Tuesday, September 1, 2020

 

செல்வமும் வறுமையும்

 

 தடங்கருணைப் பெருங்கடலும், தனிப்பெருஞ்சோதியும், தலைவர் தலைவனுமாய இறைவன், உயிர்களிடத்துள்ள பேரன்பினால், மக்களை, அவரவர் வினைகளுக்குத் தக்கவாறு, இன்பதுன்பங்களை நுகர்வித்து, கருமபாசங் களைக் கழல்வித்து, இறுதியாக, என்றேனும் ஒருநாள் தன்னடிக்கீழ் கூட்டு வித்தருளுவன் என்பது பெரியோர் துணிபு,'' உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்; நிலைபெறுத்தலும், நீக்கலும்; நீங்கலா - அலகிலா விளையாட் டுடையார் " ஆய தலைவர் ஆட்டிவைத் தருளுவதற்கேற்ப இவ்வுலகம் இயங்குகின்றது. இத்தகைய இப்புவியில் தன்னையும், தன்னைச் சார்ந்தா ரையும் காப்பாற்றிக்கொள்ளவும், ஒல்லும் வகை பிறர்க்கு உதவவும் வேண்டி, அறநெறி நின்று பொருள் ஈட்டுதல் வேண்டும். அதைவிட்டு,'உண்ணான்; ஒளி நிறான்; ஓங்குபுகழ்செய்யான் -; துன்னருங் கேளிர் துயர் களையான்; - கொன்னே - வழங்கான் " - எனத் தூற்றநின்று நடுவூருள் நச்சு மரம் பழுத்தற்று'' - என்பது போல, வாழ்ந்து, தானும் அனுபவியாது, பிற ரையும் அனுபவிக்கவொட்டாது, ஊணும், உறக்கமும் ஒழித்து, வீணிற் பொருள் காத்து நிற்போர், 'செல்வர்' என அழைக்கப்பெறுதற்கு அருக ரல்லர்.'கொடுப்பதூஉம்; துய்ப்பதூஉம் இல்லார்க்கு - அடுக்கிய - கோடி உண்டாயினும் இல் " - எனும் பொய்யாமொழிக் கிணங்க, அத்தகையோர் நித்திய தரித்திரரே ஆவர். பொன்னும், பொருளும் தம்மளவில் உயர்வுடையனவல்ல என்பதும், தாம் அளிக்கும் பயனை நோக்குமிடத்தே உயர்வுடையன என்பதும் உய்த்துணரற்பாலன. ஆதலால், ஆண்டவனது அருளால் அளிக்கப்பெற்ற செல்வத்தைக் கொண்டு, தானும் அனுபவித்து, தம்மைச் சார்ந்தாருக்கும் ஆதரவளித்து, ஒல்லும் வகை, இல்லார் பிறர்க்கும் ஈந்து வாழ்தலே செல்வத்தாற் பெறற்பாலதாய சீரியபேறு; அஃதே அறநெறி; அதுவே, உண்மை இன்பமுமாம். இதனாலன்றோ, "ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்! தாமுடைமை - வைத்திழக்கும் வன்கணவர்' என வள்ளுவரும் திருவாய்மலர்ந்தருளினர். மற்றும், பிறர்க்கு உதவப் பெறாது. பாம்புகாக்கும் மாணிக்கமேபோல, பெருங்கவலையோடு பேணிச் சேமித்து வைக்கப்பெறும் செல்வம், தன்னைக் காப்பாற்றி வந்தவன் காலத்திற்குப் பின்னர், பிறபல வேற்றார்களாலும், பலவழிகளிலும் சிதைத்துச் செலவழிக்கப்பெறுதல் கண்கூடே. இதுகண்டன்றோ, " ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார்'' - என ஒளவை மூதாட்டியும் அருளிச் சென்றனள். நிற்ப,

 

'செல்வம்' எனப்படுவது, 'பணம் பத்து வகை செய்யும்' எனும் பழ மொழிக்கேற்ப, இவ்வுலகிலுள்ள வரையில் நமக்குப் பலநலங்களையும் கூட்டுவிப்பதாயினும், மறுமையில் நம்மைத் தொடர்ந்துவர வல்லதன்று; அறமொன்றே மறுமையிற் பயனளிக்க வல்லது. ஆதலின், இருமையிலும், பெருமை விளைக்கும் அறமொன்றே செல்வத்தாற் பெறத்தக்க சீரியபேறு.
     

