Saturday, August 29, 2020

 

கடவுள் பக்தியா காட்டுமிராண்டித்தனமா?

 

பற்பல துறைகளிலும் அறிவு வளர்ச்சியும்-நாகரிகமும் மேலோங்கி வருவதாகப் பெருமை பேசப்படும் இந்த இருபதாம் நூற்றாண்டில்-புண்ணியபூமி - ஞானக் களஞ்சியம் என்று வானளாவ வருணிக்கப்படும் நமது நாட்டில், இன்னும் கடவுளின் பேராலும், சாஸ்திரங்களின் பேராலும், பக்தியின் பேராலும் காட்டுமிராண்டித்தனமான காரியங்களும் கொலைபாதகச் செயல்களும் நடைபெற்றுவருவது பெரிதும் மானக்கேடான விஷயமாகும். இந்த ஏப்ரல்மீ 3-ம் நாளில் திருவண் ணாமலையைச் சேர்ந்த அடியண்ணா மலையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேர் கடவுளின் பேரால் கொலையுண்டிறந்த கோர சம்பவத்தைத் தினசரிப் பத்திரிகைகளில் கண்டதும் ஒன்றும் தோன்றாமல் நாம் திடுக்கடைந்துவிட்டோம்.
அந்தோ ஒருயிரா-ஈருயிரா? ஏழுபேர்! பகவானுக்கு நரபலி! ஐம்பது வயது படைத்த மனிதர் தம் மனைவியையும், மக்களாகிய வயதுவந்த இரண்டு ஆண்களையும், இரண்டு பெண்களையும், ஒரு குழந்தையையும் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தாமும் தற்கொலை செய்துகொண்டார் என்றால் இது மிருகச் செயலா? மனிதச் செயலா? என்று சற்றே சிந்திக்குமாறு நேயர்களை வேண்டுகின்றோம். இந்தக் கொலைபாதகம் செய்த மனிதர் திரிச்சி உடையார்பாளையத்தைச் சேர்ந்தவராம். வைத்தியலிங்கப் படையாச்சி மகன் வேலாயுதப் படையாச்சியாம். ''நாங்கள் மனமார இறந்து விடுகின்றோம்.
எங்களுடைய தேகங்களை மரண பரிசோதனை யாதும் செய்ய வேண்டாம்.
உடல்களை இனத்தவரே அடக்கம் செய்யட்டும்'' என்ற பொருள்பட ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தாராம் – அந்தக் கொலை பாதக வேலாயுதப் படையாச்சி. இவர் தம் குடும்பத்துடன் ஸ்தல யாத்திரை தெய்துவிட்டு வந்ததாகவும் செய்தி எட்டியது. கொலை யுண்டவர்களின் நெற்றிகளிலெல்லாம் குங்குமப் பொட்டுகள் இருந்தனவாம். இவர்கள் கொலையுண்ட இடத்தில் குங்குமம் வைக்கப்பட்டு -- பூஜை நைவேத்தியங்களும் செய்யப்பட்டு –வெற்றிலை பாக்கு-தேங்காய் பழம் - கற்பூரம் வகையராக்களும் வைக்கப்பட்டிருந்தனவாம். இந்தக் கோர சம்பவத்திற்கு அடிப்படையான காணம் இஷ்டசித்திக்குரிய காமிய நோக்கமா? கடன் முதலிய குடும்பத் தொல்லைகளா? என்ற ஆராய்ச்சியில் இறங்க நாம் விரும்பவில்லை. அஃது எவ்விதமாயினும் ஆகுக. இந்தக் கொலைகளைக் கடவுளின் பேரால் நடத்திவிட்டால் குற்றமில்லை - பாவமில்லை என்ற நம்பிக்கை அந்தக் கொலையாளருக்கு ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதில் சிறிதும் இடமில்லை என்பதே நமது அபிப்பிராயம். கடவுளின் பேரால் நரபலி கொடுக்கும் வழக்கம் நமது நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது என்னும் உண்மையை இன்றும் பண்டை நூல்களில் காணலாம். இது ஒரு வகையான மத வுணர்ச்சியாகவும்
மதிக்கப்படுகிறது. சில மாதங்கட்குமுன் வட இந்தியாவில் ஒரு ஊரில் ஸ்ரீ காளிகோவிலில் நரபலி' கொடுக்கப்பட்ட செய்தியையும், இதே திருவண்ணாமலைப் பக்கத்தில் கடவுளின் பேரால் நடைபெற்றதையும், கோவை ஜில்லா படுமலைப்பேட்ன சோமவாரப்பட்டிக் கண்டியம்மன் கோவிலில் ஒரு பூசாரி தன் மகனை “நரபலி' கொடுத்ததையும் நேயர்கள் பத்திரிகைகளில் படித்திருக்கலாம். இக்காலச் சட்டப்படி இவையெல்லாம் குற்றமானாலும் மத வுணர்ச்சி என்று மதிக்கப்பட்டால் குற்றமில்லை என்றே எண்ண இடம் உண்டு. தெய்வங்கட்கு ஆடு, கோழி, எருமைக்கடா முதலியவைகளைப் பலி கொடுப்பதும் இந்த "நரபலி'' மதத்தின் ஒரு கிளை என்றே கருதலாம். அவ்விதம் தெய்வங்களின் பேரால் நரபலிகளும், ஏனைய உயிர்ப்பலிகளும் நிகழ்வதற்குக் காரணமாக விளங்கும் மூடநம்பிக்கைகளை வேருடன் களைந்தெறிய வேண்டிய பொறுப்பு யாரைச்சேர்ந்தது என் கேட்கின்றோம். யாரோ ஒரு சில அறிஞர்கள் என்போர் இத்தகைய பலிகளை உண்மைச் சமயம் அநுமதிப்பதில்லை என்று வாயளவில் பேசிவிட்டால் போதாது. உண்மையான சமய தத்துவங்களை நாட்டில் பரப்பக் கடமைப்பட்டவர்களாகிய சமயத் தலைவர்கள் - மடாதிபதிகள் இந்த மூடக்கொள்கைகளை வெட்டி வீழ்த்த முன்வர வேண்டும்.

