Tuesday, September 1, 2020

 

செட்டு

 

"ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை" –       
                  குறள்.

 

வருவாயினும் செலவு சுருங்கிச் சிறிது சேர்த்துவைக்கும் வழி வாழ்தலே, 'செட்டு' எனப்படும்.'செட்டு' என்பதற்கு 'லோபத்தனம்' என்று சிலர் பொருள் கொள்ளுகின்றனர். அதுதவறு. வருவாயின் தன்மையுணர்ந்து, நன்மை பயப்பனவற்றைச் செய்தும் தீமை பயப்பனவற்றைக் கடிந்தும் வருதலே அது. செட்டாக வாழ்தல், தம் நயம் பிறர் நயம் என்னும் இரண்டினையும் கருதுவோர்களுடைய செய்கையாகும். ஆதலின், இது உத்தமமான நெறியேயாம்.


 ''ஓத னத்துக் (கு) உரிய தொரு பொருள்
 யாதுண் (டு) அன்னதை இத்துணை நாளைக்குப்
 போதும் என்ன அளந்து பொருத்துக
 தீதில் நற்பொருள் ஓம்புக சீர்பெற "

 

நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை வீண் செலவு செய்தல் நேரிதன்று. வரவினும் செலவு குறைந்தேயிருத்தல் வேண்டும். நமக்குச் செலவு நேரும் போது பொருளை எத்துணைக் கஷ்டப்பட்டுச் சம்பாதித்தோமோ, அதை மனதிற் பதித்து, "இச்செலவு நியாயமா? ஏற்றதா? இன்றியமையாததா?'' என்பன வற்றைச் சிந்தித்து, குறைக்கக் கூடியவற்றைக் குறைத்து, வேண்டியவற்றை மட்டும் நேரிய வழியில் செலவிடல் வேண்டும். பூசணிக்காய் போகுமிட மறியாது, கடுகு போகும் இடத்தையே ஆராய்தலும் தவறு.

 

''வளவனாயினும் அளவறிந் தழித்துண்'' என்ற உபதேசமொழியைக் கடை பிடியாது வரவுக்கு அதிகமாக செலவிடுதல் கூடாது. அதனால் வரும்   பொல்லாங்கு அளவிடற்பாலதன்று.

 

''ஆன முதலில் அதிகம் செலவானால்

 மான மழிந்து மதிகெட்டு - போன திசை
 எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
 நல்லார்க்கும் பொல்லானாம் நாடு''


என்ற ஒளவையாரின் உறுதியுரையை ஆராய்ந்தறிந்து, வருவாயினுஞ் செல்வைச் சுருக்குதல் வேண்டும். ''கடன் கொண்டு வாழாமை காண்டலினிதே" யன்றோ?
 

நம் நாட்டில் பெரும்பாலோர்க்குச் செட்டாகச் செலவிடும் வழக்கம் இல்லை. அவர்கள் வரவு செலவு கணக்கு வைத்துக்கொள்ளாமையே இதற்கு முதற்காரணம் ஆம்.

 

"ஆற்றில் போட்டாலும் அளந்து போடு " என்பது பழமொழி யாதலின், நாம் செலவு செய்யும் எதற்கும் கணக்கு வைத்துக் கொள்ளுதல் வேண்டும். வருவாயினளவையும் செல்வினளவையும் அப்போதைக்கப்போது கணக்கிட்டுப் பார்த்துக் கொண்டு வருவோமேயானால், ஆராதூரித்தனமாகச் செல்விடுதல் நீங்கி, வருவாயினும் செலவு குறைய வழியேற்படும்.

 

பண்டங்களைப் பாழாக்கலாகாது. " உப்பில்லாவிட்டால் தெரியும் உப்பின் அருமை; அப்பனில்லா விட்டால் தெரியும் அப்பன் அருமை " என்ற ஓர் பழமொழியுண்டு. ஒரு பொருள் இருக்கும் பொழுதே அதை மற்றும் வாங்குதல் கூடாது. அப்பொருள் செல்வாகிக் கஷ்டப்படும் பொழுது வாங்கினால் தான் அதன் அருமை பெருமை தெரிந்து அதை நிதானமாகக் கையாளும் வழக்கம் உண்டாகும். நம் கையிற் பணம் உள்ளதென்று கண்ட கண்ட பொருள்களை யெல்லாம் வாங்குதல் அடாது. செல்வு நேர்ந்தகாலத்து வரவுக்குத்தக்க செலவு செய்ய வேண்டுமேயன்றிக் கடன் வாங்கலாகாது. இடம்பவழிகளிலும், பிறர் போற்றலை எண்ணியும், வீண் செலவிடுதலை முற்றும் கடிதல் வேண்டும். தனக்குள்ள பொருளினின்றும், இன்றியமையாதவற்றைச் சில சமயங்களில் எடுத்துச் செலவிட நேர்ந்திருந்தால், செல்விட்ட அத்தொகையளவு சீக்கிரத்தில் ஈட்டி அதைச் சேமித்து வைத்துள்ள தொகையுடன் சேர்த்து விடல் வேண்டும். அத்தொகை சேரும்வரை நமது தினமானச் செலவைச் சிறிது குறைத்துக் கொள்ளல் ஆவசிகம். செல்வராய் இருத்தல் என்பது, நம் வருவாயைப் பற்றிய விஷயம் அன்று. பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயினும் அதனாற் கேடில்லை. பொருள் போகின்ற நெறியளவு அதனிற் பெருகாதிருப்பின் போதுமானது. எனவே 'செல்வராதல்' மிதமாகச் 'செல்விடுதலையே பொறுத்தது' என்னும் உண்மையை உன்னி உணர்தல் வேண்டும்.

