Sunday, August 30, 2020

 

கரும்பின் வெற்றி

(ர. பா. மு. கனி.)

“செழித்த நிலம். ‘அரிதாள் அறுத்துவா மறுதான் பயிராகும்'
நெற்களங்களில் ‘மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடிப்' பார்கள். இவ்வளவு வளம் மிகுந்த நிலத்தை போக பூமி என்னாமல் வேறு என்ன சொல்ல முடியும்! நெற்பயிரில் மட்டுமா, இன் சுவையைக் கொடுக்கும் கனிகள் தான் என்ன குறைவா? அவர்கள் பேசிய தமிழைப்போல் இனிய கரும்புக்குத்தான் என்ன குறை"
இப்படி யெல்லாம் புகழுவார்கள் தென்பாண்டி நாட்டை.

இங்கு செய்யப்பட்ட கரும்புப்பயிரின் விசேஷமே தனி. இதைப் பற்றிய ஒரு அழகான வருணனையை நமக்குக் கொடுத்திருக்கிறார் குற்றாலக் கவிஞர். இந்தக் கவிஞருக்குக் குற்றால நாட்டின் நங்கையர்களின் மேல் ஒரு பொறாமை. அவர்களுடைய நலன்கள் இருக்கின்றனவே அவற்றுக்கு மேலாக ஏதாவது ஒரு பொருள் அல்லது பல பொருள்கள் இருக்கவேண்டும், அவர்கள் கொட்டம் அடங்கவேண்டும். இதுதான் அவருடைய ஆசை. அவர்கள் பேசும் போது அந்தக் குரலினிமை 'கோலக்குயிலோசை’யையும் வெல்வது கண்டு ‘இதைவிட மேலான இனிமை யுள்ளது ஏதாவது ஒன்று இருக்கக் கூடாதா?' என்று எண்ணுவார். அவர்களுடைய தோள்களை
மூங்கிலுடன் கூட ஒப்பிட முடியாமல், ‘அவற்றைவிட மேலான ஒன்று உலகில் இருக்கவேண்டும்' என்று நினைப்பார். அவர்கள் புன்னகையில் இந்த உலகமே மயங்குவதுபோல் தோன்றும் அவருக்கு, அதற்குக் காரணம் அந்தப் 'பழிதீர் வெண்பல்' தானே. அதைவிட வெண்மையான, பிரகாசம் பொருந்திய பொருள் எங்கே அகப்படும் என்று ஏங்குவார். இவற்றிற்கெல்லாம் மேலாக அவர்களுடைய பெண்மை யிருக்கிறதே-அதனால்
தானே அவர்களுக்கு இவ்வளவு செருக்கு-அதை ஒரு பொருள் வெல்ல முடியுமானால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று நினைப்பார். இத்தகைய எண்ணங்களிலேயே மூழ்கி யிருந்த அவரிடம் ஒரு நண்பர் தோல் சீவி, நறுக்கப்பட்ட சில கரும்புத் துண்டுகளைக் கொடுத்துச் சென்றார். அதைச் சுவைத்தார். அதன் ருசி, அதன் இனிமை அவர் மனதை அப்படியே கொள்ளை கொண்டு விட்டது. ஆஹா! என்ன தீஞ்சுவை! பெண்களின் மொழி இனிமையை வெல்ல ஒன்றும் கிடையாதோ என்று நினைத்தோமே, இதோ இந்தக் கரும்பு வென்றுவிட்டது'' என்று மகிழ்ச்சி யடைந்தார்.

அன்று மாலை அவர் வயல்களின் வழியாய்ப் போய்க்கொண் டிருந்தார். அங்கே ஒரு காட்சியைக் கண்டார். கரும்புகள் (கணுக்களில்) துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஒரு பக்கத்தில் கிடந்தன, வயல்களில் நெடுகக் குழிகளாகத் தோண்டப்பட்டிருந்தது.
கவிஞர் சற்றே தாமதித்தார். ஆஜானுபாகுவான ஆடவர்கள் ஆவேசத்தோடு அந்தக் கரும்புத் துண்டுகள் குவிக்கப்பட்டிருந்த இடத்திற்குப் போயினர். அவைகளை எடுத்துச் சென்று தோண்டப்பட்ட குழிகளில் போட்டு மூடினர். அன்று கரும்பு தின்றதும் தான் அதன் ருசியைப்பற்றி நினைத்ததையும் ஞாபகப் படுத்தினார். தன்னைப்போலவே தான் அந்த ஆடவர்களும் உணர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவர்கன் ஏன் கரும்புகளைத் துண்டு துண்டாக வெட்டிக் குழியைத் தோண்டி மூட வேண்டும்? அவருக்கும்
அந்த ஆடவர்களுக்கும் இதுதான் வித்தியாசம். அவர் பெண்களின் மேல் பொறாமை கொண்டார். அவர்கள் பெண்களின் நலத்தில் பெருமை கொண்டார்கள். அவர் பெண்களின் குரல் இனிமையைவிட இனிய பொருள் ஒன்று இருக்கவேண்டும் என்று நினைத்தார். அவர்கள் பெண்களின் மொழி இனிமையைவிட இனிய பொருள் உலகில் இருக்கக்கூடாது என்று நினைத்தனர். அதனால்தான் பெண்களின் மொழியைவிட இனித்த அக் கரும்பு
களின் மீது கோபங்கொண்டு அப்படித் துண்டுகளாக்கிக் குழிகளில் மூடினர் என்று கவிஞர் நினைத்தார். இவ்விதமாக எண்ணிக்கொண்டே வீடு போனார்.

