Sunday, August 30, 2020

 

கல்வி

 

 "கற்க கசடறக் கற்பவை கற்றபி
 னிற்க வதற்குத் தக.”

 

இத் திருக்குறளின் கருத்தாவது, ஒருவன் கற்கத் தக்க நூல்களை சந்தேக விபரீதமறக்கற்று, கற்றவாறு அந்த நூல்கள் போதிக்கின்ற சன்மார்க்கத்தில் நின்று ஒழுகவேண்டுமென்ப தாம். அவ்விதங் கற்று நல்லறிவு பெற்று, இல்லறத்திலிருக்கும் போது எவரெவரை எப்படி உபசரிக்க வேண்டுமோ அப்படி உபசரித்து, தான தருமங்களைத் தக்கபடி செய்து, தெய்வவழி பாட்டைக் கடைப்பிடித்து இல்லற இன்பத்தைக் குறைவற அநுபவிக்க வேண்டும். துறவு பூண்டபின் தவமேற்கொண்டு நித்திய அநித்தியங்களின் உண்மை யுணர்ந்து, நிராசையைக் கடைப்பிடித்து வாழவேண்டும்.

     

அறிவை விசாலப்படுத்தி ஒருவனை உயர்ந்த பதவிக்குக் கொண்டு வருவது கல்வியே. எவ்வித ஆபத்தையும் போக்கு வதும் அதுவே. குறையாத இன்பத்தை யளிப்பதுவும் அக்கல்வியே. அதனால் சித்தியாத நன்மை ஒன்றுமேயில்லை. ஆகையாற்றான் பெரியோர் அதனைக் குற்றமறக் கற்க வேண்டுமென்றனர். விலையில்லா மாணிக்கமாதலின் அதன் பெருமையை அளவு படுத்த முடியாது. நாளுக்குநாள் பெருகிக்கொண்டு போகுமேயொழியத் தாழ்வுபடாது. அதற்கு அழிவென்பதே யில்லை. உலகம் மேம்பாடடைவது கல்வியினாலே தான். எவ்வளவோ சீர்திருத்தங்கள் அப்போதைக்கப்போது நடை பெற்று வருவது கல்வியின் பயனன்றா? மக்களுயிர்க்கு உற்ற துணை கல்வியினும் வேறெது?

 

இத்தன்மையான கல்வியைக் கற்பதில் மூன்று வழிகளுண்டு. ஒன்று பல நூல்களை வாசித்துப் பயில்வது; மற்றொன்று கேள்வி; வேறொன்று காட்சி அதாவது பிறர் நடையைப் பின்பற்றுவது.

 

பல நூல்களைக் கற்றவன் ஒன்றை எழுதவோ பேசவோ புகும் போது அந்நூல்களை ஆதாரமாக எடுத்துக்காட்டுகிறான்.

 

கேள்வியுற்றவன் தனது விவகாரங்களுக்கு ஆதாரமாகத் தான் எவரிடம் கேட்டுணர்ந்தானோ அந்த அறிவாளரைச் சுட்டிக் காட்டுகிறான்.

 

பின்பற்றியவன் தனது செயல்களுக்கு ஆதாரமாகத் தான் எவரைப் பின்பற்றினானோ அவரை வெளிப்படுத்துகிறான்.

 

இவ்வளவும் நுண்ணறிவுடையவனைப் பொருந்தியவையேயாம். அவனே நீரைப்பிரித்துப் பாலை நுகரும் அன்னப்பறவையை யொத்துக் குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொள்ளவும், புல்லுள்ள இடத்தைக்கண்டு அங்குள்ள புல் அவ்வளவையும் வயிறார மேய்ந்து பிறகோரிடத்திருந்து அப்புல்லைச் சிறிது சிறிதாக வாயில் வருவித்தருந்தும் பசுவைப் போன்று விஷயங்களைக் கிரகித்துணரவும் யோக்யதை வாய்ந்தவன்.

 

மழை நீர்த்துளியை உட்கொண்டு, அதனைக் கெட்டி முத்தாக்கிப் பயன்படக் கொடுக்கும் இப்பியைப் போல் கற்றதைத் திரப்படுத்தித் தனக்கும் பிறர்க்கும் பயனுறச் செய்யும் சக்தி வாய்ந்தவனும் அவனேயல்லவா?

 

நீர்த்துளியை ஒரு பயனுமின்றித் தன்னிடத்திலேயே தத்தளித்துக் கொண்டிருக்கும்படி யேந்தி நிற்கும் தாமரையிலையைப் போல் கற்றதைப் பயன்படுத்தாதேந்தியிருக்கும் மந்த அறிஞனையும், நீர்த்துளியை மாயமாக்கும் காய்ந்த இரும்பைப் போல் கற்றதைப் பாழாக்கும் சூன்ய அறிஞனையும் மேற்சொன்ன விஷயம் சாருதல் இன்றாம்.

 

பிறர் நடையைப் பின்பற்றுபவன் அறிவீனனாயிருந்தால் அவனுக்கு நிதரிசனமாக ஒருகதை வழங்குவதுண்டு. அக் கதையை நாம் பன்முறை கேட்டிருக்கிறோம். இருந்தும், இந்த சந்தர்ப்பத்தில் சொல்லவேண்டிய தவசியமாகின்றது.

