Saturday, August 29, 2020

 

கடவுள் உண்டா?

 

கடவுள் உண்டா? - இக்கேள்வி இன்று நேற்றுப் பிறந்ததல்ல.

 

உலகம் தோன்றிய நாள் முதல், அதாவது, உலகில் மனிதன்தோன்றிய காலமுதல், அவ்வக்காலத்து மனிதர்கள் அவரவர்கள்தகுதிக்கேற்ப ஒவ்வொரு வகையாகத் தங்களுக்கும் பெரிதானவலிமை, அழகு, காம்பீர்யம், வீரம் முதலிய எதிலேனும் தம்மை விட உயர்ந்த ஒன்றைக் கடவுள் என வணங்கி வந்துள்ளனர். மனித இயற்கை எப்போதும் தனக்கு மேலான ஒரு சக்தியில் மரியாதைவைத்தே வந்திருக்கின்றது. கால சக்ரச் சுழற்சியால் இவ்வெண்ணமும் சுழன்று சுழன்று மாறுபட்டுக் கொண்டே வருகிறதாயினும் இவ்வெண்ணத்தின் முக்யாம் சமாகிய கடவுட் கொள்கை உலகத்தில் பெரும்பான்மையான மக்களிடை ஒரு மாதிரியாகவே இருந்து வந்துள்ளது. மிகமிகப் பழங்காலத்தில் மக்கள் இறந்த ஆவிகளையும், இயற்கையில் பேராற்றலுடைய மலை, நதி, வானம், கடல், முதலியவற்றின் காம்பீர்யத்தையும், அச்சமும் ஆர்வமும் விளைக்கும் விலங்குகளையும், லிங்கத்தையும், நாகரிகமறியாத பல கோரமான உருவங்களையும், ஊனுணவும், உயிர்ப்பலியும், கள்ளுங்கொண்டு பூசித்து வந்தனர். பிறகு அறிவு முதிர முதிரக் கட்டுக் கடங்காது பற்றற்றுப் பரந்துள்ள தானே தானாய்த் தனித்து நிற்கும் ஓர் தனிப் பொருளுண்டென்று கண்டு, தத்துவ வழியில் அருவம், அகண்டம், நிர்மலம், நிஷ்களம், நிரஞ்சனம், ஆதி, அனாதி, நித்யம் என்ற இத்தொடக்கத்துப் பெயர்களால் அதனைப் போற்றிப் புகழ்ந்தனர். மதாசாரியர்கள், கவிகள், ஞானியர் என்போர் கடவுளைக் கருணா சமுத்திரமாய்க் கவினுறு காட்சியாய்த் தாயாய்த் தந்தையாய்த் தனையனாய்த் தகைசான்ற காதலனாய்க் காதலியாய்க் கண்டு வாழ்த்தினர். விஞ்ஞானப் புலவர்கள் (Scientists) இதனையே பரமாணுக் கூட்டம் (Elemental-atoms), ஆகாச நிறைவு (Ether), அண்டாண்ட சக்தி முதலிய பெயர்களாற் கூறிக் கடைசியாக 'எமக்குத் தெரியாத உண்மை' எனமுடிவு கட்டியுள்ளனர். இவ்விதமாக மனிதன் எக்காலத்தவனாயினும், எந்நிலையிலிருப்பினும் எப்போதோ ஒரு முறையேனும் இக்கேள்வி அவனுக்குள் எழாது போவதில்லை. அதிலும் 'மதமே உயிர், கடவுளறிவே வாழ்வின் லட்சியம்' என்றுள்ள நமது புனிதப் பெரும்பாரத நாட்டில் இக்கேள்வியைப் போல் வேறு எக் கேள்வியும் அவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்யப் பெறவில்லை. அதுமட்டுமன்றி இப்பழமை மிக்க இந்தியாவிற்றான் 'இவ்விஷயத்தை அறிவால் ஆராய்வது மட்டும் போதாது, அனுபவித்தே தீரவேண்டும் 'எனமனிதன் முதல் முதல் துணிந்து கண்டு களித்து அனுபவித்து மகிழ்ந்தது மாகும். இவ்வுயரிய பெரு நிலைக்காகத் தம்முடைய வாழ்க்கைச் சுகங்களை யெல்லாம், செல்வம், கீர்த்தி, முதலிய யாவையையும் பரவுணர்ச்சிக்காக விட்டுச் சென்ற பெருந்துணிகரமான துறவிகள் நம் நாட்டிலேயே தோன்றினர். உலகத்திற்கு முதல் முதல் ஏகம் சத்' (ஒன்றே உள்ளது) என்று பறை சாற்றியதும் நம் நாடேயாகும்.

