Monday, August 31, 2020

 

சன்மார்க்க சற்போத ஞானக் கும்மி


காப்பு.

 

1.     அன்பின் வழிநின் றாசை யருகவிட்
டார்வமுடன் மாந்த ரீசன்பதமெய்த
இன்பந்தரு ஞானக் கும்மியை யான்பாட
எந்தை பராபரன் காப்பாமே.

 

2.     சித்தந்திருத்திச் சிவத்தினை நாடிடிற்
சேருந்திருவருள் காரணமாய் நாமு
மித்தரை மீதினி லெத்தனை யோதீமை
யின்றி யிருப்போமே ஞானப்பெண்ணே.

 

3.     ஓயாத அன்புட னீசனை நாந்தொழ
லுண்மையாம் பாதைமற் றுள்ளதெல்லாம்.
மாயையிலெங்களை விட்டு வருத்தி
மயங்கிடச் செய்யுமே ஞானப்பெண்ணே.


4.     எம்பெருமான் றன்னை எப்பொழுதும் நாங்க

ளேத்தித் தொழுதிடி லெப்பெரும் நன்மையும்

நம்பியிருக்கலாம் நாடாதி ருந்திடில்

நாமுய்த லுண்டோசொல் ஞானப்பெண்ணே.

 

5.     எல்லா உயிருக்கு மேற்றபதவியை

எப்போதுந் தப்பாம லீந்திடுமீசனைச்

சொல்லுமனங்காயம் மூன்றாலுஞ் சோர்வின்றித்

தோத்திரஞ் செய்வோமே ஞானப்பெண்ணே.

 

6.     சிந்தை கலங்கிச் சிதைவுற்று வாடிடும்

சேய்களாமெங்களைச் சீர்மையுறச் செய்ய

எந்தை பிரானைப்போல் ஏற்றகதியினை

எங்கு நாம் காண்பது ஞானப்பெண்ணே.

 

7.     உற்றாரயலாரோ டூராரெமை நாடல்

உண்மையாயெங்களி லுள்ள அன் பாலல்ல

மற்றும் பல்லூதியம் பற்றவேயாதலால்

வாடி மயங்காதே ஞானப்பெண்ணே.

 

8.     சிவாய நமவென்று சிந்தித்திருந்திடிற்
சேராதோர் கஷ்டமென் றே தெரிந்தோ
ரபாயத்தை நீக்கற் கருமருந்தீதென்
றறைந்தன ரல்லவோ ஞானப்பெண்ணே.

 

9.     பொய்யாமுலகைப் பொருளென நாமெண்ணிப்
பொன் போலும் போதனையெல்லாம் புறத்தில் விட்
டுய்யும் வழியின்றி யோடித்திரிவதி
லூதிய மென்னதான் ஞானப்பெண்ணே

 

10.    பஞ்சாட்சரத்தைப் பயபக்தி யோடு நாம்
பன்முறை மேலோர் பகர்ந்த முறைப்படி
நெஞ்சார வெப்போதும் பாராயணஞ் செய்தல்
நேர்வழி யென்றறி ஞானப்பெண்ணே.

 

11.    நல்ல வழியினை ஞானிகளெங்கட்கு
நன்மை யுறும்படி நாட்டியிருக்கவும்
பொல்லாத பாதையிற் புந்தி செலுத்திடல்
புத்தியோ சொல்லடி ஞானப்பெண்ணே.

 

12.    பற்றெல்லா மற்றவர் பாவங்களொன்றிலும்
பற்றாதிருப்பதைப் பாரோரனைவரும்
முற்றாயறிந்தும்பின் மூன்றையும் பற்றுதல்
மூடமதல்லவோ ஞானப்பெண்ணே.

 

13.    அன்பு நிறைந்த அருணகிரிநாதர்
ஆரும் புகழ்ந்திடப் பட்டினத்தாருடன்
இன்ப நிறைதாயு மானவர் கீதங்கள்
எப்போதும் பாடுவோம் ஞானப்பெண்ணே.