இப்பெரும்பேற்றினை, இழந்து வாழ்வோர் நிலை, பெரிதும் இரங்கற்பாலதே
 யாம். "ஒட்டொடு பற்றின்றி உலகைத்து தந்த செல்வ - - பட்டினத்தா"ரும்,

 
 "பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லை பிறந்து மண்மேல்
 இறக்கும் பொழுது கொடுபோவதில்லை இடைநடுவில்
 குறிக்கும் இச் செல்வம் சிவன் தந்த தென்று கொடுக்கறியா
 திறக்குங் குலாமருக் கென்சொல்லு கேன்கச்சி ஏகம்பனே "


என்று இக்கருமிகள் பால், கருணைமிகையால் இரங்குதல் காண்க. மற்றும், இச்செல்வம் என்றும் நிலைத்து நிற்கும் தன்மைத்தன்று; வறுமை யும் அத்தகைத்தே. வண்டிச் சக்கரக்காலொப்ப, மாறிமாறி வரும் 'தகையது செல்வம். நற்காலம் வந்தவிடத்தே நணுகுதலும், அல்லா விடத்தே அகலுதலும் அதன் இயல்பு. இஃது " கூத்தாட்டவைக் குழாத்தற்றே; பெருஞ்செல்வம் - போக்கும் அது விளிந்தற்று'' எனும் குறட்பாவானும், "மருவினிய சுற்றமும்; வான் பொருளும்; நல்ல உருவும்; உயர்குலமும்; எல்லாம் திருமடந்தை ஆம்போதவளோடும் ஆகும்; அவள் பிரிந்து யோம் போ தவளோடும் போம்'' என்பதாலும், "குடை நிழலிருந்து குஞ்சரமூர்ந்தோர் - நடைமெலிந்தோரூர் நண்ணினும் நண்ணுவர், குன்றத்தனை இருநிதியைப் படைத்தோர் - அன்றைப்பகலே அழியினு மழிவர்; அறத்தொடு பிச்சைகூவி இரப்போர் - அரசரோடிருந் தரசாளினுமாள்வர்" எனவரூஉம் பெரியோர் மொழியாலும் இனிது பெறப்படும். ஆதலின், "நில்லாதவற்றை நிலையென்றுணரும் - புல்லறிவாண்மை" யைப் போக்குதல் வேண்டும். உயர்தர வாழ்க்கை நடாத்தும் செல்வர்களை நோக்கி, உலகமெங்கணும் சென்று பெரும்புகழ் நிறுவிய பெரியாராம் விவேகானந்த சுவாமிகள்,'' இந்த உலகம் மாயை என்று சிலர் கூறுகின்றனர்; உண்மையில், நீங்கள் தான் மாயைகள். கல்வியும், நாகரிகமும் விருத்தியாகிக் கொண்டுவரும் இந் நாளில் - இன்னும், இந்தப் பணத்தை வைத்துக்கொண்டிருக்கின்றீர்களா! உங்கள், சந்ததியாருக்கு, அவற்றை அளித்து விடுங்கள். உங்களுடைய இடத்தில், புதிய இந்தியா தோன்றட்டும்; கலப்பையைப் பிடித்துக்கொண்டிருக்கும் குடியானவனிடமிருந்து, செம்படவனிடமிருந்து, சக்கிலியனிடமிருந்து, புதிய இந்தியா உதயமாகட்டும்; சோலைகளிலிருந்து, வனங்களினிருந்து, மலைகளிலிருந்து புதிய இந்தியா கிளம்பட்டும்" என்றார். (இவை சுவாமிகள் தமது சீடரில் ஒருவருக்கு எழுதிய கடிதத்தினின்றும் எடுக்கப் பெறற்ன) மற்றும்,

 

