Sunday, August 30, 2020

 

கம்பன் கவிகளில் இடைச் செருகலா?

(மா. வே. தேவராசன்)

திரு. டி. கே. சிதம்பரநாத முதலியார் B. A., B. L., அவர்கள் மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்பது ஒப்ப, தாம் பிடித்த முயலுக்கு மூன்று காலே தான் எனச் சாதித்து வருவதைப் பார்க்கப் பகுத்தறிவாளர்களின் மனம் புண்ணாகவே செய்கிறது.

முதலியாரவர்கள், புகழ்க்கம்பன் வாய் மலரில் பிறந்த வாசகத்தேனைச் சொட்டுச் சொட்டாகச் சுவைத்துப் பார்த்து இனிக்கும் தேனை மட்டும் எடுத்துக் கொண்டு சற்றுப் புளிக்கும் கள்ளை வீசி யெறிகின்றனர். இம் முனயில் வரவேற்க வேண்டிய பகுதியும் ஒன்று உண்டு. “கம்பராமாயணம் போல விரிகிறதே!'' என்று இனி நாம் வெறுப்புற்றுச் சொல்லாதவாறு, கம்பராமாயணத்தை மிகக் கையடக்கமாகச் சுருக்கி வருகின்றனர். இம்முறை - நம் நாட்டுப் புலவர்கள் (பாரதத்தில் நல்லாப் பிள்ளையும், சீவகசிந்தாமணியில் கந்தியார் எனும் அடிகளும், தேவாரத் திருப்பதிகங்களில், வெள்ளியாரும் பல் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடிச் சேர்த்த) முறைக்கு முற்றிலும் மாறாக, பாட்டுக்களைப் பிடுங்கி எறியும் வேலையில் சேர்த்திருக்கிறார். இம்முறைக்கும் சு. ம. காரர்கள் நூலையே. எரிக்கும் முறைக்கும் பெரிதும் வேறுபாடு இல்லை. கிடக்க. பால காண்டம் 1420ம் அயோத்தியா காண்டம் 1212 பாவும் ஆக 2632 பாக்களில் கம்பர் பாடியதாக முதலியார் கண்ணுக்குத் தெரிவன 730 பாட்டுக்களேயாம். இதை நோக்கின், அந்த 730 பாக்களும் அவர் இயற்றியவையாகத்தான் கொள்ள இடமேது? ஒரு புலவர் எப்பொழுதும் நல்ல பாக்களையே பாடுவார் என்று எதிர் பார்ப்பது தவறு. நல்ல பாக்களை மட்டும் வேண்டுமானால் பொறுக்கி எடுத்துக் கொள்ளலாம். அன்றி (2632க்கு) 730 பாக்களை மட்டுமே கம்பர் எழுதியவை என்று கூறுவதும் அறிவுடைமை யன்று. அதற்குத் தக்க காரணமாகப் பாக்களில் காணப்படும் சுவையும் நடையுமே அமையா. ஏன்? பாரதிதாசன் அவர்கள் “முருகன் துதி யமுது" என்ற பாக்களைப் பாடிய அதே வாயால் இன்று நாத்திகப் பாடல்கள் பாடுகிறார். இதனால், முருகன் துதி யமுது பாரதிதாசன் பாடிய தல்ல என்று கூறுவது பெரும் புளுகாகும். எனவே, இத்தகைய தமிழ்ப் பாக்களைத் திருத்தித் தம் அறிவிற் கேற்ப அமைத்துக்கொண்டு பிரசுரம் செய்யும் முறை கண்டிக்கத்தக்க தாகும். இது நிற்க.

முதலியார் அவர்களைத் தமிழர்கள் பலர் வன்மையாகக் கண்டிப்பதாக அறிந்து, திரு. இராஜாஜி அவர்கள் தூக்கிப் பேசுகின்றனர். முதலியார் அவர்கள் பெரியவர் என்றும், வாழ்வில் பல இடையூறுகட்கு இடையில் தமிழ்த் தொண்டு செய்யும் அவர் மனதைப் புண்படுத்தக் கூடாது என்றும், பதிலாக அவரைப் போற்றி ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டுகிறார். அவர் தம் வேண்டுகோள், “பெரியவரான ஒருவர் குற்றம் செய்து விட்டாலும் போற்றிக் கொள்ளவே வேண்டும்" என்ற கொள்கையை வற்புறுத்துவதுடன் தனிப்பட்ட ஒரு மனிதர் வாழ்க்கைக்கும் பொதுவுடைமையாகிய தமிழ்க்கும் தொடர்பு கற்பிப்பதும் பொருளற்ற வாதமே யாகிறது. எனவே டி. கே. சி. யின் முறையைத் தமிழன்பர்கள் கண்டிக்க வேண்டுவது. இன்றி யமையாதது. அது நிற்க,