 

14.    மெய்யாந்துறவினை மேவியே நிற்பவர்
மேலாம்பதவியை மேன்மையுடன் பெறல்
பொய்யல்லவென்பதைப் போதித்துப் போந்தனர்
போதனை யாளரும் ஞானப்பெண்ணே.

 

15.    தெய்வபயத்தோடு தேசாபிமானமும்
சேர்ந்திடி லெங்கட்குச் சேருமே சந்தோஷம்
உய்வதை யெண்ணா வுலுத்தர்களென்று
முலைவது நிச்சயம் ஞானப்பெண்ணே.



16.    சைவசமயத்தைச் சாருதற்கேவுவோர்
தாரணி மீதினிற் றம்மை யொறுத்தலால்
மெய்வரம் பெற்றுப்பின் மேலாகும் முத்தியை
மேவினரல்லவோ ஞானப்பெண்ணே.

 

17.    இன்றைக்கிருந்தாரை இவ்வுலகில் நாங்கள்
இன்பமுறநாளை யிங்கேதானில்லாது
பொன்றுதல் கண்டும் பின் பொய்யாமுலகினைப்
போற்றுதல் புத்தியோ ஞானப்பெண்ணே.

 

18.    சாதிபணத்திலே தம்மிலும் மிக்கார்கள்
தாரணிமீதிலே யாருந்தானில்லையென்
றோதித்திரிபவ ருய்யும் வழியினை
ஓராரே பாவிகள் ஞானப்பெண்ணே.

 

19.    உற்றாரும் மற்றாரும் சந்தையிற் கூட்டமென்
நூன்றியுணருதற் கொவ்வொரு நாளுமே
கற்றறிவுற்றவ ரோடுமற் றுள்ளவர்
காற்றாய்ப்பறக்கிறார் ஞானப்பெண்ணே.

 

20.    என்னவித நன்மை யெய்தினும் பாரினில்
ஏற்றதோர் மாதிரி யீசன் தன் பாதத்தை
முன்னை வினையற்று முற்றாகப் பற்றிடும்
மோட்சத்துக் கொப்பாமோ ஞானப்பெண்ணே.

 

21.    பொய்கள வாதியாம் புன்னெறி பற்றிடும்
      புல்லர் பலர்கெட்டுப் போவதைக் கண்டும்பின்
      மெய்ந்நெறி விட்டு நாம் மேதினி மீதினில்
      மேட்டிமை செய்வதேன் ஞானப்பெண்ணே.

 

22.    புண்ணிய பாவத்தைப் பூரணமாக வெப்
போது மறிதற்குப் பூவினிலே யெங்க
ளெண்ணுக் கடங்காத சைவ சமயத்துக்
கேது மிணையுண்டோ ஞானப்பெண்ணே.

 

23.    பொன்னுடன் பூமியும் புன்னெறி மாதரும்
பூதலத்தோர் தமைப் பொல்லா வழியில் விட்
டின்னலுறச் செய்த லெப்போதுங் கண்டும் பின்
நன்னெறி நாடாயோ ஞானப்பெண்ணே.



24.    சிந்தையி லீசனைச் சொந்தமா யெண்ணினோர்
சீருறும் முத்தியைச் சேர்ந்ததை யோர்ந்து நாம்
இந்த உலகி லிருக்கும் வரையென்றும்
ஈசனை யெண்ணுவோம் ஞானப்பெண்ணே.

 

25.    ஆலயந்தன்னில் நாம் அல்லும் பகலுஞ் சென்
றன்புட னீசனை யண்டித் தொழுதிடல்
மேலாம் பதவிக்கு மேவிடும் வித்தென்று
மேலோ ரறிந்தனர் ஞானப்பெண்ணே.

 

26.    ஆணவர் கன்ம மதனுடன் மாயையாம்
அல்லல் தரும்பாசத் தாசைவைத்தே நாமும்
நாணம தின்றியிந் நாட்டி லிருப்பது
நன்மையோ சொல்லடி ஞானப்பெண்ணே.

