர்வு கலங்கித் தரியாது வெதும்பி மெலிந்து வீழ்ந்து கரைகின்றார்.

 

அரசர் முடி சூட்டுவதாக மொழிந்தது வஞ்சமா யிருக்குமோ என்றெண்ணியும், ஆதிமுதல் அரசர்மாட்டு நான் ஒழுகிவந்த பணிவிற்கு அவர் என் பாற்பெய்த கருணை மிகமிக நன்று நன்று என விம்மியும், அன்புருவாகிய தந்தை இவ்வாறு மனம் பேதிக்க நீ யாது குற்றம் புரிந்தனை? என வினவியும் பலபட இரங்குகின்றார். இதுகண்ட மைந்தன்,

''இத்திறத்தின் இடருறுவாள் தனைக்
கைத்தலத்தி னெடுத்து அருங் கற்பினோய்
பொய்த்திறத்தின னாக்குதியோ புகல்
மெய்த் திறத்து நம் வேந்தனை நீ''


என்று குறிப்பினால் அரசர் அன்புமாறினாரல்லர், வாய்மையின் வழி நிற்பவராதலால் இது நிகழ்ந்தது, அரசர் உள்ளம் வருந்தவோ அவர் நல்லெண்ணத்தில் ஐயப்பாடு கொள்ளவோ சிறிதும் இடமில்லை யெனப் புகல்கின்றார்.

 

மெய்த் திறத்து வேந்தன் எனவும், (வரம்பெற்ற கைகேயிக்கல்லாது) நம் வேந்தன் எனவும் தனித்தனி அமைத்துக்கொள்ளின் மேலே குறித்த கருத்து விளங்குவது காணலாம், அதினும் நீ என்றது மிகமிக ஆழமுடையதாகும்.

 

ஒப்பாரு மிக்காருமில்லாத அரிய கற்பரசியாக விளங்கிய நீயோ கணவன் உரையைப் பொய்யாக்கலாம்? என்பதே உட்குறிப்பு. மனிதப் பிறவியின் மாட்சியே சுயநலத்தியாகம், பெற்றோரைப் புனித மாக்குதல். இவ்விரண்டினையும் இவ்விருகட்டளைகளின் மூலம் பெற்றேன். இதனைவிடப் பிறப்பினா லெய்தும் பெரும் பயன் உளதோ? எனத் தனது ஞானவாசிஷ்ட சிரவணபோதம் வெளிப்படப் பலவகை அறமொழிகளால் அன்னையைத் தேற்றியதுடன் எவ்வாற்றானும் தான் நாடு நீங்குவது உறுதி என்பதை அன்னை யுணரும்படி


“விண்ணு மண்ணும் இவ்வேலையு மற்றும் வே

றெண்ணும் பூதமெலாம் இறந்தேகினும்
அண்ண லாணைமறுக்க அடியனேற்- கொண்ணுமே?"


என முடித்துக் காட்டுகின்றார். இதுகேட்ட பின்னர் வேறு செயல் காணா அவ்வம்மையார்,

 

ஆகில் ஐய அரசன்றனது ஆணையை யிகழ்ந்து வனம் செல்லாதொழிக என யானும் கூறவில்லை. துன்பத்தைச் சகிக்கவு முடியாமல் இறக்கவும் முடியாமல் தளரும் என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்லுவாயாக என இரங்கி வேண்டுகின்றார்.

 

பத்தினிக் கடவுள் என இவரையன்றோ பகர்தல் வேண்டும். நீதிக்கு எவ்வளவு கீழ்ப்படிகின்றார். துன்பத்தினை எவ்வண்ணம் சகிக்கின்றார். பொறையைப் பெண்பா லினமாகப் பெரியோர் வகுத்ததற்கு இவரன்றோ சான்று

 

அவ்வேண்டுகோளையு மறுத்து, என்னைப்பிரிந்து பிரிவெனும் துன்பக் கடலில் (நிரந்தரமாக) நிலைபெறப் போகிற அரசர்க் கரசராகிய நின்பதியை உடனிருந்து ஆற்றி யுபசரிக்க வேண்டிய கடமையைத் தவிர்த்து, என்னுடன் கானகம்புகுத எண்ணலாமோ? தாயே ஸ்திரீ தர்ம சாஸ்திரங்களை நீ படித்தறிந்தது மில்லையோ? எனவும் பாதன் அரசுரிமை யேற்று, மன்னன் வானப்பிரஸ்தாச்சிரம வாழ்வு மேற்கொள்ளுங்கால் உடனிருந்து அருமையான நோன்புக ளாற்றுதல் கடமை, நான் பதினான்கு ஆண்டுகள் என்பதைப் பதினான்கு பகற்பொழுதாகப் போக்கி சுகமாகத் திரும்புவேன் எனப் பற்பல வகையிலும் போதல் உறுதி யென்பதை யுணருமாறு கூறுதல் கேட்ட அன்னை மைந்தனது மனவுறுதி மாற்றமுடியா தென்பதை யுணர்ந்து, இவனுக்கு இக்கட்டளையிட்ட புவனேசுவரனிடம் சென்றாவது நமஸ்கரித்து இரந்து இவன் தவசியாகி வனம் புகுதாதபடி தடுக்கின்றேன் எனத் தன்னுள் கருதி அரண்மனை நீங்கி அரசர்க்கரசன் அவசமுற்றுத் துன்பச் சேக்கையிற்கிடக்கும் கைகேயியின் கிருகத்தை நாடிச் செல்கிறார். அவ்விறுதியிலும் கூட நாயகனைச் சினந்தோ, வெறுத்தோ வன்சொல் புகன்றாரில்லை. இவ்வாறு கட்டளையளித்த கணவனிடம் மனைவி யென்னும் உரிமைபற்றி வாதாடியாவது உத்திரவை மாற்றும்படி முயல்வேன் என்றும் எண்ணியதாகக் கவி கூறினாரில்லை. ''புவனிநாதனைத் தொழுது, மைந்தன் அரசுரிமையின்றி நாட்டில் வசிக்கும் படியாவது வேண்டி வரம் பெறுகிறேன்'' என்றே எண்ணிச் செல்கின்றார்.

