Sunday, August 30, 2020

 கம்பர் கவியின் செந்தமிழின்பம்

 

ஆராய்ச்சி அறிஞர் மிகுந்த இக்காலத்தில், இராமசரிதையை உண்மையாய் நடந்த சரித்திரம் என்பர் பலர், அன்று என்பர் சிலர். ஆனால் காய்தல் உவத்தல் அகற்றி ஆராயுமிடத்துக் காணும் உண்மைகள் சில நம்மிந்திய நாட்டின் பூர்வீகப் பழங்குடியாய் வாழ்ந்துவந்தவர் தமிழர் என்பதும் வடநாடிருந்து தென்னாடு போந்தவர் ஆரியர் என்பதும், இவர்களில் ஒருவரது உரிமையை ஒருவர் கைப்பற்ற முயல மற்றவர் தம் முரிமையைக் காப்பாற்ற முயல, இருவருக்கும் இயற்கையாய்ப் போர் விளைந்த தென்பதும் இப்பெரும் போரில் ஒரு சிறு பகுதியே இராம காதையா மென்பதும் ஆராய்ச்சியாளர் துணிவு; இதுவே சரித்திர ஆசிரியர்கள் கண்டறிந்த உண்மையுமாகும். ஆனால் வான்மீகி முனிவர் இச்சரிதையை, தம் கற்பனா சக்தியினாலும் கவியலங்காரத்தாலும், பன்னலமும் பல பொருளும் பொருந்த அமைத்து காவிய உலகத்தை அணி செய்வாராயினர். ஆனால் அவர் ஆரியரானமை பற்றி அச்சரித்திரத்தின் ஒரு பகுதியினரான ஆரியரைத் தேவர்,
சுரர் என்று போற்றியும், மற்றொரு பகுதியினரான திராவிடரை, அரக்கர் வானரர் என்று தாழ்த்தியும் கூறியதோடமையாது, நூல் முழுவதிலும் ஆரியருடைய பழக்க வழக்கங்களையே அமைத்துக் காவியத்தை முடிப்பாராயினர். இக்காதையைத் தமிழில் யாத்த கவியரசர் கம்பர் பெருமான், வான்மீகியின் முதனூலைப் பின்பற்றி இந்நூலை எழுதுகின்றேன் என்று கூறினாலும் காவிய முழுவதிலும், தமிழ் மொழியின் தனிப் பெருமையினையும் தமிழகத்து மக்களின் ஒழுக்கத்தின் விழுப்பத்தினையும் அவர்தம் பழக்க வழக்கங்களையும், தமிழ் மாதர் நிறையையுமே போற்றிப் புகழ்கின்றார். இத்தைய இடங்கள் கம்பர் காவியத்தில் பலவுள். இந்த இடங்களிலேதான் கம்பரது கவியின் செந்தமிழ் இன்பம் பொங்கி வழிகின்றது. "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே'' என்று பாரதியார் அருளிய உண்மையை இவ்விடத்துத் தான் காணலாம்.

 

கவியரசர் கம்பர் பெருமான் தமிழ் மொழியினையும் அதன் தொன்மையினையு முணர்ந்து, "என்று முளதென் தமிழ் இயம்பி இசை கொண்டான்” என்றும், "நீண்ட தமிழா லுலகை நேமியினளந்தான்'' என்றும் தமிழின் தனிப்புலவரான அகத்தியரைப் போற்றுகின்றார். இவ்விடத்துக் கம்பரது கவிநலம் பெரிதும் விளங்குகின்றதன்றோ. தமிழ் மொழியினை உணர்ந்த கம்பர் என்றுமுள தென் தமிழ் என்றும், நீண்ட தமிழ் என்றும் போற்றிய தோடமையாது இத்தமிழக மக்கள் இம்மொழி அகத்தியர் நாவிலே பிறந்தது என்ற ஓர் தவறான கொள்கையுடையவர்களா யிருக்கின்றார்கள் என்பதையும் உணர்ந்தவராய் அக்கொள்கையை அகற்றுவான் விரும்பி அத்தென் தமிழை இயம்பி இசை கொண்டவரே அகத்தியர் என்று கூறுகின்றார். ஆகவே தமிழ் மொழியானது அகத்தியரால் படைக்கப்பட்டதன்று என்பதும், அம்முனிவரே தமிழின் இனிமையை உணர்ந்து அம்மொழியினைக் கற்று அம்மொழியில் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பிப் புகழ்பெற வாழ்ந்த பெருமகன் என்பதும் வெள்ளிடை மலைபோல் விளக்க முறுவதாயிற்று.

