Tuesday, September 1, 2020

 

செல்வச் சிறப்பு

 

திரண்ட செல்வமானது ஒருவனுக்கு வந்து சேருமாயின் தெய்வ மொன்றுண்டென்பதை மறக்குந் தன்மையும், இன்னவிடத்திலே யின்ன விதமாகப் பேசவேண்டு மென்பதை மறந்து செல்வச் செருக்கினால் தன்னை யுயர்த்திப் பேசுவதும், ஏழைகளாகிய தனது சுற்றத்தவர்களை அன்னியர்களெனக் கூறுவதும், நன்மையான விஷயத்திலேனுந் தீமையான விஷயத்திலேனுந் தானே வெற்றியடைய வேண்டுமென்று நினைப்பதும் அத்தனவந்தனுக்கு இயல்பாக விருக்கின்றன. ஆகாயத்திலே பறந்து திரியும் பறவைகள் தங்களுக்காக வீடுகளைக் கட்டுகின்றன. தங்கள் குஞ்சுகளுக்காக இரைதேடிக் கொண்டு வந்து அன்புடன் அவற்றைப் போஷிக்கின்றன. தூக்கணங் குருவியின் கூட்டைப்பாருங்கள். எவ்வள வலங்கார மாகவும் நூதனமாகவு மிருக்கின்றது. அத்தன்மையான கூட்டை நாம் ஒருபோதுஞ் செய்ய முடியாது. ஆனால் ஏராளமான திரவியஞ் செலவு செய்து மாட மாளிகைகளையுங் கூடகோபுரங்களையு மமைக்கின்றோம். பூர்வீக சரித்திரங்களைப் பாருங்கள். ஒருகாலத்தில் சகல வளப்பங்களும் பொருந்தியுள்ள பட்டினம் மற்றொரு காலத்திலே காடாக விருப்பதை யறிகின்றோம். சுடுகாடு ஒருகாலத்திலே பட்டினமாக மாறுவதையுங் காண்கின்றோம்.

 

மேற்கூறிய பிரகாரம் ஆகாயத்துப் பறவைகள் தங்களுக்காகக் கூடுகட்டித் தங்கள் குஞ்சுகளைக் காப்பாற்றுவது போலவே நாமும் மாடமாளிகைகளைக் கட்டி நமது பிள்ளைகளைக் காப்பாற்றுகிறோம். பட்சிகளினுடைய செய்கைகளும் நம்முடைய செய்கைகளும் வேறுபட்டிருத்தலின் நாம் மனிதரென்றிருப்பதின் பிரயோசனந்தானென்ன? ஆராய்ந்து பார்க்கின் மனிதர்களிலும் பட்சிகள் மேலானவையென்று சொல்ல வேண்டியதாக விருக்கிறது. ஏனெனில் காகந் தனக் ககப்பட்ட இரையை யுண்ணும் பொழுது தன்னுடைய சுற்ற மித்திரர்களைக் கூவியழைத் துண்ணு கின்றது. நாமோ, சுற்றத்தவர்கள் பசியால் வருந்தக் கண்டும் இரக்க மற்பமுமில்லாது அவர்களுக்குக் கொடாத வண்ணம் புசித்து ஏப்பமிடுகின்றோம். குபேர சம்பத்துடையவர்களுடைய மாளிகைகளை யடைந்து சில தர்ம விஷயங்களைப் பற்றி யெடுத்துக் கூறினால், அல்லது தர்ம விஷயத்துக்காகப் பொருளுதவி செய்ய வேண்டுமென்று கேட்டால் அவர்கள் தங்களிடத்தி லேதோ விசேஷ கௌரவ மிருக்கிறதென்றும், தம்மைப் பணவுதவி செய்யும்படி கேட்டவர்கள் மிகவுங் குறைந்தவர்களென்றும் நினைத்து விடுகின்றார்கள்.

 

 "வெள்ளியிட்ட காலுக்கு வெறுங்கா லடிமை'' என்பதே யிவர்களுடைய எண்ணம். முன்னும் பின்னு மில்லாது இடைநடுவிற் பொருந்துகின்ற இச் செல்வமானது சிவன் தந்ததென்று கொடுக்க வழியறியாது மனமில்லாதவரை நாமென் சொல்வோம். தங்களிடத்திலுள்ள திரவியமும் மாளிகையும் பெண்டிர் பிள்ளைகளும், எக்காலமும் தம்மைவிட்டு நீங்குதலில்லையென்று நம்பி விடுகின்றார்கள். அந்தோ! என்ன அறியாமை!!

 

''பண்டு காமரானவாறும் பாவையர் வாயமுதம், உண்டவாறும் வாழ்ந்த வாறும் ஒக்க வுரைத் திருமித், தண்டு காலாவூன்றி யூன்றித் தள்ளி நடவா முன் " னும், "முதுகுபற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோலூன்றி, விதிர் விதிர்த்துக் கண்சுழன்று மேற்கிளை கொண்டிருமி, இதுவென்னப்பர் மூத்தவாறென் றிளையவ ரேசா முன் " னும், ஆற்றுப் பெருக்கினாலே யங்கு மிக்குத் தோற்றி மறைகின்ற திடருக்குச் சமானமாகிய செல்வத்தை நிலையென்று மதியாது, தேச முன்னேற்றத்துக்குஞ் சமய முன்னேற்றத்துக்கு மின்றியமையாத கைங்கரியங்களைச் செய்யும் பொருட்டு நாம் முன் வருதல் வேண்டும்.

