Sunday, August 30, 2020

 கல்விச் சீர்திருத்தம்

 

அறிவுக்குச் சாதனமான பாஷை.

 

தேசத்தின் முன்னேற்றத்திற்குக் கல்வி அபிவிருத்தி இன்றியமையாதது என்பது யாரும் ஒப்பின உண்மை. நமது தேசத்தில் இப்பொழுது அனுஷ்டிக்கப்படுகிற கல்வி முறையில் உள்ள குறைகள் பல. அக்குறைகளில் முக்கியமான தொன்றை ஆராய்வோம்.

 

பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் கணிதம், இயற்கை சாஸ்திரம், சரித் திரம், பூகோள சாஸ்திரம் முதலிய அறிவைப் புகட்டும் பாடங்கள் பயில் வேண்டியிருக்கிறது. அப்பாடங்களைத் தொட்டிலிலிருந்து பழக்கமாயுள்ள தாய்ப்பாஷையின் மூலமாகப் பயில்வதுதான் மிகச் சுபாவமான முறை என்பது தெளிவான விஷயம். அவ்விதமேதான் இங்கிலாந்து, பிரான்சு, ஜெர் மெனி, ஜப்பான் முதலான எல்லா முற்போக்குத் தேசங்களிலும் நடந்து வருகிறது. அத்தேசத்திலுள்ளோர்க்குத் தங்கள் சிறுவர்கள் ஓர் அன்னிய பாஷையில் எவ்வித அறிவையும் கற்பது என்ற எண்ணம் சிந்திக்க முடியாத ஓர் விந்தையாய்ப்படும்.

 

நமது தேசத்திலோ நம் சிறுவர்களுக்கு மூன்றாவது பாரத்திற்கு மேல் எவ்வித அறிவும் அன்னிய பாஷையாகிய இங்கிலீஷ் மூலமாய்ச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. எப் பாஷையின் மூலமாய் மிக எளிதாய் அறிவையடையலாமோ அப்பாஷைபின் மூலமாய் அல்லவா அடைய வேண்டும்; அது தாய்ப்பாஷை யல்லவா; ஆங்கில பாஷை இந்திய பாஷைகளினின்றும் மிகுந்த வித்தியாச முள்ளதாதலால் அதை இந்தியர் கற்றுக்கொள்வது மிகுந்த கடினமாயிருக்கிற தென்று இங்கிலீஷ் கற்றுக் கொண்ட எந்த இந்தியரும் ஏற்றுக் கொள்ளுவார். ஆகையால் அம்மிகக் கடினமான பாஷையின் மூலமாக எவ்வித அறிவையும் கற்பது சிறுவர்களுடைய காலத்தையும் மனோசக்தியையும் வீணாக்கி அறிவுப் பயிற்சியைத் தடைப்படுத்தவும் குறைப்படுத்தவும் செய்கிறது.

 

சிலர் தாய்ப்பாஷையில் சொல்லிக் கொடுப்பதற்கு ஆட்சேபமாக புதிய சாஸ்திரங்களில் வரும் விசேஷ பதங்களுக்கு இந்திய தாய்ப்பாஷைகளில் தக்க பதங்கள் இல்லை என்று சொல்லுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. மேனாட்டுப் பாஷைகளிலும் சில நூற்றாண்டுகளுக்கு முன் அப்பதங்கள் ஒரு சிறிதும் இல்லை என்னும் விஷயம் அவ்வாதக்காரர்களுக்குச் சிறிதும் ஞாபகமிருக்கிறதில்லை போலும். சாஸ்திரங்கள் அபிவிருத்தியாக ஆக ஏற்கனவே உள்ள வார்த்தைகளிலிருந்தோ அல்லது கிரீக்ரோமன் பாஷைகளிலிருந்தோ புதிய வார்த்தைகள் உண்டாக்கப்பட்டன. அவ்வாறே நம் பாஷைகளிலும் ஏற்கனவே உள்ளவற்றிலிருந்தாவது ஸமஸ்க்ருதத்திலிருந்தாவது புதிய சாஸ்திர விசேஷபதங்களுக்கு வார்த்தைகள் உண்டாக்குவது அசாத்திய மானதல்ல. சிற்சில இடங்களில் இங்கிலீஷ் வார்த்தைகளையே வேண்டுமானால் கடன் வாங்கி கொள்ளலாம். மற்றத் துறைகளில் மிகுந்த முன்னேற்றமடைந்த நம் தாய்ப்பாஷைகளில் நூதன சாஸ்திரங்களை இயற்றமுடியா தென்பது பொறுக்க முடியாத இழிவாகும். அநேகர் பிரத்தியக்ஷத்திலேயே தக்க வார்த்தைகளை உண்டாக்கி நம் பாஷைகளின் சக்தியைச் சிறிது சிறிதாய் ருசுப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

