Sunday, August 30, 2020

 

கல்வி

 

 ஆங்கிலத்தில் கல்வி (Education) என்ற சொல்லுக்கு " வெளியில் இழுத்தல்" (Drawing out) என்பது பொருள். சுமார் 2300 வருடங்களுக்கு முன்பு கிரேக்க தேசத்தில் மிக்க புகழ்பெற்று விளங்கிய தற்காலத்தும் எல்லோராலும் போற்றப்படும் ஏதன்ஸ் நகரவாசியாகிய தத்துவாசிரியார் சாக்ரடீஸ் 'கற்றல் நினைவிற்குக் கொண்டு வருதே" (Learning is only Remembrance) என்று கூறியுள்ளார். இக் கூற்றுகளின் பொருளையும் உண்மையையுங் கவனிக்குங்கால் மனிதனுக்கு இப்பிறப்பிற்கு முன் பிறவிகள் இருந்திருக்க வேண்டுமென்று தெரியக் கிடக்கின்றது. வாஸ்தவத்தில் சாக்ரடீவின் பிரதம சீஷனான பிளேடோ தன் புத்தகம் "பீடோவில்'' (Phaedio) மனிதன் இதற்கு முன் ஜன்மங்கள் எடுத்திருக்க வேண்டுமென்று அபிப்பிராயப்படுகின்றார். முற்பிறவி இல்லை யென்று ஒப்புக்கொள்ளுங்கால் "வெளியில் இழுத்தல்'', "கற்றல் நினைவிற்குக் கொண்டு வருதலே' என்ற மொழிகளுக்குப் பொருளில்லாமல் போகின்றது. ஒன்று இப்பதங்களுக்கு அர்த்தமில்லை என்றாகிலும் அல்லது மனிதன் பல ஜன்மங்கள் எடுத்திருக்க வேண்டுமென்றாகிலும் கொள்ளுதல் வேண்டும். இரண்டாவது பொருளைக் கொள்வதே அறிவிற்கு அழகும் உண்மையுமாம்.

 

''கற்றல் நினைவிற்குக் கொண்டு வருதலே' என்பதின் பொருள். மனிதன் ஏதோ ஒன்றை அறிந்திருந்தான்; எக்காரணத்தாலோ அதை மறந்தான்; அவனது கடமை அதை மறுபடியும் உணர்தலே என்பதாம். இந்துக்கள், மனிதன் கடவுள் தன்மையாக இருக்கிறான்; (தத்துவம் என்ற மகா வாக்கியத்தின் பொருளை இங்கு நோக்குக) இருந்த போதிலும் எக்காரணத்தாலோ அவன் தன்னை மறக்க நேரிட்டது; அவன் கடமை மறுபடியும் தன்னை யறிதலே, என்று கூறுகின்றார்கள். இவைகளினின்றும் மறந்ததையறிவதே கல்வியின் நோக்கமென்று பெறக் கிடக்கின்றது. பொய்யாமொழிப் புலவர் கடவுள் வணக்கங் கூறுமிடத்து கல்வியின் நோக்கம் இறைவன்றிருவடிகளைத் தொழுதலேயாம் என்றார்.


''கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
 நற்றா டொழாஅ ரெனின்''


எவ்வாற்றானும் கல்வியின் நோக்கம் யாதென்று யோசிக்குங்கால் மறந்த உண்மையை யறிதலே, இறைவனைத் தொழுதலேயாம்.

 