 

27.    எந்த நேரம்வந் தெமனழைத்தாலும் நாம்
ஏதும் சாட்டின்றியே யேகுதற் காகவோர்
பந்தமு மின்றி யிப்பாரி லிருக்கின்ற
பாக்கியம் தேடுவோம் ஞானப்பெண்ணே.

 

28.    மாடுகன் றோடுநன் மக்களுண் டென்றுமே
மாந்தர் பலரதில் மாழுதல் மாபெரும்
கேடு வருதற்கோர் கிட்டிய பாதை நீ
கேட்டு மறியாயோ ஞானப்பெண்ணே.

 

29.    செல்வம் செல்வாக்கென்று சொல்பவை யெல்லாமித்
தேசத்தி லெப்போதும் தேங்கிடா தாதலால்
கல்வி கசடறக் கற்று முன் மாதிரி
காட்டுவோ மெல்லோர்க்கும் ஞானப்பெண்ணே.

 

30.    சிற்றின்பச் சேற்றிலே சிக்கி மயங்குதல்
சீரியர் யார்க்குந் தெரியாத காரியம்
பெற்றுப்பின் பேணுவர் பேதமை யின்றியே
பேரின்பம் முற்றையும் ஞானப்பெண்ணே.

 

31.    வேண்டாம் விருப்பும் வெறுப்பு மெமக்கென்று

மேலோர் பலர் சொன்னார் மேன்மை யுறும்படி

தீண்டா திருப்போரைச் சர்ப்பமுஞ் சாராது
திண்ணமி தல்லவோ ஞானப்பெண்ணே.



32.    கட்டி யணைத்திடும் பெண்டீரும் மக்களும்
கால னெமை வந்து கட்டி யிடும் போது
கிட்ட வருவரோ கெட்டித்தனங் காட்டக்
கேட்டு நீ சொல்லடி ஞானப்பெண்ணே.

 

33.    ஆசையை நீத்தோ ரழியும் பிறவியை
அற்பமா யெண்ணுவா ராதலா லொன்றிலும்
நேச மதின்றி நாம் நித்திய ரைத்தொழும்
நிர்ணயஞ் செய்வோமே ஞானப்பெண்ணே.

 

34.    இன்னும் பிறவியி லெம்மை விடாதீரென்
றீவில்லா அன்புவைத் தீசனை வேண்டிடில்
அன்னை பிதாவிலு மன்புமிகுத்த வவ்
வண்ண லெமைக் காப்பர் ஞானப்பெண்ணே.

 

35.    சைவர் நாமென்று தருக்கித் திரிபவர்
தாரணி மீதினி லேபல தந்தரம்
மெய்வரம் பெற்றவர் போலவே காட்டிடல்
வேடிக்கை தானடி ஞானப்பெண்ணே.

 

36.    தன்னய மற்றவர் தக்க பெருமையைத்
தானடைவர் வெறுந் தந்தர மாகத்தம்
நன்மையை மாத்திரம் நாடுவோர் தங்கட்கு
நாணம துண்டோ சொல் ஞானப்பெண்ணே.

 

37.    மெய்யாம் துறவறம் பூண்டுமே மேலோர்கள்
மேன்மை யுறச்சிவன் பாதத்தை மேவினர்
செய்யுந் தவம் முற்றும் தேடி யடைதற்கே
தேருவோ மித்தையே ஞானப்பெண்ணே.

 

38.    எந்த நாளு மிறைவன் பதந்தன்னை
ஏத்தித் தொழுதிடு மெண்ணத்தை நாமெங்கள்
சிந்தையி லெண்ணித் தியானிக்க மாபெரும்
திவ்ய கதிசேரும் ஞானப்பெண்ணே.

 

39.    தன்னை யறியு மறிவினை நாம் பெறல்
தக்கது வன்றி மற்றுள்ள தெல்லாம்
முன்னை வினையின் பயனாக வெங்களை
மூடு மிருளன்றோ ஞானப்பெண்ணே.



