Sunday, August 30, 2020

 

கர்ணனும் அர்ஜுனனும்

(து. ராஜகோபால்.)

(அர்ஜுனனின் அம்படிபட்டுக் கர்ணன் கீழே விழுகிறான். கர்ணன் தன்னுடைய அண்ணன் என்று கண்ணன் கூறியதும் அர்ஜுனன் ஓடோடியும் வந்து கர்ணனை மடியில் வைத்துக்கொண்டு அழுகிறான்.)

கர்ணன்: - யாரது? இவ்வளவு ஹிதமாகவும், அன்பாகவும் தடவிக் கொடுப்பது யார்? துரியோதனா! உன்னுடைய உப்பைத் தின்றதற்கு உழைத்து விட்டேன். என்னுடைய உடலின் சக்தி ஒடுங்கும் வரை யுத்தம் செய்தேன். அப்ப! நல்ல சமயத்தில் நீயும் வந்தாய். எனக்கு விடை கொடு. நான் வீரசொர்க்கம் செல்கிறேன்.

அர்ஜுனன்: - அண்ணா! இதோ பார், நான் துரியோதனன் இல்லை. உன்னுடைய தம்பி அர்ஜுனன்.

கர்ணன்: - யார்? விஜயனா? என்னுடைய தம்பியா? ஹ்ஹ்......ஹா......ஹும். ஜன்ம சத்ரு என் தம்பி. சபாஷ்! நெருப்பும் நீரும் உறவு கொண்டாடுவதா! உன்னுடைய சத்ரு- ஜன்ம விரோதி. இதோ மரணப் படுக்கையி லிருக்கிறேன். இப்பொழுது உன் மனம் திருப்தி யடைந் திருக்குமே. உனக்கு இன்னும் என்ன வேண்டும்?

அர்ஜுனன்: - அண்ணா! என்னை மன்னி. நான் பாவி. உலகம் இது வரை கண்டும் கேட்டுமிராத பெரியதொரு குற்றத்தைச் செய்து விட்டேன். நான் மஹா பாபி; அண்ணனைக் கொன்றவன்கணன். யாரை நான் ஜன்ம சத்துருவாக மதித்தேனோ அவரே என் அண்ணன் என்பதைச் சற்று முன் தான் அறிந்தேன்.

கர்ணன்: - அண்ணன்! பகைவனிடமும் பாசம் காட்டுவதா? இல்லை. நீ என் தம்பியல்ல. நீ என் பகைவன். பரம சத்ரு. எனக்கும் உனக்கும் உள்ள உறவு அதுதான். ஹும்......... இன்று காலை கூட யாரோ சொன்னார்கள். ஏன் உன்னுடைய தாய் குந்தி தான் சொன்னாள். நானும் எனது ஜன்ம வைரியாகிய நீயும் ஒரே வயிற்றிற் பிறந்தவர்களாம். பாம்பும் கீரியும் ஒரு வயிற்றிற் பிறந்ததென்றால் யார்தான் நம்புவார்கள்? பொய். பொய். பச்சைப் பொய். நிஜமாகவே அப்படியிருந்தால் அது பிரம்மாவின் புத்திக்கோளாறே ஒழிய வேறில்லை. அப்படிப் படைத்த அவன் பைத்தியக் காரனே. நீ அரசகுமாரன். ஆனால் நானோ...........நானோ வெறும் சாரதி மகன், சூத புத்திரன். அப்பா, மலையும் மடுவும் எங்காவது ஒன்று சேருமா? இதோ எமன் காத்திருக்கிறான். சத்ருவின் கையிலடிபட்டு வீரசொர்க்க மடையப்போகும் என் மனதை ஒரே ஒரு விஷயம் மட்டும் அரித்துக் கொண்டே யிருக்கிறது. எல்லையற்ற துக்கம் மனோவேதனை என் நெஞ்சை உறுத்து
கிறது. யாரங்கே? விருஷகேது. சாரதி.' ஒருவருமில்லையா?

அர்ஜுனன்: - அண்ணா! இதோ நானிருக்கிறேன். நான் உன் தம்பி யல்லவா! கவலைப் படாதீர்கள். வீணாக அதைரியப்பட வேண்டாம். சாந்த மடையுங்கள்.