இவ்விஷயத்தைப் பண்டைக்காலத்தில் நம் முன்னோர் நன்குணர்ந்திருந்தார்கள். ஆனால் நாம் இதை அதிகமும் மறந்திருக்கிறோம். அப்போது கல்விச்சாலைகள் சன நெருக்கமில்லாத கிராமங்களிலும், இயந்திரப் புகையினால் பீடிக்கப்படாத நகரங்களின் சுற்றுப் பக்கங்களிலும், நீண்டு ஓங்கி வளர்ந்த மரங்களடர்ந்த சோலைகளிலும், மான் மயில் போன்ற பிராணிகள், பறவைகள் சஞ்சரித்த அடவிகளிலும் ஆடம்பரமில்லாமல் மிக்க உபயோகத்துடன், வனப்புடன் பொலிந்தன. அவைகளைப் போன்றது இப்போது வங்காளத்தில், கல்கத்தாவிற்குச் சமீபத்தில் போல்பூரில் திருவாளர் ரபீந்திரநாத் தாகூர் பெருமானார் ஏற்படுத்திய "சாந்திநிகேதன்'' ஒன்று மட்டுமே திகழ்கின்றது. ஆனால் இது ஒன்று நீங்கலாக மற்ற கலாசாலைகளை நினைக்கும் போது என்ன வேற்றுமைத் தோன்றுகின்றது? இப்போது அவைகள் இயற்கைப் பொருளழகு சற்றுமில்லாததும், புகையினால் அசுத்தப்படப் பெற்ற காற்றுள்ளதும், சனக்கூட்டங்கள் நெருக்கமுள்ளதும், கூச்சலினால் அதிகமும் துன்பம் பெறப்பட்டதுமான நகரங்களின் நடுவே அமைக்கப் பெற்று இருக்கின்றன. உதாரணம்: - சென்னை கிறிஸ்துவ கலாசாலை, பச்சையப்பன் கலாசாலை முதலியன.

 

இயற்கைப் பொருள் கட்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று ஒரு சந்தேகம் ஏற்படலாம். சோலை, கடற்கரை யோரம், ஆற்றின்கரை, மலைச்சாரல் முதலிய இடங்களில் மனம் பரந்ததன்மை, சுத்தம்ஊக்கம், ஆழ்ந்த தன்மை, அமைதி முதலிய நற்குணங்களை யடைகிறது. ஆனால் அதே மனது இயற்கைப் பொருளழகு இல்லாத நகரங்களிலும் நாடுகளிலும் குறுகியதன்மை, சுயநலம் பாராட்டல், குழப்பம் முதலிய துர்க்குணங்களைப் பெறுகின்றது. இதுபற்றி தான் இங்கிலாந்தில் சீமான்கள் அடிக்கடி நகரங்களிலிருந்து நாட்டுப் புறங்களுக்குச் சென்று சிறிது காலம் தங்கி வருகிறார்கள். நம் நாட்டிலும் கவிகளும், துறவிகளும் இதுகாரணம் பற்றி மலைகளிலும் காடுகளிலும் வாசஞ் செய்து வருகிறார்கள். உபநிஷத்துகளில் கூறியுள்ள அரிய பெரிய உண்மைகள் எவ்விடங்களில் அறியப்பட்டனவென வுன்னுந் தோறும் இவ்விஷயம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும். இது அநுபவத்தில் தோன்றும். ஆதலான் இயற்கைப் பொருள்களுக்கும், மனவமைதி முதலான மேலான குணங்களுக்கும் அதன் காரணமாக கல்விக்கும் - இவைகள் ஒவ்வொன்றிற்கும் - - நெருங்கிய சம்பந்தமுண்டென்பது தெற்றெனப் புலப்படுகிறது. இதையறிந்தால் இப்போது கல்விபயிலு மிடங்கள் சற்றேனும் பொருத்தமில்லா தன வெனத் துணிதல் சுலபம்.

 