 

40.    எம்மதத் தாருக்கும் சம்மத மாயுள்ள
எத்தனையோ பெருஞ் சன்மார்க்க போதத்தைத்
தம்மு ளடக்கிச் சனங்கட்குப் போதித்தார்
தற்போத மற்றவர் ஞானப்பெண்ணே.

 

41.    உண்மையும் நேர்மையு முள்ள மனுஷர்கள்
ஊரவர் மெச்சவே வாழ்வரதுவன்றி
மண்ணி லுதித்திடும் மாந்தர்க்கு நல்ல முன்
மாதிரி காட்டுவார் ஞானப்பெண்ணே.

 

42.    கோபத்தைச் சற்றுங் குறைக்காத மானிடர்
கூறரு மாபத்துக் காளாய் வருந்திப்பல்
பாவத்தைத் தேடிப்பின் பங்கப்படுவதைப்
பார்த்து மறியாயோ ஞானப்பெண்ணே.

 

43.    பொறுமையைப் பூஷண மாகவே பூண்டிடில்
பொல்லாதவ ரென்று பூதலத்தோ ரெண்ணுஞ்
சிறுமையுஞ் சாராத சீவியஞ் செய்திடத்
திவ்ய வழியிது ஞானப்பெண்ணே.

 

44.    முன்னை வினையின் வலியினை யோர்ந்தவர்
முற்றாக வீசன்றன் பாதத்தைப் பற்றியே
நன்மை பெறநிற்பர் நாமு மதன்வழி
நாடியே நிற்போமே ஞானப்பெண்ணே.

 

45.    எழுதா விதிக்கு அழுதாலுந் தானென்ன
ஏதும் பயன்பெற லில்லையே யாதலால்
 தொழுவோஞ் சிவன்பதம் தோத்திரஞ் செய்து
 சுகம்பெற வேண்டிடில் ஞானப்பெண்ணே.

 

46.    மௌனங் கலகத்தை மாற்றிடு மாதலால்
மாண்புள்ள வாழ்வெய்தி மண்மீ திருந்திடில்
கவனமா யெம்பேச்சைக் காத்துக் குறைத் திடல்
கற்றோர்க் கவசியம் ஞானப்பெண்ணே.

 

47.    எண்ணப்படி நாமு மெல்லா வகையான
இன்ப சுகம் பெற்று இங்கே யிருந்திடல்
திண்ணம தல்லப்பின் சேருங்க திமுற்றும்
செய்ததின் பேறாமே ஞானப்பெண்ணே.



 

48.    உண்மையைப் பேசி உறுதியாய் நிற்பவர்
ஊரார் நகைக்க உலகினி லோர் போதும்
கண்ணியமற்ற களவு பொய் சூதைக்
கனவிலு மெண்ணாரே ஞானப்பெண்ணே.

 

49.    எல்லாப் பிணியிலும் பொல்லாத தீதென்றே
யெல்லாருங் கூறும் பிறவிப் பிணியினை
நல்லோ ரொருபோதும் நாடா ரிதனுண்மை
நான் கூற வேண்டுமோ ஞானப்பெண்ணே.

 

50.    கொலைபுலை கோளுட னேபுறங் கூறுதல்
குற்றம் நிறைந்த செயல்களென்றே மேலோர்
மலையா திவற்றை மறுத்துமே சீவித்தார்
மாட்சி யிதல்லவோ ஞானப்பெண்ணே.

 

51.    எல்லாரும் மானிட ரென்றேநா மெண்ணிடில்
எத்தனையோ பெரும் பேதங்களை யிங்கு
கல்லாத மானிடர் கற்பித் திடாரிது
கட்டுக் கதையல்ல ஞானப்பெண்ணே.

 

52.     ஊரவ ரெல்லோரு முய்திட வேண்டுமென்
றுண்மையா யெண்ணி யுவந்திருப்போ ரெல்லாம்
பாரிலே பற்பல பாக்கியமும் பெறல்
பார்த்துப் புகழடி ஞானப்பெண்ணே.

 

கா. சின்னப்பா, அளவெட்டி, யாழ்ப்பாணம்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ -

மே, ஜுன் ௴

 

 

 

No comments:

Post a Comment