பொருட்செல்வம் ஒன்றே, போதிய துணையாகாது; அருட்செல்வத்தையும் கொண்டிருப்போரே, நிரம்பிய'செல்வர்'எனப்பெறுவர். இருமை யிலும் பெருமையடைவதற்கு இன்றியமையாது வேண்டற்பாலது அருள். அருள் உருவாய ஆண்டவனது மக்களாய நாம், நமது ஏழைச் சகோதரர்க ளிடத்தும் அருளுடைமைபூண்டு ஒழுகினாற்றான், அனைவர்க்கும் அத்தனாம் ஆண்டவனது அறக்கருணைக்கு இலக்காகப் பெறுவோம். அத்தகைய - அருள் நெஞ்சினார்க்கு, யாதொரு தீங்கும் விளைவதில்லை. இக்கூற்றை வலியுறுத்த'அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை; இருள் சேர்ந்த - இன்னா உலகம் புகல்'' எனவும்; " மன்னுயிரோம்பி அருளாள் வாற் கில்லென்ப, தன்னுயிர் அஞ்சும் வினை'' எனவும், வரூஉம் பொய்யில் புலவரது பொன் மொழிகளே போதிய சான்றுகளாம். அருளோடு கூடி, இரவலர்க்கு அளிக்கும் அறவினையாளர்கள், தமது செல்வங்குன்றப் பெறுகின்றார்களில்லை; அன்னார்தம் வருவாய், ஏழைகளது வாழ்த்துக்களினால், மேன்மேலும் பெருகி வளர்வதோடு, புகழும் செழித்து வளரும். அவ்வருளாளருள், - உயர்ந்தோர், தாம் வறுமையுற்ற காலத்தும், 'நீரின்றி வறண்டு கிடக்கும் ஆற்று மணலை, சிறிது தோண்டிற் சுரந்து பெருகும் ஊற்றுநீர்' போல, தம் பால் வந்தோர் குறைகளைப்போக்கியே அனுப்புவர். உதாரணமாக, குமண சக்கரவர்த்தி, புலவருக்குத் தலையளிக்க ஒருப்பட்ட கதையினை நோக்குக. இதுகாறும், கூறிவந்தயாவும், உயர்தர வாழ்க்கை நடாத்தும் செல்வர் கட்கே சாலப் பொருத்தமுடையனவாம். இனி, இடைத்தரச் செல்வர் கட்கு, (அதாவது, முன்னோரால் சேமித்துவைக்கப்பெற்ற பொருள் பெரிது மின்றி, தம் முயற்சி கொண்டு சேகரிக்கப்பட்டதும்; தமக்கும், தம்மைச் சார்ந்தார்க்கும் டாம்பிகமற்ற சுகவாழ்க்கைக்குப் போதிய வளவுகண்டு, சிறிது எஞ்சுவதுமாகிய செல்வப்பொருளை உடையார்க்குச் சில கூறுவோமாக.

 

இடைத்தர செல்வர்களே! உங்கள் வாழ்வே சுகவாழ்வு; அமைதி நிலவும் வாழ்வு; அவாவெனும் பேயை அகற்றும் வாழ்வு. அளவுக்கு மிஞ்சிய பெரும்பொருள், சில சமயங்களில், ஆடம்பரச் செலவுகட்குக் காரணமாய் நின்று, வீண்விரயத்திற் குட்படுதலால், எத்தகைய நற்பயனும் விளைவியாததோடு, சிறுகச் சிறுகச் செலவுக்குள்ளாகித் தேய்ந்தழியும்; சிக்கனமாக வாழ, பின்பழக முயலினும், அப்பெருஞ்செல்வர்களை, அடக்கி விடவல்லது. ஆனால், செலவின் அளவினும் சிறிது பெருகிய வருவாயை உடைய பொருள், அமைதிக்கும், அருளுடைமைக்கும் அன்புக்கும் நிலைக்களனாக நிலவற்பாலது. உயர்தர (டாம்பிக) வாழ்க்கை நடாத்து வோரைக் கண்டு நீங்களும் அவ்வாறு ஆடம்பர வாழ்வு வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு வருந்துதல் கூடாது. அவர்கள் வாழ்க்கை, வெளிக்கு ஆனந்தமாகத் தோற்றினும், உண்மையில் அமைதியற்றது. எளிய வாழ்வே இன்பம் பயப்பது. இதுகண்டே, மேனாட்டில் தலைசிறந்த ஞானிகளான, டால்ஸ்டாய், ரோமென்ரோலண்டு முதலிய அறிஞரும், இந்நாட்டில் காந்தியடிகள் உள் ளிட்ட ஆன்மஞானிகள் பலரும் எளிய வாழ்வையே போற்றுவாராயினர். அவா எனப்படுவது எத்தகையினரையும் அல்லற்படுத்துவது.'' ஆசை வர வர ஆய்வரும் துன்பங்கள் - ஆசை விடவிட ஆனந்தமாமே'' என்பது திருமூலர் பெருமொழி. ''உள்ளதே போதும்; நானொன்றெனக் குளறியே ஒன்றை விட்டொன்று பற்றி - பாசக்கடற்குளே வீழாமல் மனதற்ற பரிசுத்த நிலையை அருள்வாய்!" என்று ஈசனை வேண்டினார் தாயுமானார். 'போதுமென்ற மனமே பொன் செய்யு மருந்து'' என்பது மூதுரை. ஆதலின், உள்ள நிலைமையில் திருப்தி அடைந்து, ஆடம்பரமற்ற சுகவாழ்க்கையை மேற்கொண்டு, நுமக்கும், நும்மைச் சார்ந்தோருக்கும் கண்டு மிகுந்த பொருளை'' ஐயமிட்டுண்'' எனும் ஒளவை மொழிப்படி, அருள் நிறைந்த நெஞ்சினராய், பிச்சை இடத்தக்க இரவலர்க்குப் பகிர்ந்து வழங்கி யின்புறுங்கள்.