இரண்டாவதாக இறந்த காலத்தில் எவ்வெவைகளைப் பயின்று வந்தார்கள், தற்காலத்தில் எவ்வெவைகளைப் படித்து வருகிறோம் நாம் என்பதைச் சிறிது பார்ப்போம். மனிதனுடைய ஒவ்வொரு காரியமும் மதசம்பந்தத்தை யொட்டியதாகவும், அதற்குக் கீழ்ப்படிந்துள்ள தாகவும் இருத்தல் அவசியம். ஆதிகாலத்தில் இப்படியே இருந்து வந்தது. ஆனால் இப்போது உலோகாயத நாகரீகத்தைப் பின்பற்றி மனிதன் தன் சுயகல காரியங்களை முதன்மையாகவும், மத விஷயங்களை இரண்டாவதாகவும், சிற்சில சமயங்களில் தனக்கும் அவைகளுக்கும் சம்பந்தமில்லாமலும் செய்துகொண்டான். இம்மாறுதலால் நேரிடும் கெடுதிகள், துன்பங்கள் பல. உலகத்திலுள்ள குழப்பங்களுக் கெல்லாம் காரணம் இவ்வுண்மையை மறந்ததே. பிரமசரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய நான்கு ஆசிரமங்களை இதுபற்றித்தான் உண்டு பண்ணி வைத்தார்கள் நம்முன்னோராகிய மகான்கள். மதவிஷயமான படிப்பும், தத்துவ நூல்களும் ஆங்காங்கே கற்பித்து வந்தார்கள். உலக விஷயங்களைப் பற்றி அவ்வளவு போதுமான முயற்சி இந்தியர்கள் எடுத்துக் கொள்ளவில்லை; எடுத்துக் கொண்டிருந்தால் இவர்களும் மேல்
நாட்டார்களைப் போலவே இயந்திரங்களையும் மற்றும் நூதனப் பொருள்களையும் அவர்களை விட அதிகமாகவே கண்டு பிடித்திருக்கக்கூடும். ஆனால் அவர்கள் அடியோடு இவைகளைக் கவனிக்காமல் விட்டு விடவுமில்லை. இதைப்பற்றி கணித நூல், சிற்பநூல், வைத்திய நூல் இவை போன்ற நூல்களைக் காணுங்கால் உண்மை விளங்கும். அவர்கள் அறிந்தது ஒன்றே. அது மதவிஷயத்தை முதன்மையாகவும் மற்றைய காரியங்களை இரண்டாவதாகவும் கவனித்தலே. நாம் சனனமெடுத்தது பரம்பொருளைச் சேரவே என்பது நம்முன்னோர் கொள்கை. நாம் இதை அவசியம் போற்றுதல் வேண்டும். பள்ளிக் கூடங்களிலும் கலாசாலைகளிலும் இதை வற்புறுத்திக் கூறுதல் நலம்.

 

இதை மறவாதிருந்த சென்ற காலத்து ஆசிரியர்கள், தேகவன்மை, வீரம், தெய்வபக்தியோடுங் கூடிய சிங்க ஏறுகளாகிய உத்தமமானவர்களை உலகில் அனுப்பி வந்தார்கள். இப்போது நோயினால் பீடிக்கப்பட்ட, வீரங்குன்றிய, தெய்வமுண்டோ இல்லையோவென ஐயத்தோடுங் கூடிய கவர்ன்மென்டு குமஸ்தாக்களாக மட்டுமே உபயோகப்படக் கூடிய பிள்ளைகளைக் கல்விச்சாலைகள் உண்டுபண்ணி விடுகின்றன. என்ன பேதம்!

 

நிகழ்காலத்தில் கல்வி மேனாட்டுப் படிப்பை யொட்டி நடப்பதாக இருக்கிறது. இது மகா கெடுதி விளைவிக்கக்கூடியது; விளைவித்தும் விட்டது; இன்னும் செய்து கொண்டும் வருகிறது. ஒவ்வொரு நாடும் அததற்கேற்றதாகவே சௌகரியங்களைச் செய்து கொள்ளல் வேண்டும். இதைவிட்டு, மற்றைய நாடுகளைப் பார்த்து, குரங்கைப் போல், காரியங்களைச் செய்து வந்தால் கேடுறுவதற்கு வழியைத் தேடிக் கொள்வதேயாகும். இதனால் புறத்தேயங்களிலிருந்து ஒன்றையும் கற்றுக் கொள்ளக் கூடாதென்பது நம் கருத்தென்று கருதலாகாது. எப்படி ஒரு மரமானது தனது சீவியத்திற்கும், வளர்ச்சிக்கும் தன்னிலும் வேறான சூரிய கிரணங்களையும், தண்ணீரையுமுட்கொண்டு அவைகளைத் தானேயாகச் செய்து கொள்ளுகிறதோ, அப்படியே நாமும் மற்றைய நாடுகளிலிருந்து நமக்கு அவசியமானவற்றைக் கற்றுக் கொண்டு அவைகளை நம்முடையவையாகவே அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். இதனால் கெடுதி ஒருகாலும் ஏற்படாது. சுகமே உண்டாகும். கண்டனஞ் செய்வதெல்லாம் கண் மூடித்தனமாக மற்றவர்களை யொட்டி யொழுகல் கூடாதென்பதே. முக்கியமாக கல்வியில் இதை மறவாதிருத்தல் அவசியமாய் வேண்டப்படுகிறது.