 

ஆனால் இவ்வளவு தூரம் தெய்வ உணர்ச்சியின் உச்சியிலிருந்த நம் நாட்டில், அதுவும் நமது தென் தேசத்தில் இப்போது கடவுள் உண்டா? இல்லையா? என்ற கேள்வி கேட்கப்படுகின்றது. நம்நாட்டில் இதுவரை 'என் தெய்வ முன் தெய்வ மென்றெங்குந்தொடர்ந்தெதிர் வழக்கு'ப் போர்கள் பலரிடை நிகழ்வது குறித்து வருந்தி வந்தோம். ஆனால் இப்போதோ கடவுளே இல்லையென்றுங்கூடச் சிலர் சொல்ல முன் வந்துவிட்டனர். இவ்விஷயத்தில் மூன்று கட்சிகள் உண்டு. ஒன்று ஆஸ்திகர் கூட்டம், அதாவது கடவுள் உண்டுஎன்னும் கூட்டத்தார். மற்றொன்று நாஸ்திகர் கூட்டம், அஃதாவதுகடவுள் இல்லை யென்போர். மூன்றாவதாக 'கவலையில்லை' (Agnostic) என்னும் நடுத்தரமான'கடவுளிருந்தாலும் இல்லாவிடினும் எங்களுக்குக் கவலையில்லை. ஒருவரும் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமுமில்லை 'என்போர். இப்போது இம்மூன்று கட்சியார்களின் கொள்கைகளையும் ஒருவாறு சிறிது ஆராய்வோமாக.

 

