Sunday, August 30, 2020

 

கருட வாகனனையே மணப்பேன்

(K. S. சடகோப ராமாநுஜ நாயுடு.)

கொஞ்ச காலத்திற்கு முன்பு, மிகுந்த விஷ்ணு பக்தியுள்ள அரசன் ஒருவன் இருந்தான். அவனுடைய மகள், தன் தகப்பன் பகவத் காலக்ஷேபம் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது தானும் கூட இருந்து கவனித்துக் கொண்டிருந்ததாலும், அரசன் விஷ்ணு பக்தர்களை அதிகம் ஆதரித்ததால், பக்தர்கள் அரசனிடம் கருடவாகனனாகிய நாராயணனுடைய பெருமையையும் அவன் கல்யாண குணங்களையும் வர்ணித்துக் கொண்டிருக்கும் பொழுது, இச்சிறுமி கவனமாய்க் கேட்டுக் கொண்டிருந்ததாலும், நாளடைவில் இவளுக்கும் விஷ்ணு பக்தி முதிர்ந்துவிட்டது. மேலும், ''பக்தி யுள்ளவர்களுக்கும், தன்னைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறவர்களுக்கும், பகவான் ஸுலபன். உதாரணமாக 'அவனைத் தவிர வேறொருவரையும் மணம் செய்துகொள்ள மாட்டேன்' என்று ஆண்டாள் என்னும் பக்திமதி ஒருத்தி வைராக்யெமாக இருந்து முடிவில் அவனையே மணந்தாள்'' என்று அவர்கள் சொல்லியதைக் கேட்டதிலிருந்து, இந்த ராஜகுமாரியும், கருடவாகனனாகிய நாராயணனை யன்றி வேறொருவரையும் மணம் செய்து கொள்வதில்லை என்று விரதம் பூண்டாள்.

சில நாட்களில் ராஜகுமாரியும் விவாகபருவத்தை யடைந்தாள். அநேக தேசத்து இராஜாக்கள் வந்து பெண் கேட்டார்கள். யார் வந்தாலும் "அவ்பக்கு கருடவாகனம் இருக்கிறதா?'' என்று கேட்டே எல்லோரையும் திரும்பிப் போய் விடும்படி செய்து வந்தாள். இப்படி யிருக்க ஒரு நாள் அந்த ராஜ வீதிவழியே போய்க் கொண்டிருந்த காமுகன் ஒருவன், உப்பரிகையின் மேல் நின்று கொண்டிருந்த ராஜகுமாரியைப் பார்த்து மயங்கி, 'இனி இவளைத் தவிர வேறொருவரையும் மணம் செய்து கொள்வதில்லை' என்று விரதம் பூண்டான். ஆனால் தனக்குக் கருடவாகன மில்லாமையால், அவளை எப்படி யடையப் போகிறோமென்று நாளுக்கு நாள் ஏங்கினான். இவன் சரீரம், நாளுக்கு நாள் மெலிந்து வருவதின் காரணத்தை யறிந்த இவன் தகப்பன் ஆசாரி வகுப்பினனாதலால் மரத்தால் அழகான கருட வாகனம் ஒன்று செய்து, அதற்குள் ஆகாயவிமான யந்திரத்தை வைத்து, அதன் மேலேறி ஆகாயத்தில் பறக்கும்படி தன் மகனுக்குக் கற்றுக் கொடுத்தான். உடனே காமுகனானவன், இந்த கருட வாகனத்தின்மேல் ஆரோகணித்துச் சென்று, ராஜகுமாரி இருக்கும் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். கருடவாகனன் அரசன் மூலமாகத் தன் எண்ணத்தை ராஜகுமாரிக்குத் தெரிவிக்கவே, அவளும் கடைசியாக கருட வாகனனாகிய நாராயணனே வந்து விட்டதாகச் சந்தோஷித்து, விவாகம் செய்துகொள்ளச் சம்மதித்தாள். மறுநாள், ராஜகுமாரிக்கும் கருட வாகனனுக்கும் சகல சம்பிரமத்துடன் விவாகம் நடந்தேறியது. அதன் பிறகு, கருடவாகனன் தினந்தோறும் இரவில் ராஜகுமாரி இருக்கும் அந்தப்புரத்தில் தங்கி யிருப்பதும், பகலில் தன் சயனமாகிய திருப்பாற் கடலுக்குப் போக வேண்டுமென்று சொல்லிவிட்டு, தன் கிராமத்திற்கு வந்து விடுவதுமாக இருந்தான்.

இங்ஙனம் சில நாட்கள் செல்ல, அயல்தேசத்து அரசன் மேற்கண்ட ராஜ குமாரியின் தகப்பனோடு யுத்தத்திற்கு வருவதாகச் சொல்லி யனுப்பினான். கருட வாகனனே மருமகனாக இருப்பதால், அரசனும் பயமின்றித்தானும் யுத்தத்திற்குத் தயாராக இருப்பதாகச் சொன்னான். இந்த சமாசாரத்தைத் தன் மருமகனிடம் சொல்லும்படி தன் குமாரத்திக்கு அரசன் சொன்னான். அன்றிரவு, கருட வாகனன் வந்தவுடன் தகப்பன் கூறிய விஷயத்தை அவனிடம் சொல்லவும், கருட வாகனன் “அதற்கென்ன ஒரு க்ஷணத்தில் எதிரிகளைத் தொலைத்து விடுகிறேன்" என்று அலக்ஷியமாய்ச் சொல்லிவிட்டான்.
அடுத்த நாள், யுத்தம் ஆரம்பமாகி விட்டது; எதிரிகள் பாணப் பிரயோகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கருடவாகனராகிய ஆசாரியார் இன்னது செய்வதென்று தெரியாது, கையைப் பிசைந்துகொண்டு விழிக்கிறார்.

இந்த நிலைமையில் உண்மையான கருட வாகனனாகிய பகவான் யோசித்துப் பார்த்தார். “ஓஹோ, இதேது! நம்பேர் கெட்டுப்போய் விடும்போல் இருக்கிறதே! ஆசாரியாராகிய கருடவாகனன் தோற்றாலும் நாம் தோற்றோ மென்று தானே ஜனங்கள் சொல்லுவார்கள்'' என்று நினைத்து, பகவான் கருடன் மீது ஆரோகணித்து வர அதன் இறகின் காற்று பட்டமாத்திரத் தில் எதிரிகள் மடிந்து போனார்கள். இதைக்கண்ட ஆசாரியாராகிய கருடவாகனன், "நான் சொன்படியே, ஒரே க்ஷணத்தில் எதிரிகளைத் தும்சம் செய்துவிட்டேன் பார்த்தீர்களா?'' என்று தோள் தட்டினான்.

இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தென்ன வென்றால், மையாக ஒருவன் பக்தனாக இல்லாவிட்டாலும், உலகத்தார் அவனைப் பக்த னென்று சொல்லி விட்டால், அதற்காக பகவான் அவனுக்கு மோக்ஷம் கொடுத்து விடுவார். பரிபக்குவமான பக்தி ஒருவனுக்கு வராவிட்டாலும், பக்தனென்று லோகப்ரஸித்தம் வந்தாலே போதுமானது.

ஆனந்த போதினி – 1937 ௵ - ஜனவரி ௴

 

 

No comments:

Post a Comment