ஆனால் அகத்தியரைத் "தமிழெனும் அளப்பருஞ் சலதி தந்தவன்" என்றும், “தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்" என்றும் போற்றும் கம்பர் கவியின் பொருள் தானென்னை என்று சிலர் வினவலாம். இவ்விடத்தில் தமிழ்மொழி ஆழமறிய முடியாத ஓர் பெருங்கடல் என்பதும், அக்கடலினை உலகில் நிமிர்ந் தேறவிட்ட பெருமையே அகத்தியருக்குரிய தென்பதும் வலியுறுத்தப்படுகின்றது. தமிழின் தொன்மையைக் குறிக்கவே உம் சாரவழக்காக, தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் என்றும் கூறப்பட்டதே யொழிய வேறன்று. இதன்றி இம்மொழி அக்கடவுளிடத்திருந்தாவது அகத்தியரிடத்திலிருந்தாவது உதித்தது என்று கொள்வது பெரும் பேதைமையேயாகும். தமிழின் இனிமையை உணர்ந்த கம்பர் "வண்டு தமிழ்ப் பாட்டிசைக்குந் தாமரையே" என்று அதன் இனிமையைப் போற்றிப் புகழ்கின்றார். “தமிழினுமினிய தீஞ் சொற்றையல்" என்ற நைடதத்தார் வாக்கும் இங்கு நோக்கத்தக்கது. "தமிழென்ப தினிமை நேர்மை" என்பர் சூடாமணி யார். அழகொழுகும் தமிழ் மொழியின் இனிமை அனுபவித்தவர்கட்கே புலப்படும். கம்பர் கவியின் செந்தமிழின்பத்தை உணர்ந்த தமிழ் பெருமக்கள் பலரும் அவ்வினிமையை நுகர்ந்தவரே யாவர். நிற்க.

 

இனி, கவியரசர் தமிழ் மொழியில் மட்டுந் தானா பற்றுடையராய் விளங்குகின்றார் என்று பார்த்தால் அன்று. இத்தமிழ் மொழி பேசப்படும் நகரங்களெல்லாம், அவரது கவிகளால் புனைந்து கூறப்படும் பேறு பெற்றன. ''காவிரி நாடென்ன சழனி நாடு" என்று கோசலை நாடு வர்ணிக்கப்படுகின்றது. ஒரு நாட்டிற்கு உவமைகூற வேண்டியிருந்தால் இந்நாடு கைலாயத்தை ஒக்கும், வைகுண்டத்தை ஒக்கும், தெய்வ உலகத்தை ஒக்கும் என்று கூறுவதே கவிமரபாகும். ஆனால் இயற்கைக் கவி நலம் வாய்க்கப்பெற்ற கவியரசர், "கண்ட பொருளில் கணப்பவரன்றிக் காணாப் பொருளில் கணிப்பதற் கறியார்" என்னும் விதிபற்றித் தாம் பிறந்து வளர்ந்த காவிரி நாட்டை ஒக்கும் அக்கோசலை நாடு என்று கூறுவது அவரது தேசீயத்தையும் கவியின் இயற்கை நலத்தையும் பெரிதும் விளக்குகின்றது, இத்துடன் "தெய்வப் பொன்னியே பொருவுங் கங்கை'' என்று கங்கா நதி போற்றப்படுவது நம் கவனத்தைக் கவரும் ஓர் இடமாகும். இன்னும் இவர் பாண்டி நன்னாட்டைப் பற்றிக் குறிக்குங் காலத்து,