 

ஆனால் சென்றவைகளை யெல்லாம் பிறப்பிக்க வேண்டுமென்பது நதியின் முகத்துவாரத்திற்குச் சென்ற வெள்ளத்தை மறுபடி உற்பத்தி ஸ்தானத்திற்குக் கொண்டு செல்ல முயல்வதை யொக்கும். சென்றது சென்றதுதான். சென்றதைப் பற்றி வருத்தப்படுவதில் பயனில்லை. ஆனால் ஒருவன் அல்லது ஒரு நாடு முன்னேற்றமடைய சென்றகாலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் பற்றி மிக்க சாக்கிரதையாக இருத்தல் வேண்டும். சென்றதைக் கொண்டுதான் இப்போது காரியங்களைச் சாதிக்கக்கூடும்; நிகழ்காலத்தில் அவைகளைச் செய்வதற்கேற்ப வருங்காலத்தில் விஷயங்கள் கைகூடும். ஆன துபற்றி முக்காலங்களையும் ஒரே நோக்காக மனி தன் தெரிதல் நன்மை பயக்கும். ஒன்றை இங்கு மறத்தலாகாது. எப்போதும் உயிரைக் குரங்குப் பிடியைப் போல் பற்றிக் கொண்டு, உடம்பை மாற்ற வேண்டிய காலங்களிலெல்லாம் வேறாகச் செய்து கொண்டே வரவேண்டும்.

 

கல்வியில் இவ்வுண்மையை முக்கியமாகப் போற்றின் அதிக பயன் விளையும். பண்டைய குருகுலவாசப் படிப்பை முழுமையும் அனுஷ்டானத்தில் இப்போது கொண்டு வருதல் அசாத்தியம். ஆனால் இருக்குங் குறைகளை நீக்கிக் கல்வியை நாட்டிற் கேற்றவாறு அமைத்தல் நலம்.

 

முதன்மையாக கலாசாலைகளில் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பித்துக் கொடுப்பது கெடுதியாகும். அவரவர்களுடைய பாஷைகளில் பாடங்களைப் படிப்பித்துக் கொடாமல் என் அன்னிய பாஷையை உபயோகப்படுத்த வேண்டும்? இம்மாதிரியான மாறுபாடுள்ள முறை உலகத்தில் எங்கேயாவது உண்டாவென்று பார்த்தால் இல்லவே இல்லை என்று தெரியவருகிறது. ஆங்கிலேயர் கூட அவர்கள் பாஷையிலேயே பாடங்களைக் கற்கின்றனர். இம்முறை கேட்டால் அவரவர்கள் தங்கள் தங்கள் பாஷைகளைக் கற்க அவகாசமில்லாமல் போகின்றது. மேனாட்டார் அவர்கள் மொழியை முதலாவது செவ்வனே தெரிந்து கொண்டு பிறகு கிரேக்க, லத்தீன் முதலிய மொழிகளை அறிகின்றார்கள். ஆனால் நம் நாட்டில் மட்டும் இம்முறைகேடான தலைகீழ் பாடமான காரியம் நடந்து வருகிறது. கல்வி ஆங்கிலத்தில் படிப்பித்துக் கொடுக்கும் வரையில் நாடு க்ஷேமமடையாது. ஹைஸ்கூல்களிலும், கல்லூரிகளிலும் பாடங்களை அவரவர்கள் மொழிகளிலேயே போதித்தல் வேண்டும்.

 

ஆனால் ஆங்கிலம் கற்கக்கூடாதென்பது நமது அபிப்பிராயமல்ல. அம்மொழி உலகிலுள்ள மேலானவைகளில் ஒன்று. அதில் மிகவும் அரு மையான பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன. அதைக் கற்றவனொருவன் எந்நாட்டிலும் அதிக கஷ்டமின்றி சுற்றி வரலாம். தவிர, தற்காலத்தில் அது இராஜமொழியாக இருந்து வருகிறது. இவ்வளவு சிறப்பும் உபயோகமுமுள்ள மொழியை எவன் தான் கற்க வேண்டாமென்று கூறத்துணிபுறுவான்? சொல்வதெல்லாம் "மாதா வயிறெரிய மகேஸ்வர பூஜை' என்பதற்கிணங்கத் தன் தாய்மொழியைச் செவ்வனே கற்காமல் அலட்சியம் செய்துவிட்டு ஆங்கிலத்தைக் கற்கலாகாதென்பதே.