கர்ணன்: - சாந்த மடைவதா! சாந்தி......சாந்தி. எனக்கு சாந்தி என்பது கூட உண்டா? அதோ! என் பிதா தன் கடமையை முடித்து விட்டு மேல் திசையில் மறையப் போகிறார். அதோ! அதோ! அவர் என்னையும் தன்னிடத்திற்கு அழைக்கிறார். என் கடமையும் முடிந்து விட்டது. சாந்த மடையப் போகிறேன். எல்லையில்லாத பரம் சாந்தியில் மூழ்கப் போகிறேன். உலகத்தில் இனி உனக்கு விரோதியே கிடையாது. இனி நீயே ஒப்புயர்வற்ற
வீரன். உலகமே உன்னுடையது தான். உலகம் உன்னைக் கண்டு நடுங்கும். உன் சூர தீர பராக்கிரமத்தைக் கண்டு உன்னைப் புகழும்......... ஹும். கோபமா? எனக்கு உன்னிடத்தில் என்ன கோபம்? பொறாமை, பொறாமையுமில்லை. விரோதபாவம்கூட லவலேசமும் கிடையாது. நான் உன்னுடைய சகோதரன். நான் உன்னிலும் பெரியவன்.
ஆசீர்வாதம் செய்கிறேன். உனக்கு சர்வ மங்களமு முண்டாகட்டும். வெற்றிவீரனாகத் திகழ்வாயாக. நான் மரணத்தின் முகப்பை யடைந்துவிட்டேன். எனக்கு விடுதலை கிடைத்து விட்டது. இனி நான் அமரன். ஆனால் என் மனோ வேதனை மட்டும்...

அர்ஜுனன்: - என்னிடம் சொல்லு; அண்ணா! என்னிடம் சொல்லுவதால் கட்டாயம் தங்கள் வேதனை கொஞ்சம் குறையும்.

கர்ணன்: - குறைவதா! ஹும்; அது என்னைச் சுவர்க்கத்திலும் மனதிலே மறைத்து வைத்திருந்த வேதனையை இன்று வரை வேறொருவரிடத்திலும் கூறியதில்லை. ஆனால் ...... தம்பி. இன்று உன்னிடத்தில் கூறுகிறேன். தனஞ்சயா! என்னுடைய இந்த சரீரம் எவ்வளவு அவமானத்தைச் சகித்திருக்கிறது, தெரியுமா? வாழ்வின் ஒவ்வொரு படியிலும் அவமானமும், திரஸ்காரமுமே காத்திருந்தது. க்ஷணத்துக்கு க்ஷணம் வேதனை. எனக்கு
மட்டுமா இந்த அவமானம்? இல்லை. பெற்றெடுத்த தாய்க்கும் என்னால் அவமானம். பாவம். அவமானத்தினாலும், லஜ்ஜையினாலும் புத்திரனைக்கூட இழக்கத் துணிந்தாள். என்னைப் பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டபோது அவள் மனம் என்ன பாடு பட்டிருக்கும். மாத்ரு வாத்ஸல்ய த்தை மருந்துக்கும் பெறாத பதிதன். பாலப்பருவம் நீங்கி வாலிபப் பருவம் அடைந்த பிறகாவது சுகமுண்டா? என்னுடைய சரீரத்தின் ஒவ்வொரு அணுவும் க்ஷத்திரிய ரத்தத்தால் வீர்யமடைந்து வில் வித்தை பயிலத் துடிதுடித்தது. துரோணரை யண்டி சிடை வேண்டினேன். சூத புத்திரனுக்கு நான் வித்யா தானம் செய்ய மாடேனென்று கூறி என்னை மறுத்தபோது என் உள்ளம் அவமானத்தாலும், வெட்கத்தாலும் குன்றி விட்டது. அவருடைய முகத்தில் தோன்றிய வெறுப்பு இன்னும் என் மனதை விட்டகலவில்லை. அர்ஜுனா! அந்த நிலையை உன்னால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. நீ ராஜகுமாரன். ஏழைகளும், தொழிலாளிகளும் படும் துயரமும், வேதனையும் நீ அறிய மாட்டாய். பிறகு நடந்தது தான் உனக்குத் தெரியுமே. பரசுராமரை அண்டி சிஷ்யனானேன். என்னுடைய துரதிர்ஷ்டம் அங்கும் என்னை விடவில்லை. நான் க்ஷத்திரிய னென்பதை யறிந்த என் குரு கொண்ட கோபம் இவ்வளவவ்வள வல்ல. அவர் கொடுத்த சாபம் பேரிடியென என் வித்தையைப் பற்றியது. “உன்னுடைய வித்தை எதிரியின் முன் வியர்த்தமாகக் கடவது.'' அப்பா உயிரைவிடச் சிறந்த வித்தையை இழப்ப தென்றால் யாருக்குத்தான் மனம் சகிக்கும்? இதற்குத்தானா இவ்வளவு கஷ்டம்? மானாவமானத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டுப் பொய் சொல்லவும் துணிந்தது இதற்குத்தானா? வருஷக்கணக்காக பட்ட சிரம மனைத்தும் ஒரு விநாடியில் பாழாயினவே.

