Sunday, August 30, 2020

 கலைமகள் வழிபாடு

கலைமகள் வழிபாடு

(ரா. பி. சேதுப் பிள்ளை, பி. ஏ., பி. எல்.)

 

கலைமகள் வழிபாடு இந்நாட்டில் தொன்று தொட்டு நிகழ்ந்து வருகின்றது. வெள்ளைக்கலை படுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருக்கும் தெய்வமாக ஓவியப்புலவர் கலைமாதின் வடிவத்தை அழகுற எழுதி யமைத்தார். கவிபாடுந் திறம் பெற்ற புலவர் பாமாலைபுனைந்து கலைமகளைப் பரவிப் பணிந்தார்கள். கற்றவர் விழுங்கும் கற்பகக்கனியாய் அமைந்த கலைமாதின் பெருமையைப் புகழப்போந்த குமரகுருபர அடிகள்,'' தெள்ளமுதுண்ணும் வெள்ளை அன்ன " மாக, கலாவல்லிபைகொழுக எழுதிப் பார்த்து ஆனந்திப்பா ராயினர். இவ்வாறு நல்லியற் கவிஞர் பலரும் போற்றிப் புகழ்ந்த வல்லியின் பெருமையை பாரதியார் வாயாரவாழ்த்தும் முறை அறிந்து மகிழதற்குரியதாகும். முன்னோர் மொழிந்தபொருளைப் பொன்னே போறபோற்றும் பண்புவாய்ந்த பாரதியார்,


''வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள் வீணைசெய்யும் ஒலியிலிருப்பாள்
 கொள்ளையின்பம் குலவு கவிதை கூறுபாவலர் உள்ளத்திருப்பாள்
 உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உண்ணின் றொளிர்வாள்
 கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்துட் பொருளாவாள்”


 என்று கலைமகள் உறையும் கோவிலைக் கவிநயம் சான்ற இனிய மொழிகளால்
 எழுதியமைத்தார். வெண்டாமரையில் வீற்றிருக்கும் வல்லி, வீணை மிழற்
 றும் ஒலியில் இருப்பாள்; உண்மை ஒளி வீசும் கவிஞரது உள்ளத்திருப்பாள்;
 நிறைமொழி மாந்தர் அருளும் மறைமொழியில் இருப்பாள் என்று பாரதியார் கூறும் முறை புதியதோர் இன்பம் அளிப்பதாகும். இவ்வாறு வெள்ளை மலரிலும், வீணை ஒலியிலும், கவிஞர் மனத்திலும் முனிவர் மொழியினும் களித் திலங்கும் தெய்வம்,


 “மதர் தீங்குரல் பாட்டிலிருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
 கீதம்பாடும் குயிலின் குரலை கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்
 கோதகன்ற தொழிலுடைத்தாகி குலவுசித்திரம் கோபுரம் கோயில்
 ஈதனைத்தின் எழிலிடை உற்றாள் இன்பமே வடிவாகிடப் பெற்றாள்"


என்று எழுதி யமைத்த செஞ்சொல் ஓவியம் கற்போர் கருத்தைக் கவர்வதாகும். மழலைமொழி பேசும் மக்கள் நாவிலும், பண்ணார்ந்த பாட்டிசைக்கும்பாவையர் நாவிலும், கீதம் பாடும் குயிலின் குரலினும் கனிந்த மொழி பேசும்கிளியின் நாவிலும், கலைமாதின் நலம் திகழக் காணலாம். இன்னும் கோவில்களிலமைந்த அழகிய ஓவியங்களிலும், கோபுரங்களிலும், கலைமாதின் ஒளியேவிளங்கித் தோன்றுவதாகும். ஆகவே கண்ணுக்கினிய சிற்பமும் சித்திரமும், காதுக்கினிய குயிலின் குரலும், கிளியின் நாவும், கலைமாதின் இருப்பிட மாகுமென்று பாரதியார் பண்புறக் கூறிப் போந்தார்.

 

இத்தகைய இனிய தெய்வத்தை நம் முன்னோர் மனமொழி மெய்களால்வழிபட்டார்கள். கலைமணம் கமழும் ஏடுகளை அணியணியாக எடுத்தடுக்கிநறுமலர் மாலை புனைந்து நறும்புகை யெடுத்தார்கள். வண்ணமும் சுண்ணமும்வாரி இரைத்தார்கள். மந்திரமொழிகளால் வந்தித்தார்கள்.


