Tuesday, September 1, 2020

 

செல்வத்துப் பயன்

(வை. இராஜாராம்)

செல்வம் என்னுஞ் சொல் அருட்செல்வம் செவிச்செல்வம் எனப் பல சொற்களொடு சேர்த்துக் கூறப்பட்டாலும் தனியாக நின்றவிடத்துப் பொருட் செல்வத்தையே உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் உணர்த்துவுதாக வுள்ளது. அப்பொருட் செல்வந்தானும் இவ்வுலக வாழ்க்கைக்கு மிக இன்றியமையாததாகவுள்ளது. அதன் இன்றியமையாமையை,

“அருளிலார்க் கவ்வுலக மில்லை பொருளிலார்க்

கிவ்வுலக் மில்லாகி யாங்கு”

 

என்னும் வள்ளுவர் வாய்மொழி தெள்ளிதின் உணர்த்தும். அத்தகைய செல்வத்தை அறநெறியில் ஈட்டுதலே சாலச் சிறந்ததாகும். அதுவே அச்செல்வநிலை பேற்றிற்கும் அச்செல்வத்தாற் பெறும் பயனுக்கும் காரணமாகும். அவ்வாறு ஈட்டிய பொருளைப் பயனுணர்ந்து செலவழித்தல் வேண்டும். அப்பயன் யாதென ஆராய்வாம்.

உலகத்துப் பொருள் பெறுதலில் பயன் தான் மட்டும் நுகர்ந்து இன்பத்துடன் வாழ்வதன்று. “யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் உயரிய நோக்கத்துடன் வாழ்ந்தவர் நம் முன்னோர். ஆகவே, செல்வம் பெற்றதின் பயன் தான் பெற்ற பொருளைத் தக்கார்க்கு ஈயு நெறியா லீந்து அவ ரின்புறத்தான் இன்புற்று வாழ்தலாம். அங்ஙனம் கொடுத்து வாழாதார் தம்பொருளை வறிதே வைத் திழப்பவராவர். இதனைத் தெய்வப்
“புலமைத் திருவள்ளுவனார்,

“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்”

 

என அறிவுறுத்தியுள்ளார்.

கடைச்சங்கப் புலவரேறாகிய நக்கீரனார் இதனைக் காரணத்துடன் கூறும் தன்மை படித்து இன்புறத் தக்கதாகும்.

"தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்

நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா வொருவற்கும்

உண்பது நாழி உடுப்பன இரண்டே

பிறவு மெல்லாம் ஓரொக்கும்மே, அதனால்

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே"

 

என்பதே அது. 'கடல்சூழ்ந்த உலகைப் பிறருக்குரிமை யின் வித்தனக்கே யுரியதாக ஆளும் அரசருக்கும் நள்ளிரவிலும்  பகலிலும் தூங்காதவனாய் விலங்குகளை வேட்டையாடும் அறியாத வேடனுக்கும், உண்ணும் உணவு நாழி யளவினதே. உடுக்கும் ஆடைகள் இரண்டேயாம். மனைவி மக்கள் முதலிய பிறவாற்றான் வரும் இன்பமெல்லாம் இருவர்க்கும் ஒத்தனவேயாம். இவ்வாறு உலகெலாம் ஆளும் பெருஞ் செல்வனாய அரசனுக்கும் புலாலுண்ணும் கல்வியறிவிலா வேடனுக்கும் இன்பம் ஒரு தன்மையதேயாதலின், ஒருவன் செல்வம் பெற்றிருத்தலின் பயன் பிறர்க்கீதலாம். அங்ஙனம் ஈயாது ஒருவன் 'யாமே அனுபவிப்பேம்' என நுகர்வானே யானால், கள்வராலும் வினை செய்வராலும் பிறவாற்றாலும் சிதறிப்போவன பலவாம்'' என்பது இதன் பொருள். இதனால் செல்வத்துப்பயன் பிறர்க்கீத லென்பதும் ஈயாதவிடத்து அப் பொருள் பலவாற்றான் அழியுமென்பதும் தெளிவாக விளங்குதல் காண்க.

ஒருவன் தனக்கு வரும்பொருளை நான்கு கூறாக்கி அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி ஒன்றனை மேல் இடர் வந்தவிடத்து நீக்குதற் பொருட்டு வைப்பாக்கி மிகுந்த ஒன்றனையும் பிறர்க்கீதல் வேண்டும் என்பது தோன்ற, "வருவாயுட் கால்வழங்கி வாழ்தல்” எனப் பிறரும் கூறியுள்ளனர். இவ்வாற்றால் செல்வத்துப் பயன் ஈதல் என்பது தெற்றென விளங்கும். இனி யாருக்கு எவ்வாறு ஈதல் வேண்டும் என்பதையும் ஆராய்வாம்.