அத்திருத்தரு நாட்டினை அண்டர் நாடு
ஒத்திருக்கும் என்றால் உரை யொவ்வுமோ
எத்திறத்தினும் ஏழுலகம் புகழ்
முத்தும் முத்தமிழம் தந்து முற்றுமோ."

 

என்று கூறுஞ் செவ்வி கம்பர் கவிநலத்தால் அமைந்த பொருளாகும். தமிழ்காட்டின் சிறப்புடைப் பொருள்களான முகத்திற்கும் எத்தகைய ஏற்றம் கற்பிக்கின்றார் கவியாசர். இத்துடன்,

"அமிழ் துறழ் தமிழ் ஒண் முத்தம்

ஐய சந்தனம் மெல்வாசம்

கமழ்குளிர் தென்றல் என்று

கரையரும் பொருள் படாமல்

இமிழ் கடல் வரைப்பெலாம் தோன்றும்

எண்பொருள் படுநாடென்னித்

தமிழ் முதல் பிறக்கும் நாடாய்த்

தயங்குமாற் பாண்டி நாடு.''


என்று சிவப்பிரகாசர் அருளிய செய்யுளும் உற்று நோக்கத்தக்கது. தமிழகத்துத் தனிப் பெரும் பொருள்களாம் தமிழ் மொழி, முத்தம், சந்தனம், தென்றல், என்பவைகளில் முன்னைய திரண்டையும் போற்றும் கம்பர் கவிநலம்அழகுடையதேயாகும்.

 

இன்னும் இராமனைப் போற்றுமிடத்துங்கூட இவரது தமிழ் மொழிப் பற்றே முனைந்து நிற்கின்றது. ஆரியர் கோனாம் இராமனும், “தென் சொற் கடந்தான் வட சொற்கடற்கு எல்லை தேர்ந்தான்" என்றே புகழப்படுகின்றான். இம்மட்டன்று. இன்னும் அறத்தின் வழி நின்ற ஆரியர்கோன் அனுமனாதிய வானர வீரர்களைத் தென்திசை நோக்கித் தேவியைத் தேட விடுத்த காலையில் அவர்கட்கு அறிவூட்டுகின்றான். "வானர வீரர்களே! மற்றெல்லாவீரர்களையும் விட தெற்கு நோக்கிச் செல்கின்ற நீங்களே மிகவும் கவனமுடையாராயிருத்தல் வேண்டும். தென் தமிழ் நாட்டில் பொதியமலைச் சாரலில் அகத்திய முனிவரும் அவர்தம் சீடர்களும் தமிழ்ச் சங்கம் ஒன்று நிறுவியிருக்
கின்றார்கள். அச்சங்கத்தில் மிளிரும் பெரும் புலவர் பலரின் சொல்வன்மை கேட்பார் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாயிருக்கும். நீங்கள் அந்த இடத்தை அணுகுவீர்களானால் அவ்விடத்துள்ளாரது சொல்வன்மையில் ஈடுபட்டு, முயன்ற கருமத்தையு மறந்து, என்னையு மறந்து, என் தேவியையும் மறந்து, நீங்கள் தன்னையும் மறந்துவிடுவீர்கள். கொண்ட கருமமும் பழுதுபடும், ஆதலால் நீங்கள் அப்பொதியைச் சாரலில் தங்காது அம்மலையை இடமாகச் சுற்றி எடுத்த என் பணி முடிக்கச் சொல்லுங்கள்” என்று இராமன் எச்சரிக்கின்றான். இக்கருத்தைத்தான் கவியரசர் கம்பர் பெருமான்,


"தென் தமிழ் நாட்டகன் பொதியிற்
றிருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்றிரேல்
என்று மவணுறைவிடமாம் ஆதலால்
அம்மலையை இடத்திட்டேகி.''