 

இதை எண்ணும்போது வன்மையை அன்பினாலேயே வெல்லலாம் அல்லது எதிர்வாதினால் வெல்ல முடியாதென நமது கலியுக வரதராகிய காந்தியடிகள் போதிக்கும்
உண்மை உபதேசமே யென்று நன்கு புலனாகின்றதன்றோ? அறிவுடைய மாந்தர்க்கெல்லாம் சகிப்புத்தன்மையே ஆண்மையாகும், இன்சொல்லே எறுழ்வலி ஆயுதமாகும், அன்பே உடல் வன்மையாகும். இவ்வினத்திற் சேர்ந்தவர் நமது கௌஸல்யா தேவியா ரென்பது இவர் நடையினால் நன்கு விளங்குகின்றது. தசம் என்பது வடமொழியில் தருப்பையைக் குறிக்கும். அந்தத் தருப்பையின் நுனி அதிக கூரியதாயிருக்கும். அதையொத்த புத்திகூர்மையை யுடையவர் அரசியார் என்பது அவரது கௌஸலை என்னும் பெயரிலேயே அமைந்த ஓர் நுண் பொருளுமாகும். கோஸல தேசத்தாசி யென்பது தெளிந்த பொருளாகும். பிந்தியதை விட் முந்திய பொருளே மிகமிகப் பொருத்தமென அறிஞர் இன்புறுவர்.

 

இனி இவ்வாறு மாற்றாளின் மாளிகையை யடைந்து உள்ளே சென்று அரசர்க்கரசன் உயிரின்றி மாண்டார் போல உணர்விழந்து கிடப்பதைக் கண்டார். கண்டதும் மைந்தனைப் பற்றித் தாம் எண்ணிவந்த எண்ணமெல்லாம் மறைந்தது. உயிர் நீங்கிய போதுரது உடல் எவ்வாறு கீழே விழுமோ, அவ்வாறு அரசர்க் கருகில் வீழ்ந்து தம்மை மறந்தார். எதிர்பாராது எதிர்பாராது கண்ட இவ்விபத்திற்குக் காரணம் உணரமுடியாமல் அரசர் உயிர் இழந்தார் என்றே துணிந்து வாய் திறந்து ஆற்றாது கதறு மனமுடைந்து வாய் விட்டலறும் பெரிய மகிஷியின் அழுகை யொலியைக் கேட்ட அரசவையின் கண் இருந்த வசிஷ்ட முனிவர் முதலான அரசர் குழாங்களும் துணுக்குற்று விடயம் யாதென்றுணரும் பொருட்டு கைகேயியின் மாளிகையுற்றனர். குலகுருவாகிய முனிவர் கூர்ந்து நோக்கி, உயிர் உண்டென்றுணர்ந்து நினைவிழந்த காரணம் உணர முற்படுகின்றார். பின்னர் கைகேபியை வசிஷ்டர் வினவ உண்மை வெளியாகிறது. மாற்றாள் வரம் பெற்ற விவரமும், அரசன் புத்திரன் பிரிவெண்ணி அவசமுற்றமையும் குறிப்பால் உணர்ந்து கொள்கின்றார். அவ்வாறுணர்ந்த பிறகும், கடுமொழி ஒன்றும் கூறினாரில்லை. மாற்றாளை நோக்கி ஏதும் சினந்தாரில்லை. நாயகன் உயிர்பெற் றெழுந்தால் போதுமென நாட்டத்துடன் தேறுதல் உண்டாகும்படி,

 

