Sunday, August 30, 2020

 

கலியாணசுந்தரர் அல்லது தமிழ்க் காதல்

(ஸ்ரீ பி. ஸ்ரீ. ஆச்சாரியா.)

‘காதல்' என்பது ஒரு குணம்; அது கண்ணால் காணும் பொருளன்று என்பதை அறியாதார் யார்? எனினும், பெண்கள் ஒரு சமயம் அந்தப் பொருளை மிதிலா பட்டணத்து
வீதியிலே பார்த்து விட்டார்களாம், இராமபிரான் ஊர்கோலமாகப் போன காலத்திலே.

கண்ணினால் காதல் என்னும்

பொருளையே காண்கின் றேம்; இப்

பெண்ணின் நீர் மையினல் எய்தும்

பயன் இன்று பெறுதும் என்பார்

மண்ணினீர் உலத்து வானம்

மழையற வறந்த காலத்(து)

உண்ணுநீர் கண்டு வீழும்

உழைக்குலம் பலவும் ஒத்தார்.

 

என்று அந்தக் காட்சிக்குக் கம்பரே சாட்சி சொல்லுகிறார். இப்படியே நானும் ஒரு சமயம், “தமிழ்க் காதலைக் கண்ணினால் காண்கின்றோமே! ஆஹா, என்ன பேறு பெற்றோம்!" என்று அதிசயித்தேன். இந்தக் காட்சி, எனக்கு முதல் முதல் கிடைத்தது சாத்தூரிலே பல ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவில்.

திரு.வி. கலியாணசுந்தர முதலியார் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார். பொருளைக் குறிக்கும் சொற்பொழிவுகள், பொருளைளக் குறைக்கும் சொற்பொழிவுகள், பொருளை மறைக்கும் சொற்பொழிவுகள் எத்தனையோ அதற்குமுன் கேட்டிருந்தேன். ஆனால் அன்று நான் கேட்டதைச் சொற்பொழிவு என்றால் போதாது; பொருட்பொழிவு-சொற்கள் மறைந்த பொருட்பொழிவு-என்றாலும்போதாது. அந்தச் சொற்பொழிவைத் தமிழ்ப்பொழிவு-தமிழ்க் காதலின் பொழிவு-என்றே கருதினேன்: பருகினேன் என்றே சொல்ல வேண்டும். பொருளிலே சொற்கள் மறைந்தன. தமிழிலே தமிழ்க் காதலிலே மறைந்து விட்டார் தமிழ்க்காதலர்! எனவே, அன்று நான் கண்ணினால் தமிழ்க் காதலைக் கண்டேன், கலியாணசுந்தர வடிவத்திலே. "தமிழனாய்ப் பிறந்தபயனை இன்று பெற்றோம்!" என்று இறுமாந்திருந்தேன்.

மண்ணும் விண்ணும் ஒருங்கே வறண்டு எங்கும் தண்ணீர்ப் பஞ்சமா யிருந்த காலத்திலே, ஓரிடத்தில் அருமையாக இருந்த உண்ணுநீர் கண்ட மான் கூட்டம் பட்டபாடு பட்டது இராமனைக் கண்ட மிதிலைப் பெண்குலம் - என்று கம்பர் அந்த அழகு தாகத்தை எவ்வளவு அழகாக, எவ்வளவு அருமையாக வருணிக்கிறார்! எனக்கோ என் தமிழ்த்தாகத்தை வெளியிடவும் ஆற்றல் கிடையாது. அந்தத் தாகம் அவ்வளவு அதிகமா யிருந்ததென்பது திரு. வி. க. அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்ட பின்பு தான் எனக்கே தெரிந்தது.

பிறகு முதலியாரவர்களை விருதுநகரிலும் திருநெல்வேலியிலும் செட்டிமார் நாட்டிலும் சென்னையிலும் பல தடவை சந்தித்துப் பழக நேர்ந்தது. தமிழையும் ஆங்கிலத்தைப்போல் சக்தி வாய்ந்த ஒரு கருவியாகக் கையாண்டு, வாழ்க்கையின் பல துறைகளிலும் புதிய எண்ணங்களையும் லட்சியங்களையும் பரப்ப முடியும் என்ற அபிப்பிராயத்தை முதல் முதல் என் உள்ளத்தில் வேரூன்றச் செய்தவை திரு. வி. க. அவர்களின் சோற்பொழிவுகளும் கட்டுரைகளுமே. இவை, என்னைப் போன்ற எத்தனையோ தமிழர்களின் உள்ளங்களிலும் ஒரு புதிய சக்தியை விதைத்து, மொழிப் பற்று, சமயப்பற்று, நாட்டுப்பற்று என்ற முப்பொருளாகிய முழுச் செல்வத்தையும் விளைவித்துக்கொள்ள வசதி அளித்திருக்கின்றன.

தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களின் சன்மார்க்க வாழ்விற்கும் திரு. வி. க. செய்திருக்கும் திருப்பணிகளை "நவசக்தி" யென்ற ஒரே வார்த்தையால் குறிக்கலாம். இத்தகைய தலைப்பெயரோடு இவர் நடத்திவந்த பத்திரிகை, தமிழ்த் தென்றலாக
நடந்துவந்து தமிழர்களுக்குப் புது விருந்தாகிப் புதிய ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் அளித்தது. தமிழ்த் தென்றல் சில சமயங்களில் புயலாகவும் பரிணமித்து அரசியல் வானத்திலுள்ள நச்சுக்காற்றை அடித்துப் போகவும் உதவியது. எனினும் இந்தத் தமிழ்க்காற்று எவ்வளவு சமரசமாக வீசியதென்பதற்கு இதற்குக் கலியாணசுந்தரர் இட்டிருந்த “நவசக்தி" என்ற வடமொழிப் பெயரும் ஒரு நல்ல சாட்சியாகும்.

தமிழகத்தின் சமரஸ நவசக்தி திரு. முதலியார் வாயிலாக அரசியல், கலை, சமயம், சமூகச் சீர்திருத்தம், தொழிலாளர் முன்னேற்றம் முதலான பல்வேறு துறைகளில் இவரது வேட்கை, பழைய கடமை-வேட்கையோடு கலந்த ஒரு புதிய உரிமை-வேட்கை.
இவர் மார்க்கம் பழைய சித்த மார்க்கத்தோடு சேர்ந்த விடுதலை மார்க்கம். இவர் தமிழ்க்காதலைப் புதிய சக்தியாக உருவாக்கி விட்டது.  இத்தகைய உரிமை-வேட்கையோடு எழுந்த விடுதலைக் காதல் தான்.

இவர் அரசியலில் சுதந்திரம் என்ற விடுதலை தேடினார்; சாதி சமயக் கட்டுகளில் சமரஸம் என்ற விடுதலை தேடினார்; தமிழ்க் காதலினால் தமிழுக்கும் விடுதலை தேடினார், தமிழின் நவசக்தியிலே. விடுதலைக் காதலும் பக்திக் காதலும் தமிழ்க் காதலும்
ஒரு திரிவேணி' சங்கமம் போலச் சங்கமித்து விட்டன, இப்பெரியாருள்ளத்திலே. இந்தப் புனிதமான சங்கமம் வாழ்க்; கலியாணசுந்தர வடிவிலே வாழ்க, வாழ்க.

ஆனந்த போதினி – 1943 ௵ - ஆகஸ்டு ௴

 



No comments:

Post a Comment