 

"முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார்" - என்பது தமிழ் மூதுரை; ''முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்'-; "ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்றுபவர்'' என்பன உத்தரவேதப்பாக்கள். 'தளரா ஊக்கத்தொடுகூடிய தன் முயற்சியால், பல அரிய நலன்களும், எத்தகைய கேட்டுக்கும் காரணமாகாத போதியபொருளும் இனிதுவந் தெய்தற்பாலன'' - என்பது முன்னோர் அநுபவ அருள் உரை. ஆனால், கலி முற்ற, முற்ற அவ்வனுபவம் தலை கீழாகி, மனிதர்களுட் பெரும்பான்மையோர், பரிதி ஒளிபரப்பும் பகல் முப்பது நாழிகையும் ஓய்வொழிவின்றிப் பாடுபட்டும், தமது குடும்பத்தினரின் பசிப்பிணியைத் தணிக்கக்கூடப் போதிய அளவின்றி, சுருங்கிய வருவாயைப் பெற்றுக் காலந்தள்ளும், ஏழைத்தொழிலாளரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருமாய் நிலவுகின்றனர். அந்தோ! இத்தகையோரை வருத்தி, ஏவல்கொள்ளும் முதலாளிகளும் மிராசுதாரர்களும், இவ்வேழைமக்களது உழைப்பின் பயனாக மிகுத்த இலாபத்தைப்பெற்றுச் செருக்கிக் களித்துக் கிடப்ப, "நெற்றி வியர்வை நிலத்தில் விழ", உழைத்த இவ்வேழைகள் தமது முயற்சிக்குத்தக்க வளவிற் பாதியேனும் ஊதியம் பெறும் பாக்கியமின்றிப் பரதவிப்பாராயினர். என்னே! இவ்வேழை வேலையாட்களின் தலை எழுத்திருந்தவாறு! பொதுவாகக் கூறுமிடத்து, 'பாடுபட்டுழைப்ப தொரு தேசம் - அந்தப் பலனை புசிப்பதொரு தேசம்'' - என்று ஒருவர் பாடியவாறு, விளைபொருள்களின் களஞ்சியம்' எனும் இந்திய நாடு - பொன் விளையும் பூமி என்னும் பரதகண்டம்'- இதுகாலை, அப்பெருமை இழந்து 'மணித்திருநாடாக'இருந்த காலம் போய், பிணிப்பெரு நாடாக'வாடுதல் பலரும் அறிந்ததே. இனி, வறுமையைப் பற்றிச் சிலவற்றைக் குறிப்பிடுவாம்.