"மகனைத் திரிவா னென்றாள். மைந்தன் வனம்புகாமல் மீள்வான்
என்று புகல்கின்றார். ஆனால் அவ்வெண்ணத்துடன் அரசன் சத்தியம் தவறினான் என்று உலகம் கூறுமே என்னும் அச்சமும் அவர் உள்ளத் தெழுந்த" தென்றார் கவியரசர்.
என்னே, உலகம் பழிக்குமே யென்னும் அச்சம் புதல்வன் பிரிவினால் விளையும் துன்பத்தைக்காட்டிலும் மேலோங்கி நின்றது. குடிகள் பொருட்டு அரசரேயன்றி அரசர்பொருட்டுக் குடிகள் அல்ல வென்பதை அந்தப்புர வாஸத்திலிருந்த ஓர் அரசியார் நினைவுறுகின்றார் எனில் அஞ்ஞான்று அரசநீதி எத்தகையதா யிருக்குமென்பதை விளக்கவும் வேண்டுமோ? பெண்களால் குடும்பக் கலகம் நிகழ்வது கண்கூடென்பர். இச்சொல் நிகழகாலத்து நிலைதான். தான் என்னும் முனைப்பறுக்கும் அடக்கமான பயிற்சியும், பேரறிவளிக்கும் கல்வியும், ஒழுக்கப்பற்றும் உள்ள பெண்களிடைக்கலாம் எவ்வாறு விளையும் என்பதற்கு இவர் பொறையே சான்றாகும்.

 

நமது மாதரசியார் கணவன் நிலையையும், மைந்தன் உறுதியையும், அரசர்க்கரசனுக்குப் பூர்வம் ஏற்பட்டதாகிய முனிசாப வரலாற்றையும் மனதிற்றெளிய வுணர்ந்த பின்பு ஊழின் தடுப்பரிய பயனை யெண்ணிப்பட்ட துயரத்தினைக் கவியரசர் ஆயிரம் ஆயிரம் நாவுகளாலும் அளவிட முடியாமை தோன்ற, ஆ! ஆ! உயர் கோசலையாம் அன்னம் என்னுற்றனளே என்று ஆற்றா துரைக்கின்றார்.

 

எண்ணத்தை எழுத்தில் சித்திரித்துக்காட்ட வல்லவராய கம்பநாடரே இவ்வாறுரைத்தாரெனில் அரசியார் நிலையை எவரே விளக்கவல்லார்?

 

மகவாசை எவ்வாசையினும் தலை சிறந்தது. அவ்வாறே மாங்கல்ய ஆசையும் மகளிர்க்குத் தலை சிறந்ததாகும். இவ்விரண்டாசைகளையும் அரசியாரிடம் ஸத்தியம் காப்பதில் எழுந்த உறுதி வென்றதென்பது இவ்விடத்தில் நன்றாக விளங்குகின்றது. என்னே பண்டைக்காலத்து இந்திய மாதர்களின் தூய்மையுள்ளத்தில் தோய்ந்து கிடந்த தியாக புத்தி. வாழ்க்கைத் துணையாக மாதரை தெய்வப் புலவர் கூறியதன் நுட்பம் இஃதேயன்றோ? பண்டை நூல்களில் காணப்படும் சரிதவரலாறுகளில் அபிப்பிராய பேதங்கள் இஞ்ஞான்று வானம்
அளாவச் செழித்தோங்கி வருவதை நாம் மறக்கவில்லை. எல்லாச் சரித வரலாறுகளிலும் இவ்விடர்ப்பாடு இயல்பல்பே. நூல் ஏற்பட்ட காலம் அக்கால மக்களின் கொள்கை இவைகளுக்கேற்ப எழுந்த நூல்களை எத்தனை யெத்தனையோ மாறுபட்ட
கொள்கைகளும், உணர்ச்சிகளும் வளர்ச்சியுறும் தற்கால நாகரிகர் எதிர்ப்பதும் ஆராய்ச்சித் துறையில் புதிதன்று. ஆனால் நம்பின்னால் வரும் சந்ததியர்களும் நமது தற்கால உணர்ச்சிகளை இகழ்ந்து மேற்செல்வார்கள் என்பது நிச்சயம். உலகம் என்பது நிலையில்லாதது என்னும் கருத்தினை யுள்ளடக்கிக் கொண்டிருப்பதற்கு இவ்வேறுபாடுகளே சான்றாகும். எனினும் நாம் வியந்து போற்றுவதெல்லாம் பண்டைக்கால மாதர்களின் பதிபக்தி, அல்லது தாம்பத்தியச் சிறப்பு என்பதையேயாகும். இந்நாட்டு மாதர்கள் நாயகர் கொள்கைக்குத் துணைபுரிவதில் கொண்டிருந்த உறுதியை எவ்வாறு பாராட்டலாம்.

 

சமீபத்தில் அறிவிற் சிறந்த ஆங்கிலப் பெரியாராகிய லாயிட் ஜார்ஜ் என்பவர் "நரகத்திற்கே செல்வதாயினும் உரிமை வேண்டும். பிறர் ஆட்சியில் சுவர்க்கம் வருவதெனினும் சிறந்ததாகாது'' எனக் கூறிய பொனனுரைக் கிணங்க இல்வாழ்க்கையில் வேற்றுமை யெண்ணங்களால் இன்பம் எய்துவதை விட ஒற்றுமையினால் துன்பம் வரினும் பொறுப்பது மிக மிகச் சிறந்த தென்பதே எமது துணியாகும். இதை நிரூபிப்பதே கௌஸல்யா மகாராணியாரின் வரலாற்றின் சிறப்பாகும். இனி இக் கற்புக்கடவுளின் அறிவின் பெருமையைக் கவியாசர் குகப்படலத்தில் சிறப்புறத் தீட்டுகிறார்.