 

இரண்டாவதாக கல்விச்சாலைகளில் நம் தேச சரித்திரத்தைக் கற்பித்துத் தருவதில்லை. கீழ்வகுப்புகளில் இச்சரித்திரங்களைச் சிறிது படிப்பித்து வருகின்றார்கள். அங்கே பிள்ளைகள் அவைகளைப் படிப்பது ஹரிச்சுவடி கற்பதை நிகர்க்கும். மேலும் அவைகள் நம் நாட்டாரால் எழுதப்பட்டவையல்ல. அவைகளில் சிற்சில விடங்களில் உண்மைக்கு விரோதமான விஷயங்களை எழுதியுள்ளார்கள். உதாரணமாக கல்கத்தா இருட்டறை. இதைப்பற்றி மாறான அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஆங்கில சரித்திர ஆசிரியர்கள் அதை நடந்ததாகவே கூறுகின்றார்கள். சிவாஜீ மகாராஜனைப் பற்றி அநேக அவதூரான கதைகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஒளரங்கசீப் சக்ரவர்த்தியின் குணத்தை அதிக குரூரமாயும் கேவலமாயும் அயல் நாட்டு சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் வரைந்திருக்கின்றார்கள். அவர்கள் தம் சுயநலங்கருதியே நடுநிலையை மறந்து அவ்வாறுவரைந்தனர். இவைகளைப்பற்றி நம் தேச சரித்திரம் வரைவோர், சர்க்கார் முதலியோருடைய கூற்றுகளை நோக்கின் உண்மை நன்கு புலப்படும். தவிர, 8 - வது 9 - வது வகுப்புகளிலிருந்து அநேகருக்கு இந்திய சரித்திரம் இன்னதென்பதே தெரியாது. தேசசரித்திரங்களை விருப்போடு எடுத்துக் கொள்ளுவோருக்கு ஆங்கிலதேச சரித்திரத்தைத்தான் போதித்து வருகிறார்கள். 10 - வது வகுப்பில் இந்திய நாட்டைப் பற்றி ஏகதேசமாக சிலபாகத்தைப் போதிக்கின்றார்கள். இன்டர்மீடியேட் வகுப்புகளில் கிரேக்கதேச சரித்திரம், உரோமாபுரி சரித்திரம், ஆங்கிலசரித்திரம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். ஆனால் இந்திய சரித்திரத்தைப்பற்றி ஒன்றுமேகிடையாது. பீ. ஏ., (B. A.) வகுப்புகளில் சிறிது அதைப் படிக்கிறார்கள். இந்நிலை கேடான காரியம் மாறுதல் அடைய வேண்டும். இந்தியனாய்ப் பிறந்த ஒவ்வொரு மாணவனுக்கும் இந்திய சரித்திரத்தைப் பூராக கட்டாயபாடமாக வைத்து எல்லா வகுப்புகளிலும் கற்பித்துத்தர அதிகாரிகள் தக்கவசதிகள் ஏற்பாடு செய்து தருதல் வேண்டும். தவிர, இந்திய சரித்திரங்கள் இந்தியர்களால் எழுதப்படவேண்டும்.

 

மற்றொன்றை இங்கு வரைவது நலம். கல்லூரிகளில் மாணவர்கள் மேனாட்டு தர்க்க தத்துவ நூல்களைப் பயிலும்படி செய்து வருகிறார்கள். நம்நாட்டுத் தர்க்க நூல்களையும் தத்துவ நூல்களையும் கற்பிக்கின்றார்களில்லை. ஏன், நம் நாட்டில் அவ்வகையான நூல்களில்லையா? ஆறுவிதமான தத்துவங்களும் மேலான தர்க்கங்களும் இல்லையா? ஆகலான் அவைகளை முதன்மையாக சிரத்தையோடு பயிலுதல் அவசியம். பிறகு அயல்நாட்டின் நூல்களைத் தெரிந்து கொள்ளுதல் மிக்க நன்மை பயக்கும். இம்மாதிரியே பௌதீக, வான, ஜோதிட முதலிய சாஸ்திரங்களைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

 

மிகவும் முக்கியமான விஷயம் ஒன்றை மறத்தலாகாது. எந்நாடும் செழித்தோங்கக் கைத்தொழில் அவ்லது தொழில் அபிவிருத்தி வேண்டும். வெறும் அறிவை வளர்த்தல் போதாது. அறிவோடு வயிற்றையும் கவனித்தல் இன்றியமையாதது. இதில் மிக்க அஜாக்கிரதையாக இருந்ததால் தான்நாடு மிக்க தாழ்ந்த ஸ்திதியில் கிடக்கிறது. இதனாற்றான் மாணவர்களிப்போது வெறும் படிப்பை வைத்துக் கொண்டு வேலையில்லாமல் வேறு பிழைப்பதற்கும் வழிதெரியாமல் திண்டாடுகின்றார்கள். பாடசாலைகளில் ஏதாவது ஒரு கைத்தொழிலைக் கற்றுக் கொடுத்தால் தான் நன்மை உண்டாகும்.

