Tuesday, September 1, 2020

 

செய்நன்றியறிதல்

 

"செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்

வானகமு மாற்ற லரிது.''

 

இப்பூவுலகில் மனிதராகப் பிறந்த நாமெல்லோரும் ஒருமிக்க ஒத்து வாழ்வது இன்றியமையாத தாகும். அதிலும் ஒருவர்க் கொருவர் செய்யும் உபகாரத்தை மறக்காமல், அவர்கள் செய்த உதவிக்காக அவர்களைப் போற்றி வாழ்தல் இனிதினும் இனிதேயாம். இவ்வாறு வாழ்தலே செய்ந்நன்றி'யறிந்து வாழ்தல். நன்றியறிதல் மனிதருக்குள்ள அல்லது இருக்கவேண் டிய முக்கியமான குணங்களி லொன்றாகும். ஒருவர் செய்த நன்றியை மறத்தலைவிட வேறு கொடியது ஒன்று மில்லை.


“மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துட் டுப்பாயார் நட்பு.''

 

நமது துக்க காலங்களில் உதவி செய்தவாது சிநேகத்தை நாம் விருத்தி செய்ய வேண்டும். நன்றி யறிதல் ஒருவர் செய்த உதவியை மறவாமல், அதற்கு மனமார வந்தனம் செலுத்தலே என்று கூறுவர் பெரியோர். ஒருவர் நமக்குச் செய்த சிறிய உதவிக்காக அப்பொழுதே வந்தன மளிப்பதற்கும், நன்றியறிதலுக்கும் அதிக வித்தியாச முண்டு. பின்னால் சொல்லப்பட்டது நீடித்து நம் மனத்தில் நிற்க வேண்டுவது.


      “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
      தன்றே மறப்பது நன்று''

என்று தெய்வப் புலவரும் கூறியு
  

ஒருவன் செய்த தீமையை அன்றே மறந்துவிட வேண்டும். ஆனால் நன்மையை அவ்வாறு மறந்துவிடல் நல்லதல்ல. நாம் தெருவில் செல்லும் போது திகைக்கையில் எவனொருவன் நமக்கு வழிகாட்டுகிறானோ அவனுக்கு வந்தனமளித்துச் செல்லாவிடின் நம்மை மூடர் என்று சிலர் நினைப்பார்கள்.


      "எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
      செய்ந்நன்றி கொன்ற மகற்கு.''
  

ஒருவர் கொடுத்த பெரிய வரங்களைக் கெடுத்தாலும் அப்பாபத்தி னின்று நீங்கும் வழியுண்டு. ஒருவன் செய்த நன்றியை மறந்தால் அப்பாபத்தினின்று உய்யும் வழியே கிடையாது.
  

நாம் குடிகளாயிருப்பதால் நம்முடைய முன்னேற்றத்துக்கு ஓய்வொழிவின்றி உழைத்த மஹான்களுக்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம்! நமக்காகப் பாடசாலைகளும், வைத்திய சாலைகளும் வைத்திருக்கும் பெரியோர்களுக்கு நன்றி செலுத்துவோமாக. நன்றி செலுத்துதல் பார்வையினாலும், வார்த்தையினாலும், செய்கையினாலும் செலுத்தக்கூடியது. செய்கையினால் நன்றி செலுத்தமுடியாவிட்டால் வாக்கினாலாவது செய்யவேண்டும். சமாதிகளின் மேல் எழுதப் பெற்றிருக்கும் வார்த்தைகள் அதில் சமாதி செய்யப்பட்டவர்களுக்கு நன்றியைக் காட்டுகின்றன. ஒரு வயது முதிர்ந்தவன் ஒரு புளியம் விதையை நட்டு அதற்கு வேண்டுவன வெல்லாம் செய்யும் போது ஒரு சிறுவன்'' ஐயா! உமது காலத்தில் பலன் தராத அவ்விதையை என் நடுகிறீர்கள்'' என வினவியதற்கு வயது முதிர்ந்தவன் "நான் பிறர் நட்ட மரங்களின் பலனை அனுபவித்ததனால் என் பின்னால் வருபவர்க்கும் இது உபயோகமாக இருக்குமென்று நடுகி றேன்'' என்றானாம்

    
ஷேக்ஸ்பியர் (
Shakespeare) என்னும் ஆங்கில வித்துவான் கூறுகிறார்:

 

''..................'' குளிர்காலத்தில் வீசும் காற்றானது' நன்றியறியாதிருத்தலைக் காட்டிலும் கொஞ்சம் குறைவாகவே துன்புறுத்துகிறது. ஏனெனில் அது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. நன்றியறியாத ஒருவன் உபகாரம் செய்தவன் முன்னால் நிற்பனேல் அவனுக்கு அவமானமும் உண்டாகிறது ".............................''