 

புத்திசாலியாகிய ஒருவன் ஓரூரில் தன் குடும்பவிவகாரங்களுக்குத் தலைவனாயிருந்தான். அக்கம் பக்கத்தில் நேரும் சுபா சுபங்களுக்கு அவன் போய் வருவதுண்டு. அவனுக்கு ஒரு இளைய சகோதரனிருந்தான். அவனோ கல்வி பயிலாத மூடாத்து மாவாயிருந்தான். ஆனால் அண்டை அயலில் நேரும் சுபாசுபங்களுக்குத் தன் அண்ணன் மாத்திரம் போய் வருவது அவனுக்குப் பிடிக்கவில்லை. இதைப்பற்றி யடிக்கடி அவன் தன் அண்ணனுடன் வாதித்து வந்தான். மூத்தவன் "அப்பா! நீயோ கல்வியை அலக்ஷியஞ் செய்துவிட்டாய். அதனால் உனக்கு உலக விவகாரங்கள் ஒன்றுந் தெரியாது. நீ போனால் எவரெவர்களுடன் எவ்வெவ்விதம் நடந்து கொள்ள வேண்டுமோ அதை நீ அறிந்து நடக்கும் சாமார்த்தியம் உள்ளவனல்ல. நீ நமது வீட்டிலேயே சுகமாயிரு. எல்லா வேலைகளையும் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்'' என்று தடுத்து வருவான்.

 

இப்படியிருக்க ஒரு நாள் மூத்தவன், தாயாரைப் பரிகொடுத்த ஒருவனைக் கரணச் சென்றான். இளையவனும் அவனைத் தொடர்ந்து போனான். மூத்தவன் தான் காணவேண்டியவனைக் கண்டு "ஐயா! உமது தாயார் இறந்தது பற்றியான் மிகவும் வருந்துகிறேன். என்ன செய்யலாம். நம்மாலாவது ஒன்று மில்லை. எப்போது பிறந்தோமோ அப்போதே மரணமும் நம்மைக் காத்துக்கொண்டிருக்கிறது. அதுபற்றி நீர் கலங்க வேண்டாம். அந்த அம்மாள் உமக்கு மட்டுமா தாயார். எனக்குந் தாயார் தான். எல்லோருக்குந் தாயார்தான். புண்யவதி. கை தவறிப்போயிற்று. இனி நடக்க வேண்டிய அலுவல்களைப் பாரும்" என்று தேருதல் சொல்லி விடை பெற்றுக்கொண்டு திரும்பினான். இதை இளையவன் கவனித்தான். " இப்படி தானே விசாரிப்பது. இது தெரியாதா நமக்கு. வேணுமென்று நமது அண்ணன் நம்மை எங்கும் அனுப்பாமல் எல்லாக் கவுரவத்தையும் அவனே பெற்றுக்கொள்ளுகிறான். இனி நாம் சும்மா இருக்கலாகாது. அடுத்த முறை ஏதாவது வந்தால் அது நமது பார்வையாயிருக்க வேண்டும்" என்று தீர்மானித்துக் கொண்டான்.

 

இவன் எண்ணப்படியே சில தினங்களுக்குள் ஒருவனுடைய மனைவி இறந்து போனாள். அவனைக் காணத்தானே போக வேண்டுமென்று இளையவன் தன் அண்ணனைத் தொந்தரவு செய்தான். என்ன சொல்லியுங் கேட்கவில்லை. " சரி, நீயே போய் வா " என்று உத்தரவு கொடுத்துவிட்டான். இளையவன் மிகவும் சந்தோஷங்கொண்டு ''இப்போது தான் நமக்கு கவுரவம் பிறக்கும் நாள் ஆரம்பித்தது. இனி சகல விவகாரங்களுக்கும் நாமே போகவேண்டும். இதுவரையில் அண்ணன் அநுபவித்தது போதும்" என்று சிந்தித்துக்கொண்டு மனைவியைப் பரிகொடுத்தவனைப் போய்க் கண்டான். கண்டதும், அவனை நோக்கி "ஐயா ! ஏன் சும்மா விம்மி விம்மி அழுகிறீர். தவறிப்போன விஷயத்துக்கு நாமென்ன செய்யலாம். ஆயினும் உமது மனைவி என்னவோ உத்தமி. அவள் உமக்கு மட்டுமா மனைவி. எனக்கும் மனைவிதான். எல்லோருக்கும் மனைவி தான்" என்றான்.

 

அழுது கொண்டிருந்த புருஷன் இவ்வார்த்தைகளைக் கேட்டதும் அடங்காக் கோபங்கொண்டு அவனை நையப்புடைத் தனுப்பினான். அடிபட்ட இளையவன் " சீ ! சீ ! இனி நாம் எங்கும் போகக் கூடாது. நமக்கு கல்வி வாசனை கிடையாது. நம்மை ஒருவரும் கவுரவப்படுத்த மாட்டார்கள்" என்று தீர்மானித்துக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான்.

 

இதனால் எத்தகைய விஷயங்களுக்கும் கல்வியறிவு இருந்து தீரவேண்டிய தென்பது விசிதமாகின்றது - நிற்க,

 

தகாத நூல்களைக் கற்கக்கூடாது. அவற்றால் நமக்கு ஆத்மார்த்தமாக சித்திப்பவை ஒன்றுமில்லை. அறிவு நூலைப் போல் உலக நூல் நமக்கு சாசுவதமான புகழை யளிக்காது.


 ''அலகுசால் கற்பின் அறிவு நூல் கல்லாது
 உலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல
 கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
 போ ஒந் துணையறிவா ரில்''


 என்று நாலடி போதிப்பதைக் கவனிக்கவும். விரிக்கிற் பெருகும்.

 

ஓம் தத்ஸத்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - பிப்ரவரி ௴

 



 

No comments:

Post a Comment