Sunday, August 30, 2020

 

கலைக்கோயில்

"கழகத் தொண்டன்"

''உலகத்தைக் கலைவளர் கோயிலாய்க் காண்கின் முன் கலைஞன்!

பாரத நாடு கலைகளுக்குப் பேர் போன தல்லவா?''

 

சென்ற நூற்றாண்டில் மக்கள் கண்களினின்றும் மறைத்து கிடந்த கலைக்கோயில்கள் பல இந் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்டு, மாறாவின்பம் பெருக்குகின்றன. தக்காணத்தில் ஒளிர்ந்து ஓங்கும் அஜந்தா, எல்லோரா குகைகளும், பம்பாய்க்கு அருகிலுள்ள எலிபெண்டா குகைகளும், இராமநாதபுரம் ஜில்லாவில் உள்ள சித்தண்ணவாசல், சென்னைக்கு அருகிலிலுள்ள மகாபலிபுரம் குகைக் கோயில்களும், இவைகளில் ஆயிரம் - ஆயிரம் ஆண்டுகளாய் அழியாதொளிரும் கலைத் தெய்வமும் உலகத்துக் கலைஞர் உள்ளங்களை யெல்லாம் கவர்ந்துகொண்டு விட்டன.

இவை சிலவே தெரிந்துள்ளன; இன்னும் தெரியாமல் மறைந்து கிடைப்பன பலப் பலவாக விருக்கலாம். இப்படி மறைந்து கிடைப்பவைகளில் ஒன்றைத்தான் இப்போது மக்களுக்கு அறிவிக்க விழைகின்றேன்.

சென்ற திங்களில் ஓர் நாள், நண்பரொருவர் என்னைச் சந்தித்து, "தாங்கள் நாளை வல்லம் மலைக்குகையில் நிகழும் விழாவிற்கு வரவேண்டும். அங்குள்ள குகைக் கோயிலின் சிற்பங்கள் கண்கவர் வனப்புடையவை. தாங்கள் அவைகளை எப்போதும் பார்த்திருக்கமாட்டீர்கள்,'' என்று கூறியழைத்தார்.

செங்கற்பட்டு ரயில்வே சந்திப்பிலிருந்து ஒரு நல்ல பாதை திருக்கழுக் குன்றத்திற்குச் செல்லுகிறது. செங்கற்பட்டிலிருந்து ஒன்றரைக் கல்தூரம் அப் பாதையோடு சென்றால் அங்கே பாதை யருகே ஒரு குளமும், ஓர் சிறு குன்றும் நமக்குத் தோன்றும். இக் குன்று வல்லம் என்னும் கிராமத்தின் எல்லையில் உள்ளது.

திருவிழா! அதுவும், இயற்கை வனப்பு மிக்க மலையில், ''போய்த்தான் வருவோம்" என்று புறப்பட்டேன். மேற்குறித்த வல்லம் குன்றின் அடிவாரத்தை யடைந்தேன். ஆ! என்ன இனிமை. இறைவர் எழுந்தருளியுள்ள விடத்தில் நாதஸ்வாக் கச்சேரி மிக உற்சாகமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது. அங்கு பொங்கி யெழும் இசை வெள்ளம் இழிந்து வந்து என் செவிகளுக்கு இன்ப விருந்தாயின.