உனக்கு ஞாபகம் இருக்கிறதா! அன்றொரு நாள் அஸ்திர பரீட்சை நடந்ததே. நான் உனக்கு எதிராக நின்றேன். ஜனங்கள் என்னை தேர்ப்பாகனின் புத்திரன் என்று கூறி இகழ்ந்தார்கள். துரியோதனன் மட்டும் தன்னுடைய பெருந்தன்மை காரணமாக என்னைப் புகழ்ந்தான். நான் என் திறமையை, என் சாமர்த்தியத்தைக் காட்ட எழுந்தேனே இல்லையோ, அரண்மனையில் யாருக்கோ மிகவும் உடம்பு சரியில்லை என்ற செய்தி வரவே, சபை கலைந்து விட்டது. குரு சாபம் வீண் போகவில்லை. என்னுடை திறமை
சமயத்தில் வியர்த்தமாகி மனதிலெழுந்த ஆசை மடிந்து மண்ணோடு மண்ணாயிற்று.

அர்ஜுனன்: - அண்ணா! நடந்ததைக் குறித்து வீணாக வருத்தப்படுவானேன்! சென்றதை நினைத்தால் எனக்கே வெட்கமா யிருக்கிறது.

கர்ணன்: - சென்றது சென்றது தான். ஆனால் அதன் அழியாத சின்னம் ஆளை வதைக்கிறதே. வாழ்வு முழுவதும் விதியுடன் போராடினேன். கடைசியில் விதியின் எதிரில் தோற்றும் விட்டேன். தம்பி! இது மட்டுமா? கடைசிவரை விதி சதி செய்தே விட்டது. துரோபதியின் சுயம்வரத்தன்று நான் பட்ட அவமானம். மச்சத்தை யறுத்து
மங்கையை மணக்க எழுந்தேன். ஆனால் மணமகள் கூறிய வார்த்தைகள் என் ஹிருதயத்தில் ஈட்டியெனப் பாய்ந்தது. அவள் கூறினாள்: “இந்த சூத புத்திரனா என்னை மணப்பவன்?" அவளுடைய குரலில் தொனித்த வெறுப்பும், திரஸ் காரமும் என் சக்தியையே உறிஞ்சி விட்டன. கை தானாகத் தாழ்ந்தது. குனிந்த தலை நிமிராமல் வெளி யேறினேன். கூண்டி லடைபட்ட சிங்கம் எதிரில் கூண்டுக்கு வெளியிலிருக்கும் ஆட்டைக்
கண்டும் அதைக் கொல்ல வகையின்றிக் கோபத்தை யடக்கிக் கொண்டு படுத்து விடுவதுபோல, நானும் என் கோபத்தை யடக்கிக் கொண்டேன். மானமுள்ள மனிதனுக்கு இதைவிட வேறு என்ன அவமானம் வேண்டும்?

அர்ஜுனன்: - அண்ணா! நாம் என் செய்வது? மனிதன் விதியின் விளையாட்டுப் பொம்மை. விதி ஆட்டுகிறது. நாம் ஆடுகிறோம். அவ்வளவு தான்.

