Sunday, August 30, 2020

 

கலியுக அக்ஷய பாத்திரஙக்ள்

சென்ற துவாபர யுகத்தின் பிற்பகுதியில் பாண்டவர்கள் வனவாசஞ் செய்தகாலத்தில், தருமபூபதி, சூரியனிடத்தில் ஓர் அக்ஷய பாத்திரம் பெற்றார். அது, எடுக்க எடுக்கக் குறையாமல் அன்ன மளித்துக் கொண்டிருந்தது. அதனுதவியால் அவர், தம்முடனிருந்த சாதுஜனங்களுக்கும், மற்றையர்க்கும் விருப்பந் தீருமட்டும் அன்னமளித்துத் திருப்தி செய்து வந்தார். இவரைப்போல இக்காலத்தில் உலகத்திலுள்ள ஜனங்களைத் திருப்தி செய்வதற்குப் பால்விற்பனை செய்வோரும், மோர், தயிர் விற்போரும், பனஞ் சாறு (பதினி) விற்போரும் வருணபகவானை வேண்டி அக்ஷய பாத்திரங்கள் பெற்றிருக்கிறார்கள். வருணன், " நான் தண்ணீர்க்குழாயிலும், ஏரியிலும், கிணற்றிலும், குளத்திலும் ஜலவடிவமா யிருப்பேன்; நீங்கள் வேண்டியபோ தெல்லாம் உங்கள் பாத்திரங்களில் புகுந்து, உங்கள் பாலும் மோரும் தயிரும் பனஞ்சாறும், உருவமும் நிறமும் மாறாதிருக்கச் செய்வதோடு அவை எப்பொழுதும் பாத்திரங்களில் குறையாதிருக்கவும் செய்வேன்'' என்று அவர்களுக்கு வரங் கொடுத்திருக்கிறார். அதனால், அவர்களுடைய பாத்திரங்களிலுள்ளவைகள் எவ்வளவு விற்றாலும் குறைவதில்லை. எப்பொழுதும் அவை நிறைந்தே யிருக்கின்றன. இந்தப் பாத்திரங்களின் மூலம் வருண பகவான் இவர்களுக்கு மிகுந்த வருமானந் தேடிக் கொடுத்துச் சௌக்கியத்தையு முண்டாக்குகிறார். சாப்பாட்டுக் கடைக்காரர்களும், எடுக்க எடுக்கக் குறையாத இரச அக்ஷய பாத்திரமொன்று பெற்றிருக்கிறார்கள். இதிலும் வருணபகவான் ஜல ரூபமாய்ப் புகுந்து இரசத்தை நிரப்பி வருகிறார்.

 

இவர்களன்றி நெய், எண்ணெய், கள், சாராயம், மண்ணெண்ணெய் முதலியவை விற்போரும் தங்கள் தங்களுக்கு வேண்டிய இடங்களில் அக்ஷய பாத்திரம் பெற்றிருக்கிறார்கள். எனினும் அவை எப்பொழுதும் நிரம்பியவைகளாயிருப்பதற்குச் சில இடையூறுகளிருக்கின்றன; அவற்றால் அவர்கள் மனவருத்தப்படுகிறார்கள். நெய்க்காரர்கள், எள், குசும்பா, வேர்க் கடலை, சில மிருகங்கள் பிராணிகள் முதலியவற்றின் சத்துக்கள் தங்கள் நெய்ப்பாத்திரத்தில் நிறையும்படி அவற்றினிடம் வரம் பெற்றிருக்கிறார்கள் ஆனால் அவைகள் வந்து புகும் போது நெய்யின் மணமும் உருசியும் குறைந்து வேறு மணமும் சுவையும் கிளம்பிவிடுகின்றன; அவற்றால் அவர்களின் அக்ஷய பாத்திர இரகசியம் வெளிப்பட்டு விடுகின்றது. எண்ணெய்க்காரர்கள், குறைந்த விலையுள்ள வேர்க்கடலை முதலியவற்றின் சத்து தங்கள் எண்ணெய்ப் பாத்திரத்தில் வந்து நிறைந்து கொண்டிருக்கும்படி வேர்க்கடலையினிடம் அனுக்கிரகம் பெற்றிருக்கிறார்கள்; ஆனால், வேர்க்கடலை யெண்ணெய் புகும் போது நல்லெண்ணெயின் மணம் மாறி அந்த அக்ஷய பாத்திரத்தின் மர்மத்தை வெளிப்படுத்திவிடுகிறது. கள், சாராயம் விற்போர் தங்கள் பாத்திரம் ஜலத்தால் நிறையும்படி ஐலதேவனாகிய வருணனிடத்திலேயே வரம் பெற்றிருக்கின்றார்களெனிலும் ஜலம் புகுந்தாலும் கள், சாராயத்தில் பேதந்தெரியாதெனினும் ஆப்காரி யொன்றின் அச்சமிருப்பதால் அவர்கள் பாத்திரம் நிறைய இடையூறுண்டாயிருக்கிறது. மண்ணெண்ணெய்க்காரர்கள் தங்கள் பாத்திரங்களில் ஜலமே நிறையும்படி வருணனிடத்தில் வரம்பெற்றிருக்கிறார்களெனினும், ஜலம் சேரும் போது அந்த எண்ணெயோடு கலக்காமல் பேதத்தைக்காட்டி அக்ஷய பாத்திரத்தின் இரகசியத்தை வெளிப்படுத்திவிடுகிறது. இக்காரணங்களால், இவர்கள் அக்ஷய பாத்திரங்கள் பெற்றும் பூரண திருப்தியடையாமல், சமயம் நேர்ந்த போது தங்கள் பாத்திரங்கள் கொஞ்சம் கொஞ்சம் நிரம்ப, சிறிது மகிழ்ச்சியும், பால்காரர் முதலியவர்களின் பாத்திரங்களைப் போல் நம்முடைய பாத்திரங்கள் உதவவில்லையேயென்ற பொறாமையும், வருத்தமும், முணுமுணுப்பு முடையவர்களா யிருந்துவருகிறார்கள்.

 

இந்த இருவகை அக்ஷய பாத்திரக்காரர்களுடைய நிலைமை இப்படியிருக்க, இவர்களிடம் பால் மோர் முதலியவற்றை வாங்கி உபயோகிப்பவர், அவற்றிற்குப் பதிலாக ஜலத்தையே உட்கொண்டு ஜலம் வயிற்றைக் குளிரச் செய்வதாயிருந்தும் அதனால் வயிற்றெரிச்சல் கொண்டு இந்த அக்ஷய பாத்திரங்கள் அடியோடு ஒழியவேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திக்கிறார்கள். எண்ணெய், நெய் முதலியவற்றிற்குப் பதிலாக வேறு தாழ்ந்த சத்துக்களை வாங்கி உபயோகிப்போரும் நெஞ்செரிந்து நோய் கொண்டு அவ்வகை அவரகுறை அக்ஷய பாத்திரங்களும் அடியோடு அழிய வேண்டுமென்று ஆண்டவனைத் துதிக்கின்றார்கள். ஜனங்களுக்கு வயிற் தெரிச்சலைக் கிளப்பிவிடும் இந்தக் கலிகால அடியபாத்திரங்களை ஒழித்துச் சௌக்கியத்தை உண்டாக்குதற்கு, அதிகாரவர்க்கத்தினரும், ஆங்காங்குள்ள நகரசங்கத்தார்களும் சிறிது கண்ணோட்டம் செலுத்தினால் உலகத்திற்கு மிக்க நன்மை யுண்டாகும்.

 

நல்லுரை நவில்வோன்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஜுன் ௴

 

 

No comments:

Post a Comment