ஈகை யென்பது இன்னதெனக் கூறவந்த திருவள்ளுவரும், ‘வறியார்க் கொன் றீவதே யீகை' எனப் பொதுப்படக் கூறியுள்ளார். அதற்குப் பரிமேலழகர் ‘ஒருபொருளு மில்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது’ என உரை எழுதிச் சென்றார். வறியார்க்கு வேண்டிய வற்றைக் கொடுக்கும் போதும் நாம் கொடுப்பது, ‘இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்' ஆகுமா என ஓர்ந்து கொடுத்தல் வேண்டும். ஒருவன் சிறிது உணவு கேட்கின்றான் என வைத்துக் கொள்வோம். சிறிது. உணவு கொடுத்தால் அவன் ஒரு வேளையுண்டு மறுவேளையும் சிறிதுணவு எதிர்நோக்கி யிருக்கின்றான். இது இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதலாகுமா? 'முன் கொடுத்ததனால் அவனை மேலும் இரக்கச் செய்வதன்றி வேறு பயனுண்டா? ஆகவே அவ்விரவலன் பிறர் கையை எதிர் நோக்காது தன் உழைப்பால் பொருள் பெற்று உண்ணுமாறு கல்வியறிவுடையனாக்குதல் வேண்டும். இவ்வாறு அவன் இரப்பதற்குக் காரணமானவற்றை உணர்ந்து அதனை நீக்கி அறிவுடையனாக்குதலே ‘இலனென்னும் எவ்வம் உரையாமை' ஈதலாகும். இது பற்றியன்றோ, பாரதியாரும்,

“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

அன்ன யாவினும் புண்ணியங் கோடி

ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல்"

 

என மொழிந்து போயினர். நாட்டில் இரவலர்கள் எல்லாம் அறிவுடையராய் தமக்கேற்ற தொழில் புரிந்து வாழத்தொடங்கில் வறுமைப்பேய் தலைகாட்டா தொழியும். பிச்சை யெடுத்தல் என்பதே நீங்கும். நாடு நன்னிலையுறும். ஆகவே இரவலர்க்குத் தக்க கல்வியீதலே சிறந்த ஈகையாம்.

இப்பொழுது நாட்டில் சீரிய கல்வி புகட்டப்பட் வில்லை. இப்பொழுது கற்பிக்கப்படும் கல்வி மாணவர்களை உத்தியோக வேட்டைக்கிழுத்துச் செல்லுகிறதே யன்றி உழைப்புக்கு இழுத்துச் செல்லவில்லை. இதனால் உத்தியோகத்திற்குச் செல்லவேண்டா
மென்று கூறவில்லை. அனைவரும் அவ்வேலைக்குச் சென்றால் எங்ஙனம் வேலை கிடைக்கும்? அனைவரும் சிவிகை யூர்ந்தால் தாங்கிச் செல்லுவோர் யார்? உத்தியோக மில்லாதார் வேலையில்லாத் திண்டாட்டக் கழக உறுப்பினராகத் திகழ்கின்றனரேயன்றி
அவர்களுக்குக் கைத்தொழில் ஒன்றும் தெரியவில்லை. தொழிற் கல்வியின்றி அடிமைக்கல்வி மட்டும் புகட்டுவதில் யாதொரு பயனுமில்லை.