 

மங்காத பெரும் பேற்றை யடைந்த மகான்கள் இவ்வுலக வாழ்க்கையையும் செல்வ நிலையாமையையு முணர்ந்து தங்கள் சீவிய காலத்தையுஞ் செல்வத்தையும் பரம கைங்கரியங்களிலே செலவிட்டமையும் தற்போது செலவிட்டு வருவதையும் நாம் யோசித்துப் பார்த்தல் வேண்டும்.

 

பரதகண்டத்தி லவதரித்த ஆயிரக் கணக்கான தேசாபிமானிகளும், கோடீஸ்வரர்களும், தங்கள் சீவிய காலத்தையும் திரண்ட செல்வத்தையும் எவ்விதமாகச் செலவு செய்கிறார்களென்பதைப் பாருங்கள். நவரத்தின மயமான மாடகூடங்களையும் நிலாமணி முற்றங்களையும் அம்ச தூளிகா மஞ்சங்களையும் துறந்து, தேவியர்களையுந் திரவியங்களையும் புத்திரர்களையும், நூற்றுக்கணக்கான ஏவலாளர் பணி கேட்ப வீற்றிருக்கும் உந்நதநிலைகளையும் மறந்து தேச முன்னேற்றத்தின் பொருட்டுக் கைதிகளாகிச் சிறைச்சாலைகளிலே படுக்கப் பாயுமின்றி யெதற்காகப் பிரயாசைப்படுகிறார்கள்.

 

இவர்களுக்குள்ள குறையென்ன? தேச முன்னேற்றத்துக்காகவே தங்கள் திரவியங்களையெல்லாம் செலவு செய்கிறார்கள்.

 

செல்வர்களாயுள்ளவர்கள், தங்கள் செல்வம் நிலையானதென்றும், தமது பெண்டிர் பிள்ளைகள் என்று மிறவாதிருப்பர் என்றும், ஒருவேளையிறந்தாலும் தம்முடன் பணத்தைக் கட்டிக்கொண்டு போகலாமென்றும் நினைத்தல் தவறு. ''ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்'' என்ற முதுமொழி சத்தியமன்றோ? கரணங் கலங்க மரணம் வருமே; கால தூதுவர் பாசத்து னாற் கட்டிச் செல்வாரே. தருமஞ் செய்யாத பாவிகளென்று கிங்கரர்களாக்கினை செய்வார்களே. அப்பொழு தக்கிங்கரர்களை நோக்கி " என்று மிறவோ மென்றிருந்தோ மிறந்து படுவ தீதறிந்தா, லின்று படைத்த பொருளையெல்லா மருள்வோம், பெரியோர்க்' கென்று சொல்லக்கூடுமா? அல்லது இப்படி மரணம் திடீரென வருமென்று நினைக்கவில்லையே! இன்னு மொருதரம் " சென்று வரவாங் கெம்மை யின்னுஞ் செலுத்திற் புதைத்த திரவியத்தை, யொன்று மொழியா தறம்புரிந்திங் கோடி வருவோ " மென்றுதான் சொல்ல முடியுமா? செல்வப் பிரபுக்காள்! உங்கள் திரண்ட செல்வத்துக்கேற்ற பலனையடைய வேண்டுமாயின், உங்கள் மங்காப் பெரும் புகழானது மலைமேற் றீபம் போல் என்றென்றைக்கும் பிரகாசிக்க வேண்டுமாயின், தேச முன்னேற்றத்துக்குஞ் சமய முன்னேற்றத்துக்கு மின்றியமையாத முயற்சிகளிற் றலையிடுங்கள். இதுவே மண்ணுலகில் மானிட ஜென்மமெடுத்துப் பிறந்தோர் செய்யும் முக்கிய கடமையாகும்.


 இ, இரத்தினம்.

 

 

 

குறிப்பு: -

 

"கைப்பொருள் பெற்ற ஞான்றே
கடவுளா லயத்துக் கீந்தும்
மெய்ப்படு புராண நூல்கள்
விதிமுறை கேட்டு வந்தும்
வைப்பென விரப்போர்க் கீந்தும்
வருபவ ருளரேற் கூற்றம்
மொய்ப்படு தண்டம் நீங்கி
முன்னவ னின்பத் தாழ்வார் "


என்பதை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். சிந்தித்து நம்மா லியன்ற பரோபகாரங்களைச் செய்து வரவேண்டும். அவ்வாறு செய்துவரின்,

 
 "பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வம்
 நயனுடை யான்கட் படின்''


அதாவது உலகநடையினை அறிந்து ஒழுக வல்லவனிடம் செல்வமுண்டாயின் அது பயன்படு மரம் ஊர் நடுவே பழுத்ததை யொக்கும் என்னும் வேத வசனத்திற்கு நாம் இலக்காகி, இம்மை மறுமைப் பயன்களை எளிதி லடையலாம்.

 

ப - ர்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஜனவரி ௴

 

 

No comments:

Post a Comment