முதலியார் தம் முத்தொள்ளாயிரப் பதிப்பு வெளியீட்டில், அவர் கண்ட இலக்கண முடிபே கையாளப்பட் டிருப்பதைக் காண வருந்தாமல் இருக்க முடியாது. அம்முறையைக் கையாளத் தொடங்கினால் தமிழில் சொற்கள் பல திரிய வேண்டியுள. எடுத்துக் காட்டாக ஒன்று.

''நல்த்தாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தால்ப்போல்க்

கல்த்தாரைக் கல்த்தாரே காமுறுவர்-கல்ப்பிலா

முது காட்டில்க்...........”

 

கற்பு=கல்ப்பு ஆகவும், சொற்கள்=சொல்க்கள் ஆகவும், கற்றல்= கல்த்தல் ஆகவும், நட்பு= நள்ப்பு ஆகவும், வெட்கம்=வெள்க்கம் ஆகவும், திரிந்து விகாரப்படுதல் காண்க.

எனவே திரு. முதலியாரவர்கள் முறை முற்றிலும், இலக்கண, இலக்கிய, மொழி இயல், அறிவியல் முறைக் கெல்லாம் மாறானதா யிருப்பதை உணர்ந்து மறுத்தொழிக்க வேண்டாவோ?

இப் புணர்ச்சி, ல், ள் எழுத்தின் முன் தகர முதல் மொழியில் மட்டுமே சில இடங்களிலே மயக்கம் விளைக்கிறது. அதனால், இதற்கு ஒரு திருத்தம் செய்ய வேண்டுவது அவசியம். இத் திருத்தமும் ஆன்றோர்களே செய்து காட்டி யுள்ளனர். அஃதாவது இது, தொல்+காப்பியம்=தொற்காப்பியம் என்றாக வேண்டும். இன்றும் வழக்கு முறையிலும், பந்தல்+குடி=பந்தற்குடி என்றும், சாயல்+குடி=சாயற்குடி என்றும் புணரவேண்டியிருந்தும், அவை முறையே தொல்காப்பியம் பந்தல்குடி சாயல்குடி என்றே
வழங்குகின்றன. இவற்றை யெல்லாம் ஆராய்ந்து நடுநிலைமையோடு பார்த்தால், உண்மை விளங்கும். அவையாவன: -

1. திரு. T.K.C. எழுதும் முறை எப்படியும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அவர் முறை சிறிதும் அறிவுக்குப் பொருந்த வில்லை.

2. பொருள் விளங்கும் வரையிலும் சொற்களைப் புணர்த்தி எழுதுவதில் குற்றமில்லை.

3. பொருள் விளக்கம் வராது என்று தோன்றும் இடத்தில், புணசர்ச்சிகளை நீக்கி தனித்தனிச் சொல்லாக இயல்பு புணர்ச்சியில் எழுதுவதுதான் சிறந்தது.

4. ல், ள் முன் வரும் தகர முதன் மொழிகளைக் கூடிய மட்டிலும் திரிக்காமலும், வருமொழி தகர ஒற்றை மிகுக்காமலும் இயல்பாகவே எழுத வேண்டும்.

5. ல், ள் முன் ஏனைய க, ச, ப, கார முதன் மொழிகளை வழக்கம் இலக்கண விதிப்படி எழுதலாம். தகார மொழியிலும், பொருள் விளங்குமிடம் புணர்த்தி எழுதுக.

சான்று: - (1) தொல்காப்பியம். (2) நற்றமிழ். (3) கட்குடம். {4} பெருமாள் தேவர். (5) கதிர்வேல் தலைவர். (6) நட்டல். என்பனபோல் பொருள் விளங்குமாறு எழுதுவது நலம். இம்முறைக்கு அன்பர் முதலியார் என்ன தடை சொல்கின்றார்?

ஆனந்த போதினி – 1943 ௵ - ஜுன் ௴

 

No comments:

Post a Comment