Tuesday, September 1, 2020

 

செய்ந்நன்றி மறவாமை

 

ஒருவர் செய்த வுபகாரத்தை மறத்தல் கூடாது. விசுவாசங் குடிகொண்ட வுள்ளத்தவரால் அது போற்றத்தக்கது. செய்ந்நன்றி மறவாத நாய் முதலிய மிருகங்களுஞ் செய்ந்நன்றியற்ற மனிதர்களால் போற்றத்தக் கவையே. செய்ந்நன்றியுள்ள மனிதன் தேவனேயாவன். தளராவளர் தெங்கு தாளுண்ட நீரைத் தலையாற்றான் றருவது வியக்கத்தக்க தல்லவா? இத்தகைய குணமுள்ள நல்லோரொருவருக்குச் செய்யுமுபகாரமானது, கல்மேலெழுத்தாகும்; ஈரமிலா நெஞ்சத்தினராம் பாங்கறியாப் புல்லறிவாளர் தமக்கீந்த வுபகாரமானது கல்லின் மேலிட்ட கலத்தையும், நீர்மேலெழுத் தையுமொக்கும்.

     

நமக்கு நன்மை புரிவதிற் றாயார் முதலாவர். அவரது நன்றி பரிசுத்தமான அன்பேயாகும். முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாள்ளவும் அங்க மெலாம் நொந்து சுமந்து குழந்தையைப் பெற்று "அப்பாடா! " என்றலறி ஸ்மரணையற்றுத் தான் மண்ணில் விழுந்து, பிறந்ததாண்குழவியாயின், அதைப் பிறர் சொல்லக் கேட்டதே களை தீர்ந்துடலிலோ ருவகை பூப்ப எழுந்து அதனைப் பரிந்தெடுத்துக் கைப்புறத்திலேந்தி, '' உருசியுள்ள தேனே! அமுதமே! மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே! ஆருயிர் மருந்தே! மலையிடைப்பிறவா மாணிக்கமே! அலையிடைப் பிறவா அமுதே! யாழிடைப் பிறவா இசையே!" என்று அன்புடன் அழைத்து அதற்குக் கலசப்பால் தந்து அதனைக் கட்டிலிலுந் தொட்டிலிலும் மார்மேலுந் தோண்மேலும் வட்டிலிலும் வைத்துக் காப்பாற்றி வருபவள் தாயன்றோ? நாம் முன்னறி தெய்வம் அவளே யன்றோ? குழந்தையை யாளாக்குவது யார்? தாய்மார்கள் தாமே! இத்தகைய தாய்மார்களிடத்தில் நாம் விசுவாசமுடையவர்களா யிருக்க வேண்டாமா? அந்தோ! சிலர் தமது தாய்மார்களை வயிறெரியப் பாடுபடுத்துகிறார்கள்; இது தகுமா? " மாதா வயிறெரிய வாழாய் ஒருநாளும் " என்பது வேதவாக்கியமன்றோ?

 

இரண்டாவதாகத் தந்தையை எடுத்துக்கொள்வோம்: பிள்ளை பிறந்ததே அவனை யன்பாய் வளர்த்து அவனுக்கு வித்தியாப்பியாசம் செய்வித்து அவன் அறிவாளனாகும்படி செய்வது தந்தையார்தாமே! வார்த்திக திசையிலவருக் கன்ன பானாதி களீந்து அவரைக் காப்பாற்றவேண்டியது பிள்ளைகளின் கடமையாயிருக்கத் தகப்பனைச் சிறை செய்த அலங்கீர் (ஒளரங்கஜேப்) போற்றந்தையைப் பாடுபடுத்துவது எத்தகைய மதியீனம்! காலம் சென்ற தந்தையாருக்குச் சிரார்த்தம் கூட நன்கு செய்யாது விடுகின்றனர் சிலர்; அன்னவரை நாம் என்னென்றுரைப்பது!

 

 ஆதலால் நாம் பெற்றோர்களிடத்தில் அன்பாகவும் விசுவாசமாகவும் நடந்து அவர் மனம் மகிழும்படி வாழ்வதையே பெரியதோர் கடமையெனக் கொள்ள வேண்டும். அதுவே நாம் பெற்றோர்க்கியற்றும் கைம்மாறெனலாம். இன்சொற் புகலுதல், வழிபடுதல், உற்றவிடத் துதவுதல் முதலியவை பெற்றோரை மகிழ்விக்கச்செய்யுங் கருவிகளாகும்.
 

மூன்றாவதாகக் கடவுளை எடுத்துக் கொள்வோம்: கைம்மாறு கருதாது மழை பெய்யுங் கார்முகில்போ லான்மாக்களிடத் தேது மெதிர்பாராது அவ்வான்மாக்களுக்கு வேண்டிய அனைத்தையும் அமைத்தருளிய கருணாநிதியான கடவுளைப் போற்றாதது மதியீனமே; இறைவனைப் போற்றாதாரீண்டு நரராவரோ? இத்தகைய அறப்பெருங் கடலாகிய அண்ணலுக் கியற்றுங் கைம்மாறு அவரிட்ட விதியை யியற்றி யிடாதவற்றை விலக்கி வாழ்வதே யாம். அவர் "பொய் சொல்லாதே; சோரம் செய்யாதே; பரிசுத்தமான இதயத்தினனாயிரு " என்றருளியபடி நாம் நடக்க வேண்டியவர்களே. அவ்வாறின்றி அவர் விலக்கியவற்றைச் செய்து இறுமாப் படைவோமாகில் அந்தோ! நம்கதி தலைகீழாகும். நாம் இருளடர்ந்த நரகத்தில் உழலுவோம்.