 

ஜப்பான் சில வாண்டுகளுக்கு முன் இருந்த விடமே யாருக்குந் தெரியாது. ஆனால் அது இப்போது உலகத்திலுள்ள முதன்மையான நாடுகளில் ஒன்றாயிருக்கிறது. காரணம் யாதென யோசிக்குங்கால் அங்கு மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பல துறைகளிலும் பயின்றுவர ஏற்பாடு செய்து வருகிறார்கள். எல்லாத் தேசங்களும் முன்னே சென்று கொண்டிருக்க நாம் சும்மா விருந்த விடத்திலேயே இருக்க முடியாது. அப்படி இருக்க நினைத்தல் தற்கொலை புரிந்து கொள்வதேயாகும். மற்றைய நாடுகளோடு நம் தேசமும் சமத்துவத்தை யடைதல் வேண்டும். ஆகையால் நம்நாட்டிலிருந்து பிள்ளைகளை இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா முதலியதேசங்களுக்கு அனுப்பி, பல்வேறு தொழில்களையும் கல்விகளையும், வியாபாரங்களையும் கற்றுவரத்தக்க முயற்சி உடனே யெடுத்துக் கொள்ளுதல் நலம். தனவந்தர்கள் இவ்விஷயத்தில் மிகவும் ஊக்கம் எடுத்துக் கொள்வது அதிக பயன் தரும். பணத்தை வீண் வழிகளில் செலவு செய்யாமல் இந்தமார்க்கத்தில் பயன்படுத்தி வரவேணும். இப்போது தான் சிற்சிலர் மேனாடுகளுக்குச் சென்று வருகிறார்கள். இது போதாது. அநேகர் செல்லல் வேண்டும்.
 

எந்நாட்டிற்குச் சென்றாலும், எத்தொழிலைச் செய்தாலும், எப்படிப்பைக் கற்றாலும் ஓர் உண்மையை மட்டும் மறக்கலாகாது. ஒவ்வொரு தேயமும் ஒரோர் உண்மையை உலகத்திற்குப் போதிக்கவே தோன்றியிருக்கிறது. ஒரு நாட்டின் வேலையை மற்றொன்று செய்ய முயலலாகாது; முயன்றாலும் வெற்றி கிடைக்காமல் வீணாய்ப் போய்விடும். இவ்வுண்மையை எந்நாடு மறக்கின்றதோ அந்நாடு சாக்காடுறுவது திண்ணம். இறந்த காலத்து கிரேக்க தேயம் தத்துவத்தையும், சிற்ப நூலையும் இவை போன்ற அறிவிற்குப் பயன்படக் கூடிய விஷயங்களையும் புவிக்குத் தந்தது. உரோமாபுரி ஒருநாட்டை எப்படி யாள்வது, நாடுகளை எப்படி ஜெயிப்பது, மற்றவர்களை எப்படி அடக்கியாளத் திறமை கொள்வது முதலிய நுண்ணிய பொருள்களைத் தெரிவித்தது. இதேமாதிரி நம் நாடும் ஏதோ ஒரு உண்மையை தெரிவித்திருக்க வேண்டும். அதாவது மத உண்மையே. ஆனால் இந்நாட்டிற்கும் பிற நாடுகளுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்றவைகள் உலக சம்பந்தமானவைகளைத் தெரிவித்தபடியால் சிறிதுகாலம் இவ்வுலகத்தின் கண்தோன்றிப் பின்பு மறைவுற்றன. ஆனால் நம் நாடு சாக்காடின்றிய மதவுண்மையைத் தெரிவித்த படியால் இன்னும் அழிவுறாமல் திகழ்கின்றது. எக்காலத்தில் இது இதை நிறைவேற்றப் பின் வாங்குகிறதோ அதேகாலத்தில் அழிதல் நிச்சயம். ஆகலான் "எத்தொழிலைச் செய்தாலும், ஏதவஸ்தைப்பட்டாலும் 'மீன்பிடிக்கும் செம்படவனுக்குத் தூண்டில் முள்ளின் பேரிலேயே கவனமிருக்குமாபோல் ஒவ்வொரு இந்திய ஆண்மகனும் பெண்மணியும் மதத்தை நோக்கமாகவும், அடிப்படையாகவும் வைத்துக் கொண்டு காரியங்களைச் செவ்வனே செய்து வந்தால் நாடு சீரும், சிறப்பும், செழிப்புமுற்று ஓங்கி வளர்ந்து தன் மணத்தை உலகமெங்குங் கமழச்செய்யும். இவ்வுண்மையை அஸ்திவாரம் போடுவதற்குத் தகுந்த இடம், காலம், பொருள்முறையே கலாசாலை, இளமை, கல்வியாகும்.