 

குருவாகிய வசிஷ்ட முனிவரால் பரதன் கேகய நாட்டினின்றும் அயோத்தியை யடைந்து நிகழ்ச்சிகளை யுணர்ந்து காலாக்கினி ருத்திரனைப் போல் கடுஞ்சினம் கொண்டு தனது உள்ளத் தூய்மையைப் பெரியன்னைக் குணர்த்தி ஈன்ற கொடியாளை வெறுத்துத் தனக்குத் தாயினால் விளைந்த மாற்றொணாத் துன்பத்தினையும் பழியினையும் எண்ணி எண்ணி மனமறுகி இது தீர்த்தன் முன்னோனைத் தொடர்ந்து சென்று கண்டு வணங்கி , மன்றாடிக் குறையிரந்து மனதைத் திருப்பி அழைத்து வந் நெடுநகர்க் கரசனாக்கி முடிபுனை வித்திடலே தக்கதென முடிவுசெய்து, இதனை நகரத்தாருணரப் பறைசாற்று வித்துத் தமையன் அணிந்ததாகிய மாவுரியையும் சடை முடியையும் தானும் தாங்கிப் புறப்பட்டுச் சென்று கங்கைக் கரையினையடைகின்றான். ஆண்டுத் தன் குல முதல்வனாகிய இராமபிரானிடம் உண்மையுயிர் நேயம் பூண்ட குகன் என்னும் வேடர் தலைவனால் முன்னர் வெறுக்கப்பட்டுப் பின்னர் தோழமை கொண்டு நகர மாந்தர்களையும் சேனைத்திரள்களையும் ஆறு கடப்பித்துத் தானும் தம்பியும் தாய்மார்களுடன் தனித்தோணியில் ஏறுகின்றான். அது போழ்து குகன் தன துள்ளுறை யுயிர்நிலையாகக் கொண்ட இராமனின் தெய்வத் தாயின் திருவுருவைத் தெரிசித்த வளவில் இவர் யாவர்? எனப் பரதனை வினவுகின்றார்.

 

பரதனும் கைகேசி உள்ளத்தில் தைக்குமாறு புருஷபாக்கியத்திலும் புத்திர பாக்கியத்திலும் தலைமைப் பேற்றிலும் தனக்கிணை பிறரில்லாத பெரியார் என விடையளிக்கின்றான்.

 

இதைக் கேட்டதும் ஆற்றாப் பெருந்துயரினை அடக்க முடியாத குகன் அவனது கள்ளமறியா வுள்ளத்தியல்பிற்கேற்ப கௌஸல்யா தேவியின் திருவடிகளில் விழுந்து வாய் திறந்தரற்றுகின்றான். அதுகண்ட அன்னை மனம் கரைந்து பரதனை நோக்கி,


"என்றதுமே யடியின்மிசை நெடிது

வீழ்ந்தழுவானை யிவன் யார்?"


என்று கன்று பிரிகராவின் துயருடைய கொடி வினவியதாகக் கவி கூறுகின்றார். இதுவே ஈண்டு சிந்தித்து வந்திக்க வேண்டுவதாகும். என்னை? அரசபத்தினி தம் பாதங்களில் வீழ்ந்து புலம்பும் அவ்வனசானை அப்பா நீ யார்? என வினவினாரில்லை. காரணம் மிக மிக நுட்பமான தொன்றாம். முதலாவது அந்தப்புரவாசம் செய்யும் அரசகுல மாதர்கள் பரபுருஷர்களுடன் பேசுதல் இயற்கை விரோதம். வயதினால் மூப்படைந்தும் துன்பத்தினால் உள்ளுடைந்தும், அந்தப்புரத்தினின்று காலவன்மையினால் காடு நோக்கி மைந்தனைக் காணப்போந்த இவர் தமது உயர் குடிப்பிறப்பிற்கும் கற்பின் கடமைக்கும் உள்ளடங்கிக் குகனை நீ யாரென்று வினவாமல் தமது உண்மைப் புதல்வனாகிய பரதனை முக நோக்கி இவன் யார்? என வினவியதாகக் கொள்ளுதல் ஒரு முறை.