இயற்கையை ஒருமுறை மேலெழுந்த வாரியாக உற்று நோக்குவார்க்கும் கூட அது பல குருட்டுச் சக்திகளின் பொருளற்ற சேர்க்கையல்ல என்பது நன்கு விளங்கும். அந்தரத்தில் ஆகாசத்தில் அண்டங்கள், சூரிய சந்திராதிகள், தாங்குவாரற்றுத் தாமே உருளுவது எக்காரணம் பற்றி? அதனை விஞ்ஞானப் புலவர் இழுக்கும் சக்தியால் (Gravitation) எனக் கூறுவர்? இச்சக்தியாவது என்னை? இயற்கைச் சட்டங்களுள் ஒன்றாகும். இயற்கை தனது பரிணாமத்தில் தனது சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டே அமைதியாய், காரண காரிய சங்கிலித் தொடர்போடு தங்கு தடையின்றி ஒரே மாதிரியாக விகசித்துக் கொண்டே போகிறது. எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் உலகில் மாறாதது ஒன்றுண்டு. அதுதான் மாறுதற் சட்டம் (The Law of Evolution). இவ்வாறு நேர்மையான வகையில் உலகம் நடப்பதைக் காணும் எவனே கடவுள் இல்லை என்று சொல்லத் துணிவன்? அறிவின்றி ஓர் வரம்பும், ஒழுங்கு முண்டோ? இல்லையே? அவ்வாறாக இவ்வுலகம் ஜடப் பொருள்கள் தம்முட்தாமே எப்படியோ கூடிச் சேர்ந்து வந்ததெனின், அச்சேர்க்கைக் குரிய அறிவு ஜடப் பொருள்களுக்கு ஏது? இருப்பதெனின் அவைகளுக்கு அளவுணர்ச்சி யுண்டா? உதாரணமாகத் தண்ணீரை எடுத்துக் கொண்டால் அது உயிர்வாய்வு (Oxygen) ஒரு பங்கும், நீர்வாயு (Hydrogen) இருபங்கும் கலந்ததாகும். இவ்வாயுக்களுக்கு இவ்வளவில் கூடினால் மட்டுமே நீருண்டாகு மென்ற அறிவு யார் கொடுத்தது? ஆகவே இச் சடப் பொருள்கள் யாவையினூடும் அழியாத அறிவொன்றுண்டு. எல்லாம் இவ்வறிவே யாகும். இதனாலேயே உலகம் இயங்குகின்றது என்றல்லாது வேறு எவ்வகையிலும் பதில் கூற முடியாது. இவ்வெங்கும் நிறைந்து எல்லாமா யிருக்கும் இவ்வறிவினையே பெரியோர் கடவுள் எனப் போற்றினர். அறிவி லறிவி லறிவிலறிவிலறிவி லறிவென் றறி' என ஒரு பெரியார் கூறுகின்றார். மற்றும் இயற்கை முழுவதும் உயிரும், உணர்வும் பிலிற்றுகின்றன என நம்நாட்டுப் பேரறிஞர் ஜகதீஸ் சந்த்ரவசு அவர்கள் மெய்ப்படுத்தியுள்ளபடி எங்கும் நிறைந்த உணர்வையும், உயிரையுமே நாம் கடவுள் என்கின்றோம்! ஆகவே உலகத்தின் தோற்றங்க ளெல்லாம், ஆட்டங்களெல்லாம் இவ்வுயிர் வுணர் வறிவாகிய ஒரு பெரும் தனிச் செம்பொருளாலேயே நடைபெறுகின்றன. இது குறித்தே ஆங்கிலத் தத்துவத் தந்தையாகிய பேகனார் (Lord Bacon) ‘டால்மட், கொரான், கதைக் கொத்துகள் முதலியவைகளிலுள்ள பொய்க் கதைகளையும் கூட நம்பிவிடுவேன், ஆனால் இவ்வகண்டாகார உலகங்களினமைப்பு ஓர் அறிவின்றி வந்துள்ள தென்பதை நம்ப முடியாது. நாஸ்திகர்களை