Sunday, August 30, 2020

 

“கம்பன் இலக்கியத்தின் முன் நாம்.”

(வீ. செல்லராஜ்)

18-3-43 "விடுதலை'' யில் "செல்லராசரே கேண்மின்” தலைப்பின் கீழ், 14-3-43 ''ஆன னந்தபோதினி''யில் எதை எரிப்பது'' என்ற கட்டுரையில் நான் எழுதியவற்றை மறுத்து திரு.
ஏ.வி.பி. ஆசைத்தம்பி என்பவர் வெகு காரசாரமாக எழுதியிருந்தார். 'மானம்', 'வெட்கம்', 'இழிகுணம்', 'ஐயகோ' முதலிய காரமான சொற்களைத் தாராளமாகச் சேர்த்திருந்தார்.

“மறையவன் நாவில் நாமகள் உறைவது உண்மையானால் அவள் மலஜலங் கழிப்பது எங்கே?" என்று ஏதோ ஒரு பெரிய கேள்வியைக் கேட்டுவிட்டதாக எண்ணிப் "பாட்டுக்குப் பாட்டெடுத்த தோடு' தமிழர்களின் குறிக் கோட் பத்திரிகையும், தமிழ் நாட்டில் வயதில் முதிர்ந்ததுமான ''ஆனந்தபோதினி"யை “ஆரிய அடிவருடி ஏடு" என்று தாக்கி விட்டதாக எண்ணி சந்தோஷப்படவும் நண்பர் மறந்து விடவில்லை. பேச்சு சுதந்திரத்
கும் "எல்லோரும் சரிசமானம்" என்ற கொள்கைக்கும் பாடுபடும் இந்நாளில் தன் தேர்ந்த கொள்கையை ஆதரிப்பது ஒரு பத்திரிகையின் குற்றமன்று. “யாரானாலென்ன என் இஷ்டத்
திற்கு வணங்க வில்லையேல் திட்டுவேன்” என்றபடி நண்பர் “ஆனந்தபோதினி" யையும் தாக்கியது அவர் தன் “கொள்கை” யை நிலைநிறுத்தியது போலாகும். இனி விவாதத்திற்கு வருவோம்.

“ஐயகோ, தோழரே! “சிரிப்பதோ, அழுவதோ என்ன செய்வதோ” என்று தெரியாத நீங்கள் இரண்டும் செய்யாமல் வெட்கித் தலைகுனிய வேண்டும்'' என்று எனக்கு அன்புடன் கட்டளை யிடுகிறார். ஆம், நான் வெட்கித் தலைகுனிய வேண்டியது தான். ஏன்? "ஐயோ, என் உயிரினுமினிய கம்பனையும் எரிக்க கம்பனின் சந்ததியே முன் வந்ததே" என்று அழுவேன். “ஒரு சிலர் - ஏதாவது செய்ய வேண்டும் என்ற கருத்தோடு காரணமில்லாமல்
ஏதாவது சொன்னால் நாம் ஏன் அழவேண்டும்?'' என்று சிரிப்பேன். இப்பொழுது, “உலகத்தின் மற்றைய முன்னேற்ற நாடுகளெல்லாம் இலக்கியத்தை உயிரினும் மேலாகக் காப்பாற்றி வைக்கத் தீவிர முயற்சி யெடுத்துக்கொண் டிருக்கும்போது, என் தமிழ்நாட்டில், என் சகோதரர்களிற் சிலர் "தமிழ்க் கம்பனை எரிக்கவேண்டும்" என்று எழும்பினால் பிற நாட்டினர் முன் நான் எப்படித் தலைநிமிர்ந்து நடக்க முடியும்?'' என்று வெட்கித் தலைகுனிகிறேன். நண்பர் ஆசைத்தம்பி என்னை அவரின் ஆசைத்தம்பியாக எண்ணி இம்மாதிரி செய்யும்படி கட்டளையிட்டதற்கு நான் மிகவும் கடமைப்பட்டவ னாவேன்.