மலை யேறுவதற்கு நல்ல படிக்கட்டுகளில்லை. குன்றின் உயாம் 300 அடிக்கு மேலிராது. பாதி உயரம் ஏறினேன். அவ்விடத்தில் தான் குகைக்
கோயில் உளது. சுமார் நாற்பது அடி உயரம். அதே அகலமுள்ள ஓர் பெரும்பாறை. அப் பெருங்கல் அவ்வழி போந்த கலைஞன் உணர்வை எழுப்பி யிருத்தல் வேண்டும். அது மட்டுமல்ல. அவ் விடத்தினின்றும் சுற்றுப் புறங்களை நோக்க எம்மருக்கும் சண் கொள்ளாக் காட்சியாய் மிளிர்கின்றது, இயற்கை யெழில். கண்கானுந் தூரம் செருங்கிய மலைக் கூட்டம் உள்ளத்தை அள்ளுகின்றது. இவ் வழகுச் சூழலுக் இடையில்
வெள்ளம் போன்ற கலை யுணர்ச்சியைத் தேக்கி மகிழ வெண்ணினான் போலும், கலைஞன். அவ்வளவு தான். உடனே சுத்தியையும் உளியையும் கையிலெடுத்துக் கொண்டான். சுமார் இருபது அடி நீளமும் ஆறு அடி அகலமும் வைத்து நான்கு கால்களுடன் ஒரு மண்டபமும், அம் மண்டபத்தை முன்னாக்கி ஒரு ''கர்ப்பகிருஹ"மும் தோண்டினான். தோண்டியவன் முழுதையும் தோண்டி கர்ப்ப கிருஹத்தை வெற்றிட மாக்காமல், மூர்த்தியமைக்க வேண்டிய விடத்தில், மூர்த்திக்கென்று ஓர் அளவு கல்லைத்
தோண்டாமல் விட்டுப் பின், அதையே அழகிய சிவலிங்க மூர்த்தமாக வடித்து விட்டான்.

இவ்வாறே அக் குகைக் கோயிலில் உள்ள அம்பிகை, முருகன், கணபதியாகிய மூர்த்தங்கள் தனிக் கல்லில் ஆக்காமல் பாறையிலிருந்தே உருவாக்கப்பட்டுள்ளன! சிவலிங்கமூர்த்தம், ஒவ்வொரு பகுதியும் அளவோ டமைந்து, காணும் கண்களைக் கவரும் கவினுறு மூர்த்தமாய்க் கலை யொளி வீசகின்றது.

பேசுங் கணபதி.

மேற் கூறிய சிவலிங்கத்திற்கு அடுத்தபடியாய்க் கூற விருப்பது கணபதி மூர்த்தமாகும். இப் பிள்ளையார் சிவலிங்கத்தினும் மிக ஜீவ ஒளியுடன் விளங்குவது. இம் மூர்த்தம், குகை கோயில் முன் மண்டபத்திற்குத் தென் பக்கத்தில் வெளிப்பாறையில் குடைந்தெடுக்கப் பட்டுள்ளது. இவ் வுருவம் மிகப் பெரியதாயு மில்லாமல் மிகச் சிறியதாயு மில்லாது நடுத்தரமாயுள்ளது. இது வீற்றிருக்கும் பாவனையில் நான்கு கைகளுடன்
அமைக்கப்பட்டுளது. இது நேராய்ப் பாராமல், 24 டிக்கிரி பக்க வாட்டில் திரும்பிப் பார்ப்பது போல் இருக்கிறது. இப்படித் திரும்பி யிருப்பதால், அம் மூர்த்தம் தும்பிக்கையை நீட்டி எதையோ தாவுவது போன்ற பாவம் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. ஆ! தும்பிக்கையை நீட்டிடத் தாவும் அந்தப் பாவத்தில் தான் என்ன வேகம்! எவ்வளவு சுறு சுறுப்பு; சிறுவர் விளையாடுகையில் ஒருவரை யொருவர் தாவிப் பிடித்து விளையாடுவது
போல், பிள்ளையாரும் தம்மைக் காண வருவோரைத் தாவிப் பிடிக்க முயலுகின்றார். அந்தச் சிறிய கண்களில் தான் எவ்வளவு ஒளி, எவ்வளவு குறும்பு பிள்ளை யாரைப் பார்க்கப்போகும் ஒவ்வொருவருக்கும் பிள்ளை யாருடன் கூடி விளையாடலாமா வென்னும்
உணர்ச்சி கூட உந்தும்,

அவ்வளவு உத்வேகமும், படபடப்பும் ஒரு சிலையில் காண்பது வியப்பினும் வியப்பன்றோ! பூதாகாரமான ஒரு கல்லில், தன் கலை யுணர்வையும்,
கலாதீதமான தெய்வ வுணர்வையும் கலந்து, இவ்வாறு பேசுங் கணபதியை வடித்து உருவாக்கி விட்டான், கலைஞன்.

