Sunday, August 30, 2020

 

கல்வி

 

செல்வம், கல்விச்செல்வம் பொருட்செல்வம் என இருவகைப்படும். ஆனால் செவிச் செல்வம், என்ற ஒரு செல்வமும் உளது.

 

''செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்

செல்வத்து ளெல்லாந் தலை"

 

(கேள்வியால் அறிவு விளக்கம் பெறுவது மற்ற எல்லாச் செல்வங்களினும் சிறந்தது) என்றார் நாயனார். ஒருவனுக்குக் கல்வியில்லாவிடினும் கேள்வியாயினு மிருத்தல் வேண்டும் என்றார்.

 

இதனால் பொருட்செல்வத்தினும், கல்விச்செல்வமே சாலச் சிறந்ததென்பது பெற்றாம். என்னெனில், கல்வி இம்மை மறுமையாயவிருபயன்களையும் அளிக்கவல்ல தாதலின். இங்ஙன் கல்வியின் இத்தகைய சிறப்பைப் பற்றிக்கூற வெண்ணியன்று நாம் இதையெழுதத் தொடங்கியது. மற்றென்னை யெனின், கல்வியென்றால் என்ன? ஆகனால் எதைக்கற்றால் கல்விகற்றதாகும்? கல்வியை ஏன் கற்கவேண்டும்? அதனால் உண்டாசம் நன்மை தீமைகளெவை? என்பனவற்றை யாராயவேண்டியே இதை வரையத் தொடங்குகிறோம்.

 

கல்வி என்றபதம் 'கல்' என்ற பகுதியினடியாகப் பிறந்து'வி’ விகுதிபெற்ற தொழிற் பெயராகும். கற்கப்படுவது கல்வி என்றாகிறது. இதன்படி நாம் எதெதைக் கற்கக்கூடுமோ அவையாவும் கல்வியே யாகும் சாதாரணமாகக் கல்வியை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

 

1-வது பாஷைக்கல்வி - அதாவது ஒரு பாஷையைக் குற்றமற வாசிக்கவும் எழுதவும் கற்றல். இலக்கிய இலக்கணக்கல்வி இதைச் சேர்ந்ததாகும்.

 

2-வது இதைச் சாத்திரக்கல்வி எனலாம். - இது இம்மண்ணுலக சுகானுபவத்திற்கு அனுகூலமான ஜடசாத்திரங்களின் கல்வியாகும். கணிதம், சிற்பம், வைத்தியம், இரசாயனம், வானசாத்திரம் முதலிய யாவும் இதிலடங்கும்.

 

3-வது இது ஞானக்கல்வியாகும். - இதை ஆன்மார்த்தக்கல்வி என்றுங் கூறலாம் -வேதம், உபநிடதங்கள், ஆன்ம பரமான்ம இலட்சணங்களையும், மெய்யறிவையும் விளக்கிவைக்கும் ஞான நூல்களனைத்தும் இதிலடங்கும்.

 

1-வது வகுப்பில் கூறப்பட்ட இலக்கண இலக்கியக் கல்வியில் தேர்ச்சியடைந்தவர்கள் சாதாரணமாக வித்வான்கள் என்றழைக்கப்படுகிறார்கள்;

2-வது வகுப்பில் கூறப்பட்ட சாத்திரங்களைக் கற்றோர்கள் அந்தந்த சாத்திரங்களில் பண்டிதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்;

 

3 - வது வகுப்புக் கல்வி கற்றோர்களுக்கு எவ்விதப் பட்டமேனும் இருப்பதாகத் தோன்றவில்லை. இவற்றில்,

 

முதலாவது, இரண்டாவது வகுப்புகளைச் சேர்ந்த கல்வி மட்டும் கற்றோர்களில் முழுதும் கற்றவர்கள் ஒருவருமேடல்லை யெனலாம். ஒவ்வொருவருக்கும் அதிகம் கற்றோரும், குறைவாகக் கற்றோரும் உண்டு என்பது உண்மை. இக்கல்வி ஒருவனுடைய பிறவிக்குணத்தை விர்த்தி செய்யும், பொதுவான புத்தியைக் கூர்மையாக்கும். அவ்வளவேயன்றி, தீயகுணம் தீய நடக்கைகளை யொழித்து நற்குணம் நன்னடக்கைகளையுண்டாக்க மாட்டாது. மேலும் இக்கல்வியால் அகங்காரமும் பெருமையும் உண்டாகிறது. இதனாலுண்டாகும் அகம்பாவத்திற்கு வித்தியாகர்வம் என்றே பெயர். இக்கல்வியை மட்டும் கற்று மேல்போக்காக மதக்கல்வியும் கொஞ்சம் கற்றோரில் பலர் அனாவசியமான விவகாரங்களைப்பற்றி தர்க்கம் புரிந்து கொண்டும், வாதாடிக் கொண்டும் பெருங்குழப்ப முண்டாக்குவதைப் பிரத்தியட்சமாகக் காணலாம். இக்கல்வியால் செல்வமும் உலகப் புகழ்ச்சியும் பெறலாம்.