 

நூதன அறிவு தாய்ப்பாஷையில் கொணரப்பட்டால் தான் நம் தேசத்தில் அறிவு இடையூறின்றிப் பரவும். தற்காலம் கல்விகற்றவர்களின் அறிவு பெரும்பான்மையான ஜனங்களுக்குத் தெரியாத அன்னிய பாஷையில் கட்டுண்டிருப்பதால் அவர்கள் அறிவு தேசத்திற்குப் போதுமான பிரயோஜனத்தைக் கொடுக்கக் கூடவில்லை. கற்றோர்க்கும் கல்லாதவர்க்கும் இடையில் அகன்ற பிளவு ஏற்பட்டு இருவகுப்பாரும் ஒருவர்க்கொருவர் அன்னியர் போல் ஆய்விட்டனர். அவ்விரு வகுப்பாரும் ஒன்றாய் ஐக்கியமாகித் தேசம் ஓங்க நூதன அறிவெல்லாம் தாய்ப்பாஷைகளில் ஊட்டப்பட வேண்டுவது அத்தியாவசியமானது.

 

இவ்விஷயமாக சர்க்காருக்கு ஓர் கடமையும் ஜனங்களுக்கு ஓர் கடமையும் இருக்கின்றன. சர்க்கார் முதலாவதாக ஒவ்வொரு சாஸ்திரத்திலும் விசேஷ பதங்களுக்குத் தாய்ப் பாஷைகளில் பதங்கள் காணுமாறு ஓர் கமிட்டி ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான் சாஸ்திர பதங்களில் ஒற்றுமை ஏற்படும். இரண்டாவதாக அறிவைத் தாய்ப்பாஷைகளில் புகட்டும்படி பள்ளிக் கூடங்களைக் கட்டாயப் படுத்த வேண்டும். ஜனங்களும் இச் சீர்த்திருத்தத்தை அடைய விடாமுயற்சி செய்ய வேண்டும். இப்பொழுதே கல்வி இலாகாவானது பாடங்களை ஆறாவது பாரம் முடியத் தாய்ப்பாஷையில் சொல்லிக் கொடுக்கலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிற படியால், முனிசிபல் அல்லது போர்டு அங்கத்தினர்கள் தங்கள் பார்வையிலுள்ள பள்ளிக் கூடங்களில் இச் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவது மிகவும் விரும்பத்தக்கது. நமது பள்ளிக் கூடங்களில் இங்கிலீஷ் பாஷையே கற்பிக்கக் கூடாது என்று வாதிப்பதாகத் தவறாய் நினைக்க வேண்டாம். எப்பொழுதும் போல் இங்கிலீஷ் பாஷை அதன் உபயோகத்திற்காக ஒரு பாடமாக இருக்கும். எது ஆட்சேபிக்கப் படுகிறதென்றால் எவ்வித அறிவும் அன்னிய பாஷையின் மூலமாய்ப் புகட்டப் படுவதே.

 

மாணவர்களின் மனம் தத்தளிப்ப தெப்பொழுது?

 

அவர்கள் எழுதப்போகும் பரீக்ஷைக்கு முதல் நாளும்,
பரீக்ஷையின் முடிவு விபரம் தெரியும் தினத்திற்கு முந்திய
நாளுமாகும். இது உண்டா? இல்லையா?

 

எஸ். சிவராமன் பி. ஏ., எல் டி.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - அக்டோபர் ௴

 

 

 

 

No comments:

Post a Comment