“ஆளுக்கொரு நீதி வழங்கும் இராமனை” கம்பன் கனவு கண்டதே கிடையாது. ஆசிரியருக்கு அவன் அடங்கி நடந்தான். பெற்றோருக்குக் கீழ்ப்படிந்தான். மனைவியிடம் களங்கமிலா அன்பு செலுத்தினான். சகோதரருக்கு அவன் வஞ்சகம் செய்யவில்லை.
தன் கீழ் வேலை செய்வோருக்கு அவன் சம அந்தஸ்தும் அன்பும் செலுத்தினான். "ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது," குகனுக்கு “இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்தான்.” “சீதை உன் தோழி; என் தம்பி உன் தம்பி; நீ என் தோழன்” என்று குகனைத் தழுவிக் கொண்டான். கம்பன் சிருஷ்டித்த இந்த இராமன் "ஆளுக்கொரு நீதி காட்டினான் என்பதற்கு இடமேயில்லை, அசோக வனத்திலே சிறை வைக்கப்பட்டிருந்த சீதை இராமனை யுன்னி
வருந்தும் போது அவனின் பராக்கிரமத்தையும் அழகையும் எண்ணி யெண்ணி யுருகவில்லை. “ஆழநீர்க் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு (குகனுக்கு) 'எம்பி நின் தம்பி, நீ தோழன், மங்கை கொழுந்தி' எனச்சொன்ன ஆழி நண்பினை உன்னி அழுங்வாள்.” என்றே அவளின் சமத்துவ ஆர்வத்தைக் கம்பன் ஆனந்தமாக வருணிக்கிறான். தன்னைக் கண்ட அநுமனையும், அவள் “அம்மையாய் அத்தனாய் அப்பனே அருளின் வாழ்வே" என்று கூறிக் கூறிப் புகழுகிறாள். அவன் எப்படி ஆளுக்கொரு நீதி கொண்டிருக்க முடியும்? சுமந்திரனை நோக்கிப் பரதன் "இவன் யார்?” என்று குகனைச் சுட்டிக் காட்டி வினவ, “உங்கள் குலத்தனி நாதற்கு (இராமனுக்கு) உயிர்த்துணைவன்'' என்று அவன் கூறுவனாகில் ஆளுக்கொரு நீதி அவன் செலுத்தியிருக்க முடியுமா? “அந்தணனும் தனைவணங்கும் குகன்'' என்று ஒரு எளிய வேடுவனைக் கம்பன் கூறுகிறான். பரதனும் குகன் காலில் விழுந்து வணங்கியதாக வருணிக்கிறான். வால்மீகி குகனே பரதன் காலில்
வீழ்ந்ததாகக் கூறுவதைக் கம்பன் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கவரிமான் இனத்தவன் அல்லவா கம்பன்? ஆகவே, ஒரு பெரும் அரசன் ஒரு வேடன் காலில் வீழவும் அனுமதித்த கம்பன் சுத்தத் தமிழர் இராமாயணத்தையே உண்டாக்கினான் என்பதற்குச் சிறிதும் ஐயம் கிடையாது.