மாற்றுவதற்காகக் கடவுள் அதிசயங்கள் செய்ய வில்லை, அவருடைய சாதாரண உலகங்களினமைப்பே அவரது இருப்பை நமக்குச் சுசுப்பிக்கப் போதும்' எனக் கூறினார் போலும். கடவுளினிருப்பை உறுதிப்படுத்துதற்கு நாம் அதிக தூரம் போக வேண்டுவதில்லை. உலகத்தின் இருப்பே கடவுளிருப்பிற்குப் பெரும் அத்தாட்சியாகும். சூனியத்தினின்றும் சூனியத்தைத் தவிர வேறொன்றும் தோன்ற முடியாது. எல்லாவற்றிற்கும், எதுவானாலும் காரணம் ஒன்று வேண்டும். காரிய காரணச் சட்டம் அழிக்க முடியாத சட்டமாகும். அச்சட்டத்திற்கு உட்பட்டதே இவ்வண்ட பிண்ட சராசரங்களுமாகும். இச்சட்டத்தின்படி இவ்வுலகமாகிய காரியம் இறைவனாகிய காரணத்தினின்றே வந்திருக்க வேண்டும் என்பதே சாலும். ஆனால் நாஸ்திகர்கள் ‘அப்படியாயின் கடவுள் எக்காரணத்தினின்றும் உதித்த காரிய மென்பர்'. அவர்களுக்கு நாம்கூறும் ஒரே யொருவிடை காரண காரிய நிகழ்ச்சிகளுக்கும் ஒரு முடிவுண்டு என்பதேதான். மாறுதலுடன் கூடிய பொருள்களெவையும் பரிபூரணமான உண்மைகளாகா. எனறும் மாறுபாடுறாத நிலைபேறுடைய நித்ய வஸ்துவே கடவுள் எனப் பெறும். மாறுபாடுறாத பொருளிற்குக் காரணம் வேறொன்றும் இருக்க முடியாது. அதாவது காரியத்திற்கு ஓர் காரணமுண்டு என்ற பொழுதே அக்காரியம் மாறுபாடுடையதாகும். மாறுபாடுறாத ஒன்று காரிய காரணத் தொடர்பில் கட்டுப்பட்டு நிற்காது. எவ்வா றெனில் எக்காலமும் உள்ள ஒன்று எக்காலத் துண்டாக்கப் பெறும்? எங்கும் நிறைந்த ஒன்று எவ்வாறு வேறொரு பொருளால் சிருட்டிக் கப்படும்? அப்படிப் படுமாயின் எக்காலமும் என்பதற்கு முன்பு ஒரு காலமும், எங்கும் என்பதுளகப்படாத ஒரு இடமும் இருக்கவேண் டும். ஆகவே அகண்ட உண்மைக்கு ஆதியொன்று மிருக்க முடியாது. அது அநாதியே யாகும். அவர்கள் கேட்கலாம் 'அம்மூலப்பொருளாகக் கடவுளுக்குப் பதில் இயற்கையையே கொண்டு விட்டால் என்ன' என. அது சரிதான். இயற்கை முழுவதையும் நாமும் தான் கடவுளெனக் கொள்ளுகின்றோம். ஆனால் அடிக்கடி மாறிக்கொண்டு வரும் இயற்கை யிறைவனன்று; உள்ளே மாறாது மாற்றத்தை உண்டாக்கும் மதியே - இயற்கையின் உயிரே - கடவுளாகும். மாறும் பொருள்கள் உண்மைப் பொருள்களாகா; மாறாத ஒன்றே உண்மை யாகும்; இயற்கை மாறுந்தன்மையது என்பதை அறியாதார் யார்? ஆகவே எல்லாச் சக்திகளும், எல்லா உலகங்களும், எல்லா ஜோதிகளும், எல்லா இன்பங்களும், எல்லா உணர்ச்சிகளும், எல்லா அறிவுகளும், பொதுவாக எல்லா ஜீவன்களும் அவனிற்றோன்றி, அவனில் வாழ்ந்து, அவனில் அழியும் தகைமை யானவையே யாம். 'அவனன்றி யோரணுவும் அசையாது' என்னும் தாயுமானப் பெருந்தகையின் வாக்கு உண்மையே யாகும்.