''செந்தமிழ் மணிநாட்டிடை யுள்ளீர்
      சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர்
 வந்தனம் இவட்கே செய்வதென்றால்
      வாழி அஃது இங்கெளிதன்று கண்டீர்
 மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
      வரிசையாக அடுக்கிய தன்மேல்
 சந்தனத்தை மலரை இடுவோர்
      சாத்திரம் இவள் பூசனை அன்றாம்"


என்று பாரதியார் இசைத்த கவியில் இப்பூசனையின் சிறப்பின்மை இனிது தோன்றுவதாகும். அறிவினுக் கறிவாய் விளங்கும் அருங்கலைத் தெய்வம்மலரையும் மந்திரத்தையும் பொருளாகக் கருதி அவற்றால் மகிழ்ந்து அருள்செய்ய மாட்டாதென்று இக்கவிஞர் கருதுகி கின்றார். பின் அத்தெய்வத்தைப் போற்றும் முறைதான் யாதோ எனின்,


 "வீடுதோறுங் கலையின் விளக்கம்
      வீதிதோறு இரண்டொரு பள்ளி
 நாடுமுற்றிலும் உள்ளன ஊர்கள்
      நகர்களெங்கும் பலபல பள்ளி
 தேடு கல்வி யிலாத தோரூரைத்

தீயினுக் கிரையாக மடுத்தல்

கேடு தீர்க்கும் அமுதம் என் அன்னை

கேண்மை கொள்ள வழியிவை கண்டிர்"

 

என்று சலைமாதின் மனத்தை மகிழ்விக்கும் வழிகளைக் கவிஞர் துரைக்கின்றார். வீடுதோறும் கல்வியின் மணம் கமழவேண்டும். வீதிதோறும் இரண்டொரு கல்லூரி இலங்கவேண்டும். நகர்தே தோறும் பல கலாசாலைகள் நிலவவேண்டும். நாடெங்கும் கலையின் ஒளி வீசவேண்டும். கலை மணமில்லா நாடு காடாதலால் அதனை எரியினுக் கிரையாக்க வேண்டும். அதுவே நாமகள் விரும்பும் நல்ல வழிபாடாகும் என்று கவிஞர் கூறும் மொழிகள் அறிந்து போற்றத் தக்கனவாம். அஞ்ஞானமென்னும் இருளில் ஆழ்ந்து கிடக்கும் நாடு நகரங்களைச்சண்டு இக்சவிஞர் உள்ளம் எரிகின்றது. புத்தகத்தி லமைந்த பொருளைத் தேற்றும் வகையறியாத புன்மக்கள், கலைமகளுக்குரிய திருநாளில் படைய எடுகளை எடுத்தடுக்கி, பொருளருளறியா மந்திரங்களை முணு முணுத்து, பூச்சொரிந்து பொங்கலிட்டுப் போற்றும் பேதைமையை நினைந்து, கவிஞர் உள்ளம் புழுங்குகின்றது. அமிழ் தினும் இனிய தமிழ்மொழி நிலவும் திருநாட்டிற் பிறக்கும பேறுபெற்ற மாந்தர், பாமரராய் விலங்குகளாய்ப் பான்மை கெட்டு வாழும் வாழ்க்கையை நினைந்து கவிஞர் உள்ளம் வருந்து கல்வியிற் பெரிய கம்டன் பிறந்த நாட்டில் கல்லாக் கயவர் களித்துத் திரிதல் ஆகுமோ? தெள்ள முதனைய திருமறை கிளந்த வள்ளுவர் பிறந்த நாட்டில், உள்ளத்தில் இருள் செறிந்து, ஊமையராய்க் குருடர்களாய் வாழும்மக்கள் உலாவித் திரிதலாகுமோ? சிலம்பின் கதையெழுந்த செம்மை சான் தமிழ்நாட்டில் விலங்கினம் போன்ற கீழோர் புலம்பித் திரிதலாகுமோ? என்றுகவிஞர் கூறும் மொழிகளில் வேகம் அமைந்து விளங்கக் காணலாம். பூவும்நீரும் கொண்டு பூசனை பரிவதிலும், நாடெங்கும் கலையொளி பாப்புதலே நாமகளுக்குரிய சிறந்த வழிபாடாகுமென்று கவிஞர் அருளிய பொருளுரை பொன்போற் போற்றத் தக்கதாகும்.