உயரிய குணங்களை உயர்த்திப் பேச கம்பன் பின் வாங்கினானில்லை. இராமனிடத்துக் கண்ட உயர் குணங்களை “இராமன் வடநாட்டான்'' என்பதற்காக அவன் மறுக்கலில்லை. மேலும் கம்பனுடைய இராமன் தமிழன் என் றபோது கம்பன் அவனை உயர்த்திக் கூறக் கூசவில்லை. அதற்காகக் குருட்டுத் தனமாகப் பின் பற்றவில்லை. இராமனிடத்துள்ள அதிகப் பற்றுதலினால் ஏனையோரிடத்தே காணும் உயர் குணங்களை அவன் கண்டு புகழாமலிருக்கவில்லை. “இராமனைத் தேடி அரசுதர வந்த பரதனின் தியாகத்தை உன்னி, “ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்ம!" என்று ஆச்சரியப் படுகிறான். அதேபோல் இரவணனின் பின் வாங்கா வீரத்தை கம்பன் வாய்குளிர, மனங்குளிரப் புகழுகிறான். ஆனால் “அறம் வெல்லும் அதர்மம் தோற்கும்” என்பது கம்பனின் அடிப்படையான கொள்கை. இலங்கையிலே எல்லோரும் தன்னை அதைரியப் படுத்த எண்ணி “சீதையை இராமனின் முன் விட்டு மன்னிப்புக் கேள்" என்ற போது இராவணன் அதைரியப் படவில்லை. ''படைக்கலம் படைத்த வெல்லாம் கெட்டின் வெனினும் வாழ்க்கை கெடாது நற்கிளியனாளை விட்டிட எண்ணியோ நான் பிடித்தது" என்று சீறித் தன் ஆண்மையை வெளிக் காட்டுகிறான். "மைந்தனென்; மற்றையோரென்; எஞ்சினீர் வாழ்க்கை வேட்டீர்; உய்ந்து நீர் போவீர், நாளை ஊழி வெந்தீயினோங்கிச் சிந்தினன் மனிதரோடும் குரங்கினைத் தீர்ப்பன்” என்று தனியே நின்று போரிடவும் துணிகிறான் சுத்த வீரன் இராவணன். இவ்வளவெல்லாம் இராவணனைப் புகழ்ந்த கம்பன்,
ஏன் இராமனை அவனினும் உயர்த்திக் கூறுகிறான்? இதற்குக் காரணமில்லாமலில்லை.

ஹிட்லர் ஒரு வீரன் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவன் தன் வீரத்தை உலக அழிவிற்கும் சுயநலத்திற்கும் உபயோகிக்கிறான். அவனை நாம் வெறுக்காதிருக்க முடியாது. உலக விரோதி என்று சொல்ல நாம் முன் வருகிறோம். இதே
போல் இராவணனும் ஒரு வீரன். அவன் தன் வீரத்தை அதர்ம வழியிலே செலுத்தினான். அதை மட்டும் கம்பன் வெறுத்தான். இராமனும் ஒரு வீரன். அவன் தர்மத்திற்காகத் தன் வீரத்தைச் செலவு செய்தான். ஆகவே அவன் வெற்றி பெற்றான். "அறம் வெல்லும்” என்னும் இயற்கை நியதியை இராவணன் தமிழன் என்பதற்காகக் கம்பனே யல்ல; நமது பெரியார் ஈ.வெ.ரா.அவர்கள் கூட அவனை மட்டும் போற்றி இராமனை வெறுக்க முடியாது.
நண்பரே கூறுகிறார், “ஆளுக்கொரு நீதி செலுத்தும் அரசன் ஆரியனாக இருந்தாலென்ன; தமிழனாக இருந்தாலென்ன" அவனை வெறுக்க வேண்டும் என்கிறார். அதே போலத்தான் கம்பன் எண்ணினான். ஆயினும் இராவணனை வதைக்கும் போது கம்பன் அழுது அழுது அயர்ந்தான். வாடினான், வதங்கினான். அந்தச் சோகக் குறியை அவன் யுத்த காண்டத்தின் பிற்பகுதியிலே காணலாம். அதிலே கம்பனின் இனிய சுவை இல்லை. அவனின் வானளாவிய கற்பனை காணாமற் போயிற்று. “இதுவும் கம்பன் பாடியதா?'' என்று ஐயுறும் வண்ணம் அமைந்திருக்கிறது. இராவணன் இறந்தபின் கம்பன் எப்படி முன்போல் ஆர்வம் காட்டியிருக்க முடியும்? கண்ணும் கருத்துமாக வளர்த்த தமிழனல்லவா இராவணன் கம்பனுக்கு!

