Sunday, August 30, 2020

 

கம்பர் திருநாள்

பங்குனி அத்த நன்னாள்! இந்நாளில்தான் தமிழ்த்தாய் மணிமுடி சூடிய திருநாள். தமிழ் மொழியும் கலையும் புத்துயிர் பெற்ற திருநாள். ஏன்? கவியரசர் கம்பர் தாம் யாத்த இராமாயண யாரத்தை, தமிழன்னைக்கு அழகுற புனைந்த புனித நாள் அந்தப் பங்குனி அத்த நாளில் தான். இன்றைக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் 'பங்குனி யத்த நாளில்' கம்ப நாடர் இராம காதையாகிய காவியத்தை அரங்கேற்றினார் என்று பெருமைப்படக் கூடிய நன்னாள் அது! '',. . . . . . . கம்ப நாடன் பண்ணிய இராமகாதை பங்குனி அத்த நாளில் கண்ணிய அரங்கர் முன்னே கவி அரங்கேற்றினானே' என்று கம்பராமாயணம் அரங்கேற்றப் பட்ட நாளைக் குறித்துப் புலவர் ஒருவர் பாடியுள்ள செய்யுளை வைத்துக் கொண்டு தாம், கவியரசர் கம்பர் திருநாளை நாம் கொண்டாட வேண்டியிருக்கிறது. ஆமாம்; கம்பர் பெருமான் பிறந்த நாளோ அல்லது அவர் அமரத்துவம் அடைந்த நாளோ நமக்குத் திட்டமாகக் கிடைக்காததனால் தான், அவர் இயற்றியுள்ள சிரஞ்சீவித்துவம் வாய்ந்த அரும்பெரும் காவியமான இராமாயணம் அரங்கேற்றப்பட்ட திருநாளை, கம்பர் திருநாளாகக் கொண்டாட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். என்ன செய்வது? நம் மூதாதையர் நிலையும் நாட்டு நிலையும் அவ்விதம் இருந்திருக்கிறது. நம் பண்டைக் கவிஞர்களையும், கலைஞர்களையும், மகான்களையும் பற்றித் திட்டமான வரலாறுகளை அறிய முடியாமலிருக்கிறோம்.  நாம் மட்டும் என்ன?


"அன்னியர்கள் தமிழ் மொழியை அறிந்தோர் பார்த்து

அதிசயித்து ஆசை கொள்ளும் கவியாம் கம்பன்
தன்னையிந்த தமிழுலகம் மறக்கலாமோ!

சரியாகப் போற்றாத தவறே போலும்!
என்ன விதம் எங்கிருந்தான் என்றும் கூட

ஏற்பதற்காம் சரித்திரங்கள் ஏனோகாணோம்;

இன்னமும் நாம் இப்படியே இருக்கலாமோ?
      இழிவன்றோ தமிழரெனும் இனத்துக் கெல்லாம்.''


என்று நம் காலத்தில் ஜீவிய வந்தராய் இருக்கும் தேசீயகவி வெ. இராமலிங்கம் பிள்ளை தாய் மொழிப் புலவரைப் போற்றாத நம் பேதமைக்கு இரங்கிப் பாடியிருக்கிறார்.

 

நம் முன்னோர்கள் தாம் என்ன காரணத்தாலோ, கவிஞர்கள், கலைஞர்கள், மகான்களுடைய வாழ்க்கை வரலாறுகளைச் செப்பமாக எழுதி வைக்கவில்லை யென்றால், நாமும் அவ்விதம் இருப்பது நியாயமா? அவ்விதம் இருந்தால், நாம் நாட்டுப் பற்று, மொழிப் பற்று, சமயப் பற்று அற்றவர்கள் என்று பழிக்கப் படுவதுடன், புலவர்கள், புரவலர்கள், பெரியார்களைப் போற்றாத புன்மையாளர்கள் என்று அவப்பெயருக்கும் நாம் ஆளாக நேரும். இடைக்காலத்தில் இருந்த நம் முன்னோர்கள், அன்னிய அரசாங்கத் தொடர்பாலோ, அன்னிய கலை நாகரிகங்களின் மீது ஏற்பட்ட மோகத்தாலோ என்னவோ, நம் மொழி, கலை, சமயங்களின் மீது பற்றின்றி அலட்சியமாய் இருந்து வந்ததனால் தான், மொழி வளம் குன்றியது; கலை ஞானம் அருகியது; சமய உணர்வு இல்லாதொழிந்தது, அவர்கள் செய்த தவறைத்தான் தற்கால சந்ததியாராகிய நாம் அனுபவிக்கிறோம் என்று சொல்ல வேண்டும். ஆகவே, இடைக்காலத்திலுள்ளவர்களைப் போல், நாமும் நமது நாடு, மொழி, கலை, சமயங்களின் மீது பற்றின்றி வீண் வாழ்க்கை நடத்தி வருவோமானால், நமது கவிகளையும், கலைஞர்களையும் மகான்களையும் வீரர்களையும் போற்றாது அலட்சியமாய் இருப்போமானால், நமது பிற்சந்ததியாரும் நம் கதியை அடைவார்கள் என்பது கூறாமலே அமையும்.