 

இஃதன்றித் தம்பால் துயர் காட்டும் நிகழ்ச்சி தமது மைந்தன் பிரிவையும் மன்னன் சாய்வையும் பற்றியதாகவேயிருக்கும் என்பது தம்முள் தெளிவேயாயினும், தாமே நேருக்கு நேராக துக்கோபசாந்தி செய்யின், இவ்விரு மகத்தான துக்கங்களும் ஒருங்கே நிகழ்வதற்குத் தான் கைகேயின் கர்ப்பத்தில் பிறந்ததே காரணமெனப் பன்முறையும் புகன்று தன்னைத்தானே வெறுத்து மனம் கவலும் குணக்குன்றால் அப்பரதனை அந்நியனாக்கித் தாமே குகனுடன் ஆறுதல் புகலத் தொடங்குவது பின்னும் பரதனைத் துன்புறுத்தும் குறிப்பாகும் என்னும் மதிநுட்பத்தினால் பரதனை நோக்கி வினவினார் என்று கொள்வது மற்றொரு முறை. இம்முறை முந்திய கருத்தினை விட மிக விழுமியதாகும். கௌஸல்யா மகாராணியாரின் எத்துணை இடரிலும் பதறாத, முறைவழாத, புண்பட மொழிய விரும்பாத உயரிய பண்புகளைக் கவியாசர் தீட்டியிருக்கும் திறமைதான் என்னே!

 

இவ்விரண்டு மன்றி இன்னொரு பொருளும் அடங்கி நிற்கின்றது. அதாபது நாடோ தலைவனிழந்து அநாயகமாக நிற்கின்றது. பரதனோ தாய்பெற்றவரம் தவறாதலின் அவ்வாசினை ஏற்க மறுக்கின்றான். இந்நிலையில் மக்கள் குறைபாடுகளைக் கேட்கும் கடமை எவர்பாலில் உளது? மூத்த பட்டத்தரசியாகிய கௌஸல்யா தேவியிடமே அரசியல் அமைப்பு விதிப்படி அமைந்துளதாதலினாலும், அவ்வுரிமையைத் தமதாய்ப் பாவித்துத் தாமே உசாவுதல் பரதனை அதினின்றும் தாமே விலக்கியதுமாகும். அன்றியும் அப்படிச் செய்வது சக்கரவர்த்தி கொடுத்த வரத்தின் பயனை யவமதித்ததுவுமாகும். ஆதலின் தன்னாணையை மறாமல் புதல்வன் அக்கடமையை ஏற்குமாறு செய்தல் நலமெனும் நுட்பத்தினையும் இராணியார் பின்பற்றினார் என்பதுவும் பொருந்தும். இவ்வாறு கேட்ட தனது தாய்க்கு குகன் தன் முன்னோனுடன் கொண்ட ஆழ்ந்த தூய நட்புரிமையை விளக்கிப் பரதன் சிறப்புற உணர்த்துகின்றான். உடனே பேரரசியார் குகனை நேரில் விளக்கி நைவீர் அலீர் மைந்தீர் இனித்துயரால் என்று மக்களில் ஒருவனாக ஏற்றமை தோன்ற விளித்து, பாதனையும் சத்துருக்கனையும் கூட்டி வருந்தாதீர்கள் மைந்தர்களே என ஆற்றுகின்றார். என்னே தேவியாரின் சொல்வன்மை அன்பின் அழகு? தன் செல்வப் புதல்வன் இராமனால் சகோதானாகக் கொள்ளப்பட்டவன் என்ற மாத்திரத்திலேயே தானே அதில் முரணாது ஈடுபடும் பண்புதான் என்னே தாய்த் தன்மை யென்பது இதுவன்றோ? அற்பமான புதிய மாறுதல் கட்கும் பெண்கள் உள்ளம் அஞ்சிப் பின்வாங்குவ தியல்பு. இம்மகாராணியார் அத்தகைய பேதமையுமின்றி விரிந்த அன்பும் பரந்த நோக்கமும் பிறப்பினாலோ செல்வத்தினாலோ உயர்வு தாழ்வென்று கருதும் அறியாமையைவென்று அன்பு ஒன்றே எல்லாவற்றிற்கும் உயிர்நிலை யென்று உட்கொண்ட பெருந்தன்மை நன்கு விளங்குகின்றது.

 