 

"இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் - இன்மையே இன்னாதது'' - எனத் தெய்வப்புலமைத் திருவள்ளுவனார், அருளியவாறு, மனிதர்க்கு வறுமையினும் மேற்பட்ட துன்பம் இல்லை. இதனாலன்றோ, '' கொடிது, கொடிது, வறுமை கொடிது'' - என்றனள் ஒளவையும். அஃது, மனிதரின் அருளையும், அன்பையும், மானத்தையும் மறைத்து அவர்களைத் துன்பத்திலேயே புகுவித்து, உழல்வித்தலால், இம்மைப்பயனையும், மறு மைப்பயனையும் எய்தவொட்டாது தடுக்க வல்லது. வறுமையின் வன்மை, அளவிடற்பால தன்று. அது சிறந்த முயற்சி யுடையானையும், இழிந்த சோம்பலிற் புகுத்தும்; நல்லொழுக்க முடையானையும், புல்லொழுக்க முடையானாக்கும்; நற்குடிப்பிறந்தாரிடத்தும், அவமானச் சொல் பிறத்தற்குக் காரணமாய சோர்வினை விளைவிக்கும்; கல்வி, கேள்விகளையும், சிலசமயங்களில் மறைக்கும்; மனிதன் மதிப்பையும், உற்சாகத்தையும் குலைத்து, எவரிடத்தும் இரக்க அவனைத் தூண்டும். இதன் கொடுமைகள், எம்மனோரால் அளவிடற்பாலனவோ? இத்தகைய வறுமையடைந்து,


 "பல்லெலாந் தெரியக் காட்டிப் பருவரல் முகத்திற் கூட்டிச்
 சொல்லெலாஞ் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி
 மல்லெலாம் அகல வோட்டி மானமென் பதனை வீட்டி
 இல்லெலாம் இரத்தல் அந்தோ இழிவிழி வெந்த ஞான்றும் "