 "இன்னருங்கனிச் சோலைகள் செய்தல்
      இனியநீர்த் தண்சுனைக ளியற்றல்
 அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
      ஆலயம் பதினாயிரம் நாட்டல்
 பின்னருள்ள தருமங்கள் யாவும்
      பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
 அன்னயாவினும் புண்ணியங் கோடி
      ஆங்கொரேழைக் கெழுத்தறிவித்தல்”


என்று பாரதியார் அருளிய கவியில் அவர் அகத்து நிறைந்து நின்ற ஆர்வம் அழகுற இலங்கக் காணலாம். அன்னசாலைகள் அமைத்தலும், ஆலயங்கள் எடுத்தலும், சாலைகள் வகுத்தலும், சோலைகள் வளர்த்தலும், சிறந்த அறக்களே யாயினும், மாக்களை மக்களாக்கும் கல்லூரிகள் நிறுவுதலே தலையாய அறம் என்று கவிஞர் திறம்பட எடுத்துரைத்தார். உடம்பை வளர்க்கும் அன்ன சாலையினும் உயிரை வளர்க்கும் கல்விச்காலை சிறந்த தென்று சொல்லவும் வேண்டுமோ? படமாடுங் கோயிலைப் பழுது பார்த்தலினும் நடமாடுங்கோயிலில் நல்விளக்கேற்றுதல் நன்றென்று நவிலவும் வேண்டுமோ? கல்லார்நெஞ்சில் நில்லான் ஈசன் என்னும் முதுமொழி உண்மையாயின் ஆலயங்கள்அமைப்பதின் முன்னரே அறிவை வளர்க்கும் கலாசாலைகள் அமைய வேண்டும் என்னும் உண்மை இனிது விளங்கு மன்றோ? இதனாலேயே கண்ணிருந்தும் குருடராய், காதிருந்துஞ் செவிடராய், மக்கள் போல் வாழும் ஏழைமாக்களுக்கு எழுத்தறிவித்தல் ஏனைய அறங்களுள் எல்லாம் சிறந்த தென்று கவிஞர் எடுத்துரைப்பாராயினர்.

 

இத்தகைய கல்விச் சாலைகள் அமைத்துக் கலைமகளைப் போற்றுதற்கு எல்லோரும் முன்வர வேண்டுமென்று பாரதியார் பறைசாற்றுகின்றார்.


''நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்
      நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்
 அதுவுமற்றவர் வாய்ச்சொல் லருளீர்
      ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
 மதுரத்தேமொழி மாதர்கள் எல்லாம்
      வாணிபூசைக் குரியன பேசீர்
 எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
      இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்"


என்று பாரதியார் கவிமுரசம் அதிர்கின்றது. நிதிமிகுந்தவரும் நிதிகுறைந்தவரும், அருளாளரும், ஆண்மையாளரும், மாதரும் மற்றையோரும் ஒல்லும் வகையால் உதவிக்கலை வளர்க்கும் பெரும்பணியில் கலந்துழைக்குமாறு பாரதியார் அழைக்கின்றார். பெரும்பொருள் படைத்தவர் அள்ளி அள்ளிக் கொடுக்கலாம்; சிறுபொருள் பெற்றவர் எண்ணி எண்ணிக் கொடுக்கலாம்; வறுமையாளர் வாயினால் வாழ்த்தலாம்; ஊக்கமிகுந்தவர் உழைப்பினை உதவலாம். மதுரமொழி பேசும் மாதர்கள் வாணியை மனமார வாழ்த்தலாம். இவ்வாறு மாந்தர் பல்லோரும் விரைந்து பணி செய்வராயின் இந்நாட்டில் அறியாமை என்னும் இருளகன்று கலைமகள் களித்து நடம் புரிவாள் என்று கவிஞர் எழுப்பிய பேரொலி இப்பொழுது எங்கும் நிரம்பி நிற்பதாகும்.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - அக்டோபர் ௴

 

 

No comments:

Post a Comment