இம்மட்டோ அலகில்லாத பல ஆயிரம் ஆண்டுகள் மகவின்றி வருந்திக்கலைக் கோட்டு முனிபுங்கவரால் புத்திர காமேஷ்டி யாகம் புரிந்து அரிதினு மரிதாக நான்கு புத்திரர்களை பெறவேண்டியிருந்தது. இராம லட்சுமணர்களாகிய ஸத்தியம் காக்கும் வீரப்புதல்வர்கள் அரச சம்பத்தைத் தியாகம் செய்ததின் மூலம் ஐந்தாவது புத்திரனாகக் குகனையும் பெற்றேன். இப்பெரிய புத்திரலாபத்திற்கு ஏற்பட்ட சிரம காரியம் பெரிதன்று. ஆகலின் வாயுரிமையோடு மட்டில் சகோதரர் என்றிராமல் மன்னனுக் குதயம் செய்த மக்கள் நால்வருடன் ஐந்தாவது புதல்வனாகக் கருத்தொன்றுபட்டு இவ்வகன்ற புவியை நீடூழிகாலம் ஆள்வீராக, என்று மைந்தன் எண்ணத்திற்கும் தமது எண்ணத்திற்கும் உள்ள அபேத நிலையை உறுதிப்படுத்துகின்றார். மைந்தன் தன் உரிமைத் தம்பியாக மட்டில் கொண்டான். அன்னையோ, அப்படிக் கொண்டதல்லாமல் அரசுரிமையையும் பெறும்படி கூறுகின்றார். உத்தப் பெண்களின் உள்ளத்தின் மாசற்ற அன்புக்கு ஈடுகாட்ட உலகில் வேறு சான்றுளதோ? அறிவு பெற இடமின்றி மாக்கள் போல் கட்டுண்டு கிடக்கும் சிற்சில பெண்கள் பொருட்பற்றே உயிர் நிலையெனக் கருதுகின்றனர். இந்நிலை ஆண் மக்கள் இனத்திலும் மிக மிகக் காணலாம்: எனினும் பிறர்க்குதவுவதில் பொதுவாகப் பெண்கள் மனம் கொள்ளார் என்று ஆடவர் பலர் கூறுவது சர்வ சாதாரணம். கம்பர் இத்தவறாகிய கருத்தினை இராணியாரின் குண நலங்களை விளக்கும் முகத்தால் வெட்டித் தள்ளுகின்றார் என்றே மகிழ்ச்சி யுறுவோமாக. பின்னர் நமது கவியரசர் இராணியாரை மீட்சிப் படலத்தில் தான் சந்திக்கின்றார்.

 

குறித்த பதினான்காவது ஆண்டின் இறுதி நாள் போந்தது. நந்திக்கிராமம் எனும் புறப்பதியில் தமையனாரின் பாதுகைகளைத் தலைமேற் புனைந்து நீரறா தொழுகும் கண்களையும் நிலைபெறா துளையும் கருத்தினையும் கொண்டு மரவுரிபோல் உலர்ந்த யாக்கையுடன் தென்றிசை நோக்கி நோக்கித் தேம்பி நிற்கும் பரதன் அண்ணல் தனக்களித்த வாக்குறுதிப்படி போதரவில்லை யெனவே முடிவு கொண்டு தான் அவர் பால் மொழிந்த சூளின் படி அனல் மூட்டி அதில் மூழ்குவதென உறுதி கொண்டு வேண்டுவன அமைத்திட்டான்.

 

இதனை அயோத்திமாநகரில் அந்தப்புரத்தில் வசித்த கொஸக்யாராணியார் கேட்கன்றார் அதனைக் கவி.


''அப்பொழுதின் இவ்வுரை சென்ற யோத்தியினில் இசைதலுமே அரியையீன்ற
ஒப்பெழுத வொண்ணாத கற்புடையாள் வயிறுபுடைத்தல மந்தேங்கி
இப்பொழுதே யுலகிறக்கும் யாக்கையினை முடித்தொழிந்தால் மகனேயென்னா
வெப்பெழுதினாலன்ன மெலிவுடையாள் கடிதோடி விரைந்து வந்தாள் "

 

என்று கூறுகின்றார். என்னே கொடுந்துயர்! இராமன் வனம் புகுந்த காலையில் இவ்வன்னையார் தொடர்ந்து புறம் போந்து கதறினாரில்லை. பின்னர் பஞ்சவடியில் பெறலரும் புதல்வனைப் பிரிந்து நகர் வரவும் முரண்பட்டாரில்லை. சக்கரவர்த்தி விண்ணாடாளச் சென்ற பின்னரும் தானும் மைந்தனுடன் வனத்தில் வாழ்வேன் என வற்புறுத்தி யிருக்கலாம். அவ்வாறு செய்யின் நீதிக்கோர் நிலையமாகிய பரதன் உயிர் வாழத் துணியான் என்றஞ்சியே அத்தெய்வத்தாய் அயோத்தி போந்து இன்பிலா வாழ்நாள் கழித்தனர் போலும். இவ்வணங்கு எம் மைந்தன் பொருட்டு கடலனைய கவலையை உள்ளத்தி லடக்கிப் புவியனைய பொறை தாங்கி இதுகாறும் உயிர் சுமந்தனரோ அம்மாண்புறு புதல்வன் இன்று தீக்குளிக்கத் துணிவு கூர்ந்தான் எனக் கேட்டதும், தமது பதவி, தகுதி, முறைமை எல்லாவற்றையும் மறந்து இருகரங்களினாலும் வயிறு புடைத்து வாய்விட்டாற்றி மகனே நீ சரீரத்தை அனல்வாய்ப் படுத்தினால் இவ்வுலகிலுள்ள எல்லாவுயிரும் மாண்டு படும். உன்னை யிழந்து உலகம் உய்யாது உய்யாது எனக் கதறித் தமது பெண்மை, முதுமை யிரண்டிற்கும் ஒவ்வாதபடி நடந்து வராமல் எரியமைத்த மயானத்தை யடைய விரைந்தோடி வந்தார்'' என்று கவி எடுத்துக் காட்டுகிறார். பன்னிரண்டு திங்கள் சுமந்து பெற்ற ஆடவரும் பெண்மையை யவாவும் தோளினனாகிய திருமகனை நாடிறக்கும்படி அரசர் கட்-ளை யெனக் கூறக் கேட்டபோது “தன்மகன் வைதம் ஆலிலையன்ன வயிற்றினைப் பெய் தளிர்க் கையினாற் பிசையும்"
எனத் துன்பதைச் சகித்து அடக்க முயன்ற பான்மையில் வருணித்த சர் பரதன நிலை கேட்டவுடன் வயிறு புடைத்தல மந்தேங்கி எனக் கூறிய தன் பேதத்தை நுண்ணறிவுடையோர் நோக்குவாராயின் இராம பரதாகட்குள் தர்க்க விலக்கணப்படி பரதனது நடையே சிறந்த தென்பது புலனாகும். இல்லையென்று சக்கரவர்த்தியினால் மறுக்கப்பட்ட அரசுரிமையையும் வரம்பில் போகத்தையும் கவலாது துறந்தேகினான் இராமன். தன்னை நாடிவந்த அந்த அரசுரிமைச் செல்வத்தினை நீதிக்கு ஒவ்வாததெனக்கண்டு உதைத்துத் தள்ளினான் பரதன். தந்தை தவறாய விதியியற்றினும் தாழ்மையுடன் ஏற்க விழைந்தான் இராமன். பிரகலாதனைப்போல் தந்தை சொல்லி யிருந்தாலும் குரவன்றி யிருந்தாலும் தன்னைப் படைத்த கடவுளே கட்டளை வழங்கி யிருந்தாலும் தன்மனதிற்கு அநீதி யெனப்பட்ட முறையை ஏற்க மனமொழி மெய்களாலும் மறுத்த உத்தம ஸத்தியாக்கிரகி பரதன்.