 

மேற்கூறியவாறு ஒருவாறு விடாமல் நாஸ்திகருடைய பொய்யறிவைப் பொய்யாக்கி விட்டோமாயின் உடனே கடவுள் இருப்பு உறுதியாக்கப்பட்டுள்ள தென்பதற்கில்லை. நடுவே 'கவலையில்லை' யென்னும் இப்பந்தி ஆசாமிகளின் வாதங்கள் குறுக்கிடும். அவைகளின் சாரத்தைக் கீழே தந்து அவற்றின் விஷயத்தை ஆராய்வோமாக. 'நமது அறிவு கட்டுப்பாட்டுள் அடங்கியது. அது ஒன்றுக் கொன்று தொடர்புடைய பொருள்களையே ஆராய்ந்தறிய முடியும். கடவுள் என்பது தொடர்பற்ற பொருள் என நீங்களே ஒப்புக்கொள்ளுகின்றீர். அப்படியாயின் அதனை அறிவால் ஆராய்வதென்னமோ முடியாத காரியம். அது மனித அறிவின் இயற்கைக்கே விரோதம். ஆகவே அதைப்பற்றி கவலையுறுவது அனாவசியம் எனக்கூறுவர். உண்மையே கடவுள் வாக்கினால் மனத்தால் மற்றை வகுக்கொணா அறிவினாலும் தாக்கொணாத் தலைவன். 'ஆனால் கடவுளை உள்ளபடி அறிந்துகொள்ள இயலாதே ஒழிய அவரைப் பாவனையால் நினைத்துப் போற்ற முடியும். இதைப்பற்றியேதான் ரால்ப் கட்வொர்த் (Ralph Cudworth) என்பார் தமது அழிக்க முடியாத நித்யமான நீதிநெறி' (Eternal and Immutable Morality) என்னும் தமது நூலுள் கடவுளை நம்முடைய கட்டுப்பட்டுக் குறுகிய அறிவால் பூரணமாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை யென்பதால், அவ்வறிவு கடவுளைப் பாவிக்கவுங்கூட முடியாதென்பது உறுதி செய்யப் பெறவில்லை. - - உண்மையில் நம்மை நாமே சரியாய்த் தெரிந்து கொள்ள முடியாது. ஒரு பொருளின் சாரமான உண்மைத் தன்மையைப் பற்றி அதனைச் சரியான வகையில் அடக்கி அனுபவிக்கும் வண்ணம் அறிந்து கொள்ள முடிவதில்லை. நாஸ்திகர்கள் தங்களுக்குத் தங்கள் கையால் தொட முடியுமாகையால் பரிபூரணமாகத் தெரிந்ததாகவும், இவ்வுலகத்திலேயே அதைத் (ஜடப்பொருள்) தவிர வேறொன்றுமில்லை யென்றும் கொள்ளும் உடலைப் பற்றிக் கூடஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்போமாயின் ஒரு முடிவான எண்ணத்திற்கு வரமுடியாது 'உண்மையில் நம்மைப் பற்றியே நமக்குத் தெரிவதில்லை. நாம் யார்? உடலா? மனமா? அறிவா? உயிரா? அதுவே நமக்குத் தெரியாது. ஆனால் நம்மிருப்பைப் பற்றி நாமே சந்தேகப்படுகின்றோமா? இல்லையே. அது போன்றேதான் கடவுளிருப்பும். 'ஒன்றுக் கொன்று தொடர்புடைய பொருள்களை மட்டுமே ஆராயக்கூடியமனது தொடர்பற்ற கடவுளை ஆராயமுடியாது' என்றால் அதற்குநான் பதில் கூறவேண்டுவதில்லை. ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer) என்னும் மேனாட்டுத் தத்துவ சாஸ்திரி வெகு அழகாகப் பதில் கூறியுள்ளார். அதை மொழி பெயர்த் தெழுதுதலே போதுமானது. அதிலும் ஒரு சிறுபாகமே இவ்வாதத்தை உடைத்தெறியும். அவர் கூறுகிறார்: 'தொடர் (Relation) புடையவைகளைப் பற்றியே சிந்தித்தாக வேண்டுமாகையால் தொடர்புடைய பொருள்கள் யாவையுஞ் சேர்த்து யோசிக்க வேண்டின், இவைகளின் முழுமைக்கும் தொடர்பாக ஓர் தொடர்பில்லாத ஒன்றைக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் தொடர்புடையதே தொடர்பற்றதாகி வாதத்தை முன்னுக்குப் பின் முரண்பட்டதாகச் செய்யும் 'ஆகவே இத்தொடர்பறிவு வாதமும் சரியானதாகாது. இது நிற்க.