தாய்மொழிக் கல்வியோ முற்றும் மறக்கப்பட்டு விட்டது. தாய்ப்பால் இல்லாக் குழந்தையின் வளர்ச்சியும் வளர்ச்சியாமோ? தாய்மொழிக் கல்வியில்லாக் கல்வியறிவும் பயன்படும் அறிவாமோ? தமிழ்மொழி பிற மொழியாளரும் விரும்பிப் பயிலும் வண்ணம்
இயற்கை இளமைத்தன்மை குன்றாது திகழ்கின்றது. தண்டமிழ் நூல்கள் நமது முன்னோர் கண்ட அரும்பெரும் பொருள்களை நல்கும் வற்றாக் களஞ்சியங்க ளெனத் திகழ்கின்றன. ஒவ்வொருவர்க்கும் தந் தாய்மொழி வாயிலாகக் கல்வியமைதல் வேண்டும். பின்னர் அவரவர் அறிவாற்றல்களுக்கேற்ப வேற்றுமொழிப் பயிற்சி வேண்டப்படும். தாய்மொழியைப் புறக்கணித்து வேற்றுமொழியில் எத்துணை மேம்பட்டிருப்பினும் மொழியறிவாற்பெறும் பயன் முற்றும் பெற்றதாக மாட்டாது. இவற்றை யுணராது, பிறமொழி பயிலும் தமிழ்மக்களிற் சிலர் தமிழ்மொழியின் அருமை பெருமைகளைப் பிறமொழி வாயிலாக உணர்கின்றனர். என்னே அவர் தம் தாய்மொழிப் பற்று! அவர் செய்கை தன் மனையாளின் நற்குணங்களைப் பிறன் மனையாளிடம் கேட்டறிபவனது செய்கையன்றோ ஒத்துளது? 'பாரொடு திசை பரவிய தமிழ்' பயில்வாரற்றுக் கிடந்தது. இப்பொழுது சில செல்வரது முயற்சியாலும் தமிழ் மக்கள்து கிளர்ச்சியாலும் சிறிது ஆக்கம்பெறத் தொடங்கியுள்ளது.

செல்வர்களனைவரும் அரசியலாரையே முற்றும் எதிர்நோக்கி யிராது தாய்மொழிப் பள்ளிகளை எங்கும் ஏற்படுத்தல் வேண்டும். அவற்றுள் சீரிய தொழில் கல்வியும் மாணவர்க்குப் பயிற்றுவிக்க வேண்டும். இதனால், பிற கல்வியேர், பிற மொழிக் கல்வியோ
கூடாதென்பது கருத்தல்ல. இவற்றை அடிப்படையாகக் கொண்டே அவை பயிற்றப்பட வேண்டும். இவற்றிற்குரிய கழகங்களை நாடெங்கும் அமைத்தல் வேண்டும். அவற்றிற்கு வேண்டிய பொருள்களைச் செல்வர்கள் ஈதல் வேண்டும். படிப்பதற்கு எண்ணமில்லர்த மாணவர்கள் ஒரு புறமிருக்க, படிப்பதற்கு விரும்பும் எண்ணமும் அறிவும் உடையரா யிருந்தும் தக்க வசதியின்மையால் கல்வியறிவு பெறாது பல மாணவர்கள் இருக்கின்றனர். அவ்வேழை மாணவர்களை யெல்லாம் செல்வர்கள் ஆதரித்துக் கல்வி பயிற்றுவிக்க வேண்டும். சுருங்கக் கூறின், இலவச வுணவு விடுதிகளொடு
(Free Boarding arid lodging) கூடிய தமிழ்ப் பள்ளிகளைச் செல்வர்கள் நாடெங்கும் தோற்றுவித்தல் வேண்டும். தோன்றிய பள்ளிகளை ஆதரித்தல் வேண்டும். 'ஈதல் இசைபட் வாழ்தல் அதுவல்ல, தூதிய மில்லை யுயிர்க்கு' என்னும் வள்ளுவர் நன்மொழிகளை உன்னிச் செல்வர்கள் நாடெங்கும்
தொழிற்கல்வியோ டியைந்த தமிழ்ப்பெரும் பள்ளிகளைத் தோற்றி, கழுவிப் பயன்படுத்துவா ரின்மையால் மாசுபடிந்த மாணிக்கம் போல வறுமையால் மழுங்கிய அறிவுடையராய் ஏழைமக்களை ஆதரித்துக் கல்வியறிவூட்டுதல் செல்வம் பெற்றதன் நற்பயனாகும். அங்ஙனம் செய்தார் தமிழ்மக்களின் நன்றிக்கும் வாழ்த்துக்கும் உரியராக-உண்மையில் தம் கடமையைச் செய்தாராகத் திகழ்கின்றார்கள். பிற செல்வரும் அங்ஙனம் செய்தல் வேண்டும். அங்ஙனமின்றித் தம் செல்வத்தால் நற்பயன் காணாது வறிதே
செலவழிப்பாராயின்,

''செயற்பால செய்யர் திவறியான் செல்வம்

உயற்பால தின்றிக் கெடும்”

 

என்னும் வள்ளுவர் வாய்மொழியினை உன்னிச் செல்வதின்றிவேறு என்ன செய்ய வல்லோம்?

ஆனந்த போதினி – 1943 ௵ - ஏப்ரல் ௴

 



No comments:

Post a Comment