 

இது குறிப்பிற்கொண்டே குகன் ஆற்றைக் கடக்கையில் 'ஆயிரம் இராமர் நின்கேள் ஆவரோ தெரியினம்மா" என்றும், "நும்மரபினோர் புகழ்கள் எல்லாம் உன் புகழாக்கிக்கொண்டாய்'' எனவும் மனம் திறந்து கூறினான் எனில் பிறசான்றும் வேண்டுமோ? குகன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது இராமபக்தி. பரதனைக் கண்ட பிறகு பரதபக்தியே தலைசிறந்த தாயிற்று.

 

இந்த கௌஸல்யா தேவியாரே முதற்கண் இராமனிடம் "உன்னைவிடப் பரதன் மும்மையின் நிறைகுணத்தவன்" எனப் புகன்றதும் இத்தகைச் சிறப்பு வாய்ந்த - நீதிக்கு உயிர் நிலையாகிய பரதன் தீக்குளிப்பான் எனக் கேட்ட போது போறிவுடையதாய ஆற்றாது கடிதோடி வந்தார் என்பதில் யாது வியப்பு? கூட மைந்தா, நீயுயிர்விடில் என்று உரையாமல் நீ யாக்கையினை ஒழித்தால் என்று கூறும் நுட்பம் கௌஸல்யா தேவியாரின் (ஆன்மா அழிவற்றதென்றும், சரீரமே அழியக் கூடியதென்றும் அறிஞர்கண்ட ஆன்ம
போதத்தின் தெளிவும் தெற்றென படிப்போர்க்கு எடுத்துக்காட்டுகின்றது. சக்கரவர்த்தி பிரிவினாலும் இராமன் பிரிவினாலும் இறவாத உலகம் நீ பிரிந்தால் இறக்கும் என்று கூறுகின்றார். நீதி யழிந்தால் உலகெவ்வாறு நிலைநிற்கும் என்பதே இதன் உள்ளுறை.


''மந்திரியர் தந்திரியர் வளநகரத்தவர் மறையோர் மற்றும் சுற்றச்

சுந்தரியர் எனைப்பலரும் கைதலையிற் பெய்திரங்கித் தொடர்ந்து செல்ல

இந்திரனே முதலாய இமையவருமுனி வாரும் இறைஞ்சி யேத்த
அந்தரமங்கையர் வணங்க அழுதரற்றிப் பரதனை வர் தடைந்தார் அன்றே"

 

எனக் கவி அங்குள்ள நிலையை எழுத்தோவியமாக வரைகின்றார். பின்னர்


"எரியமைக்கு மயானத்தை யெய்து கின்ற காதலனை இடையேவந்து
விரியமைத்த நெடுவேணி புறத்தசைந்து வீழ்ந்தசைய மேனிதள்ளச்
சொரியமைப்ப தரிதாய மழைக்கண்ணாள் தொடருதலும் துணுக்கம் எய்தாப்
பரிவமைத்த திருமனத்தான் அடிதொழுதான் அவள் புகுந்து பற்றிக் கொண்டாள்"

 

என்பதனால் தன்னால் தன் தாய்க்கு நேர்ந்தது யாம் கண்டபோது பரதன் உள்ளந் திடுக்கிட்டான் என வறிகிறோம். என், இவர்க்கு யாது விடை பகர்வது எவ்வாறு ஆற்றுவ தென்தே துணுக்கத்திற்குக் காரணமாகலாம். கண்டதும் திருவடிகளில் வீழ்ந்து பரதன் வணங்குகின்றான். தாயாகிய கவுசலை கெட்டியாகப் பணிந்த மைந்தனைப் பற்றிக்கொண்டு கல்லும் கரையும்படி சில உரைகள் கூறுகின்றார்.