இறுதியாக இராம ராஜ்ஜியத்தைப் பற்றிக் கம்பன் பாடவேயில்லை. அதை ஒட்டக் கூத்தர் பாடியதாகச் சரித்திரம் கூறுகிறது. இராவணன் இறந்தபின், இராமன்
ஆண்டாலென்ன? இறந்தாலென்ன? ''அறம் வெல்லும் என்ற ஒரு கொள்கைக்காக மட்டும் இராவணனை - தன் அன்பார்ந்த தமிழ் வீரனை - கம்பன் தன் கையாலேயே கொன்றான். இனி தன் கவிதைக்கு வேலை யென்ன? கைசோர்ந்து அத்துடன் முடித்து விட்டான்.
இராமராஜ்ஜியத்திலே வால்மீகியின் காவியத்தின்படி அட்டூழியங்கள் நடந்திருக்கலாம். அவற்றைக் கம்பன் எழுத எண்ணவில்லை. “இராவணனைக் காண்போம் காண்போம்”
என்ற ஆர்வத்திலே கம்பன் ஆரம்பத்திலிருந்த வானளாவிய கற்பனையோடு கவிதை
செய்துகொண்டு வந்தான். சுந்தர காண்டத்திலே இராவணனிடம் அதிகமான தொடர்பு வைத்துக்கொள்ளும் போது, அவனின் கவிதை உச்ச நிலையை அடைந்தது. அதன் பின் இராவணன் இறந்தான். அத்துடன் கம்பனின் கவிதாசக்தியும் இறந்தது. இவ்வித தமிழபிமானங்கொண்ட கம்பனை எரிக்க எண்ணும் போது நான் முன் சொன்னபடி சிரிப்பதா, அழுவதா?

மேலும், விதண்டா விவாதத்திலே என் பொழுதைச் சிதைக்க விரும்பவில்லை. நண்பர் மானக்கேடான விஷயங்கள் என்று இராமாயணத்திலே கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டு வெட்கப் படுகிறார். நண்பரே! தாங்கள் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. நாம் “இராமன் பெரியவனா இராவணன் பெரியவனா” என்று வீண் விவாதம் செய்வதைவிட "கம்பனின் இலக்கியச் தேனினும் மிக்கதா? தேவாமிர்தத்தினும் மிக்கதா?'' என்று வாதிடுவோமானால் தமிழ் நாட்டிற்கு எவ்வளவோ நன்மை அதை விட்டு இருக்கிற இலக்கியத்தை - ஏன் இருக்கிற இலக்கியங்களுக் கெல்லாம் கதிரவன் போன்று விளங்கும் கம்பராமாயணத்தை - அதன் கதையை வைத்துக் கொண்டு எரிக்க விரும்பினால் நாம் என் செய்வது? கம்பனின் கவியமுதத்தில் விழுந்து அனுபவிக்கும் எனக்கு இராமன் ஆரியனா திராவிடனா என்று எண்ண முடியுமா? வானிலே திரியும் மேகங்களைக் கண்டு இன்புறும் ஒருவன், கீழே கிடக்கும் குப்பையைக் கண்டு மகிழுவானா? தேவாமிர்தம் உண்ணும் ஒருவன், கடையிலே புழுதி யடைந்து கிடக்கும் பணியாரத்தின் மேல் ஆர்வங் காட்டுவானா? நண்பரே! கம்பனின் கவியமுதை உண்ணுங்கள். கதை சம்பந்தமாக எத்தனை விவாதம் செய்து கொண்டாலும், கம்பனின் இலக்கியச் சுவைக்கு வரும்போது நாம் ஒன்றாவோம். ஆராய்ந்து பார்க்கும் போது கம்பன் கவிதா சக்தியின் முன் நாம் இருவரும் தோளோடு தோளாகச் செல்லும் இரு இணைபிரியாத் தமிழர்க ளாகவே இருப்போம் என்பது என் தீர்ந்த முடிவு.

ஆனந்த போதினி – 1943 ௵ - ஏப்ரல் ௴

No comments:

Post a Comment