 V. T. M. திருநாவுக்கரசு, வேலூர்.

 

குறிப்பு: - நமது நண்பர் நமது மாணவர்களை இங்கிலாந்து, அமெரிகா, ஜர்மெனி முதலிய நாடுகளுக்கனுப்பி பலவிதத் தொழில்களையும் சாத்திரங்களையும் கற்று வரும்படிச் செய்தால் தான் ஜபானைப்போல் நம் நாடு முன்னேற்றமடையும் என்கிறார். இது உண்மையே. ஜபானிலிருந்து மாணவர் மேல் நாடுகளுக்குச் சென்று பல தொழில்களையும் சாத்திரங்களையும் கற்றுத் தாய்நாட்டிற்குத் திரும்பி வந்தபின் அச்சாத்திரங்களைத் தாய்ப்பாஷையில் மொழி பெயர்த்து, நாட்டில் அவற்றிற்கென பாடசாலைகளைத் தாபித்து யாவர்க்கும் கற்பித்து, பிறகு தொழிற்சாலைகளைத் தாபித்துத் தங்களுக்கு வேண்டிய யாவற்றையும் - கப்பல்கள், போர்க்கப்பல்கள், யுத்தாயுதங்கள் கூட - தாங்களே செய்து கொள்ளத் தொடங்கி செல்வமும், மதிப்பும் பெற்றார்கள். அத்தகைய பெருங்காரியத்தை அத் துரைத்தனத்தாரே முன்னின்று செய்யத் தொடங்கினார்கள். ஏனெனில் ஜனங்களும் துரைத்தனமும் அங்கு ஒன்றே.

 

நமக்கு யார் அப்படிச் செய்கிறவர்கள்? நமது துரைத்தனத்தாரோ அன்னிய நாட்டார். முதலாவது தங்கள் நாட்டார்க்கு வரும்படி குறைவதாயின் அத்தகைய விவகாரங்களை (நமக்கு நன்மை பயக்குவதைக் கருதிமட்டுமே) நாம் செய்யும்படி விடமாட்டார்கள். எவ்விதத்தாலேனும் தடுத்து விடுவார்கள். நமது கைகால்கள் கட்டப்பட்டு வாய்க்கும் பூட்டிடப்பட்டிருக்கிறது. நமது நிலைமை மிகப் பரிதாபகரமானது.

 

இனி ஏதோ சில சாதாரணக் கைத்தொழில்களை மட்டுமேனும் கற்றுவரச் செய்வோமெனின் தரித்திரம் குறுக்கே நிற்கிறது. நம் நாட்டுச் செல்வவந்தர்க்கோ அத்தகைய வழியில் பணம் செலவிட மனம் திரும்பவில்லை. சுயநல நாட்டமே அதிகமாயிருக்கிறது. பெருமைக்கும் பட்டத்திற்கும் வேண்டுமென்றால் அதிகாரிகளுக்கு ஆயிரக்கணக்காய்ச் செலவழிப்பார்கள். இன்றேல் தேச நன்மையைக் கருதி அதற்கென ஒரு நிதி சேகரம் செய்து வருடத்திற்கு இரண்டொரு மாணாக்கர்களையேனும் மேல் நாடுகளுக்கனுப்பி அவசியமான தொழில்களைக் கற்றுவரச்செய்து, பிறகு தாய்ப்பாஷையில் அவற்றை இங்குள்ளவர்க்குக் கற்பித்து தொழிற்சாலைகளைத் தாபித்து நடத்தலாகும். அவ்வாறு செய்யின் சீக்கிரத்தில் முன்னேற்றமடைய வழியேற்படும்.