என்ற செய்யுளில் அமைத்தருளுகின்றார். என்னே இவர்தம் அறிவு நுட்பத்தின் திறம். இராமனது எச்சரிச்கையோவிது? அன்று, தமிழ்க் கவிஞராம் கமபரது சொந்தச் செல்வமன்றோ இது! எவ்வளவு அழகாக, எவ்விடத்து, எக்காலத்து, தமிழ் மொழிக்கும் அதை ஆராயும் பெரும் புலவர் பலர்க்கும், தம் அர்ப்பணத்தைச் செலுத்துகின்றார் நம் கவியரசர்.

இனி கம்பர் தமிழ் மக்களின் ஒழுக்கத்தைப் பற்றிக் கொண்ட டிருக்கும் கருத்தைச் சிறிது ஆராய்வோம். தமிழ் மொழியின் சிறப்புடை இலக்கணமாகக் கருதப்படும் களவியலொழுக்கம் கம்பர் பெருமானால் பொன்னேபோல் போற்றப்படுகின்றது. ஆரிய கவியாம் வான்மீகி சீதையின் மணவினையைச் சித்திரிக்க நேர்ந்த காலையில், அவர் பிறந்த நாட்டுப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்பச் சுயம்வரம் ஒன்று நாட்டி அச்சுயம்வரத்தில் ஆற்றல் மிகுந்த அரனது வில்லை வளைத்து நாணேற்றுவாருக்குச் சீதையைப் பணயமாகக் குறிக்கின்றார். இம்முறையாக ஒருவன் தன் மனைவியை அடைதல் அசுரமணத்தின் பாற்படும் என்பர் பெரியோர். இந்த முறையை,


"முகையவிழ் கோதையை முள்ளெயிற்றரிவையைத்
தகைநலங் கருதும் தருக்கினர் உளரெனின்
இவையிவை செய்தார்க்கு எளியள் மற்றிவளெனத்
தொகை நிலையுரைத்த பின்னிறப் பகைவலித்
தன்னவை யாற்றிய அளவையில்
தொன்னிலை அகரம் துணிந்தவாறே.''


