Saturday, August 29, 2020

 

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

 

 இந்த வாக்கியத்தின் உண்மையை முற்றாய் உணர்ந்தவர்களுக்கு மெய்யான சந்தோஷமும் மன ஆறுதலும் உண்டென்பதற்குச் சந்தேகமில்லை. அனேகர் கடவுளுடைய திருவருளின் சக்தியை அறியாதவர்களாயிருக்கிறார்கள். "சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை" யென்பதைப் பரிகாசமாக எண்ணுகிறார்கள். எத்தனையோ பெரிய மகான்கள் இடைவிடாது ஈஸ்வரதியான முடையவர்களாய் இருந்ததன் பயனாகச் சொலற்கரும் தீமை விளைக்கக்கூடிய இடர்களிலிருந்து தங்களைத் தப்புவித்துக் கொண்டதாகச் சரித்திரங்களில் சொல்லப்பட்டிருப்பவைகளெல்லாம் பெரும் கட்டுக்கதைகளென்று பிதற்றுகிறார்கள். இப்படியெல்லாம் சிலராவது எண்ணுவது கலிகாலத்தின் கோலமென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. கடவுளை நம்பும் விஷயத்தில் அனேகர் தங்களைத் தாங்களே அணாப்புகிறார்கள். மனுஷன் தன்னாற்றலாய்ச் செய்பவைகள் போலத் தோற்றுபவைகளெல்லாவற்றையும் தான் செய்ததாக நினைத்து இறுமாந்திருக்கிறான். தன்னால் ஒரு காரியம் செய்ய முடியாதென்று கண்டவிடத்து மாத்திரம் கடவுளைப்பற்றி நினைக்கிறான். தான் செய்ய முடியாமலிருப்பது விதியின் பயனென்று முடிக்கிறான். இதை நாம் உற்று உணரும் பொழுதும் அனுபவத்தில் காணும் பொழுதும் மிகவும் வேடிக்கையாயிருக்கும். "அவனன்றி ஓரணுவும் அசையா'' தென்பதை அனேகர் தங்களிடத்திருக்கும் ஆணவமுதிர்ச்சியினால் மறந்து விடுகிறார்கள். இம்மறதியே சனங்களின் சங்கடங்களுக்குப் பெரும்பாலும் காரணமாயிருக்கின்றது. சுகபலம் செல்வம் அதிகமாயிருப்பவர்கள் இயல்பாய் உலக விஷயங்களுக்குள் முற்றாயமிழ்ந்தித் தலைவனுடைய தியானம் சற்றும் இல்லாதவர்களாயிருப்பதை நாம் காண்கிறோம். இதுபற்றித்தான் இடையிடையே மனுஷருக்குக் கஷ்டங்கள் நேரிடுவது அவர்களுக்குப் பெரும் நன்மை பயத்தற்கு ஏதுவாகுமென்று சொல்வதுண்டு. பிறந்த நாள் முதல் இறக்கும் வரையும் ஒருவன் ஒருவகையான கஷ்டத்தையும் அனுபவியாதிருக்கும் சிலாக்கியத்தைப் பெறக்கூடுமாயின் அவன் கடவுளை நினைக்க வேண்டிய அவசியம் ஒரு போதும் ஏற்படாது. உலகப் பொருட்களின் பற்று அவனுக்கு மிகவும் அதிகரிக்கும். இதுவுமன்றிப் பிறருக்கு இயன்றவரையில் தீமை செய்யக் கொஞ்சமும் யோசிக்க மாட்டான். பிறவிப்பிணியை நீக்குதலின் அவசியம் அவனுக்குக் கொஞ்சமும் தோற்றாது. இப்பிறவியிலிருந்து கொண்டே இன்னும் அனேக பிறவிகளுக்கு அஸ்திவாரம் போட்டபடி யிருப்பான்.

 

கடவுளிடத்திலே பூரண விசுவாசம் வைத்திருப்பவர்களுடைய சுகானுபவம் அவர்களுக்கு மாத்திரமேயன்றி மற்றவர்களுக்குச் சரியாய் விளங்காது. அது மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தக் கூடியதொன்றல்ல. அனேகர் கடவுளை நினைத்தவுடன் தாங்கள் எண்ணிய காரியங்களெல்லாம் சித்தி யெய்தாதிருந்தால் அவரைக் கண்கெட்ட வளென்றும், கடவுளுக்குக் கண்ணில்லை யென்றும் சொல்வது வழக்கம். இதுவுமன்றி, தாங்கள் அருமையாய் வளர்த்த பிள்ளைகள் யாராவது இறந்துவிட்டால் கோயில்களுக்குப் போய்ச் சுவாமி தரிசனம் செய்வதையும் நிறுத்திவிடுகிறார்கள். இப்படிப் பட்டவர்களுக்குக் கடவுளிடத்தில் எப்படிப்பட்ட மதிப்பு இருக்குமென்பதைப் பற்றியும் அவரின் திருவருட் சக்தியைப் பற்றியும் அவர்கள் என்ன வகையான எண்ணம் வைத்திருக்கிறார்கள் என்பதைக் குறித்தும் நாம் இலகுவாய் விளக்கிக் கொள்ளலாம். உலக விஷயங்களில் அனுகூல மடைவதற்காகக் கடவுளைப் பிரார்த்திக்கிறவர்களை உலகத்தில் அதிகமாய்க் காணலாம். ஆனால் தங்களைப் பந்தித்திருக்கும் மும்மலங்களையும் போக்கித் திருவருட் சக்தியால் தங்களைச் சிவத்தோடு ஒன்றித்து நிற்கச் செய்யத்தக்க வல்லமையைக் கொடுக்கும்படி ஈஸ்வரனை அல்லும் பகலும் வேண்டி நிற்பவர்களைக் காண்பது அரிதிலு மரிதாயிருக்கின்றது.