 

இனி "இப்போதுதான் சிலர் மேல் நாடுகளுக்குச் சென்று கல்வி கற்று வருகிறார்கள்'' என்று நமது நண்பர் கூறுகிறார். உண்மைதான். ஆனால்இவர்களால் தாய்நாட்டிற்கு எவ்வளவுவரை நன்மையுண்டாகுமென்பதைப் பார்ப்போம்.

 

இப்போது இங்கிலாந்து முதலிய இடங்களுக்குச் சென்று வருவோர் பாரிஸ்டர், அட்டர்னி, இத்தகைய பரீட்சைகள் கொடுத்துவிட்டு இங்கு வந்து வக்கீல் வேலை செய்கிறார்கள். இரண்டொருவர் மின்சார இஞ்சினீயர், எந்திர இஞ்சினீயர் முதலிய வேலைகளைக் கற்று வந்து இந்நாட்டிலுள்ள அனனிய நாட்டாரின் தொழிற்சாலைகளில் போய் அடிமை வேலை செய்ய அமர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் கொஞ்சம் அதிக பணம் சம்பாதிப்பதையன்றி, இவர்களால் யாருக்கென்ன பயன்? நாட்டிற்கு ஒருபயனுமில்லை.

 

ஒரு விஷயத்தில் இவர்களால் நாட்டிற்கே பெருந் தீங்கு விளைகிறதென்று கூறவேண்டியிருக்கிறது. எவ்வாறெனின், இவர்களில் பெரும்பாலோர் அன்னிய நாட்டிலிருந்து திரும்பி வரும்போது நிறம் தவிர மற்ற எல்லாவற்றிலும் ஐரோப்பிய துரைகளாகவே மாறி வருகிறார்கள். நிறத்தை மாற்றிக் கொள்ள வழியிருந்தால் அதையும் செய்து கொள்வார்களே. தாய்நாட்டு ஆசாரம், உடை, தெய்வசிந்தனை, மதப்பற்று யாவற்றையும் மத்தியதரைக் கடலில் கைகழுவி விட்டு வருகிறார்கள்.

 

இத்தகைய ஒருவர் தாம் இங்கிலாந்திற்குச் சென்று கல்விகற்று வந்ததால் தமது வாழ்க்கை முறைமை அதிக செலவுள்ளதாக மாறிவிட்டதென்றும், ஆகையால் அதிக சம்பளம் கிடைக்கும் உத்தியோகமே வேண்டுமென்றும் முயற்சி செய்வதைக் கண்டோம். இவர் மீசையைக் கூட காலேயரைக்கால் மீசையாக்கிக் கொண்டார். தமது முன்னோர் ஆசாரம் நடையுடை பாவனைகளை யலட்சியம் செய்து தகாத அன்னிய ஆசாரங்களைக் கைப்பற்றி அதைப் பெரிய கௌரவமாகக் கருதும் இவர்கள்'' நமது செய்கை பெற்றதாய்க்குத் துரோகம் செய்வதாகிறது. நம்மால் நம்மக்களும் கெடுமாதலால் நாம் தாய்நாட்டிற்கே தீங்கு விளைவிக்கிறோம்'' என்பதைச் சற்றும் நினைக்கிறார்களில்லை. தற்சமயம் இவர்கள் வரும்போது அன்னிய மதத்தில் சேர்ந்துவிடாமலும், ஒரு வெள்ளை மாதோடு வராமலும் தனியே பெற்றோர்க்குப் பிள்ளையாக வந்து சேர்ந்தால் அதுவே பெரும்புண்ணியம் என்று கருத வேண்டியிருக்கிறது. மற்ற விஷயங்களிலெல்லாம் நமது மத ஆசார ஒழுக்கங்களைக் கைவிடாமல் இருந்தால் மாறு உடை யணிந்து கொள்வதால் மட்டும் கெடுதி விளையாது. அதைக்கூட வேறெந்த நாட்டாரும் செய்வதில்லை. இவர்கள் யாவற்றிலும் அடியோடு மாறிவிடுகிறார்கள். எல்லாம் வல்ல பரம்பொருளே இத்தகைய ஆபத்துகளிலிருந்தும் நம் தாய்நாட்டைக் காப்பாற்றவேண்டும்.

 

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1924 ௵ - டிசம்பர் ௴

 

No comments:

Post a Comment