 

பிறரைப் போலத் தாமும் செலவழித்தல், வேண்டும் என்று கொள்ளும் அவாவினாலும், மிக்க தாராள குணத்துடனிருத்தலினாலும், பெரும்போக நுகர்ச்சியினாலும், தம் சக்திக்கு மீறின செலவுகளைச் செய்தலினாலும், அஜாக்கிரதையினாலுமே பெரும்பாலோர் செட்டென்பதின்றிக் கஷ்டப்படுகின்றனர்.


 ''மாரி நாளைக்கு வேண்டுவ மற்றெலாம்
 சீரிதாகிய வேனிலில் தேடியே
 மாரி நாளில் சுகத்தொடும் வைகுக்
 ஒரும் உள்ளத் (து) உணர்வுடையோர்கள் தாம்''

 

என்று திருக்காளத்திப் புராணம் சாற்றுகின்றது. வருவாய்க்கு மேற்பட்ட செலவு செய்யாமலும் வரவத்தனையும் செலவு செய்யாமலும் இருந்தாற்றான், ஏதாவது பொருள் சேர்த்துவைத்தல் கூடும். வாழ்வும் தாழ்வும் சகடக்கால் போல் மாறி மாறி வருவன.


 ''குன்றத் தனை இரு நிதியைப் படைத்தோர்
 அன்றைப் பகலே அழியினும் அழிவர்.''


 ''வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை, எரிமுன்னர்
 வைத்தூறு போலக் கெடும்.''

எறும்பானது மழைக்காலத்திற்கு வேண்டும் உணவுப் பொருள்களை வெயிற் காலத்திற்றானே தேடி வைத்துக் கொள்ளுதல் போல நாமும் முதுமைப் பருவத்திற்காவனவற்றை இளமைப் பருவத்திற்றானே ஈட்டிவைத்துக் கொள்ளுதல் வேண்டும். "ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும்" காலமும் உண்டாதல் போல், நாம் பிணியினாலும் முதுமையினாலும் பல்வேறு இடையூறுகளினாலும் பொருள் வருவாயற்று இன்னலுறுங் காலமும் உண்டாகும். ஆதலின், இளமைப் பருவமும், தேகதிடனும், பொருள் வருவாயும் உள்ள காலத்தே, பின்னர் வேண்டியவற்றைச் சேர்த்து வைக்காமற் போவோமாயின், பிற்காலத்தில் அரைக்காசும் கிடைப்பதரிதாகி இடருறநேரும். ஆதலின் பொருள்தனைப் போற்றி வாழ்' என்னும் ஒளவையாரின் உபதேசத்தைச் செவ்வையுறத் தேர்ந்து, வருவாயில் நான்கில் ஒரு பங்காயினும், அதுவும் ஏலாதேல், பத்தில் ஒரு பங்காயினும், அதுவும் முடியாதேல், நம் சாத்திக்கு இயன்ற அற்பத் தொகையையேனும் பிற்காலத்திற் கெனச் சேமித்து வைத்தல் நமக்கேற்பட்ட கடமைகளிலொன்றாம்.

 

'செட்டு' ஆண் பெண் என்ற இருபாலாருக்கும் பொதுவேயாம். எனினும் இல்லிற்குத் தலைவி இல்லாளே யாதலின், பெண்பாலார் இவ்விஷயத்தை ஆடவரினும் சிறிது அதிகமாகக் கவனிக்க வேண்டும்:


 'செட்டுள்ள பெண்கையில் செல்வஞ் செழிக்குமே
 செந்திருவே! தன்வரவை மிஞ்சி
 மட்டில்லாமற் செலவிட்டு வரப்பணம்
 கெட்டோடிப் போமடித் தோழிப்பெண்ணே! "


என்ற மின்னார் நீதிக் கும்மிச் செய்யுள் 'இங்கு உன்னுதற் குரித்தாம்.

 

செட்டைக் கைக்கொள்ளுவதினால் அகங்காரம், சினம், ஒழுங்கீனம் முத லிய துர்க்குணங்கள் நம்மைவிட்டு நீங்கும். வாய்மை, நீதி, ஒழுங்கு, தன்னடக்கம், நல்லறிவு முதலிய உயரிய குணங்கள் நம்பால் எய்தும். தரித்திரம் தரித்திராது. கிழவயதில் அழவேண்டியதேயில்லை. மனதிற்குச் சாந்தியும், சந்தோஷமும், உற்சாகமும் உண்டாகும். உலகிற்கும் பல நலமான வழிகளில் உதவி செய்தலும் இயலும். புகழும் மதிப்பும் உண்டாகும். அறத்தாற்றின் ஈட்டிய அப்பொருள் அறத்தையும், இன்பத்தையும் கொடுக்கும். துன்பத்தைத் தடுக்கும். பகையென்னு மிருளைக் கெடுக்கும். ஆதலின் தமக்கு நலம் தேட விரும்புவோர் வீண் செலவு செய்யாமலும் கடன் வாங்காமலும் செட்டும் கட்டுமாகச் செலவு செய்து பொருள் சேர்த்து இன்புறுவார்களாக.


 வருவா யினுஞ் செலவு மட்டுறவே செய்தல்
 பெருமைதரும் செட்டுநெறி பேண்.      
சுபம்!!


 பண்டித - செ. ரா. கணபதி சுப்ரமண்ய ஐயர்,

 தமிழாசிரியர் – போர்டு ஹைஸ்கூல், கொள்ளேகாலம்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - செப்டம்பர் ௴

No comments:

Post a Comment