இந்தக் கணபதியின் முழங்காலை யாரோ உடைத்து விட்டனர் பாவம் இப்படிச் செய்தவன், இந்தக் கணபதியை பொறுத்த வரையில் கலையுணர்வு அற்றவன் என்று கொள்ள முடியாது. இந்தக் கணபதி, கலை யறியாதவர்க்கும் கலை பயிற்றும் ஆற்றல் உடையவரென்று அவரைக் கண்டவர் எவரும் ஒத்துக் கொள்ளவேண்டும். எனவே, அப் பிள்ளையாரின் படபடப்பையும் விஷமத்தையும் கண்டு மனம் சகியாத வொருவன் தான் கணபதியின் கொட்டத்தை யடக்கவேண்டி, முழங்காலை யுடைத்து விட்டான் போலும். அப்படிச் செய்தவன் வெற்றி யடைந்தவனல்ல. ஏன்? கால் உடைந்ததால் கணபதியின் மிடுக்கு அணுவத்தனையும் குன்றிவிடவில்லை.

 

அருள் வடிவ அம்பிகை

கணபதியைக் கண்டோம். இனி காண விருப்பது அந்த அழகுக் குன்றான அம்பிகையின் மூர்த்தம். அதோ மண்டபத்தின் இடக் கோடியில் இருக்கின்றது அம் மூர்த்தம். அது சுமார் 5 அடி உயரமிருக்கும். நான்கு கைகளுடன் நின்ற திருக்கோலமாய்க் காட்சியளிக்கின்றார் தேவியார். ஆ! என்ன அற்புதம்! எப்படித்தான் அவ்வுருவத்தை ஆக்கினானோ, அந்தக் கலை வல்லான் என்று நமக்குப் பிரமை தட்டுகிறது. தேவியின் உருவம் பகுதியாம் கலைக்கடலில் நம் மனம் அப்படியே அழுந்தி மாண்டு விடுகிறது. இச்சிலையில் கலைவாந்த தேவியின் மூர்த்தத்தைப்பற்றிக் கருத்தொன்றும் கூற முடியாது உணர் விழந்து விடுகிறோம். நாம் கோயிலின் முன் நிற்கிறோம் என்னும் நினைவு அழிந்து போய், உலகெலாம் ஈன்ற அருட்தாயே! நம்முன் வந்து காட்சி வழங்குவதாக நம்புகிறோம். அவ்வளவு அமைதியும், இன்பவுணர்வும் நமது உடம்பில், உள்ளத்தில், உயிரில் பாய்ந்து என்னவோ செய்கிறது.

தேவியின் நீள்வட்ட முகமே ஓர் தனி அமைப்பு. அந்த அருள் துதம்பும் முகத்தில் வாழும் கண்களின் அழகுதான் என்ன! கண்களுக்கான தனியியல்பெல்லாம் எப்படி அக் கண்களில் சிறப்பாய் அமைந்தனவோ! கண்கள் சிறப்பாய் உள்ளத்து உறையும் உணர்ச்சிகளை யெல்லாம் அளந்து காட்டும் இயல்பின வென்று நாமறிவோம். ஆனால், கல்லினால் ஆன அம்பிகையின் உருவத்தில் கருணை எப்படித்தான் நிறைந்திருக்கும்? ஆனால், நிறைந்திருப்பதாகவே அருளைப் பொழிகின்ற அம்பிகையின் கண்கள் காட்டுகின்றன. கல்லால் ஆன சிலை மறைந்து, கருணைத் தெய்வமே காட்சி யளிக்கின்றாள்!