''மன் இழைத்தது மைந்தன் இழைத்ததும்
முன்னிழைத்த விதியின் முயற்சியால்
பின்னிழைத்ததும் எண்ணில் அப்பெற்றியால்
என்னிழைத்தனை என்மகனே என்றார்"

 

ஈண்டு கைகேயி மகனன்று என்மகன் என வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.


நீயிது எண்ணினையேல் நெடுநாடெரி
பாயுமன்னரும் சேனையும் பாயுமால்
தாயர் எம்மளவன்று தனியறம்
தீயின் வீழம் உலகுந்திரியுமால்

 

நகரமாந்தர் சேனாசமூகம் உள்பட தாய்மார்களாகிய எங்களோடு இவ்வழிவு முடிவுறாது. ஐயனே தனி அறம் தீயின் விழும் என்கின்றார். இஃதன்றோ சிறப்பு! தோன்றிய உயிர்க்குலம் அனைத்தும் மடிந்தொழிவதும் பெரிதல்ல. அறக்கடவுள் அன்ன நீயே அறத்தை எரியில் வீழ்த்தலாகுமோ என உசாவுகின்றார். பின்னரும் தொடர்ந்து,

 

தரும நீதியின் தற்பயனாவது
கருமமேயன்றிக் கண்டிலம் கண்களால்
அருமை யொன்றும் உணர்ந்திலை யையரின்
பெருமை யூழி திரியினும் பேருமோ.                          
எனவும்,


"எண்ணில் கோடி பிராமர்கள் என்னினும்
அண்ணல் நின்னருளுக் கருகாவரோ
புண்ணியம் எனும் நின்னுயிர் போயினால்
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ''
                    

 

எனவும் பரதனது அருமையையும் பெருமையையும் உணர்த்துகின்றார்.

 

குகன் ஆயிரம் இராமர் நின்கேள் ஆவரோ?

 

எனப் புகன்றான். நமது தேவியாராகிய இராமனை யீன்ற அன்னையார் கோடியிராமர் கூடினும் நினது அருட்பெருங்குணத்திற்கு இணையாகார்
எனப்பெருக்கிக் கூறுகின்றார். உதவாக்கரையான புதல்வனைப் பெற்றதாயும் தன் மகவே சிறந்ததெனக் கருதுதல் உலகியல்பு. உத்தமகுணத்திற் சிறந்த இராமனையே பெற்றெடுத்த இத்தவத்தாயோ, மாற்றாள் மைந்தனாகிய பரதனைக்கோடிபங்கு சிறந்தவனாக மதிக்கின்றார். இத்தகைய நியாயபுத்தியுடைய சக்கிரவர்த்தினியின் குணச்சிறப்பை பொன்னுரைகளால் தான் புகழ முடியுமோ, பெண்மைத் தெய்வம் என்பது ஓர் சிறப்போ, தெய்வங்களிடனித்தும் இதற்கிணையான குணம் இருக்குமோ, என்பதும் ஐயமே' இடையில் புண்ணியம் எனும் நின்னுயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வீயுமால் என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.

 

புண்ணியம் என்னும் புனிதப் பொருள் இறந்தால் பின்னர் மூவுலகங்கள் தானும் ஏது? உலகுயிர்கள் தான் உவ்வாறு நிலைபெறும்? என்பதில் எத்துணையோ விரிவான பொருள்கள் செறிந்து கிடக்கின்றன. விரிக்கில் பெருகும். இவ்வளவையும் கூறிய பின் இவ்வனைத்தையும் நீ ஏற்காவிடினும் இன்றொரு பொழுது தாமதி. உன் முன் பிறந்த இராமன் ஒருபோதும் சொல்தவறான். நாளையாவது தவறாமல் வந்து சேருவான். என்று தடுத்துரைக்கின்றார். பின்னர் பாதன் விடையும் அவனது தடுக்கொணா உறுதியும், அதுமான் வரவும் துன்பமனைத்தும் தீயில் குளிக்க இன்பம் தளிர்த்ததும் வாசகர்கள் அறிந்ததேயாகும். எடுத்துக் கொண்ட மாதரசியாரின் பெருமையை முற்றும் அளந்து காட்டும் வன்மை இன்மையால் இம்மட்டோடு இதனை முடிக்கின்றேன்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ -

ஜனவரி, பிப்ரவரி ௴

 

 

 

No comments:

Post a Comment