 

சகோதரரே! அது பயங்கரமானதே. தினந்தோறு மக்கருணைக் கடலை மனமுருகிப் பத்து நிமிட நேரமாயினுந் துதிக்கவேண்டிய தின்றியமையாததே. நாம் கற்பதெதற்காக? எண்குணமுடைய இறைவனை யடைதர் பொருட்டேயன்றோ? அந்தோ! சிலர், " கடவுளேது கிடவுளேது? எல்லாங் கட்டுக்கதை. ஏட்டுச் சுரைக்காய்'' என்று நாத்தழும்பேற இடைவிடாது பேசித் திரிவர்; அவர்தம் மதிதானென்னே! அம்மம்ம! பரிதபிக்கத் தக்கதே!

 

இங்ஙனம் பெற்றோர்களிடத்துந் தெய்வத்தினிடத்தும் விசுவாசத்துடன் நாம் நடந்து வந்தோமே ஆகில் எல்லாம் வல்ல இறைவனிரங்கி நம்மை அழியா ஆனந்தத்திலாழ்த்தி நமக்கு இன்னருள் புரிவன். ஆதலின், என தன்பார்ந்த சகோதரர்களே! ஓ! இந்தியத் தாயின் புத்திரர்களே! பெற்றோர்களிடத்தும் தெய்வத்தினிடத்தும் செய்ந்நன்றி பாராட்டுங்கள். மாதா பிதாக்களே கண்ணிற்குத் தெரியுங் கடவுட் பிரதிரிதிகள். எந்த மனிதனால் அவனது தாய் தந்தையர் திருப்தியடைந்து வருகிறார்களோ அப்படிப்பட்ட மனிதனிடம் கடவுள் திருப்தியடைகிறார். ஆதலால் பெற்றோர்களிடம் ஒருபொழுதும் கொடிய சொற்களை யுபயோகித்து அவர்களை வருத்தாதிருங்கள்; பெற்றோர்களுக்கு முன் வேடிக்கையாகப் பேசக்கூடாது; சோம்பலைக் காட்டக்கூடாது; கோபத்தைக் காட்ட வேண்டாம். மாதா பிதாக்களுக்கு முன் மகன் பணிவுடன் வணங்கி அவர்களுக் கெதிரில் ஒழுக்கமாய் எழுந்து நிற்றல் வேண்டும். அவர்களுட்கார உத்தரவளிக்கும் வரை யங்ஙனம் நிற்க வேண்டும். தன் சரீரத்திற்குக் காரணமான பெற்றோர்களை மகிழ்விப்பதில் ஆயிரந் துன்பங்களைச் சகிக்கச் சித்தமா யிருத்தல் வேண்டும். இந்த விதமாய்ப் பெற்றோர்களை மகிழ்விப்பதே நாமவர்கட்கியற்றும் பெருங் கைம்மாறு.

 

"ஓ! மனிதனே! உன்னைப் படைத்தவர் ஒருவர் உளர்; அவர் சர்வ சாத்தியும் வாய்ந்தவர்; நீ தினந்தோறும் இயற்றும் பற்பல குற்றங்களையும் பொறுப்பவ. நீ இப்பேர்ப்பட்டவரை யறிந்து வணங்காதது மூடத்தனம். அந்தோ! இத்தகைய கருணாநிதியைப் புறக்கணியாதே; அங்ஙனமாயின் உன் பாபங்கள் மன்னிக்கப்படா; உன்முடிவு பயங்கரமானது; உன்னுடைய குறைகளைக் கூறி அவைகளைத் தீர்க்கும் பொருட்டும் உன்னுடைய பெருத்த பாபங்கள் மன்னிக்கப்படுவதன்பொருட்டும் அவரை மனங்கரையத் துதித்துப் பிரார்த்தனை செய் உன் விண்ணப்பங்களை யவர் ஏற்றுக்கொள் வார்; அவற்றின்படி செய்வார்; இப்படி உனக்கு நன்றி புரியும் வருக்கு நீ கைம்மாறாகத் தரவேண்டியது பரிசுத்தமான அன்பே; அதையே அவர் உன்னிடம் கோருகிறார்; அந்தோ! அத்தகைய அன்பை நீ அவரிடம் செலுத்தாது நாமரூபத்துடன் தோன்று மனித்திய திரிசிய போகங்கனிடத்தில் செலுத்தி, பாபத்தைத் தேடிக்கொள்கின்றாய்; இது தகுதி யன்று; இனியாவது தெளி'' என்று பெரியோர் கூறியிருக்கின்றனர். ஆதலின், அன்பார்ந்த நேயர்காள்! செய்ந்நன்றி விசுவாசமுடையவர்களாகி, நன்றி செய்யும் பெற்றோர்களிடத்தும் தெய்வத்தினிடத்தும் அன்புடையோர்களாகி, அவர்களை மறவாமல் வாழுங்கள். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.


 அ. ப. சுப்பிரமணியன்,

கோபிசெட்டி பாளையம்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஜுன் ௴

 

 

No comments:

Post a Comment