ஆ! என்னே! அந்தக் கல்லுளி மங்கனின் கைத்திறம்? வெறும் கல் தூளியும், கைத்திறனுமோ தெய்வக்காட்சி யளிக்கும்?

கலைஞன் அல்லவா அளிக்க முடியும்? கலைஞன் என்றால் யாவன்? கலைஞன் கலையுணர்வும், மகத்தான கற்பனைத்திறமும் அமைந்தவனாய், அருளும்
வாய்ந்திருத்தல் வேண்டும். அருள் உள்ளத்தினின்று பொங்கி யெழும் அருளுணர்ச்சியின் தேக்கமே தான் திரண்டு அம்பிகை வடிவாய்க் காட்சியளிக்கின்றது. கலைஞன், தன் உணர்ச்சிப் பெருக்கைக் கற்சிலையிற் பெய்து, அதை உயிருடைய தாக்கி விட்டிருக்கிறான். அம்பிகையின் மூர்த்தம் கற்சிலைதானே யென்று அதன் பின் மௌனமாய் நின்றாலும், அம் மூர்த்தம் நம்மைச் சும்மா விடுவதில்லை; பேசும்படி தூண்டுகிறது. நாம் தேவியின் முன் பேசாமற் பேசுகின்றோம்! எவர் எது கோரி நிற்பினும் அவர்க்கு, அதை யளிப்பது போல் அந்த அம்பிகை மூர்த்தம் கண்ணொளி செய்கின்றது.

இவ்விதம், சடப்பொருள்களை யெல்லாம் உயிர் ததும்பும் சித்துப் பொருளாக்குவதில் கலைஞன் படைப்புக் கடவுளுடன் போட்டி யிடுகின்றான். கலைஞன் கடவுள் நெறி கண்டவன் என்பதை நாம் எவ்வளவு கண் கூடாக இந்தக் கலைக்கோயிலில் காண்கின்றோம்!

இந்தக் குகைக்கோயிலில் எழுந்தருளியுள்ள சுவாமிக்கு வேதாந்த ஈசுவரர் என்றும், அம்பிகைக்கு ஞானாம்பிகை என்றும் பெயர்.

இக் கோயிலுக்கு ஒரே கால பூசைதான். தரிசனம் செய்ய வருவோர் செங்கல்பட்டு ரயிலடிக்கு அருகில் உள்ள ஏகாம்பரநாத தேவஸ்தான குருக்களிடம் திறவுகோல் பெறலாம். அல்லது அவரையே குகைக் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து வைக்கும்படி கேட்டுக்கொள்ளலாம்.

வல்லம் கிராமம்

வல்லம் இப்போது ஓர் சாதாரண கிராமம். ஆனால் 16 ஆம் நூற்றாண்டு வரை செழுமையாய்ப், பல பெருங்குடி மக்களைத் தன்பால் உடைத்தா யிருந்தது. அப்போது அவ்வூரிலிருந்த பெருங்கொடையாளியான காளத்தியப்ப முதலியார், பல புலவர்களையும் ஆதரித்து வந்தார் என்றும், சமயாசிரியர்களில் ஒருவரான அப்பர் சுவாமிகளும் இவ்வூருக்கு வந்த தாயும் ஒரு வரலாறு கூறுகின்றது.

தொண்டநாட்டுச் சிவத்தலங்கள் முப்பத்திரண்டினுள் ஒன்றானதும், ஆளுடையப் பிள்ளையாரால் பாடப் பெற்றதுமான திருஇடைச்சுரம் என்னும் தலம் வல்லத்திலிருந்து மூன்றுமைல் தூரத்தில் உளது.

ஆனந்த போதினி – 1942 ௵ - ஏப்ரல் ௴

 



 

No comments:

Post a Comment