சில மாதங்களாகக் கவிஞர் ஊரில் இல்லை. திரும்பி வந்தபின் அவர் திரும்பவும் அந்தப் பழைய வயல்களின் வழிமாய்ப் போனார். உயர்ந்து வளர்ந்து உலக்கை போல் பருத்த கரும்புகள் வயல் முழுதும் நிறைந்திருக்கக் கண்டார். 'இவற்றின் மீது கோபங்கொண்டல்லவா துண்டு துண்டாக வெட்டிக் குழிதோண்டி மூடினார்கள். இப்படி வளர்ந்துவிட்டனவே இவை!' என்று ஆச்சரியப்பட்டவாறே ஒரு கரும்பைத் தொட்டுப் பார்த்
தார். அதன் தன்மை பெண்களின் தோளை விட மேலாக இருந்தது. நங்கையர் மொழியைப் பழித்ததென்று புதைத்த என்ன ஆச்சரியம்! கரும்பா இப்படி அவர்களைப் பழி வாங்குகிறது! இப்பொழுது நிச்சயமாக இவை அவர்களின் தோட்களை வென்று விட்டன. இதற்கு என்ன செய்யப் போகிறார்கள் அந்த ஆடவர்கள்' என்று எண்ணியவாறே அந்த வயலின் ஒரு முனையில் பார்த்தார். அங்கே நின்றுகொண்டிருந்தனர் சில ஆடவர்கள் கையில் அரிவாளுடன். அந்தப் பக்கமாகச் சென்றார் கவிஞர். அவர்கள் அந்தக் கரும்புகளை வெட்டுகின்றனர். ஒருவன் பக்கத்தில் சென்று பார்த்தார். அவன் தன் கையிலிருந்த அரிவாளால் ஒரு கம்பை அடிக்கணுவில் வெட்டினான். அதிலிருந்து கீழே விழுந்தது மிசப் பிரகாசம் பொருத்திய வெண்மையான ஒரு வஸ்து.
அதைக் கையிலெடுத்தார் கவிஞர். அது பெண்களின் நகையைவிட எத்தனையோ மடங்கு
பிரகாசம் பொருந்தியது அம்முத்து. சரி, பெண்களின் மேல் இன்னொரு வெற்றி? இந்த முத்து அவர்கள் பல்லைவிடப் பிரகாசம் மிகுந்ததுதான், என்று அவர் சொல்வதை அந்த ஆடவன் கேட்டுவிட்டான். அவனுக்கு வந்துவிட்டது கோபம் கரும்பின் மேல், அந்தக் கரும்பை ஒடித்துவிடுவதென்று வளைத்தான். அது வில்போல் வளைந்தது. இதையும் புலவர் பார்த்தார். அவருக்கு ஒரு விஷயம ஞாபகத்திற்கு வந்தது. அதாவது 'கரும்புதான் மன்மதனுக்கு வில்லாகி, பெண்களின்மேல் பாணத்தைப்போடும் படி செய்து, அவர்களை வருத்துகிறது, அவர்கள் தங்கள் நாயகர்களைப் பிரிந்திருக்கும் போது மெலியும்படி செய்கிறது' என்று நினைத்தார். பெண்களின் மேல் பொறாமை கொண்ட புலவருக்கு, அவர்களுடைய பெண்மையை ஒரு பொருள் வெல்கிறது, அவர்களை வருத்துகிறது என்ற விஷயம் குதுகல மளிக்கிறது. அதைப்பற்றி நினைத்தவாறே நடந்தார். பெண்களின் பெருமைக்குக் காரணமான அவர்களுடைய சொல்லினிமை, தோள் அழகு, பல்லெழில், பெண்ணலம் இவற்றை வெல்லக்கூடிய ஒரே பொருளைக் கண்ட புலவருக்கு அதன் மீது ஒரு அன்பு உண்டாகிறது. தான் கரும்பின் மீது கண்ட குணங்கள் பெண்களின் நலன்களை எப்படி வெல்கின்றன என்பதை ஒரு முறை நினைவுபடுத்திப் பார்த்தார். அவ்வளவு தான். கரும்புபாடல் பெற்று விடுகிறது. இதோ பாட்டு:

"அந்நலார் மொழிதன்னைப் பழித்த தென்(று)

ஆடவர் மண்ணில் மூடுங்கரும்பு

துன்னிமீள வளர்ந்து மடந்தையர்

தோளைவென்று, சுடர் முத்தம் ஈன்று

பின்னும் அங்கவர் மூரலை வென்று,

பிரியுங் காலத்தில் பெண்மையை வெல்லக்

கன்னல் வேளுக்கு வில்லாக ஓங்கும்...”

 

[அக்கலார்-அம் நல்லார்-அழகிய பெண்கள், துன்னி-நெருங்கி, மூரல் பல், பெண்மை-பெண்ணுக்குரிய நலம் (அழகு), கன்னல் வேள்-கரும்பு வில்லுடைய மன்மதன்.]

ஆனந்த போதினி – 1942 ௵ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment