Sunday, August 30, 2020

கம்பர் கவி இன்பம் 

 

"கற்பார் இராமபிரானை யல்லால் மற்றுங் கற்பரோ!
 புற்பா முதலாப் புல்லெறும்பாதி யொன்றின்றியே
 நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
 நற்பாலுக் குய்த்தனன் நான் முகனார் பெற்ற நாட்டுளே"
        - சடகோபர்.

 

இராமபிரான்! ஆ! எத்துணை அழகிய இனிய திருநாமம்! புண்ணியபூமியாகிய இப்பரதகண்ட மெங்கணும் எத்துணை லட்சக் கணக்கான மக்களால், அப்புனிதத் திருநாமம் பக்தியோடு உச்சரிக்கப்பட்டு வருகின்றது! அருட்பெருஞ் சோதியாம் ஆண்டவன், உய்வுபெறும்படி உயிர்கட்கு மனிதப் பிறவியை வழங்கி, உண்மை தெளிந்து நன்மை யடைதற்கென உயரிய அற நூல்களையும் அளித்தருளியும், ஆற்றைக் கடக்கக் கொடுத்தபடகைக் கொண்டு ஆற்றுப் பெருக்கின் வழியேவிட்டு கரை யேறாதொழிவாரைப் போல், ஐம்புலன்கட்கு அடிமைப்பட்டு உயிர்க்கு உறுதிபயக்கும் உண்மைப் பொருள்களை உணராது, பிறவிப் பெருங் கடல் நீந்தகில்லாது வருந்துதல் கண்டு திருவுள்ளம் இரங்கித், தனது தனிப்பெரும் பெருமையையும் பொருட்படுத்தாது இராமபிரானாக மனிதவடிவிற் பிறந்தருளினான். ஏனைய நாமங்க ளெவற்றிலும் இராமநாமம் மிகச் சிறந்த தாகும். திருமாலுக்கு உரிய நாராயணாய' எனும் மந்திரத்தின் உயிரெழுத்தாய் 'ரா' என்பதையும்; சிவபரஞ்சுடரின் திருவைந் தெழுந்தாம் 'நமசிவாய' எனும் மந்திரத்தில் ஜீவாட்சரமாகிய 'ம' எனும் இரண்டாவது எழுத்தையும் இணைப்பின் ஏற்படுவதே ராம'நாமமாகும். ஆகவே, ராம நாமத்தை மெய்யன்போடு உச்சரிப்போர் எவரும், அவ்விரு பெருங் கடவுளரின் திருவருளையும் பெறுவ ரென்பதில் ஐயமில்லை. நமது பரதகண்டம் முழுவதும் வைணவரால் மட்டுமன்றி, சைவர்களாலும் இராமாயணம் பாராயணம் செய்யப்பட்டு வருவது எவரும் அறிந்ததே. இராமபிரான் மனித சமூகத்திற்கே ஒப்புயர்வற்ற தொரு இலட்சிய புருடனாய் இலங்குகின்றான்; மற்றும் அப்பெருமான் வெற்றி மிக்க வீரர் திலகனாகவும் விளங்குகின்றான்; அம்மட்டோ! அவனே தனிப் பெருங்கருணையாளனாம் இறைவனது அவதாரமும் ஆகின்றான். இம் மூன்று நிலைகளே இராமாயண வளர்ச்சியாகும்.
     

இயற்கைக் காட்சி இன்பத்தில் திளைத்து இறைவனது இன்னருள் குறித்து வனத்தில் தவம் மேற் கொண்டு வாழ்ந்த முனிவர் பெருமானாம் வான்மீகி, மக்கள் வாழ்க்கைக்கே சிறந்த இலக்கிய புருடன் எவனெனநாரதரை வினவினார்; அவரும், அத்தகைய சீரிய இலக்கிய புருடன் சீதாபதியே என்பதை வான்மீகர்க்கு விளக்கிக் காட்டினர். அதுகேட்ட வான்மீகர் இராமனது சரிதையைக் காவியவடிவில் அமைத்து உலகுக்கு உதவ ஆர்வங்கொண்டு, ஆண்டவன் திருவருட்டுணை கொண்டு அவ்வாறே அமைத்தருளினர். முனிவர் ஆசிரமங்களில் மனித இனத்திற்கே தனிப்பெரும் இலக்கியமாக விளங்கி வந்த இராமாயணம், மன்னர் வதியம் மாளிகையை அடைந்து, வேந்தர்க் கெலாம் இலக்கிய புருடனாம் சீரிய வீரனது தீஞ்சுவை மிக்க காவியமாயிற்று; பின்னர், அரண்மனையி னின்றும் மக்களது அகங்களை அடைந்த அவ்வாதி காவியம், அவதார புருடனது புண்ணிய சரிதையாயிற்று. முதலில், மனித வாழ்க்கைக்கு இலக்கியமாய் இலங்கிப், பின்னர் சீரிய வீரகாவியமாய்த் துலங்கி, இறுதியில் பரதகண்டம் எங்கணும் பரந்து புனிதத்தன்மை பொருந்திப் புண்ணிய சரிதையாய் விளங்கி வரும் இராமாயணம் நமது பரதகண்டத்திற் பிறந்த தொன்றே, நம்மவர்க்கு ஒப்புயர்வற்ற தனிப்பெரும் பெருமையாகும்.

 

வான்மீகர்க்கு முற்பட்ட சிலரும் இராமகதையை வசன வழியில் அமைத்துச் சென்றுள ரென்று சிலர் கூறுவர்; எனினும், ஜன சமூகத்திற்குப் பயன் எதிர்பாராத சீரியதொண்டு செய்தல் வேண்டு மென்ற நோக்கம் ஒன்றே கொண்டு, தெய்வத் திருவருள் துணைகொண்டு, புன தம் பொருந்திய - அழகு மிக்க - எளிய நடையில் காவிய வடிவில் வான்மீகி அமைத்துச் சென்ற இராம கதையே, இன்றளவும் நிகரற்ற பெருமை பெற்று நிலவிவருகின்றது. அத்தகைய இராமாயணம், இற்றைக்கு ஆயிரம் வருடங்கட்கு முன்னர் வரை, என்றென்றும் பைந்தமிழர்க்கு இன்பம் பயந்து வரும் வண்ணம், தேனினும் இனிய தீஞ்சுவை மிக்க செந்தமிழ் மொழியிலே காவிய வடிவில் அமைந்து எங்கும் பரவாதிருந்து வந்தது. அக்கதை கர்ணபரம்பரைக் கதைகளுள் ஒன்றாகவே, அக்காலத்தில் வழங்கி வந்திருக்க வேண்டும். கம்பர்க்கு முன்னரே, சங்கம் மருவிய சான்றோர் சிலரும் தமிழில் இராம கதையைப் பாடியுளரென்று சிலர் பகர்ந்தாலும், அவை கம்ப ராமாயணத்தைப் போல் பிரசித்தி பெற்று எங்கும் பரவுவனவாகக் காணோம்.

 

ஒரு நாட்டின் உண்மைச் செல்வம் கேவலம் அழிதன்மாலையதாய பொருட் செல்வமன்று; என்றென்றும் அழியாது, அந்நாட்டு மக்கட்குநல்லறிவு புகட்டி நன்னெறிப் படுத்தும் சீரிய கலைச் செல்வமே உண்மைச் செல்வமாகும். செயற்கை யின்பங்களிலேயே சிந்தையைச் செல்விக்கும் பொருட் செல்வம் ஒரு நாட்டாரை உய்விப்பதாகாது; எல்லாம் வல்ல இறைவனது இன்னருட் திறத்தை இனிது புலப்படுத்தி நிற்கும் இயற்கைக் காட்சிகளையும்; இறைவனது திருவள்ளத்திற்கு இனியனவாய இயற்கை அறங்களையும் சுருங்கச் சொல்லி விரிந்த பொருளைப் பெறுவிக்குமாறு சீரியகவிகளாற் செய்யப்பட்ட காவியங்களே, ஒரு நாட்டாரின் உய்வுக்குச் சிறந்த துணையாகும். அத்தகைய இயற்கை இன்பம் நிறைந்து செந்தமிழ் நாட்டில் நிலவிவரும் சீரிய காவியங்களுள், 'விருத்த மென்னும் ஒண்பாவில் உயர்கம்பன்' என்று புகழப்பெற்ற கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர் பெருமானால் இயற்றப்பட்ட கம்பராமாயணமே தலை சிறந்த தென்பது மிகையாகாது.

 

கம்பராமாயணத்தில் என்ன இல்லை? அன்பர்காள்! உங்கட்கு வேண்டுவதென்னை? கருத்தை ஈர்த்துக் கவலையை ஒட்டிக் களிப்பெருங் கடலில் ஆட்டுவிக்கும் இயற்கை இன்பம் வாய்ந்த - அழகு சான்ற - அற்புதம் மிக்க அரியவருணனைகளா? அவ்வவ் விடங்கட்கு ஏற்றவாறு அமைந்து, ஓதுந்தோறும் ஓதுந்தோறும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஓசையின்பமா? கதைப் போக்கில், மனித வாழ்விற்கு இன்றியமையாத நல்லற நெறிகளை, ஓதுவோர் உள்ளத்தில் வேரூன்றிப் பதியும் வண்ணம் உணர்த்து விக்கும் இதோபதேசமா? படிக்கு மளவிலேயே அச்சத்தை அகற்றி, ஆண்மை யற்றோர்க்கும் புத்துணர்வு அளித்துக், கிளர்ச்சியை விளைவிக்கும் அரிய வீரச்சுவையா? ஆணவ முனைப்புகளை அறுத்து எறிவித்து, பொய்யின்பப் பொருள்களில் கொள்ளும்மையலைப் போக்கி, அன்பு நெறிப்படுத்தி இறைவனது திருவருளை எய்து விக்கும் இனிய பக்திச் சுவையா? கேவலம் உடலளவில் தோன்றி விரைவில் ஒடுங்கும் காமப்பித்தைக் களைவித்து, ஒருவர் உள்ளத்தில் மற்றவரைக் குடி புகுவித்து இருவரையும் உடலிரண்டும் உயிரொன்றுமாகச் செய்வித்து, இன்பத்தும் துன்பத்தும் ஒத்த அன்பை உறுவித்து, செயற்கரும் வீரச்செயல்களையும் துணிந்து செய்யும் திறலை விளைவிக்கும் சீரிய காதற்சுவையா? படிக்கு மளவிலேயே தீவினையின் பயனைத் தெள்ளிதில் விளக்கி, நல்லறத்திற்கு புறம்பானவற்றில் வெறுப்பை விளைவிக்கும் அச்சச் சுவையா? தீமையே செய்தோர்க்கும் வன்மங்கொண்டு பழிக்குப் பழி செய்ய மனங்கொள்ளாது அன்புளமே கொண்டு கடைசிவரை அன்னாரைத் திருத்தவே விரும்புவிக்கும் கருணைச் சுவையா? இன்னா செய்தார்க்கும் நன்னயமே செய்து, எதிர்த்து நின்றோரும் தலை வெட்கிக் குனியுமாறு செய்வித்தும், இறுமாந்தோரை இன்சொற்களால் அடக்குவித்தும், இழிந்தோர் இயல்பை உணர்த்தியும் உன்னுந்தோறும் உன்னுந்தோறும் உள்ளத்திற்கு உவப்பூட்டும் நகைச் சுவையா? வறுமையையும் பிணியையும் ஓட்டுவித்து, எங்கணும் நல்லறமே வளர்ந் தோங்கச் செய்வித்து, முடி மன்னர்கட்கும் குடிமக்கட்குமிடையே மெய்யன்பையே பெருக்குவிக்கும் சீரிய அரசியல் இன்பமா? பெண்மையின் பெருமையை விளக்கி, அணங்குகளின் சக்திகளைத் தெளிவிக்கும் அரிய கருத்துக்களா? மனித வாழ்க்கைக்கு வேண்டப்படுவனவாய இன்றியமையாத படிப்பினைகள் அனைத்தும் - இன்பங்க ளெல்லாமும் கம்பராமாயணத்திலே மலிந்து கிடக்கின்றன. சுறுங்கக் கூறுமிடத்து, கம்பர்
 பெருமான் இப்பாரதமணித் திருநாட்டையே பெரும் படம் பிடித்துவைத்துச் சென்றுளா ரென்றால், அஃது உயர்வு நவிற்சி யாகாது. எனவே, தனக்கு முன்னெழுந்த செந்தமிழ்க் காவியங்கள் பலவற்றையும், கம்ப ராமாயணம் வெயிலிடைத் தந்த விளக்குகளாக்கி விட்டதென்றே விளம்பலாம்.

 

இன்பங்கள் எவற்றினுஞ் சிறந்த இன்பம், செஞ்சொற் கவியின்பமேயாம். இராமன் ஆண்ட அயோத்தி இக்காலத்தே அழிந்துபட்டது உண்மையே; எனினும், இன்பப்பாக்களில் கம்பர் பெருமான் அமைத் தருளிய அயோத்தி அழிந்து பட்டதோ? இன்றும், அச்சீரிய நகரின் சிறப்புகளை கம்பராமாயணத்தின் கண் அகக்கண்ணாற் கண்டு ஆனந்திக்கின்றோ மன்றோ! மெய்யறிவாளர்கட்குச் சான்றோர் கவிகளில் தோன்றும் இன்பம், வேறெப்பொருளில் தோன்றக்கூடும்? பயில்வோர் தம்மை மறந்து இன்பவயப் பட்டு நிற்குமாறு பயிலுந்தோறும் பயிலுந்தோறும் புதுப் புது இன்பங்கள் பற்பல எழுப்பி விடும் ஆற்றல், புலவர் பெருமக்களது கவிகட்கே யன்றி வேறு எதற்கு உண்டு?


''இம்பர் நாட்டிற் செல்வமெலாம் எய்தி அரசாண்டிருந்தாலும்

உம்பர் நாட்டிற் கற்பகக்கா ஓங்கு நீழ லிருந்தாலும்
செம்பொன் மேரு அனைய புயத் திறல்சேர் இராமன் திருக்கதையில்

கம்பநாடன் கவிதையிற் போல் கற்றோர்க்கு இதயம் கனியாதே!'' -

 

எனத் தமிழகம் நமது கவிஞர் பெருமானது சீரிய காவியத்திற்கு அளித்துள்ள மதிப்புரை, கம்பர் கவியின்பம் எத்தகைத் தென்பதை நன்கு விளக்கும். பார்வையளவில் தெளிந்து, கூர்ந்து நோக்குமளவில் பெரிதும் ஆழ்ந்திலங்கும் தடாகங்களைப் போல, சிறந்த கவிஞரின் கவிகளும் கற்றார்க்கும்மற்றோர்க்கும் எளிதில் பொருள்படும்படி தெள்ளிய நடையில் அமைந்து விளங்கினும், அவற்றை ஆராய்ச்சிக் கண்கொண்டு கூர்ந்து நோக்குவோர்க்கு, ஆழ்ந்த அரும் பொருள்கள் பலவற்றையும் புலப்படுத்துவனவாம். தோலை உரித்த பின்னர் சுவைக்க இனிமை பயக்கும் வாழைக்கனியை ஒத்து, சற்று ஆராய்ந்து நோக்கியபின் இன்பம் பயக்கும் பாக்களும்; சுவைத்த வளவில் உள்ளும் புறம்பும் சுவைமயமாய்த் தோன்றும் திராட்சைப்பழத்தை நிகாத்து, படிக்கு மளவிலேயே வாசகர்கட்குப் பேரின்பம் ஊட்டும் செய்யுட்களும்; மட்டை நார் ஓடு முதலியவற்றை வருந்தி அகற்றிய பின்னரே சுவைதரும் தேங்காயைப் போன்று, ஆராய்ச்சிக் கண்கொண்டு ஆழ்ந்து கூர்ந்து நோக்கிய பின்னரே சுவைபயக்கும் கவிகளும் கம்ப ராமாயணத்தில் மலிந்து கிடக்கின்றன.

 

இயற்கை யின்பம் நிறைந்த கம்பராமாயணத்தில், சிற்சில தனிக் கவிகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு அடிக்கும் தத்தம் மனம் சென்றவாறெல்லாம் 'குயுக்தி யாக நான்கைந்து பொருள்களைக் கற்பித்து, உண்மைக் கவியின்பத்தைப் பாழ்படுத்தும் பிரசங்கப் புலிகள் பலர் தமிழ் நாட்டில் மலிந்து காணப்படுகின்றனர். அத்தகையோர் உண்மைக் கவியின்பம் எத்தகைத் தென்பதைச் சற்றும் உணர்வதேயில்லை. சிற்சில இடங்களில் அம் முறை இன்பந் தருவது உண்மையே யாயினும், எடுத்த கவிக்கெல்லாம் அம்முறையைக் கையாள்வது நன்றன்று. இயற்கைக்குப் பொருந்தாத விதம் விதமான அர்த்தங்களைக் கவிகளின் அடிகட்குக் கற்பித்து, பிரசங்கிகள் தமது வித்வத் சக்தியை வெளிப்படுத்த முயல்வதால், கம்பரின் முழுமுதல் நோக்கமாகிய இயற்கை யழகே சிதைக்கப்படுவதாகின்றது. இத்தகைய குறுகிய நோக்கத்தை ஒழித்து, நாளுக்கு நாள் பெரிதும் முன்னேற்ற மடைந்து வரும் மேனாட்டு ஆராய்ச்சி முறையைத் தழுவியும், கம்பரது தனிப்பெரும் சீரிய ஆராய்ச்சி செய்வதன் வாயிலாகக் கம்பர் கவி இன்பத்தைச் சுவைப்பதே செந் தமிழறிவாளர்களது கடமையாகும்.

 

ஆதிகாவியமாகிய வான்மீகி ராமாயணத்தின் வழி நூலாக இயற்றப்பட்டதே கம்பராமாயணம் எனினும்,' வான்மீகர் காவியத்தினும் பன்மடங்கு அழகுடையது கம்பர் கவிதை' என்பது நடுநிலை பிறழாது ஆராய்ந்தறிந்த அறிஞர் கண்ட உண்மையாகும். அதுபற்றி, முதனூலாகிய வான்மீகத்திற்கு எத்தகைய இழுக்குமில்லை. தந்தையினும் மைந்தன் சிறப்புடையவனாயின், தந்தை அத்தகையவனைப் பெற்றதனாலாய பெருமைக்கு உரியனாதல் போலக், கம்பர் கவிதை தோன்றற்கு காரணமாய் நின்ற வான்மீகத்தின் பெருமை பின்னும் அதிகப்படுமேயன்றிச் சற்றும் குறைந்திடாது. வழி நூலாகிய கம்பராமாயணத்தின் கண், முதனூலாகிய வான்மீகத்தோடு முக்கியமான சில இடங்களில் முரண்படும் வேற்றுமைகள் காணப்படுவது என்னையோ எனச் சிலர் ஐயுறுதல் கூடும். அஃது இயல்பே. தந்தை வருந்தி உழைத்துத் திரட்டி அளித்த அருஞ்செல்வத்தைப் பெற்ற நல்லறிவுடைய மகனொருவன், காலநிலைக் கேற்ப அதன்கண் கழிக்கத்தக்கன கழித்தும், சேர்க்கற்பாலன சேர்த்தும், மாற்றத்தக்கன மாற்றியும் சீர் திருத்துவதால் அச்செல்வம் எவ்வாற்றானும் சிறந்து விளங்குதல் போல, நூலின் இனிமையைப் பெருக்கவும் தமது காலத்தில் தமிழ்நாடு பெற்றிருந்த நன்னாகரிகத்திற்கு இயையவும், கம்பர் பெருமான் தமது காவியத்தை செவ்விதில் திருத்தி அமைத்திருப்பது நம்மவர்க்குப் பேரின்பம் ஊட்டுவதேயாம்.
 

வீரருட் சிறந்து, மனித வாழ்க்கைக்கு சீரிய இலக்கியமாக இலங்கும் ஒரு உத்தம புருடனது சரிதையை உரைப்பது போல் உரைத்து, 'இராமபிரானைப் பரம்பொருள்' என நாமே உணர்ந்து கொள்ளுமாறு அமைக்கப்பட்டிருப்பது வான்மீகி ராமாயணம்; உயிர்கள் மீது கொண்ட கருணைப் பெருக்கினால், உயர்வற உயர் நலமுடைய பரம்பொருளே இராமனாக – சக்கரவர்த்தித் திருமகனாக வந்தவதரித் தருளியதை ஐபத்திற் கிடமின்றி வெளிப்படையாக விளக்குவது கம்பராமாயணம். வடமொழிச் சொல் ஒன்று கூடக் கலவாத தனித்தமிழ் நடையில் யாக்கப்பட்ட பழந்தமிழ் நூல்களே, தமிழ் நலன் நாடுவோரால் பயிலத்தக்கன என்று சிலர் செப்புவர். அத்தகைய மனப்பான்மை குறுகிய நோக்கைக் கொண்டதேயாம். தமது கவிதையின்கண் வடமொழிச் சொற்களை கம்பர் தாராளமாக எடுத்தாண்டிருப்பினும், கவியின்பம் எவ்வாற்றானும் அதனாற் குறைந்து விடவில்லை. உலக வழக்கில் பெரிதும் விரவிப் பயின்று வந்துவிட்டனவும், எவர்க்கும் எளிதில் பொருள் படுவனவுமாய சிற்சில வடமொழிச் சொற்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், உலக வழக்கில் இக்காலத்தில் அதிகம் பயிலாதனவும் புலமை வாய்ந்தோர்க்கே பொருள் படுவனவுமாய தனித் தமிழ் மொழிகளை அமைத்து விட்டிருப்பின், இக்காலத்திலே கம்பர் கவிதை கற்றோர்க்கே யன்றி மற்றோர்க்கும் பெரிதும் பயன்பட்டு வருவதே போல், பலர்க்கும் இன்பந்தரும் பொது இன்பப் பூங்காவனமாயிராது.

 

உலக முழுதும் விளங்கிய கவிகளை எடுத்துக் கொள்ளுமிடத்து, மக்களது உள்ளத்தைப் படம் பிடித்து அவரவர் இயல்புகளை நேரிற்கண்டு அறிவதே போல அவரவர் கூற்றுகளாலேயே அவற்றைத் தெளிவு பெற விளக்கிக் காட்டும் முகத்தால், சொற்சித்திரங்கள் அமைத்துச் சென்ற பெருமை மூவர்க்கே பெரிதும் உரியதென மொழியலாம். அவர்களாவார் ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரும், ஸம்ஸ்க்ருதத்தில் காளிதாசரும், செந்தமிழிற் கம்பருமாம். இம்மூவருள் ஷேக்ஸ்பியரும், காளிதாசருங்கூட காவிய அமைப்புத் திறத்தில் கம்பருக்குப் பின்னிட்டு விடுகின்றாரென்று சொல்வோமாயின், அஃது மிகையாகாது. கம்பர் கவிதையை ஆழ்ந்து படிக்கும் போது, வெறுங் கவிகளை மட்டும் பார்க்கின்றோமில்லை; அவ்வவ்விடங்களில் வருணிக்கப்படும் மனிதர்களையே அகக்கண்ணாற் கண்டு ஆனந்திக்கின்றோம். வெறும் வேதாந்தமாக, 'இப்படித்தான் நடக்க வேண்டும்; அப்படி நடக்கக்கூடாது' என்று ஜனசமூகத்திற்குக் கட்டளையிடுவதை விட, நன்மை செய்தோர் அடையும் நலத்தையும் தீமை புரிந்தோர் எய்திய கதியையும் சரித்திர புருடர்களது வரலாறுகள் வாயிலாக வாசிப் போர்க்கும் கேட்போர்க்கும் ஆர்வம் ஊட்டுமாறு நல்லின்பம் மிக்க, தெளிய நடையில் எடுத்தியம்புவதால், பின்னைய முறையாலேயே மக்கள் தம்மை திருத்திக் கொள்ள முயல்வதற்குப் பெரிதும் விரும்புவரென்பதை விரித்துரைக்கவும் வேண்டுமோ?

 

உட்பொருள்களை அகழ்ந்தெடுத்துத் திறம்படக் கூறும் அறிஞர் சொல்லாற்றலுக் கேற்ற இன்பம் பயந்திடும் கம்பராமாயணச் சிறப்பை, எத்துணைச் சிறந்த பேரறிஞர் எடுத்துரைக்க முயன்றாலும் அஃது அளவில் அடங்காததாகி, 'உரை குறுக நிமிர் கீர்த்தி' உடையதாய், மேன் மேலும்வளர்ந்தே விடுகின்றது. அத்தகைய சீரிய காவியத்தைப் பாடிய கம்பரே, தாம் காவியம் செய்யப் புகுந்தது பற்றி, "ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு - பூசை முற்றவும் நக்குபு புக்கென - ஆசைபற்றி அறையலுற்றேன்மற்றிக் - காசில் கொற்றத் திராமன் கதையரோ.'' - என்று பாடிச் சென்றிருக்கும் போது, அறிவிலும் அனுபவத்திலும் ஆராய்ச்சியாலும் பிறவற்றிலும் மிகச் சிறியேனாகிய அடியேனோ 'கம்பர் கவி இன்பத்தை திற பட எடுத்து விளக்க வல்லவனாவேன்! எச்சிறப்புமில்லாத சிறியேனது உள்ளத்தை கம்பர் கவிதை கொள்ளை கொண்டு விட்டதனாலேயே, 'ஆசை வெட்கம் அறியாது' எனும் முதுமொழிக் கிணங்கத், தெய்வத் திருவருள் துணை கொண்டு சிறியேனது சிற்றறிவிற் கெட்டியவரை, இனி வரையத் தொடங்கும் புல்லுரைகளை, இளஞ்சிறார் நிலத்திற் கிழித்து விளையாடும் சிறுகோடுகளால் ஆகிய சிற்றிலை சிற்பநூன் முறைக்கு ஏலாதன வென்று சினங் கொள்ள மனங்கொள்ளாத சிற்பநூல் வல்லாரே போல், அன்போடு பொறுத்தருளிசிறியேனது பேரார்வத்தினையே ஆதரித்தருளுமாறு பெரியோர்களைப் பிரார்த்தித்துக் கொள்ளுகின்றேன். அடியவர்க் கெளியனாகிய சீதாராமனது கைம்மாறற்ற தனிப்பெருங் கருணையையே துனையாகக் கொண்டு, கம்பர் கவிதையிற் காணப்படும் பலதிறப்பட்ட இன்பங்களுள் சிற்சிலவற்றைப் பகுதி பகுதியாகப் பிரித்து, அடுத்த ஸஞ்சிகை முதல் தொடர்ச்சியாக எழுதவர இருப்பதைச், செந்தமிழ் நாட்டன்பர்கள் அன்போடு ஆதரிப்பார்களென்று எதிர்பார்க்கின்றேன்.


"குணம்நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் - மிகைநாடி மிக்க கொளல்.''


கடவுள் வணக்கமும், நூற்பயனும்


 "உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்,
 நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
 அலகிலா விளையாட்டுடையார் அவர்
 தலைவர்: அன்னவர்க்கே சரண் நாங்களே”

 

திருவளர் செல்வன் ராமபிரானது சீரியகதையைப் பயிலுந்தோறும் இன்பம் பயக்கும் தேனினுமினிய தீஞ்சுவை வாய்ந்த பாவடிவில், செந்தமிழ் மொழியில் அமைக்கப் புகுந்த கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் பெருமான், தாம் பாடத் தொடங்கிய நூல் இனிது முடிதற்பொருட்டு முதுமரபிற்கேற்ப முதலில், இக்காவியத்திற்கு ஏற்புடைக் கடவுளும் தமது வழிபடுகடவுளுமாகிய முத்தொழில் நடாத்தும் முழுமுதற் பொருளாம் முகுந்தனை அரும்பொருள் பொதிந்த இவ்வழகிய கவியால் வாழ்த்துவாராயினர். "நாம் வாழும் இம் மண்ணுலகு ஒன்று மட்டு மன்றி, எண்ணிலாத அண்டங்கள் ஏனைய பலவற்றையும் தோற்றுவித்தலும் அவ்வாறு படைத்தவற்றைக் காத்து நிலைப்பித்தலும் அவ்வாறு காத்தவற்றை அழிப்பித்தலும் அவ்வாறு ஒருக்கப்பட்டவற்றை மீண்டும் ஆக்கி அளித்து அழித்தலுமாக, முத்தொழில்களையும் எஞ்ஞான்றும் எவ்விடத்திலும் ஓய்விலாத முடிவற்ற திருவிளையாடலாகச் செய்யுந் தன்மை உடையவர் எவரோ, அவரே எல்லா உலகுகட்கும் தனிப்பெருந் தலைவராவர். அவர் ஒருவரையன்றி வேறு புகல்மின்மையால், அத்தலைவர்க்கே நாங்கள் அடைக்கலம் " - என்பது இக்கவியின் கருத்தாகும். அண்டங்கள் பற்பலவாக விளங்குகின்றன. அவையனைத்தும் தனது அருள் நோக்கினால் ஆண்டவனால் அமைக்கப்பட்டனவே; அவ்வாறு தோற்று வித்தவைகளைக் காத்தருள்பவனும் அவனே; அவற்றை இறுதியில் ஒடுக்குபவனும் அவனே. என்னே இறைவனின் அற்புதத் திருவிளையாட்டு இருந்தவாறு! சிறு குழந்தைகள் சிந்தை மகிழ்ச்சியோடு தெருக்களில் சிற்றில் இழைக்கின்றன; அவற்றைப் பெருவிருப்புடன் பேணிக்காத்து பலவாறு விளையாடிக் களிக்கின்றன; பொழுது போனபின் அவற்றைக் கால்களான் சிதைத்துப் பழையபடியே மண்ணொடு மண்ணாய்ச் செய்து ஓடிப்போய் விடுகின்றன. ஆயினும், மறுநாளும் மீண்டும் அவ்வண்ணமே விளையாட்டைச் செய்து அகம் மகிழ்கின்றன. ஆண்டவனும் அத்தகைய வியைாட்டுக் குழந்தையே போல் விளங்குகின்றான். ஆனால், குழந்தைபின் விளையாட்டு சில மாதங்கட்கே; இறைவனின் விளையாட்டோ எல்லையில்லாத தாகவும் ஓய்வற்றதாகவும் இனிது இனிது நடைபெற்று வருகின்றது. படைக்கும் தொழிலின் பொருட்டுப் பங்கயத்து அயனாகவும், காத்தல் தொழிலுக்கென்று கார்வண்ணத் திருமாலாகவும், அழிக்குந் தொழிலுக்கென அரனாகவும் தன்னொருவனையே மும் மூர்த்திகளாகப் பிரித்துக் கொண்டு உலகை நடாத்தி ருகின்றான் அவனுக்கு படைத்தல் காத்தல் அழித்தல் எனும் முத்தொழில்களும் சிறிதளவும் சிரமமின்றி மிக்க எளிதில் நடாத்தக் கூடியனவாகவும், அவன சிந்தைக்கு இனியனவாகவும் இருத்தலின், அவற்றை விளையாட்டு' என்றார். மனித ஆராய்ச்சிக்கு எட்டாவாறு, அளவிட்டுரைக்க முடியாத காலத்தி லிருந்தே அவை நித்தியமாக நிகழ்வன வாதலின், நீங்கலா' என்றார். நீங்கலா அலகிலா விளையாட்டு என்பதற்கு, முத்தொழில்கள் நீங்கலாக விறந்த வேறு விளையாட்டுகளையும் உடையவர் என்றும் சிலர் பொளுரைப்பர். ஆண்டவனது அருட்பெரும் தொழில்கள் பலவும் ஐவகைப் பகுப்புள் அடங்குமென ஆன்றோர் அளவிட்டு உரைத்திருப்பதால், அலகிலா என்பதற்கு அளவில்லாத சானும் பொருள் கொள்வதைக் காட்டிலும் முடிவில்லா' எனும் பொருள் கொள்கதே சாலச் சிறப்புடைத்து. இறைவனது தொழில்கள் பல வகைப் பட்டன வாயினும், அவையனைத்தும் ஆக்கல் அளித்தல் அழித்தல் அந்தர்யாமியா யிருத்தல் அறுக்கிரகித்தல் எனும் ஐவகைப் பகுப்புள் அடங்கி விடுவாவேயாம்; பின்னிரண்டும் அளிக்கும் தொழிலில் அடங்கி விடுவனவாம். எனவே, மூவகைத் தொழில்களாம் விளையாட்டுகளை ஓய்வின்றி ஆற்றி வருபவர் எவரோ, அவரே எறும்பு முதல் என் கண்ணன் ஈறாக உள்ள அனைவர்க்கும் தனிப் பெருந் தலைவர் ஆவர். அத்தகைய ஒப்புயர் வற்ற ஒருவர்க்கே அடியோங்கள் அடைக்கலம் என்பார்' அன்னவர்க்கே சரண் நாங்களே' என்றார். சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினராய மானிடரைச் சரண்புகுவது ஆன்ம உய்வுக்கான எத்தகைய நன்மையையும் எய்துவிக்காதாதலாலும், அவரால் அடையும் இம்மை நலங்களும் விரைவில் அழிந்து படும் இயல் பினவாதா, பிறவிப் பெருங்கடலை + கடக்கத்துணை செய்யாது அவாவப் பெருக்கி சம்சாாசாகரத்திலேயே ஆழ்ந்து வரும்திக் கிடக்கச் செய்து விடுவலவு மாதலாலும் இறைவனைச் சரன மடைகதே ஆருயிரை உய்விப்பதான மன கம்பர் பெருமான் அறிவுறுத்திய நயத்தை, வான்றி நோக்க உள்ளத்திற்கு உண்மை இனிது புனோகும்.


''என்னாவது எத்தனை நாளைக்குப் புலவீர்காள்!
 மன்னா மனிதரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்
 மின்னார் மணிமுடி விண்ணகர் தாதையைப் பாடினால்,
 தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே"

எனும் ஆழ்வாரது அருள் மொழி ஈண்டு உணரத்தக்கது.

 

‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ' ('என்னொருவனையே சரணமாகப் பற்றுக')
என்று ஸ்ரீ கீதாசார்யன் அருளிச் செய்தவாறே வேற உபாயங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இறைவன் ஒருவன் ஜனயே உண்மை யன்போடு சரணமடையும் ஒவ்வொருவரும், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு அழிவற்ற பேரின்பம் துய்ப்பது திண்ணம், 'நாங்கள்' என பன்மையிற் கூறியதால், இராமபிரானது திவ்ய சரித்திரக் கடலில் ஆட விரும்பும் அனைவரையும் சேர்த்துக் கூறினார் என்க. 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'- என்பதன்றே ஆன்றோரது அருட்பெரு நோக்கமாகும்! இராமகதையைத் திருவருள் துணை கொண்டு பாடத்தொடங்கிய கம்பர் பெருமான், 'உலகம்' என்று தொடங்கியது, 'எல்லா நூல்களிலும் மங்கலமொழியை முதலில் அமைத்தல் வேண்டும்' எனும் இலக்கண நெறிக்கிணங்க என்ப. மற்றும், உலகவாழ்வுக்கு வேண்டப்படும் அரும்பொருள்கள் அனைத்தும் 'கம்பராமாயணத்தில் பொதிந்து கிடப்பது பற்றியும், 'உலகம்' எனும் மங்கலமொழியை அமைத்தார் என்றுங் கூறலாம். வேண்டுவார் வேண்டுவனவற்றை விருப்போடு அளிக்கும் விண்ணுலகத் தருவை ஒப்ப, கம்பராமாயணம் உலகத்தினர்க்கு பல விதத்திலும், பெருந்துணை புரிந்து நிற்கும் மண்ணுலகத்தருவாக விளங்கி வருகின்றது என்பதை விளம்பவும் வேண்டுமோ? பல திறப்பட்ட மனப்பான்மையுடைய கதாபாத்திரர்கள் வாயிலாக, ‘தக்க இன்ன தகாதன இன்ன என்று எவருக்கும் இனிது உணர்த்தி நன்னெறி பற்றி ஒழுதமாறு அவரைத் தூண்டுவது கம்பரது காவியம் என்பது பலரும் அறிந்த தொன்றே; ஆயின், தாம் உணர்ந்தவற்றைச் செயலில் கொண்டு வருவோரே மிக அரியர்.


நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்
டாம்;

வீ (டு)  இயல் வழியது ஆக்கும்; வேரி அங்கமலை நோக்கும் :

நீடிய அரக்கர் சேனை நீறுபட் (டு) அழிய வாகை

சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே.

 

திருவளர் செல்வன் இராமபிரானது திவ்ய சரித்ராம்ருதத்தைப் பருகுனோர் இடையும் நலங்களை கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் பெருமான், நூலைத்தொடங்கு முன் எடுத்து விளக்குவாராயினர். அறத்திற்குப் புறம் பான செயல்களையே மேற்கொண்டு, எங்கணும் சென்று வெற்றி பெற்றோ மெனும் செருக்கு மிகுந்து, படைவலியின் துணைகொண்டு இறுமாந்து வாழ்ந்து வந்த அரக்கரது பெருஞ்சேனை முற்றும் அழிந்து படுமாறு அமர் செய்து வெற்றி மாலை சூடிய வீரகோதண்டம் ஏந்திய வேந்தர் வேந்தனான இராமபிரானது திருத்தோள்களின் மாண்பைப் புகழ்ந்து பாடுவோர், விரும்பிய நற்பொருள்களைப் பெற்று இன்பம் துய்ப்பர் என்பது இக்கவியின் கருத்தாகும். 'நாடிய பொருள்' என்பது கொண்டு மனம் விரும்பிய பொருள்கள் எவையும் - அவை அறத்திற்குப் புறம்பானவையே யாயினும் -கைகூடும் என்று பொருள் கொள்வது பெரும் பேதைமையாம். மனத்திற்கு அடிமைப்பட்டு அதனை அடக்கியாள இயலாத மாக்கள், பல திறப்பட்ட பொருள்களில் தவாமிகுந்தவராய் அமைதியற்று அலையா நிற்பர்; அத்தகையோர் நாடும் பொருள்கள் அளவிடங்சாதனவாம். "ஒரு பொழுதும் வாழ்வதறியார், கருதும் --- கோடியும் அல்ல,'' - என்றார் நாயனாரும். அத்தகையோர் நாடிநிற்கும் பொருள்கள் எவ்வளவுக் கெவ்வளவு கைகூடி வருமோ, அவ்வளவுக் கவ்வள பளவு வாது அலாவே வளர்ந்தோங்கும். உடல்ளத்தில்திருப்தி கொள்ளாத உள்ளத்திக்கு அமைதி ஏற்படுவதேது? ஆதலின், மனத்திற்குத் தாம் அடிமைப்பட்டிராமல் மனத்தைத் தமக்கு அடிமைப்படுத்தடக்கி ஆளும் ஆன்றோர் நாடும் சீரிய பொருள்களே, இராமபிரானது வீரத்தோள்களின் புகழைப் பாடுவோர்க்கு இனிது கைகூடும் என்க, அறத்தின்மூர்த்தியாம் இராமபிரானது ஆன்ம சக்தியை - தெய்விக வீரத்தை – அருள் கனிந்த செயல்களை மெய்யன்போடு ஓதுவோர் உள்ளத்தில், அறத்திற்கு மாறுபட்ட தீயவிருப்பங்கள் தோன்றுவது யாங்ஙனம்? தனது எல்லையில் சீர்ப் பெருமையையும் எண்ணாது, மக்கட் குலத்தின்பாற் கொண்ட இரக்க மிகுதியால் மானிட சாதியிற் பிறந்து படாதனபட்டு மக்களைத் திருத்தி உய் விக்கத் திருவுள்ளம் பற்றிய இராமபிரானது அருட்பெருங் கதையை உண்மை யன்போடு படிக்கத் தொடங்கி அவ்வானந்தத்தில் ஆழ்ந்து விடுவோர் அகத்திலே, 'இராமபிரான் நடந்து காட்டிய நன்னெறியே பின்பற்றி நடந்தாற்றான், நாம் மனிதராய்ப் பிறந்ததன் பயனைப் பெற்றவராவோம் எனும் நினைவு தோன்றுதல் இயல்பே யன்றோ! மனித வாழ்க்கைக்கே தனிப்பெரும் இலக்கியமாக அமைந்த இராமபிரானது வரலாற்றைச் சிறந்த வழிகாட்டியாகக் கொண்டு இல்வாழ்வு நடாத்த விரும்பும் மெய்யன்பர் ஒவ்வாருவருக்கும், அவர் விரும்பும் நற்பொருள்கள் பலவும் ஆண்டவன் அருளால் இனிது கைகூடும் என்பது உறுதி. இது பற்றியே, '' தெய்வத்தால் ஆகாதெனினும், முயற்சிதன்- மெய்வருந்தக் கூலி தரும்''; "குடிசெய்வ லென்னும் ஒருவற்குத் தெய்வம் - மடிதற்றுத் தான் முந்துறும்." - எனும் பொன்மொழிகள் எழுந்தன. ஆகலின், சீதாபதியின் சீர்மையைப் புகழ்வோர்க்கு, அவர்கள் நாடும் உயிர்க்கு உறுதிபயக்கும் உண்மைப் பொருள்களே இனிது கைகூடும் என்ப.

 

‘பொருள்' என பொதுவாகக் கூறப்பட்டிருத்தலின், ஆன்ம உய்வுக் கேற்ற சிறந்த நற்றுணையாகிய மெய்க்கல்விப் பொருளும், அறநெறிக்குத் தணை செய்வதற்கான நற்செல்வப் பொருளும் என அதனை இரு கூறாகப் பிரிக்கலாம். தோண்டத் தோண்ட மேலும் சுரந் பெருகி வரும் இனிய ஊற்று நீரை ஒத்து, பிறர்க்கு அளிக்கப்படுவதால் குறைந்து விடாது மேன்மேலும் வளர்வதும், இவ்வொரு பிறவியில் மட்டு மின்றி எழுமையிலும் தொடர்ந்து பற்றி உயிரை உய்விப்பதும், அறிவை விரிவாக்கி ஆண்டவனது திருவருளைப் பெற்றுய்யப் பெருந்துணையாய் நிற்பதும், என்றும் அழியாததுமான மெய்க் கல்விப் பொருளும், அக்கல்விப் பொருளை அடைவதர்கு ஒரு வகையில் உதவியாய் நிற்பதும், மெய்யன்பு மிகுந்து நல்லறம் புரிந்திடுவதற்கு ஏற்ற துணையாவதும், ''பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை; அருளில்லார்க்கு - அவ் வுலகம் இல்லாதியாங்கு'' – என்றவாறு லௌகிக வாழ்வில் இன்றி யமையாது வேண்டப்படுவதூஉமாகிய நல்வழியில் வரும் செல்வப் பொருளும் இராமன் கீர்த்தியை இயம்புவதால் இனிது கைகூடும் என்ப. எனினும், இராமன் புகழை இயம்புவதாக புத்தகத்தைப் படிக்கு மளவில் நின்று விட்டால், செல்வப் பொருளும் தாமே வலிந்து வந்தெய்து வனவாமோ? அவ்விரு பொருளையும் சேகரிக்கத் தளராத ஊக்கத்தோடு உழைக்கும் நன்முயற்சிக்கே, இராமபிரானது இன்னருள் பெருந்துணையாய் நிற்கு மென்பது ஈண்டு கவனிக்கற் பாலது. 'நாடிய' எனும் அடைமொழியால், 'அவ்லிரு நற்பொருள்களையும் பெற்று மகிழ்வதிற் பெருவிருப்பம் கொண்டு அதற்கேற்ற நன் முயற்சியில் தலைப்பட்டால்' எனும் பொருள் நன்கு விளங்கக் கிடத்தல் காண்க.

 

உள்ள ஒன்றை இல்லாததாகவும் இல்லாத ஒன்றை உள்ளதாகவும் கொண்டு மயங்கிக் கிடப்பதும், நீர்மேற் குமிழ்போல் நிலையற்ற பொருள்கனை என்றும் அழியாது நிலைத்து நிற்கும் இயல்புடையன என்று கருதி, அவற்றின் மேற பெரு மோகங் கொண்டு மயங்கிக் கிடப்பதும், இம்மை இன்பம் ஒன் றையே விரும்பி, மறுமையைப் பற்றிச் சிறிதும் கவலையுறாது செருக்குர்றுக் கிடப்பதும் இன்னோரன்ன பிறவும் அஞ்ஞானத்தின் பாற்பட்டனவா வாகும். ஆகலின், சிந்தையைக் கவரும் இனிய திவ்ய சரித்திர வாயிலாக, உயிர்க்கு பயக்கும் உயரிய உண்மைப் பொருள்களை மருந்தை வெல்லத்தில் மறைத்து வைத்து ஊட்டுவதே போல் தெள்ளிதில் விளக்கிக் காட்டி அஞ்ஞானத்தை அகற்றி ஆருயிரை உய்விப்பதும் இராமபிரானது சீரிய கதையே யன்றோ! அக் கதையைப் பயில்வதால், உள்ளத் தெளிவாகிய உண்மை யறிவு உறுதியே அல்லவா? மற்றும், மாநிலத்தில் மானிடப் பிறவி தாங்கிய ஒவ்வொரு வரும் நற்புகழ் உடையராதல் வேண்டும். பிறந்து எப்புகழும் பெறாது மறைந் தொழியும் மனிதர், புழுப்போன்றோரே பொன்னத் தடையென்னை? " தோன்றில் புகழொடு தோன்றுக; அஃதிலார் - தோன்றலின் தோன்றாமை நன்று " - என்றார் பெருநாவலரும். ஆயின், நமது மாண்பைக் கண்டு நம்மிட மிருந்து எத்தகைய பயனையும் எதிர்பாராத ஏனையோர் நம்மைப் புகழ்ந்து பேசுவது புகழேயன்றி, நமது தயவைப் பெரிதும் விரும்பி நிற்போர் நம்மைப் புகழ்வது உண்மைப் புகழாகாது. மற்றும், பிறர் தம்மைப் புகழ வேண்டும்' என்பதையே பெருநோக்காகக் கொண்டு வினையாற்றுவதும், தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வதும் மெய்ப்புகழை அளியா. மெய்ப்புகழாளர் தம்மைப் பிறர் புகழ்வதைச் சிறிதும் விரும்பார்; சிந்தையிற் செருக்குச் சிறிதுங் கொள்ளார். அவர் விரும்பாமலே அவரைப் பெரும் புகழ் தானே அடைகின்றது. இத்தகைய சீரிய புகழுக்கு இலக்கியமாக இலம்குவது, இந்நாளில் காந்தியடிகள் எய்தியுள்ள புகழாகும். இராமகதையைப் படிப்போர்க்கு தொன்று தொட்டு ஜன சமூகத்தில் தனிப்புகழ் உண்டு; அதனை இக்காலத்தும் காணலாம். படிக்கு மளவில் நின்றுவிடாது, இராமபிரானது சீரிய வாழ்க்கையைக் கூடிய வரை பின்பற்றியதாக தமது வாழ்வு முறையை அமைத்துக் கொள்ள முயன்றிடும் மெய்யன்பர்கள், நாளடைவில் ஒழுக்கத்திற் சிறந்த உத்தமர்களாகி ஏனையோரால் பெரிதும் மதிக்கப்பட்டு பெரும்புகழ் பெறுவர். 'ஞானமும் புகழும் உண்டாம்' என்றதால், 'கல்விப்பொருள் கைகூடுவதால் அகத்தெளிவாகிய மெய்ஞானமும், செல்வப்பொருள் நல்வழியிற் பெறுவதால் நற்புகழும் உண்டாகும்' எனும் உண்மை விளங்கக் கம்பர் பெருமான் உணர்த்தியன்ள நயத்தை உன்னுந் தோறும் உன்னுந்தோறும் உவகை பொங்குகின்றது.

 

"வீடியல் வழியதாக்கும் வேரி அம் கமலை நோக்கும்'- என்றதால், முத்தியை அடைவதற் கேற்ற வழியைச் செய்யும் மலர்மகளது திருவருளையும் இராம கதையைப் பத்தியோடு பயில்வோர் பெற்றுயவர் என்பது விளங்கும். அறியாமையின் பயனாக, பல திறப்பட்ட பிழைகளைச் செய்வோர் பால் ஆண்டவன் கொண்டிடும் சினத்தைத் தணித்து அவர்பால் திருவுள்ளம் இரங்கியருளுமாறு செய்விக்கும் கைம்மாறற்ற கனிப்பெருங் கருணையுடைய உலக அன்னையாதலின், திருமகளை 'வீடு இயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை' என்றார். புதல்வனின் பிழைகளைப் பொறுத்தருள்வதில், அத்தனைக் காட்டிலும் அன்னையே யன்றோ நனி சிறந்தவள்! 'அம்மா' என ஆர்வத்தோடு அழைத்து அன்னையிடம் நெருங்குவதே போல், எவ்வேளையிலும் தடையின்றித் தந்தையிடம் நெருங்க முடிகின்றதா? மகனிடத்தில் தாய் வைக்கும் அன்பு தனி அன்புதான்; தந்தை வைக்கும் அன்பு அதனிலும் ஒருபடி குறைந்ததே. எத்துணைப் பிழைகள் இழைத்திடினும், மகனை அன்னை மன மார வெறுத்துப் புறக்கணித்துத் தள்ளி விட முடிவதில்லை; தந்தையோ அவனைத் தக்கவாறு தண்டித்துத் திருத்தவே முயல்கின்றான். அந்நிலையில், மகனுக்காகப் பரிந்து பேசி அவனது பிழைகளைப் பொறுத்தருளச் செய்வித்து அவனை உய்விப்பவள் அன்னையே யன்றோ! அது பற்றியே யன்றோ, ஜகன் மாதாவான திருமாமகளை முன்னிட்டுக் கொண்டே சர்வேச்வரனான திரு நாராயணன் திருவடிகளில் மேல்யன்பர்கள் அடைக்கலம் புகுகின் பிராட்டியின் திருவருள் இன்றேல், பிரானது கருணைக்கு இலக்காதல் எவ்வாற்றானும் அரிதே! சானகியாரைச் சரணம் புகுந்ததால், மன்னிக்கத்தகாத பெருங் குற்றத்தைச் செய்திருந்தும் காகம் உயிர் பெற்றது; பிராட்டியாரது சீற்றத்திற் காளானதால், பெருவலி உடையவனாயிருந்தும் இராவணன் என் இறந்து பட நேர்ந்தது. “சிறையிருந்த கற்புக்கரசியின் ஏற்றத்தைச் சொல் லும்' சீரிய கதையாகிய இராமாயணத்தை, மெய்யன்போடு பயில்வோர்க்கு வையக தாயாகிய வைதேகியின் திருவருள் உண்டாகும் என்பதையும், அதனால் பெறுதற்கு அரிய அழிவில் பெரும்பதமாகிய வீட்டின்பமும் இனிதுகை கூடும் என்பதையும் நூலின் தொடக்கத்திலேயே கம்பர் பெருமான் அறிவுறுத்தியிருப்பதை ஒவ்வொருவரும் தமது உள்ளத்திற் பசுமரத்தாணியெனப் பதிய வைத்துக் கொள்வராச. இனி, கல்விப் பொருளைப் பெறுவதால் மெய்யறிவு பெற்று முத்தி அடைவதற் கேற்ற வழியைப் பின்பற்றி நடந்து உய்யலாம் எனவும்; செல்லப் பொருளுளைப் பெறுவதனால் இலக்குமிபின் கருணைக்கு இலக்காகி உய்யலாம் எனவும் கொண்டு ஞானத்தால் முத்தியின்பமும் புகழால் லஷ்மீ கடாட்சமும் உண்டாகுமென உரைப்பினும் பொருந்துமாறு கம்பர் அமைத்துள்ள நயத்தை என்னென வியப்பது?

 

‘நீடிய அரக்கர் சேனை நீறப்பட்டு அழிய வாகை சூடிய சிலை' - என்பதால், நல்லறத்திற்குப் புறம்பான வழிகேயே வாழ்வு நடாத்துவோர் எவ்வளவுதான் வலியராயினும்- இறுதியில், அத்தகையோர் அறவே அழித்து படுதல் உறுதி என்பது விளங்கப்பட்டது. 'நீடிய அரக்கர் சேனை' என்பதால், ஏனையோரால் எதிர்க்கப்பட்டு வெல்லப்படுமென எண்ணவும் இயலாவாறு ஆற்றலிலும் அளவிலும் மிகுந்த சேனை யென்பது குறிக்கப் பட்டது. எதிர்த்து நிற்போர் எவ்வலகத்திலும் எவருமின்றி, இமையவரும் பணி கேட்ப இறுமாந்து கிடந்த எண்ணிறந்த அரக்கரும் மண்ணோடு மண்ணாய் மடிந்து சாம்பராகப் போராடி வெற்றி கொண்ட வீரகோதண்டம்' என்பதைக் குறிப்பிப்பான் வேண்டி 'நீறுபட்டழிய வாகை சூடிய சிலை' என்றார். ஆன்ம சக்தியின் அளவிடர்கரிய ஆற்றலின் முன்பு, மிருகசக்தி வாய்ந்த எதிர்ப்பு என்னாகும்? இதிலிருந்து, என்றென்றும் 'அரமே வெற்றி பெற்று உயர்ந்து நிற்கும்; பாவம் தோல்வியே எய்தி அழிந்து படும்' எனும் பேருண்மை இனிது விளங்கக் கிடக்கின்றது. இதுவே இராமாயணத்தின் திரண்ட பொருளாகும். அறத்தோடு இயைந்த நன்னெறி பின்பற்றி நடாத்தும் அன்பு வாழ்வொன்றிலேயே மெய்யின்பம் விளையும்; அறத்திற்கு மாறுபட்ட புன்னெறி பின்பற்றி நடாத்தும் வாழ்வால் வரும் இன் பூட்டுவன வாகத் தோன்றுவன வெல்லாம் இறுதியில் பெருந்துன்பததையே விளைவிக்கும். முன்னைய வாழ்வே அழியா மெய்ப்புகழ் அளிப்பது; பின்னைய வாழ்வால வரும் புகழோ அழிந்துபடும் புன்மை வாய்ந்ததேயாம். இதுபற்றியே வள்ளுவரும் "அறத்தால வருவதே இன்பம்; மற்றெல்லாம் - புறத்த புகழுமில'' - என்றார்.

 

மேற்கூறிய கல்விப் பொருளும் செல்வப் பொருளும் மெய்ஞ்ஞானமும் ஈற்புகழும் அழிவில் வீட்டின் பமும் அன்னை திருமகளின் அருளும் எவர்கட்கு வாய்க்குமெனில், வீரராகவனது வீரத்தோள்களின் மெய்யன் போடு புகழ்ந்து பாடுவோர்க்கே அவையனைத்தும் இனிது வந்தெய்தும் என்பார், 'இராமன் தோள்வலி கூறுவோர்க்கே' என்றார். ஈண்டு * கவனிக்கத் தக்கதொன்று உண்டு, இராமபிரானது திருத்தோள்களின் வலியைப் புகழ்ந்து பாடுவோர்க்கே, அப்பயன்கள் அனைத்தும் உண்டாத மெனக் கம்பர் பெருமான் பாடியதேன்? இராமபிரானது திருமுகமேனும் திருவடிகளேனும் ஏனைய திருவடியலங்களேனும் முதலிற் கம்பர் கருத்தைக் கவர்ந்தனவிலை; அப் பெருமானது வீரசதோன்களே நமது கவிச் சக்கரவர்த்தியின் கருத்திற் புகுந்து அவரை ஆட்கொண்டன. ஆடவராய்ப் பிறந்தவர்கட்கு தோள்வலியே இன்றி யமையாத தாகலின், ஆடவர் வாழ்க – சிறந்த ஒப்புயர்வற இலக்கியபுருடனாக அவதரித்த புருடோத்தமனான இராமபிரான் தோளாற்றலில் தன்னை ஒத்தாரும் மிக்காரும் இன்றி சிறந்து விளங்கினான். தோளாற்றல் இல்லாத ஒருவன் தன்னை எதிர்த்தாரைச் செருக்கடடக்கி ஒடுக்கலும் தன்னை நம்பியவாகளது இடுக்கண்களைக் களைவதாக உறுதி உரைத்தலும் யாங்ஙனம்? தன்னைச் சரணடைந்தோர்க்கு அஞ்சல என்று அருளி, அவரது இடுக்கண்களைக் களைந்து காக்கப் போதிய ஆற்றல், தோள்வலியற்ற ஒருவனுக்கு ஏது? தன்னை எதிர்த்தோர் மிகப் பலராயாயினும், தன்னந்தனியே நின்று சற்றும் தளர்வுறாது போராடி அவரனைவரையும் அழிக்கும் பேராற்றல், கூட்டொருவரையும் வேண்டா கொற்றவனாகிய நமது இராம பிரானிடத்திலன்றோ பெரிதும் சிறந்தொளிருகின்றது! அத்தகைய வீரத் திலகமாகிய அவ்வேந்தர் பெருமானது வீரத்தோள்களின் மாண்பைப் புகழ்ந்து பாடுவது, நமது இடுக்கண்கள் பலவற்றையும் போக்கி பிடு மென்பதில் ஐயமும் உண்டோ! மேலும் தாடகைவதை தொடங்கி இராகணவதை இறுதியாக இராமாயண காப்பியா முழுவதிலும், இராமனது தோன்வலியே அன்றோ பரக்க உரைக்கப் பட்டுளது! வீரர் அனைவர்க்கும் சிறந்த இலக்கிய வீரவேந்தனா வன்றோ, 'கம்பராமன்' காட்சி யளிக்கின்றான்! அத்தகைய சீரிய வீரனது வரலாற்றைப் படிக்குந் தோறும் படிக்கும் தோறும், நமக்கும் அத்தகைய வீரவாழ்வில் ஆர்வம் பிறக்கின்றதன்றோ! வீரராகவனது வெற்றி பொருந்திய செயல்கள் நிரம்பிய வீரகாவியமாகிய கம்பராமாயணத்தை மெய்யன்போடு படிப்போர் எய்தும் பயன்களை, ஏற்பயன் நுவலும் இக்கவி வாயிலாக கம்பர் பெருமான் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார். இச் சீரிய பாவிற் பொதிந்து கிடக்கும் பொருள்களை, இன்னும் விரித்துரைக்கப் புகுவோமாயின் மிகப் பெருகிச் செல்லும். இக்னை ஆராய்ச்சிக் கண் கொண்டு நோக்க நோக்க, பல திறப்பட்ட அரும்பொருள்கள் அகத்திற்குப் புலனாகி ஆனந்தம் ஊட்டும். சிறந்த கவிஞர் பெருமான் ஒருவரது செஞ்சொற் கவியின்பத்தை, அவரது நூலின் தொடக்கத்திலேயே கண்டு களிக்க கூடும் என்பதற்கு இவ்விரு பாக்களும் சிறந்த சான்றுகளாகும்.

(ஆரியூர் - வ. பதுமநாப பிள்ளை.)

 

ஆனந்த போதினி – 1929, 1930 ௵ -

ஏப்ரல், ௴

 

 

 

 

No comments:

Post a Comment