ஒருவர்க்கு நாம் உபகாரம் செய்தால், அவர்கள் மறுபடி எப்பொழுது நமக்கு உதவிசெய்வார்கள் என்று காக்க வேண்டா.

 

"கைம்மாறு காவாமற் கற்றறிந்தோர் மெய்வருந்தித்
தம்மால் இயன்ற உதவி செய்வரம்மா!.............


“நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருத லால்.''
  

''நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா
நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்.''
  

நாம் இவ்வுலகில் முக்கியமாக அறுவர்க்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம்

முதலாவது; - தாயானவள் நம்மைப் பத்துமாதம் சுமந்து, வருந்திப் பெற்று, எண்ணெய் புகட்டிப் பாலூட்டி, நீராட்டி, மைதீட்டிப், பாராட்டின ளல்லவா? வியாதி வந்த காலத்து அருமையாய்ப் பாதுகாத்து மற்றச் சமயங்களிலும் உதவி செய்கின்றனள் அல்லவா?

 

இரண்டாவது: தந்தையானவனர், நமக்கு உணவும் உடையும் ஈந்து, கல்வி கற்பித்து, நல்லோர் நேசத்தையாக்கி நம்மை யுயர்ந்த பதவிக்குக் கொண்டு வருகின்றனான்றோ!

  

மூன்றாவது: - குருவானவர் மாணாக்கருக்கு நல்லறி வுண்டாகுமாறு கல்வி புகட்டி, அன்பும் ஆதரவுங்கொண்டு அருமையான பல பொருள்களையும் உபதேசிக்கின்றனான்றோ! குருவில்லாத கல்வி பெருகாதன்றோ!

  

நான்காவது: - கடவுளானவர் நமக்குக் கை கால் முதலிய அவயவங் களைக்கொடுத்து, நன்மை தீமைகளை இன்னவென நூல்களாற் காட்டி, மற்றும் மழை வெயில் முதலிய அவசியங்களையும் கருணை யுடன் ஈந்து, நமக்குண்டாகும் நோய்களைப் போக்கி நம்மைக் குறைவறப் பாதுகாக்கின்றனரன்றோ! அப்படிப்பட்ட கடவுளது ஆணையாகிய அறநெறிகளை நாம் கடைப்பிடித்து ஒழுகுதலே கடமையாகும். அவர் நமக்குச் செய்யும் உதவிகளை ஒவ்வொன்றா யுரைக்கப் புகின் அவை அளவின்றி வளரும்.

  

ஐந்தாவது: அரசனானவன், குடிகளுக்கு ஐவகைத்துன்பங்களை நீக்கி நன்மைகளையாக்கி ஆண்டு வருகிறானன்றோ!

  

ஆறாவது பெரியோர், நல்லொழுக்கங்களை நாட்டி, நம் முன்னேற்றத்திற்காக உள்ளும் புறமும் ஒத்து உதவி புரிகின்றனரன்றோ! ஆதலின் இங்குக்கூறிய இவர்களிடம் நாம் எக்காலத்தும் நன்றி மறவாமல் நடப்போமானால், நாடெங்கும் வாழ நலனுறலாம்.

  

ஆன்றோர் கூறியபடி செய்ந்நன்றி யறிந்து, கடவுளை நம்பி நீடுழி வாழ்ந்து ஜகதீசனது திருவடிகளை யடைவோமாக!

 

             C. P. சுந்தாராம்,
        ஸ்ரீ கிருஷ்ணர்வாசக சாலை,

கோயமுத்தூர்.

 

ஆனந்த போதினி – 1920 ௵ - ஜுலை ௴

 

 

No comments:

Post a Comment