என்ற செய்யுளால் அறிக. இம்முறை ஆரிய மக்களின் முறையேயாகும்.
அதனால் தமிழ் மகனான கம்பர் இம்முறை வழிநடந்து தமது காவியத்தை முடிக்கக் கருதினாரில்லை. பிணி மூப்பு இவையின்றி எப்பொழுதும் ஒரு தன்மையாய் உருவும், திருவும், குலமும் குணமும், பருவமும் அன்பும், ஒத்தவராய தலைமகனும், தலைமகளும் பிறர் கொடுப்பவும் அடுப்பவுமின்றி ஊழ்வினைப் பயனாய்த் தாமே எதிர்ப்பட்டுக் காதலிக்கும் முறையே களவியல் எனப்படும். இம்முறையே தமிழ் மக்களின் முறையாகும். இதை யறிந்த சீதையை மிதிலைமாநகரில் அரசமாளிகையில் கன்னிமாடத்து மேடையில் நிறுத்துகின்றார். தெருவூடே முனிவர் முன் செல்ல, தம்பி பின்வா இராமனை நடத்துகின்றார். இருவரும் ஒருவரை யொருவர் பார்க்கின்றனர். கண்
னோடு கண்ணிணை கவ்வுகின்றது. இருவரது உணர்வும் ஒன்றி அவர்தம் உள்ளத்தில் ஆதரவுபடுகின்றனர். ஆகவே கண்ணால் கண்டு காதலித்த தலைவனே தன் கணவனாவான் என்று கருதுகின்றாள் மங்கை. பின்னர் அவளது தோழியாம் நீலமாலை முனிவருடன் வந்த மன்னவன் மைந்தன் வில்லிறுத்தான், அவனே உன்னை மணமாலை சூடுவன் என்று சீதையிடஞ் சொல்லிய காலத்துங்கூட, அவள் வில்லொடித்த காரணமாக மட்டும் அவனைத் தலைவனாய் ஏற்றுக்கொள்ளாது, தோழி நீலமாலை சொல்லுகின்ற குறிகளால், வில்லொடித்த வீரன் என்நிறை கவர்ந்த கள்வனாயே இருத்தல் வேண்டும், ஒரு கால் பிறி தொருவனாயிருப்பின் இறந்துபடுவேனே யன்றி வில்லொடித்த காரணத்தால் மட்டும் இவனை மணஞ்செய்ய முடியாது என்ற ஓர் உறுதியான தீர்மானத்திற்கு வருகின்றாள். இத்தீர்மானத்துடன் கம்பர், மணவறையில், மணமகளாகிய சீதை மணமகனுடன் அமர்ந்திருந்த காலத்தும், "தன் கைவளை திருத்துபு கடைக்கணிலுணர்ந்தாள்'' என்று மீண்டும் தம் கருத்தை வலியுறுத்துகின்றார். ஆகவே இத்தமிழகத்து ஒழுக்கம் அவரது உள்ளத்தில் எவ்வளவு ஆழ்ந்து பதிந்து கிடக்கின்ற தென்பதைக் காட்ட இது ஒரு சான்றாகும். இன்னும் தமிழ் மக்களின் ஒழுக்கத்தைப் பலகாலும் பலவிடத்தும் போற்றி மகிழும் கம்பர் கவி நலமும் கற்றோர் உள்ளத்திற்குக் கழிபேருவகையைத் தருகின்றது. உதாரணமாகத் தமிழக உலகில் தான், ஒருவனுக்குப் பெண் கொடுத்த பெரியோன் மாதுலன் என்று அழைக்கப்படுகின்றான். இம்முறை பற்றி, "நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்" என்று கவி கூறுவது தமிழ் ஒழுக்கத்தில் அவரது ஆழ்ந்த பற்றையன்றி வேறெதை விளக்கும். இவையெல்லாம் ஒருபுற மிருக்கத் தமிழகத்து மாதரின் நிறையுடைமையைப் பெரிதும் உணர்ந்தவர் கம்பரேயாவர்.


"தங்கள் நாயகரில் தெய்வம் தவம் பிறிதில் வென்றெண்ணும்
மங்கைமார் சிந்தை போலத் தூயது."


என்று கற்புடைய மாதர் மனத்தைப் போற்றுவது,


"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதொழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.''


என்ற வள்ளுவர் வாக்கினை நினைப்பூட்டுகின்றது. இன்னும், சீதை தன்னிடம் தன் நாயகன் அணுகி, தாயுரை கொண்டு தந்தை சொற்காக்க நான் காடு செல்கின்றேன் நான் திரும்பி வரும் வரை நீ இங்கேயே இரு இரு என்று கூறிய பொழுது.


"நாயகன் வனம் நண்ணலுற்றான் என்றும்
மேயமண் இழந்தான் என்றும் விம்மலள்
நீ வருந்தலை நீங்குவன் யானென்ற
தீய வெஞ்சொல் செவிசுடத் தேம்புவாள்."


என்று கவியரசர் அமைத்திருக்கும் சித்திரம் எத்துணை அழகுடையதாய்த் திகழ்கின்றது. இத்துடன்,


"சொல்லாமை யுண்டேல் எனக் குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை."


