Sunday, August 30, 2020

 

கம்பன் கற்பித்த சாபம்

(P. N. வைத்தியநாத சுவாமி, B. Sc.,)

இராவணனின் காதல் நிலையை எடுத்துக்கொள்வோம். ஒரு விதத்தில் அது காமங் கலப்புள்ளது என்று அறிஞர்கள் கொள்ளலாம்; அதையும் ஏற்றுக்கொள்ளலாம்.

தங்கை சொல்கிறான்; ஜனகன் பாவையின் ஜகன்மோகனாகாரத்தில் அறிவை இழக்கிறான் இலங்கை மன்னன். அவள்பால் மனதைப் பறி கொடுக்கிறான்; இல்லை, இல்லை ஊழ்வினையால் உயர்ந்த மன்னன் சாய்சிறான்; மாதை மனச்சிறையில் வைக்கிறான் புறச்சிறையில் கொணரு முன்.

தனக்கே உரியவள் சீதை; இவ்வாறு எண்ணுகிறான் இலங்கைநாதன். நாடு துறந்து காடு வந்த நம்பி; அவன் அணைப்பிலோ இந்நங்கை இருப்பது என்று எண்ணுகிறான். ஆகையால் அவளைப் போய் வஞ்சனையாகப் பற்றிக் கொணர்கிறான்.

இங்கு தான் வாசகர்களுக்கு சந்தேகமெல்லாம் எழும். மாயா மானை அனுப்பி வஞ்சசம் செய்து ஏன் ஜனகன் மானைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்கலாம்.

தனக்கே உரியதான பொருள், அவன் அருகில் வாழக் கொஞ்சமும் அருகதை இல்லாத பொருள்; - இவ்வாறு நினைத்த பின்னும், காதல் கொண்ட அப் பொருளைச் கடிதில் கொண்டுவர இலங்கைநாதன் எது செய்யினும் அது அவ்வளவு இழுக்காகுமோ?

கேவலம் காம இச்சையால் மாத்திரம் சீதையைப் பற்றிக் கொணர்ந்து
விடவில்லை இராவணன்; புறச்சிறை வைக்குமுன் மாதை மனச்சிறையில் வைக்கிறான்; அவளை எண்ணியே உருகுகிறான். இதுவே வீர மன்னனின் உண்மையான காதல் நிலை.

ஆனால் வாசகர்கள் கேட்கலாம்; அன்னியன் மனைவிபால் இவன் காதல் கொள்ளலாமா என்று. இதுதான் அவன் ஊழ்வினை. இலங்கை மன்னன் இழுத்து அணைந்து இன்பந்தாரானோ என்று எத்தனையோ பெண்கள் ஏங்கி நிற்கிறார்கள்; அப்படியிருந்தும் ஒருவன் சுவைத்த எச்சல் உடம்பில் இவன் காதல் அலைகள் எல்லாம் மோதுகின்றன; அவளது அனர்த்தகாலம் அல்லது வேறு என்னவென்று சொல்ல முடியும்?

சீதையை சிறை வைத்த துண்மை; ஆனால் அவள் கற்பை அழிக்க அவன் முயலவில்லை. நயத்தாலும் பயத்தாலும் அவள் மனதைத் தன்வயப்படுத்தவே முயற்சிக்கிறான். அவளை வலிய இழுத்து அணைத்திருக்கலாம்; பலாத்காரத்தால் மிருக இச்சையைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்ய நினைக்கவும் இல்லை இலங்கைநாதன்.  கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐந்து சுகம் பைந்நொடி கண்ணே உனது மெய்யே; ஆனால் அவளும் ஒத்த மனதினனாய்
ஈடுபடும்போதே அந்த ஐந்து சுகங்களின் ஆனந்தமுண்டு. சாமகீதம் பாடிய மன்னன் இந்த காமகீதத்தையும் நன்கு அறிவன். கேவல மிருக இச்சை மாத்திரம் கொண்டதல்ல இலங்கைநாதன் உள்ளம். இரு உடல் சேர்க்கை மாத்திரமல்ல, இரண்டு உள்ளங்களின் கலப்பே உண்மை இன்பமாகும். இதை யெல்லாம் கரைகண்ட இராவணன் மீண்டும்
வேண்டுகிருன் அவள்பால்.

இந்த அரிய உள்ளத்தை கம்பன் படுகொலை செய்துவிட்டான் தன் காவியத்தில் கம்பன் பாட்டொன்றுக்கு பல லட்சம் பொன்கள் தரலாமென்பது நிச்சயம்; ஆனால், வடநாட்டு சீதையின் கற்பினுக்குப் பெருமை தர, தமிழ்நாட்டிற்கே தகுதியானதென்று கருதப்பட்ட கொள்கைக்காக இலங்கைநாதனின் அருங்குணத்தை கம்பன் மறைத்தது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இந்தப் பாட்டைக் கவனிப்போம்.

"அன்ன சாவ முனதென வாண்மையான்

மின்னு மௌலியன் மெய்ம்மையன் வீடணன்

கன்னி யென்வயின் வைத்த கருணையாள்

சொன்ன துண்டு துணுக்க மாற்றுவாள்."

 

இதில் வரும் அன்ன சாபம் நமது ஆராய்ச்சிக்குரியது. அதாவது பிரமன் ஒரு சமயம் இராவண்ணுக்குச் சாப மிட்டானாம். அவள் சம்மதியின்றி பிற மாதரை இலங்கைநாதன் தொட்டால் அவன் தலை வெடிக்குமென்று. இதற்கேற்ற மற்றோர் பாட்டைப் பார்ப்போம்,

“மேவு சிந்தையின் மாதரை மெய்தொடில்

தேவு வன்றலை சிந்துக்கதீதெனப்

பூவின் வந்த புராதனனே புகல்

சாவ முண்டென தாருயிர் தந்ததால்."

 

இந்த பிரமன் சாபத்தை விளக்கி இலங்கை வீழ, ஐந்தாம் படையாய் அமைத்த வீடணன் கன்னி உரைக்கிறாள்.

வான்மீகத்தில் இவ்வித சாபத்தைப்பற்றின பேச்சே கிடையாது. முன் சொன்னது போல் சீதை சிறப்புற கம்பன் செய்த கற்பனை இது. அநுமனிடம் அசோகவனத்தில் தன்நிலை உணர்த்தும் சீதை இவ்வாறு பேசுகிறாள். சாபத்தால் இராவணன் தன்னைத் தீண்டான்; தன் கற்பில் பழுது இல்லை என்கிறாள் பாவை.

இராவணன் உயிரைக் கொன்றது இராமன். ஆனால் அவனது புனிதமான புகழை இப்பாட்டு கொல்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் இன்று சொல்கிறார்கள். இலங்கைநாதன் தினசரி குறிப்புகள் எழுதி வந்தானாம், இன்று. நாம் டைரி எழுதுவதுபோல். அதில் அவன் சீதையோடு பேசிய சந்தர்ப்பங்களையும் அதன் விளைவுகளையும் குறித்து இருக்கிறானாம். அதிலெல்லாம் காரிகையின் மனதை மாற்றவே முயன்றதாகக் காண்கிறதாம் இவ்வளவு உயரிய மன்னனின் இசைக்கோர் மாசாக நிற்கிறது இப் பாட்டு. நம் பெருமை குன்ற நம் கம்பனே கற்பனை செய்துவிட்டான்.

ஆனந்த போதினி – 1942 ௵ - மார்ச்சு ௴

 

 

No comments:

Post a Comment