 

3 - வதாகிய கல்வியே இது நித்தியம், இது அதித்தியம், என்கின்ற மெய்யறிவை யளிக்கத்தக்கது. இதுவே ஆன்மவிலட்சணம் இன்னது, கடவுள் இலக்ஷணம் இன்னது, பிறப் பிறப்பாகிய பெரும் பிணியை யொழிக்கும் மார்க்கம் இன்னது என்று விளக்கி மெய்யறிவை யளிக்கவல்லது; இதுவே மறுமைப்பயனை யளிக்கவல்லது; காமக்குரோதாதிகளை யொழித்து சாந்தியையும் கலப்பற்ற இன்பத்தையும் அழியாப் பதவியையும் அளிக்கவல்லது. கல்வியாலடைய வேண்டிய பயனை யளிக்கவல்லது இக்கல்வயே. கல்வியால் நாம் அடைய வேண்டிய பயன் எதுவெனின் ஆன்மலாபம் பெறுவதேயாகும்.

 

"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
      னற்றா டொழா அ ரெனின்''
                 என்றார் நாயனார்f

"கல்வி கற்றதும் கேள்வி கேட்டதும்
      நின்னைக் கண்டிடும் பொருட்டன்றோ காணே''
     என்றார் தாயுமானவர்.

 

ஆதலின், அறிவாலடையத்தக்க பயனை யளிப்பது இக்கல்வியேயாகும். அறிவாலறியத்தக்கது பரம் பொருள் ஒன்றே "தன்னை யறியவதே யறிவாம் - பின்னை யறிவது பேயறி வாமே " என்று ஆன்றோர் கூறியிருக்கின்றனர்.

 

அவ்வாறு கூறுவதாலேயே முன்னைய இரண்டு கல்விகளையும் நாம் அலட்சியப்படுத்தி அவை அடையத் தகாதவை யெனக் கூறுவதாகக் கருதலாகாது. முதல் வகுப்பைச் சேர்ந்த கல்வி மற்றைய கல்விக்கும் ஆதாரமானதேயாகும். ஆனால் அதை மட்டுமே கற்று விட்டு, அதோடு இருந்துவிடுவதில் பயனில்லை யென்பதே. அதனால் மட்டுமே கல்வியாலடைய வேண்டிய பயனை யடைய மாட்டோம். அதோடு இக்கல்வி பூரணத் திருப்தியை யளிக்காது. ஆன்மார்த்தக் கல்வியொன்றே பூரணத் திருப்தியை யளிக்கவல்லது. ஏனெனில், இது அறிவைப் பூரணமாக்குகிறது. எதையறிந்தால் யாவற்றையு மறிந்ததாகுமோ, எதைக்கற்றால் யாவும் கற்றதாகுமோ, எதைக்கண்டால் யாவும் கண்டதாகுமோ அத்தகைய மூல காரணப்பொருளை யறியும் ஞானத்தையிக்கல்வி யளிக்கத்தக்கது.

 

இனி உலகில் என்ன உத்தேசத்தைக் கொண்டு யாவரும் கல்விகற்கிறார்கள் என்று பார்ப்போம். உலகில் பெரும்பாலோர் வயிறு வளர்ப்பதற்கே கல்வி கற்பது என்று கருதுகிறார்கள். சிலர் கல்விகற்றால் பொருளும் புகழும் பெறலாமென்று கருதுகிறார்கள். சிலர் நாம் ஒருவித்வானாகக் கருதப்பட வேண்டும் என்ற நோக்கங்கொண்டே கல்வி கற்கிறார்கள். இத்தகையோரில் சிலர் தங்களுக்கு உண்மையில் எவ்வளவு கல்வியுண்டோ அதைவிட அதிகக் கல்வியுடையவர்களென்று அன்னியர் தங்களை மதிக்கச் செய்ய முயன்று, உண்மையிலுள்ள சொல்ப மதிப்பையும் போக்கடித்துக் கொள்கிறார்கள். சிலர் கொஞ்சம் இலக்கண இலக்கியங்கற்ற மட்டிலேயே நமக்கு யாரும் இணையில்லை யெனக்கருதி, ஆன்றோர் நூல்களில் தங்களுக்கு விளங்காதவைகளை யெல்லாம் குற்றமெனக்கூறி வாய்கூசாது கண்டித்துப் பாபமூட்டை கட்டிக்கொள்கிறார்கள். இத்தகையோரிற் சிலர் இக்கருத்து கொண்டே ஆன்மார்த்த நூல்களிலும் இரண்டொன்றை வாசித்துவிட்டு குதர்க்கவாதம் செய்து கொண்டு இடர்ப்படுகிறார்கள். இனி மெய்யறிவைப் பெறவேண்டும் என்றகருத்தோடு கல்விகற்போர் மிகச்சொற்பம் என்றே கூறலாம். இவ்விஷயத்தில் இவர்கள் நோக்கத்தின்படி கல்வியை உத்தமம், மத்திமம், அதமம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவற்றில்,  

 

உத்தமம். - மெய்ப்பொருளை யறியக்கற்பது.
     மத்திமம். - புகழும், பொருளு மடையவிரும்பிக் கற்பது.
     அதமம். - வயிறு வளர்க்கவென்று கற்பது.