என்ற வள்ளுவர் குறளை ஒப்பிட்டு நோக்கினால் உண்மை காண்போம். என்னே! தமிழ் மாதரின் நிரை றயுடைமை! இவ்வாறு தேம்பும் தேவியைத் தேற்ற, இராமன் கூறும் மொழி தானென்னை? "காதலி! உன்னையு முடனழைத்துப் போவது சாத்தியமன்றே. நானோ காடும் மலையுங் கடந்து" செந்நெருப்பினைத் தகடு செய்து பார் செய்த தொக்கும்" பாலை நிலங்களின் வழியாகவெல்லாம் செல்ல நேரும். நின் செவ்விய சேவடிகள் அச்சூட்டைத் தாங்காதே என்று வருந்துகின்றான். இதற்குச் சீதை பதிலுரைக்கும் இடத்தில்தான் தமிழ் மாதர் வீரம் தோன்றி மிளிர்கின்றது. அன்ப! நின்பிரிவினும் சுடுமோ பெருங்காடு" என்று சீதை கூறுஞ் செவ்வி கம்பரது கவிநலத்தால் அமைந்த ஒரு பொருளாகும்.

 

இவ்வாறு, தமிழகத்து மாதரின் நிறையுடைமையை யெல்லாம் தன் உறு பொருளாக்கிக் கொண்ட மங்கையை அமரர்தம் புகழ் விழுங்கிய அரக்கர்கோன் தூக்கிச் செல்கின்றான். இதே தோற்றத்தைக் கண்முன் தெற்றெனக் கண்ட வான்மீகர், சீதையை முதலில் அவள் தன் இரண்டு கால்களுக்கு மிடையே தன்கையைக் கொடுத்துத் தன் தோளின் மீது தூக்கிப் பின்னர் தனது ரதம் ஏறி, அவன் தன் மயிர் பிடித்திழுத்து தன்மடிமீது வைத்துச் செல்கின்றான் இராவணன் என்று சித்திரம் தீட்டுகின்றார். இதே தோற்றம் கவியரசர் கம்பர் கண்ணுக்கும் தோன்றுகின்றது. ஆனால் தமிழகத்து மாதரின் நிறையுடைமையை உணர்ந்த கம்பர் வான்மீகியைப் பின்பற்றி அவர் தீட்டிய சித்திரத்தையே ஒட்டித் தானும் கவியமைத்திருப்பாராயின் அந்தோ! பரிதாபம்! அவர் பட்டிருக்கும் பாடு பெரும்பாடாயிருந்திருக்கும். அவரும் அவரது இராமாயணமும் தமிழக உலகில் இன்றிருக்கும் நிலையில் நின்றிரா என்று சொல்வது மிகையேயாகும். ஆனால் இதற்கெல்லாம் இடங்கொடுத்தனரா? - இல்லை - இடங் கொடுப்பாரா? அவரது மனப்பான்மையின் படியே இராவணன் சீதையை அவள் குடியிருந்த பர்ணகசாலையுடனும் - இல்லை-அப்பர்ணகசாலை கட்டியிருந்த இடத்துடனும் தூக்கிச் சென்றான் என்று கவி
கூறுகின்றார். இவ்விடத்து ஒரு சிறந்த உண்மை பொதிந்து கிடக்கின்றது.
கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புத்தாமை என்பது தமிழ் மக்களின் கருத்தாகும். இக்கருத்தையே,


"மண்டிணி ஞாலத்து மழை வளந்தரூஉம்
பெண்டிராயிற் பிறர் நெஞ்சு புகாஅர்.''


