Sunday, August 30, 2020

 

கலியுலகக் கம்பர்

(சவிதாசன்)

நந்தமிழ் நாட்டில் தற்சமயம் "க" முதல் “ன' வரை அவதார புருஷர்கள் தோன்றி நம் தாய் மொழியாம் தமிழைப் பல வழிகளிலும் உயர்த்தி (?) வருகிறார்கள்.

எந்நேரமும் “பாவம்; பாவம்'' என்று முணுமுணுப்பது தான் இவர்கள் மந்திரம். அதில் பாவ மில்லை, இதில் பாவ மில்லை; ஆனதால் அதை வெட்டு, இதைக் கொல்லு' இது அவர்கள் தொழில். தமிழ் அன்னை செய்த பாவமோ, அன்றி நாம் செய்த பாவமோ , கம்பன் வாக்கின்படி மண் செய்த பாவமோ கண் செய்த பாவமோ, இத் திருக்கூட்டத்தைப் பாவம் பிடித்துக் கொண்டிருக்கிறது. அவ்வளவு தான். பாவம்! நிற்க.

இத் திருக்கூட்டத்திலே கம்பனே மறுபிறப்பு எடுத்து வந்தவர் போல் விளங்கும் கலியுகக் கம்பரைப் பற்றி இங்கு சில வார்த்தை சொல்ல வேண்டிய திருக்கிறது. சேவை செய்யக் கூடியவர்களைக் குற்றம் சொல்லலாமா என்று கேள்வி எழக்கூடும். சேவை என்ற பதம் தீமை என்ற பொருள் கொடுக்கும் நிலைமைக்கு வந்துவிட்டால் அந்தச் சேவை வேண்டியதே யில்லை.

இந்தக் “கம்பர்" திருத்திய பாடல் ஒன்றைக் கவனியுங்கள். அதாவது கம்பன் பாடியதாக யாரோ கட்டி விட்ட ஒரு வெண்பா: -

"மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?

உன்னையறிந் தோதமிழை ஓதினேன்? - என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ

குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு."

 

கவிகுல திலகமாகிய கம்பன் தன்னையே குரங்கென்று பொருள் படும்படி பாடக்கூடிய அவ்வளவு முட்டாள் அல்லன் என்று சொல்லி இப்பாடலோ இதன் சம்பந்தப்பட்ட கதையோ பொய்யென்று தள்ளி விடலாம். ஆனால் க. கம்பரோ என்ன செய்தார் என்று நினைக்கிறீர்கள். கடைசி இரண்டடியும் தனக்கும் வெண்பாப் பாட வருமென்று காட்டிக் கொள்ளு வதற்காகத் திருத்தி அமைத்திருக்கிறார். எப்படி யென்றால்: -

......... .........   .........   .........   .........

......... .........   .........   .........   என்னை

பரிந்தேற்றுக் கொள்ளாப் பதியுண்டோ உண்டோ

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்து.

 

நன்கு பாடிப் பாருங்கள். சந்த மென்றும், ஐதி என்றும், சீர் என்றும் அங்கம் அங்கமாகப் பிரித்துக் களிக்கும் க. கம்பரின் செப்பனிட்ட வரிகளை. ''கொள்ளாப் பதியுண்டோ.'' "கொள்ளாத வேந்து' என்றும் எழுதத் துணிந்த இவரைப் பற்றிக் கவிதைப் பண்பிலே பிறந்து பண்பிலே வாழ்பவர் என்று எப்படித்தான் அவதாரங்கள் புகழ் பாடித் திரிகின்றனவோ!

க. கம்பர் இப்படி ஏதோ சில்லறைப் பாட்டுக்களைத் திருத்திக் கொண்டு அவதார புருஷர்களுக்குள் ஒருவர்க் கொருவர் துதி பாடிக் கொண்டு மிருந்தால் நாம் ஒன்றும் இவர்களைக் கவனிக்கப் போவதே இல்லை. "ஆட்டைக்கடித்து" என்ற கதை சொல்லுவார்களே அதேபோல், . கம்பர், கம்பனின் காவிய மாளிகையே இடித்துக்கொண்டு, “ஆகா! கம்பன் சுவர்க்குஉள்ளே தான் நன்றாய்க் கட்டியிருக்கிறான்; அதுதான் கம்பன் கட்டியது. மேல் பூச்செல்லாம் நாலாந்தர ஐந்தாம்தரக் கவிஞன் பூசியது. ஆன, அவற்றை யெல்லாம் இடித்துத் தள்ளி விட்டு (பாழடைந்த) உட்சுவரைத் தான் பார்க்க வேண்டும்; கொண்டாட வேண்டும்'' என்று ஒரு கூச்சலைக் கிளப்பி விட்டிருக்கிறார். அதோடு நிற்கவில்லை. இடித்துத் தள்ளியும் விட்டிருக்கிறார். அவர் பதிப்பித்த கம்பராமாயணத்தைத் தான் குறிப்பிடுகிறோம்.

சுமார் இரண்டாயிரம் பாடல்களுக்கு மேற்பட்ட இரு காண்டங்களில் க. கம்பர். சுண்டிப் பார்த்து எழுநூறு பாடல் வரை பொறுக்கி எடுத்திருக்கிறார். அவை தான் கம்பனால் பாடப் பெற்றவை என்றும் மீதி யாவையும் செருகு கவி என்றும் அஞ்சாமல் ஆணையிடுகிறார். இவர் கொள்கையின்படி, கம்பன் ஒரு நாணயம் அச்சடிக்கும் யந்திர சாலையாக இருக்க வேண்டும். ஒரே மாதிரி நாணயம் அடித்துத் தள்ளுவதுபோல் கம்பனும் கவிதையடித்துக் கொட்டினான் என்று நம்புகிறார் போலும்.