 

அந்தோ! புண்ணிய பூமியாகிய நம் பரதகண்டத்தில், அதிலும் விசேடமாக இத்தென்னாட்டில் பெரும்பாலோர் அதமக்கருத்துக் கொண்டே கல்வி கற்கிறார்கள் என்பது வெளிப்படை. மனிதனாகப் பிறந்தவன் ஜீவனம் செய்ய முயலவேண்டியது அவசியமே. நம்மவரோ ஜீவனத்திலும் அதமமான சேவகாவிர்த்தியை - அடிமைத் தொழிலையே - கௌரவமாகக் கருதி அதற்காக வேண்டிய கல்வியையே பிரதானமாகக் கற்கிறார்கள். இதனால் ஒருபோதும் க்ஷேமமடைந்து மற்ற நாட்டாரைப் போல் முன்னுக்கு வரமாட்டோம் என்பதை யுணருகிறார்களில்லை. ஆன்மார்த்தமாகிய மதக்கல்வியிலோ எள்ளளவு சிந்தனையுமில்லை.

 

நம்முன்னோர் மிக்க நுண்ணறிவோடு சரியை கிரியையாதிகளைப் பற்றிச் செய்திருக்கும் ஏற்பாட்டால், ஆங்காங்கு கோயில்களிருப்பதாலும், அப்போதைக்கப்போது அவற்றிலுள்ள மூர்த்தங்கள் வெளியில் எழுந்தருளுவதாலும், விரதங்கள், உபவாசங்கள் முதலியவை அனுஷ்டானத்திலிருப்பதாலுமே, நம்மவர் அப்போதைக் கப்போது கடவுளைச்சிந்திக்கவும், அவரைப்பற்றிப் பேசவுமாவது வழியிருக்கிறது. நமது மதக்கல்வி சற்று மின்றி, அன்னிய பாஷையில் உயர்தரக்கல்வி கற்றவர்களில் அனேகர் கடவுளை நினைப் பூட்டும் இச்சம்பவங்களைக்கூடச் சட்டை செய்வதில்லை. சுயமத உணர்ச்சி யில்லாததாலும், அன்னிய பாஷைக்கல்வியால் அன்னிய மதாசாரவாசனையின் திமிரம் மனதில் ஏறியிருப்பதாலும், இவர்கள் சரியை கிரியையாதிகளை (Nonsense! Vain Superstitions)'' முட்டாள்தனம்; வீணான மூடக்கொள்கைகள்'' என்று கூறிவிடுகிறார்கள். இவர்கள் நாஸ்திகத்திற்கு இரண்டாவது படியிலிருக்கிறார்கள். நாஸ்திகர் அடியோடு கடவுள் இல்லை என்கிறார்கள்; இவர்களோ ''கடவுள் இருக்கிறார்; ஆனால் அவரைப்பற்றி நமக்கென்னகவை'' என்ற எண்ணத்தி லிருக்கிறார்கள்.

 

நமது தாய்ப்பாஷையில் அபிமான மில்லாவிடின் நமது மதக்கல்வி கற்கவழியில்லை. இனியேனும் பெற்றோர்கள் நம் மக்களுக்கு ஆரம்பத்தில் நம் தாய்ப்பாஷையைப் போதித்து, அதன் வழியாக நம்மதத்தைப் போதித்துப் பிறகு எக்கல்வியேனும் போதிப்பார்கள்ளாயின் நம் நாட்டில் தெய்வீகஞானம் குன்றாது; தாய்நாடு எல்லா விஷயங்களிலும் பழைய உன்னத நிலையையடையும். இப்போது துரைத்தனத்தார் கல்வி விர்த்தியை நம்மவர் வசமே யொப்பித்திருப்பதால், இந்த நன்மையைச் செய்ய வேண்டியது தேசத்திற்கு நன்மை செய்யவென்று எவ்வளவோ பெருமுயற்சி யெடுத்துக்கொண்டு மந்திராலோசனை சபைகளுக்கு அவயவிகளாகச் செல்லும் நம்மவர் கடமையேயாகும் - இவர்கள் தாய் நாட்டின் க்ஷேமத்திற்குப் பாடுபடவே சென்றது உண்மையாயின், இனியும் ஆலசியம் செய்யாமல் இந்த முதன்மையான உதவியைச் செய்வார்களென்று பிரார்த்திக்கிறோம். தெய்வம் காட்டும் ஊட்டுமோ? 'கருணாநிதியாகிய பரம்பொருள் பாரதமாதாவின் க்ஷேமத்தைக்கருதி இவ்விஷயத்தில் அருள் புரிய வேண்டுமாய் அனைவரும் பிரார்த்திப்போமாக.


ஓம் தத்ஸத்.

   

ஆனந்த போதினி – 1921 ௵ - ஜனவரி ௴

 

No comments:

Post a Comment