என்று அணிகெழு நூலாம் மணிமேகலை யியற்றிய சீத்தலைச் சாத்தனார் போற்றி யுரைக்கின்றார். ஒரு பெண்ணை அவள் தலைவனைத் தவிர பிறனொருவன் கண்டு இப்பெண் மிகுந்த அழகுடையவள், இவளுடன் கூடியிருத்தல் அன்றோ பேறு என்று எண்ணிய காலையிலேயே அப்பெண்ணின் கற்பிற்குப் பழுதுவந்தது என்ற தீவிர கொள்கையுடையோர் தமிழர். இத்தகைய கொள்கையுடைய தமிழ் மக்கள் எவராவது சீதையை இராவணன் மயிர்பிடித்திழுத்து மடிமீது வைத்து எடுத்துச் சென்றான் என்பதை ஒப்புக்கொள்வார்களா? பிறர் நெஞ்சு புகுதலே தம் நிறையுடைமைக்கு இழக்கு என்று கொள்ளும் பெருஞ் செல்வராகிய தமிழ் மக்கள் பிறன் கைப்புகுதலை அனுமதிப்பார்
களா? பிறன் கைப்புகுந்த காலத்திலேயே அவள் தன் கற்பும், அவள் உயிரும் ஒருங்கே போயிருக்க வேண்டுமல்லவா. அவ்விதம் நிகழ்ந்திருந்தால், இராமகாதை அத்துடன் முடிவு பெற்றுவிட வேண்டியதைத் தவிர வேறு முடிவு உண்டா? இத்தியாதி காரணத்தை உத்தேசித்துத்தான் கவியரசர் கம்பர் பெருமான் தம்முடைய கவித்திறனைக் காட்டினார். கம்பர்தம் கவிப் பெருமையே பெருமை.

 

இம்மட்டன்று, தமிழகத்துப் பழங்குடி மக்களாகிய திராவிடரை அரக்கர் வானரர் என்று இழித்துக் கூறிய வான்மீகரைப் பின்பற்றி அவர்களை அரக்கர் வானரர் என்றே இவர் அழைத்த காலத்தும் அவர் தம் பெருமையினையும் வீரத்தினையும் இவர் புகழ்ந்து கூறும் உரைகள் போற்றத் தக்கதாகும்.


"நானிலம் அதனின் உண்டு போர் என நவிலின் அச்சொல்
தேனினும் களிப்புச் செய்யுஞ் சிந்தையர்.''


என்று அரக்கர் வீரம் போற்றப்படுகின்றது. அரக்கர் வீரந்தான் இவ்வளவினது என்றால், இவ்வாக்கரை அடக்கிய வானரர் வீரமோ அம்மம்ம! பெரிது. சொல்லின் செல்வனாம் அனுமனது ஆற்றலும், கடல் கடந்த காதலங்களையுடைய வானர வீரனாம் வாலியின் பெருமையும் அளவிடற்கரியதாகும். இவ்வாறு தமிழ் மொழியினையும், தமிழ் மக்களையுந் தாம் போற்றிப் புகழ்வ அமையாது அம்மொழியின்பால் தாயன்புபூண்டு அம்மொழியில் நூல்கள் வழங்கிய, வள்ளுவர் முதலிய பெரும் புலவர்களைப் போற்றும் இவர்தம்கவிநலம் பண்பு புடையதாகும்.

 

ஆகவே, இன்னும் மிகைப்படக் கூறல் என்ற குற்றத்தின் பாற்படாது, இராமாயணம் என்னும் பெரு நூல் வடமொழிப் புலவராம் வால்மீகியின் கற்பனா சக்தியினாலும் கவியலங்காரத்தாலும் அமைந்த ஓர் காவியம் என்றாலும் அக்காதை தமிழகத்துத் தனிப்பெரும் புலவரான கம்பர் பெருமானால் தமிழ் மொழியில் அழகுற அமைக்கப்பட்ட காலத்தும் தமிழ் மொழியின் பெருமையினையும் தமிழகத்தின் சீர்மையினையும் தமிழ் மக்களின் ஒழுக்கத்தின் விழுப்பத்தினையும் உலகிற்குப் பறைசாற்றி, செந்தமிழின்பம் வழித்தொழகும் ஒரு - காவியமாக அமைந்தது போற்றத்தக்க தொரு பொருளாகும் என்று கூறி என் பணி முடிக்கின்றேன்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - அக்டோபர் ௴

 

 

No comments:

Post a Comment