 

மேனாட்டார், தங்கள் கவிஞர்களையும், பேரறிஞர்களையும், வீரர்களையும், மகான்களையும் போற்றி வருகிறார்கள். ஷேக்ஸ்பியர், மில்டன், ஒர்ட்ஸ்வொர்த் முதலிய கவிஞர்களுக்கு நிரந்தரமான ஞாபகச்சின்னம் ஏற்படுத்தி யிருக்கிறார்கள். அவர்கள் பிறந்த இடங்களையும், உபயோகித்த பொருள்களையும் பொன்னே போல் போற்றி வருகிறார்கள். நம்மவர்கள் அந்நற் பழக்கத்தைப் பின்பற்றி ஒழுகுகிறார்களா? என்றால் பெருபாலும் இல்லை யென்றே சொல்ல வேண்டி யிருக்கிறது.

 

தமிழ் மொழிக்கே, இலக்கியத்துக்கே கதியெனச் சொல்லத் தக்க கம்பர், திருவள்ளுவர், இளங்கோ அடிகள் முதலிய மகா கவிகளை குறித்து நம்மக்கள் பெரும்பாலாருக்கு ஒன்றுமே தெரியாது. மேற் குறித்த கவிஞர்கள் பிற நாட்டுக் கவிஞர்களுக்கு எந்த வகையிலேனும் பிற்பட்டவர்களா? "பூர்வீகக் கிரேக்கருக்கு ஹோமர் எப்படியோ, ரோமருக்கு- வர்ஜில் எப்படியோ, இத்தாலியருக்கு டாண்டி எப்படியோ, ஆங்கிலேயருக்கு ஷேக்ஸ்பியரும் மில்டனும் எப்படியோ, வடமொழிக்கு வால்மீகி எப்படியோ, அப்படியே தமிழருக்கும் கம்பர் பெருமை கொடுக்கிறார்” என அறிஞரொருவர் கூறியிருக்கிறபடி, நம் கவிகள் மற்றெக் கவிகளுக்கும் கவிதைப்பண்பில் குறைந்தவர்களல்லர். இன்னுங் கேட்டால் ஒரு விதத்தில் மேம் பட்டவர்களென்றே கூறவேண்டும்.

 

"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதிலை, என்று நமது வரகவி பாரதியார் பாடியிருப்பதொன்றே நாம் கூறுவதற்கு போதிய சான்றாகும். பாரதியார் இதை உயர்வு நவிற்சியாகக் கூறவில்லை; உண்மையாகவே கூறி யிருக்கிறார். ரெவரண்டு பெஸ்கி, ஜி.யு. போப் முதலிய மேனாட்டு அறிஞர்களும் ஒப்புக்கொண்ட தாகும். அப்படி, நமக்கு மங்காத பெருவாழ்வும், கடல் கடந்த நாடெல்லாம் பாராட்டத்தக்க பெருமையும் அளித்து உலகிலேயே பிற நாடுகளிடையே தமிழ்நாட்டைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்த கம்பர் போன்ற மகாகவிகளை எவ்விதம் போற்ற வேண்டும் என்பதை நாம் சொல்லவும் வேண்டுமோ!

 

முன்னை விட, இப்போது தமிழ் நாட்டின் பல பாகங்களிலும் திருவள்ளுவர், கம்பர் முதலிய கவிஞர் திருநாள் களை நம்மவர்கள் விழாவாகக் கொண்டாடித்தான் வருகிறார்கள். இவ்வாண்டும் கம்பர் திருநாள் சென்னைமாநகர் உட்பட தமிழ் நாட்டின் பல விடங்களிலும் கொண்டாடப் பட்டுத்தான் வருகிறது. ஆனால், இதுமட்டும் அமையாது. “புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்றும், "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு” என்றும் வார்த்தையளவில் புகழ்பாடி விடுவதால் மட்டும், அவர்களைப் போற்றி விட்டதாகாது, மேனாட்டார், ஷேக்ஸ்பியர், மில்டன் முதலிய கவிகளுக்குக் கௌரவமளித்து வருவதுபோல், கம்பர் முதலிய மகா கவிகளுக்கு நிரந்தரமான ஞாபகச் சின்னம் ஏற்படுத்த வேண்டும். ஒன்பதாம் நூற்றாண்டில் கவியரசர் கம்பர் பிறந்த சோழநாட்டைச் சேர்ந்த பக்கலிலுள்ள திருவழுந்தூர் ஊரை, தமிழ் மக்களெல்லாம் சந்ததி சந்ததியாகச் சென்று கண்டு வணங்கும் புனித க்ஷேத்திரமாக்க வேண்டும். 'கம்பன் மேட்டை உலகிலுள்ளா ரெல்லாம் வந்து காணும் கண்காட்சிக் குரிய இடமாகச் செய்ய வேண்டும், கம்பன் போன்ற கவிஞர்களைப் போற்றாதிருக்கும் வரை தமிழ் மக்களுக்கு உயர்வில்லை; விமோசனமில்லை.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - ஏப்ரல் ௴

 

 

No comments:

Post a Comment