என வரூஉம், குசேலோபாக்கியானப் பாடலுக்கு இலக்கியமாக, இதுகாலை செல்வர் வாயில் தோறும் சென்று பயன்இன்றி, பசிப்பிணியாற் பாதிக்கப்பட்டு எத்துணைப்பேரோ அலைகின்றனர். இவருட் சிலர், உடற்குறை, பிணி முதலியவற்றால் எத்தொழிலும் செய்ய முடியாதவராய் இரவலராகின்றனர். பலர் வேலை செய்யப் போதிய உடல் உரம் வாய்க்கப்பெற்ற வர்களாயிருந்தும் அங்கவீனமேனும், பெரும் பிணியேனும் இல்லாதவர்களாயிருந்தும் சோம்பலினால் தொழில் செய்தலின்றிப் பிச்சையாள ராகின்றனர். இது மிக்க மதியீனம். இங்ஙனம் சோம்பலைப்பூண்டு அலைந்து திரியும் ஏழைச் சகோதரர்கள், 'ஏற்பதிகழ்சசி' ஆகலான், கேவலம், இம்மையிலும், மறுமையிலும் வெம்மையே பயக்கும் இழிபுடைய சோம்பலை உதறித் தள்ளிவிட்டு, தங்களால் இயன்ற வளவில், தளரா ஊக்கத்தொடும், குன்றா முயற்சியொடும், காந்தியடிகள் போதிக்கும் 'சர்க்கா'சுழற்றுதலி லேனும், வேளாண்மைத் தொழிலிலேனும், பிற நலந்தரும் கைத்தொழில் களிலேனும் இறங்கி, தீவிரமாக உழைத்து, மானத்தோடு கூடிய சுதந்தர' வாழ்க்கையை நடாத்த முன் வரல்வேண்டும்; இறைவன், இவர்களுடைய நன்முயற்சிக்குத்தக்க ஊதியம் இவர்களுக்கு அளிப்பான். செந்தமிழ் நாட்டுச் செல்வச் சீமான்களும், இத்தகையோருக்கு வெறுஞ்சோறுமட்டில் இட்டு இவர்களைச் சோம்பேறிகளாக்கிவிடாது, நலந்தரும் வேலைகளிற் புகுத்தி, இவர்களின் உழைப்புக்குத்தக்க ஊதியம் தந்து, மானத்தோடு வாழ்வு நடாத்தலில், இவர்கட்கு உருசியையும் உற்சாகத்தையும் ஊட்டி, இவர்களுடைய வறுமைப்பிணியை ஓட்ட முன்வரல் வேண்டும். அங்ஙனம் வரின் ஏழைபங்காளன் இவர்க்கு இன்னருள் பொழிவான். கல்வியிற் சிறந்த புலவர்களுங்கூட, ஜீவனோபாயத் தொழில்களைக் கவனியாததால் தரித்திரத்துக்குள்ளாகி அந்த வறுமைப்பிணியால், செல்வர்களைப் பாடிச் சில சமயங்களில் அவமான மடைவாராகின்றனர். "என்னாவது எத்தனை நாளைக்குப் புலவீர்காள்! - மன்னா மனிசரைப் பாடிப்படைக்கும் பெரும்பொருள்'- என ஆழ்வாரும்,'' பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்.......... அம்மையே சிவலோக மாள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே" - எனச் சுந்தரமூர்த்திகளும் அருளியவாறு, மானிடம் பாடுவது மேன்மையுடைத்தன்றாகலின், பண்டைக்காலத்துச் சங்கமருவிய சான்றோர் பலரும், மனிதரைப்பாடாமல் வாணிகம், கைத்தொழில், நெசவு முதலிய தொழில்களை மேற்கொண்டு, சுயேச்சையாக மானத்தோடு வாழ்வை நடாத்தி வந்தார்கள். ஆதலின் இக்காலத்துப் புலவர்களும் நரஸ்துதிபாடி வறுமைக்குள்ளாகாமல் அத்தகைய தொழில்களுள், ஊக்கங்கொண்டு இறங்கி உழைத்துச் சுதந்தர வாழ்வை நடாத்த முன்வரவேண்டும். இறைவனைப் பாடியும், மறைந்தும், தாழ்ந்தும் கிடக்கும் கலைச் செல்வத்தை, மக்களுக்குப் புத்துணர்ச்சி பொங்கும் வகையில் வெளிக்கொண்டுவந்தும், தமிழ்த்தாய்க்குப் பலவழிகளிலும் பணி செய்தும் பொன்றாப்புகழ் நிறுவவேண்டும். ஆதலின், செந்தமிழ் நாட்டுச் செல்வர்களே! இதுகாறும், ஆடம்பர வாழ்வில், பொருளை வாரி இறைத்துக் களித் துச் செருக்கிக் கண்மூடி உறங்கியது போதும்! போதும்! பாரதமணித் திருநாடெங்கணும், காந்தியடிகளது தெய்விக இயக்கம் பரவிவரும் இந் நாட்களில், ஈந்து உவத்தலே உண்மை இன்பமென்பதை உணர்ந்து, அரை வயிற்றுக் கஞ்சிக்கும் அலைந்து திரியும் வறியோர்க்கு - வயிற்றை வளர்க்க, வெளிநாடுகளுக்கு ஓடும் ஏழைகட்கு - மானத்தை மறைக்கப் போதிய துணியுமின்றிப், பனியால் நனைந்து, வெயிலாலுலர்ந்து பரதவிக்கும் பாமரர்கட்கு - இரங்கி வேளாண்மைத் தொழிலில், உழைப்புக்குத்தக்க ஊதியமளித்தும், அவர்கள் சர்க்கா சுழற்ற அவர்களைத் தூண்டி, இராட்டினங்களை அவர்களுக்கு இலவசமாக அளித்தும், பஞ்சு வாங்கிக் கொடுத்தும், எத்தகையோராயினும் பசித்து வருவாராயின் அவர்க்கு வயிறார உணலிட்டும், தாய் மொழியின் வளர்ச்சிக்குப் போதிய பொருளுதவி புரிந்தும், பிறபல அறவழிகளிற் செய்யத்தக்கன செய்தும், நீவிர்பெற்ற செல்வத்தாற், பெறற்பாலனவாய உண்மைப்பேறுகளைத் தேடிக்கொள்ளுங்கள். " அற்கா இயல்பிற்று செல்வம்; அது பெற்றால் - அற்குப ஆங்கே செயல்" – எனச் செந்நாப்போதார் செப்பியவாறு, சிறிதும் காலந்தாழ்த்தாது இன்றே, இன்னே – “அறஞ்செய விரும்பி" ஆண்டவன் அருளுக்கு உரியாராகுங்கள்.

 

ஆ. வ பதுமநாப பிள்ளை,

 "திருமகள் நிலையம்" ஆர்யூர், (விழுப்புரம் தாலுகா.)

 

ஆனந்த போதினி – 1926 ௵ - மார்ச்சு. எப்ரல் ௴

 

No comments:

Post a Comment