 

நஷ்டம் வரும்பொழுது மாத்திரம் கடவுளை நினைப்பவர்களுக்கும் கடவுள் இல்லையென்று சாதிக்கும் நிரீச்சுரவாதிகளுக்கும் அதிகபேதமிருக்கிறதாகத் தோற்றவில்லை. நிரீச்சுரவாதிகளிற் சிலர் முன் சொல்லப்பட்டவர்களைக் காட்டினும் சீவபிராணிகளில் அன்பு அனுதாபம் காட்டக் கூடியவர்களாயிருக்கிறதை நாம் காண்கிறோம், இவர்கள் பலவகையான தீமைகளிலுமிருந்து விலக்கக்கூடிய வரையில் மற்றவர்களுக்கு நன்மை செய்தல் இவ்வுலகசீவியத்தின் அனுகூலத்திற்கு இன்றியமையாததென எண்ணி நடக்கிறார்கள். ஆனபடியால் ஆபத்து நேரிடும் காலத்தில் மாத்திரம் அரனை நினைப்பவர்கள் அதனால் அடையத்தகும் பயன் அற்பமா யிருத்தலை எண்ணி அவரின் அனந்த சக்தியைக் குறைவாய் நினைத்தல் பெரும் தவறாகும்.

 

நிரீச்சுரவாதி இகத்தைப்பற்றி மட்டும் நினைத்து அதன் அனுகூலத்திற்குரிய வழிவகைகளைத் தேடுகிறான். இகபரம் இரண்டிலும் நம்பிக்கை வைத்து முத்திய பெரும்பேறு சித்தியெய்த விரும்புபவன் எல்லாம் வல்ல இறைவனை இரவும் பகலும் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் என்றும் பூரண நம்பிக்கையோடும் நிறைந்த அன்போடும் தியானிப்பது அத்தியா வசியகம். அப்படிச் செய்யும் தோறும் அவனுக்கே ஒரு வகையான மன ஆறுதலும் சந்தோஷமும் உண்டாதல் மாத்திரமன்றி அவனுடைய சொல் செயல் முதலியவைகளில் மற்றவர்கள் மெச்சத்தகும் ஒருவகையான வித்தியாசத்தையும் காணுவார்கள். இந்த நிலையை அடைதற்கு மானிடர் அனைவரும் முயற்சித்தல் வேண்டும் அப்படிச் செய்யுந் தோறும் அவர்கள் தங்கள் ஈடேற்றத்தை நாடுகிறது மாத்திரமன்றி மற்றும் தங்களைச் சூழ இருப்பவர்களுக்கும் ஓர் சிறந்த முன்மாதிரியாய் இருப்பார்கள், செய்யத் தகாதவற்றைச் செய்வதாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாது விடுவதாலும் எண்ணாது ஒழிக்கவேண்டியவற்றை எண்ணுவதாலுமே நாம் பலமுறைகளிலும் துக்கத்தை அனுபவிக்கிறோம். இத்துக்க நிவிர்த்திக்குச் சிவத்தியான மன்றி வேறொன்றும் உதவி புரியாது. இதைச் சிலர் அறிந்திருந்தாலும் பலர் அறியாதிருக்கிறார்கள். ஆனால் எல்லாரும் அறிந்தது போலப் பாசாங்கு பண்ணி அல்லலுறுகிறார்கள். உண்மையான வழிதெரியாமல் மயங்கி நிற்கிறவர்களைக்காட்டினும் சரியான முறையை அறிந்தும் அதன்வழி ஒழுகும் மனத்திடமில்லாதவர்களுக்காகவே நாம் பெரிதும் பரிதாபப் படவேண்டும். உலகத்திலேயுள்ள சனங்களில் பெரும்பாலார் இப்படிப் பட்டவர்களென்றே சொல்லலாம். இவர்கள் மனம் போன போக்கெல்லாம் போய்க் கடைசியாய்க் கடவுளென்று ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்வியோடு தங்கள் சீவியத்தை முடிக்கவேண்டியதாய் வரும்.

 

போதனையால் மாத்திரம் பயனொன்று மில்லை. சற்போதனையைச் சாதித்தலால் அடையத்தகும் பயன் அற்பமல்ல. ஆதலால் எத்தொழிலைச் செய்யும் பொழுதும் சும்மா இருக்கும் நேரத்திலும் இடைவிடாது இறைவனைத் தியானிக்கும் பழக்கத்தை நாம் நாள்தோறும் பழகிக்கொண்டு வரவேண்டும். அழியும் பொருளொன்றிலும் நிலையான நேசம் வையாது தாமரையிலைத் தண்ணீர்போல, பார்த்தால் உலகத்தவர் போலிருக்க மாத்திரம் பயின்று வருதல் நன்மைக்கு ஏதுவாகும். ஒரு கொடிய நோயுற்றிருக்கும் போது, சிலகாலம் ஒரு வைத்தியனிடத்திலும் வேறு சிலகாலம் இன்னொரு வைத்தியனிடத்திலும் நாம் மாறிமாறி நம்பிக்கை வைத்து வைத்தியம் செய்வது போலல்லாமல் வாழ்விலும் தாழ்விலும் சுகமாயிருக்கும் போதும் வியாதியுற்றிருக்கும் போதும் ஒரே மனதோடு ஈஸ்வரனை முற்றாக நம்பினால் நற்கதியடைந்து உய்வது நிச்சயமென்பதைக் கனவிலும் மறவாதிருப்போமாக.

 

               கா. சின்னப்பா, அளவெட்டி, யாழ்ப்பாணம்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - செப்டம்பர் ௴

 

 

No comments:

Post a Comment