 

இவைகள் யாவற்றிற்கு மேல் மேற்சொன்ன கட்சியார்களே 'கடவுள் இருக்கிறதென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் அதைப்பற்றிய ஆலோசிக்க வேண்டிய அவசியம் யாது?' எனக் கேட்கின்றனர். வயிற்றுப் பசிக்கு எப்படி சோறிடுகின்றோமோ, அதைப் போன்றே இஃது அறிவுப் பசிக்குச் சோறாகும். மற்றும் அரிஸ்டாடில் (Aristotle) கூறியபடி 'வியப்புணர்வே தத்துவத்தின் தந்தை' என்றதற் கேற்ப இவ்வுலகமும், மாபெரு மண்டகோளங்களும் எங்கிருந்து வந்தன? யார் செய்தார்கள்? முதலிய எண்ணங்களைக் காட்டிலும் அதிக வியப்பைத் தரக்கூடிய கேள்வி வேறு யாதுளது? 'நான் எங்கிருந்து யாரால் படைக்கப்பட்டேன்; ஏன் படைக்கப்பட்டேன்? உலகத்தில் எதற்காக வாழ வேண்டும்? என்றுகூட அறியாமல் வாழ்வதாற் பயனென்ன? வாழ்வென்றாலும், உயிர்ப்பு என்றாலும் அசைதல், மேனோக்கிச் செல்லுதல் என்பதே பொருள். அசைவற்ற தூக்கமே சாவு. அறிவு யென்பது அசையாது மங்கியிருப்பின் மாசுற்ற நீர்த் தேக்கம் போல் அழுகிவிடும். அது தனது வாழ்விற் றவறலாம், தடுமாறலாம், வீழ்ச்சியுறலாம். ஆனால் இதுதான் முடிவு என்று முடிவுகொண்டு ஒரே இடத்தில் அசைவின்றி நிற்க முடியாது. ஆகவே ஒரு விஷயத்தை - அதுவும் வாழ்க்கையின் அடிப்படையான கேள்வியைப் பற்றி நமக்குக் கவலை யில்லை யென்பது அறியாமையேயன்றி வேறொன்றுமில்லை.

 

நாம் இதுவரையில் கூறிவந்துள்ள சுருக்கமான வாதங்களால் கடவு ளிருப்பைப்பற்றி யாருக்கும் யாதொருவிதமான ஐயமும் தோன்றாது என எண்ணுகிறோம். இவைகளால் நாம் அறிய வேண்டுவதெல்லாம் கடவுள் உண்டு, அவரைப் பாவிக்கமுடியும், அவரைப் பற்றிச் சிந்தியாதிருக்க முடியாது; அவ்வாறு இருப்பதும் அறியாமை என்பவைகளே. மற்றொன்று நாம் கடைசியாக – ஆனால் முக்கியத்தில் எவ்வாற்றானும் கடையானதன்று - கூறுவதென்னவெனில், மனிதன், ஏன் ஒவ்வொரு ஜீவராசியும், இன்பத்தையே விரும்புகின்றது. அவ்வின்பமும், அழியாது, குறையாது அள்ள அள்ளப் பெருகும் வண்ணம் நிறைந்து நிற்கவேண்டுமாயின், அவ்வாறுள்ளது கடவுளின்பத்தை யன்றி வேறில்லை. கடவுளே அழிவற்ற நித்ய வஸ்துவாகையால் அவரது இன்பமே அழியாது நித்யமாயிருக்க முடியும். மற்றபடி உலக இன்பங்கள் யாவும் சகடக்கால் போன்று மாறிமாறி வரும். கடவுளையறிந்தவனுக்கு உண்மையில் பயமில்லை. அவனே இவ்வுலகத்திற்கெல்லாம் தலைவன். அவனே எல்லாமாகிறான். அதனாலேயே இராமலிங்கர் பாடுகின்றார்


 சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
 தேவர்களும் மூவர்களும் பேசுதென் பேச்சு
 இச்சமய வாழ்விலெனக் கென்னையினி யேச்சு
 என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு


என. இத்தகைய வீறும், ஞான தீரமும் கடவுளுணர்வால் அடைந்து நாம் வாழ்வில் நலமுறுமாறு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. கடவுளில்லை என்போரின் பேச்சு வன்மையிற்சிக்கி நாம் இவ்வழியாத இன்பத்தை இழவாதிருப்போமாக.


ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜுன் ௴

 

 

 

No comments:

Post a Comment