இனி, க. கம்பர் பதிப்பித்த நூலையும் சிறிது பார்ப்போம். கம்பனின் அவையடக்கப் பாடலில்,

"முத்த மிழ்த்துறை யின்முறை போகிய

உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவன்

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்

பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ!"

 

என்று விநயமாக விண்ணப்பித்துக் கொள்ளுகிறான். இதற்குக் க. கம்பரின் பொருள் சொல்லும் அழகைக் (கைகாட்டி என்று சொல்லிக் கொள்ளுகிறார்) கண்டு களியுங்கள். “கவிஞர்கள் விஷயங்களைப் பாவனை உலகத்தில் ஏதோ ஒரு வெறி மயக்கத்தில் கண்டு பாடுவார்கள். அந்தப் பாவனை உலகத்தில் பிரவேசிக்க முடியாத சாமானிய மக்களுக்கு, எல்லாம் பைத்தியம் என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் அவை பக்தியிலிருந்தே
உண்டாவன-அதைப் பற்றிக் குற்றம் கூற யாருக்கும் பாத்தியதை இல்லை.'

“பண்டு" என்ற சொல்லுக்கு விண்டு விண்டு அர்த்தம் எழுதும் இக்கலியுகக் கம்பர் - மேலே கண்ட பாடலில் எங்கேதான் சாமானிய மக்களைக் கண்டாரோ- பாத்தியதை யில்லை என்பதைக் கண்டாரோ-யாமறியோம். பொருள் ஒன்றிருக்க மருள் கொண்டு எழுதக் காரண மென்ன? எல்லாம் தன்னைக் கலியுகக் கம்பராக மதிக்கவேண்டு மென்ற ஆசை தானே! எல்லோருக்கும் தான் ஆசை யுண்டு. அதைக் குற்றமென்று சொல்ல
வரவில்லை. அதற்காக அன்னையைக் கொலை செய்ய வேண்டாம். கூடவே கூடா தென்பது தான் எம்போன்றார் வேண்டு கோள்.

இவர் இதே ஆசையால் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நந்தமிழன்னையை வேறொரு வழியிலும் சித்திரவதை செய்து வருகிறார். அதன் கறை இந்தூல் பூராவும் படிந்திருக்கிறது.

சொல் + கொண்ட=சொற்கொண்ட

வாள் + தடம்கண்=வாட்டடங்கண்

அதன்கண்+சென்று=அதன்கட்சென்று

பொன்+ தாமரை=பொற்றாமரை.

இவை தமிழ்ப் புணரியல் முறை. ஆனால் க. கம்பர் எப்படி இவைகளை எழுதுவார் என்றால், சொல்க் கொண்ட, வாள்த் தடங்கண், அதன் கண்ச் சென்று, பொற் தாமடை என்று தம் குயுக்தி முறையில் வரைவார். தமிழ் நாட்டில் வல்லினம் மெல்லினம் இடையினம் வித்தியாசம் தெரியாமலும், புணரியல் முறை தெரியாமலும் எத்தனையோ மறு மலர்ச்சி எழுத்தாளர்' தோன்றி யிருக்கும் இந்நாளில் இவர் ஏன் இல்லாத- தகாத வழக்கத்தைப் புகுத்தி மேன்மேலும் குழப்புகிறார் என்று தெரிய வில்லை. இதைக் கண்டு பிடித்த இவரே மேல்கண்ட நூலில் பல இடங்களில் தவறியிருக்கிறார். சில உதாரணங்கள் தருவோம். ஒரு விடத்தில் வேல்ச் சனகன் என்றும் இன்னொரு விடத்தில் வேற்கண்ச்சிறு என்றும் மேற்செல, விற்கால் அனற்படு, நுட்சிலம்பி, கட்சிலம்பி, பாற்கடல்த் தரங்கம், மாத்திரையிற் கடல், நற்றவர், புண்டரீகக்கட் புரவலன் என்றும் அவரே பிழைபட எழுதி
யிருக்கிறார்.

நாம் கடைசியாக, க. கம்பரைக் கேட்டுக் கொள்வது-எச்சரிப்பது என்ன வென்றால், தாங்கள் எவ்வளவோ தமிழுக்குச் சேவை செய்திருக்கலாம். இன்னம் செய்யக் காத்துக் கொண் டிருக்கலாம். அதனால் தாங்கள்தமிழை எப்படி வேண்டுமானாலும் சிதைக்க உரிமை கிடைத்ததாகாது. உண்மையில், தமிழ் அன்னைக்கு உழைக்க விருப்ப மிருந்தால், தங்களின் தான் என்ற அகம்பாவத்தை விட்டுத் தற்சமயம் உள்ள தமிழிலே எழுதவும்.

இதை முதல் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளும்படி கூறுகிறோம். திருட்டு வழியிலே செல்வார் ஆயின், மீண்டும் மீண்டும் யாவற்றையும் ஒக் கொணர நேரும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

ஆனந்த போதினி – 1943 ௵ - ஜுலை ௴

 

 

No comments:

Post a Comment