       கர்ணன்: - விதி. விதிதான் இன்றும் என்னை மோசம் செய்தது. சூர்யாஸ் தமனத்திற்குள் பரமவைரி பார்த்தனைக் கொன்று வெற்றி மாலை சூடி விண்ணையும் முட்டும்படி வெற்றி முழக்கம் செய்வதாக இன்று காலை தான் பிரதிக்ஞை செய்தேன். அடுத்த நிமிடம் என் முன் குந்திதேவி நின்றிருந்தாள். நான் என் கண்களையே
நம்பமுடிய வில்லை. உண்மையில் நான் அவள் புத்திரனென்று கூறியபோது என்னையு மறியாமல் என் உள்ளம் பூரித்தது. என் மேலிருந்த பழி நீங்கிவிட்டது. நான் இனி சூத புத்திரனில்லை. நானும் உலகத்தில் தலை நிமிர்ந்து நிற்கலாம். அரசவம்சத்தின் ரத்தம் என் உடம்பிலும் ஓடுகிறது. ஆனால் அடுத்த க்ஷணம் என் உள்ளம் உடைந்தது. என் பிரதிக்ஞை என்னாவது? உப்பிட்ட வரை உதறிவிட்டுப் போவது தருமமா? மந்திரத்திற் கட்டுண்ட நாகம்போல் நான் யுத்தகளத்தை யடைந்தேன். என்றுமில்லாத வீரத்துடனும், உற்சாகத்துடனும் யுத்தம் செய்தேன் நான். யுத்தகளத்திலே ஒரு பிராமணன் என் உயிருக்கும் உயிராகிய கவசத்தை யாசித்தான். பதில் பேசாமல் அதை அவன் கையில் கொடுத்தேன். கொஞ்ச நஞ்ச மிருந்த ஆசையிலும் மண்விழுந்தது. ஆனாலும் தைரியத்தைக் கைவிடாமல் யுத்தம் செய்தேன். என் வில் திறமையினால் எத்தனை தடவை உன்னை பிரமிக்க வைத்திருக்கிறேன். பாம்பின் கால் பாம்பறியும்.
வீரனை வீரனே அறிவான். என்னுடைய சாமர்த்தியம், என்னுடைய வல்லமை எல்லாம் சமயத்தில் வியர்த்தமாகி விட்டது. விதி உன்னுடைய ரதத்தின் சக்கரத்தை மண்ணில் ஆழ்த்தியது. தவறாத குறியும் தவறியது. தலையும் தப்பியது. ஆனால் அர்ஜுனா, விதி மட்டும் சமயத்தில் சதிசெய்யாம லிருந்தால் நான் இத்தனை நேரத்தில் இப்பரந்த உலகின் ஏக சக்கிராதிபதியாகி யிருப்பேன். ஏமாற்றம். ஏமாற்றம். வாழ்வு முழுவதுமே ஏமாற்றம்.
உலகின் எந்தப் பக்கத்திலும் ஏமாற்றமே எதிர் கொண்டழைக்கிறது. என் வாழ்க்கையே ஏமாற்றப் புதையல் போலும். விதியின் சாபமே உருவாகி வந்தது போலும். என் வாழ்க்கை கீர்த்தியின்றிக் காலம் கழிந்தது. மாதா இருந்தும் மாத்ரு வாத்சல்யத்தை அநுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. குருவைப் பெற்றேன். ஆனால் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறவில்லை. வித்தையை அடைந்தேன். ஆனால் புகழை யடையவில்லை. வெற்றி என்பது சற்றேனும் இல்லை. வியர்த்தம். வியர்த்தம். வாழ்வே வியர்த்த மாயிற்று. பிரகாசத்தைப் பெற்றும், போற்றப்படாமல் வெறுக்கப்படும் வால் நட்சத்திர மாயிற்று என் வாழ்க்கை. சகோதரா! குல மரியாதை உன்னைக் கௌரவித்தது. அம்மாவின் மடியில்
ஆனந்த மனுபவித்தாய். சென்றவிட மெங்கும் சிறப்பு உன்னைத் தேடிவந்தது. வெற்றிவீரன் விஜயன் என்று பேர் படைத்தாய். நான் பெரியவன் தான். ஆனாலும் புகழ் உன்னைத்தான் தேடியடைந்தது. இகழே எனக்கு ஆபரண மாயிற்று. என்னுடைய இந்த சரீரத்தோடு என் பெயரும் மறைந்து விடும். அதைப் பற்றி நான் கவலைப்பட வில்லை. ஆனால் அந்த மனோ வேதனை லஜ்ஜை, அவமானம் இவைகளை மட்டும் என்னால் மறக்கவே முடியாது. சரி. போனது போகட்டும். மறு உலகத்திலாவது உண்மைச் சகோதரர்களாக இருப்போம். உன் மனதிலுள்ள துவேஷம் மறையட்டும். தம்பி, நான் போகிறேன். வெற்றி வீரனாக் உலகில் நீடூழி காலம் வாழ்வாயாக.

ஆனந்த போதினி – 1943 ௵ - மே ௴

 

No comments:

Post a Comment