 

நமது நாட்டில் உண்மையான--மக்கள் வாழ்க்கையை வளம் படுத்தக் கூடிய மகக்கொள்கைகள் மறைந்து விட்டமையினாலேயே கடவுளின் பேராலும் சாஸ்திரங்களின் பேராலும் பல கொடுமைகள் நிலவி வருகின்றன. இப்பொழுது நாம் சுதந்தாம் இன்றி வறுமையிலும், அறியாமையிலும் வருந்திக் கொண்டிருப்பதற்கு நமது சமூக அமைப்பும் அதற்காதாரமான சமயக் கட்டுப்பாடுகளும் வெகுதூரம் காரணமாயிருக்கின்றன என்பதைக் கண்கூடாகக்கண்டு வருகின்று றோம். பலவித மூடக்கொள்கைகளும் சாதிசமய வேற்றுமைகளும், தீண்டாமையும், பெண்களின் அடிமைத் தன்மையும் ஹிந்து சமூகத்தைப் பாழ்படுத்தி வருகின்றன என்பதை எவரே மறுக்க வல்லார்? அரசியல் விடுதலைக்கு இவையெல்லாம் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன என்பதை உணர்ந்த காந்தியடிகள் போன்ற தலைவர்கள் இப்பொழுது தீண்டாமை விலக்குப் போன்ற சமூகச் சீர்திருத்தத்
தொண்டில் முனைந்து நிற்பது பெரிதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். பெரிய பெரிய சாஸ்திரிகள் என்பவர்களும் பண்டிதர்கள் என்பவர்களும் மடாதிபதிகள் என்பவர்களும், காந்தியடிகளுடன் போர் தொடுக்க முற்படுகின்றார்களே யொழிய நமது நாட்டின் -சமூகத்தின் தற்கால இழிநிலையை ஒரு சிறிதும் உணர்ந்து நடக்கின்றார்கள் இல்லை என்பதை எண்ணி எண்ணி வருந்த வேண்டியிருக்கிறது. ஆனால் இப்பொழுது எடுத்துக்கொண்ட விஷயம் இது அல்ல. நரபலி-ஏனைய உயிர்ப்பலிகளின் கொடுமைகளை எடுத்துக் காட்ட வந்த சந்தர்ப்பத்தில் மூடநம்பிக்கையின் பாற்பட்ட தீண்டாமைபோன்ற சமூகத் தீமைகளைச் சிறிதே நினைவூட்டக் குறிப்பட்டதை மற்றொன்று விரித்தலாகக் கருதா திருக்குமாறு நேயர்களை வேண்டுகின்றோம்.

 

நமது உண்மைச் சமயம் நரபலி மற்ற உ உயிர்ப்பலிகளை அது மதிக்கவில்லை நாம் ஒப்புக்கொள்ளுகின்றோம். ஆனால் அவை இக்காலத்திலும் தாராளமாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. சிறு தேவதைகட்குப் பலிகள் மாத்திரமா? இன்னும் எத்துணையோ ஊழல்கள் அவற்றின் பேரால் நடந்து கொண்டிருக்கின்றன. ஊர்த்தேவதைகள் அல்லது கிராமதேவதைகட்கு ஆண்டுதோறும் விழாச் சிறப்புச் செய்யுங் காலத்தில் சாதாரண மக்களின் நேர்ச்சிக்கடன்களும் வேஷங்களும். -- பயங்கரமும் அருவருப்பும் நிறைந்த காட்சிகளாக இருக்கும். மாரியம்மன்--மாகாளியம்மன்--திரௌபதியம்மன் முதலிய தேவதைகளின் திருவிழாக்களில் என்ன காரியங்கள் நடக்கின்றன? ஆடு கோழிகளைக் கொன்று தின்னல், கள்ளுண்டு களித்தல், கண்டவர்கள் எள்ளி நகையாடி அருவருக்கும் படியான இழிந்த வேஷங்களைப் போட்டுக்கொண்டு ஆடல், துர்ப்பாஷைகளோடு கூடிய பாட்டுக்களைப் பாடல் முதலியவைகளே தற்கால ஊர்த்தேவதைகளின் திருவிழாக்களாக விளங்குகின்றன. நெருப்பு மிதித்தல், நெருப்புச்சட்டிகளை எடுத்துக்கொண்டு குதித்தல், உடம்புகளிலெல்லாம் எள்ளு விழவும் இடமின்றி ஊசிகளைக் குத்திக்கொள்ளல், அவ்வூசிகளில் தேங்காய்- இளநீர்--பழம் - பன்னீர்ப்புட்டி முதலியவைகளைக் கட்டித் தொங்கவிடல், நாக்கிலும், கன்னங்களிலும் நீண்ட ஊசிகளைக் குத்திக்கொள்ளுதல் முதலிய கொடுமைகள் நேர்ச்சிக் கடன்களாகவும் பக்தியாகவும் சாதாரணமாக மதிக்கப்படுகின்றன. எந்தச் சமய சாஸ்திரம் இந்த அநாகரிகச் செயல்களுக்கு இடந்தருகின்றது என்று எமக்கு விளங்கவில்லை. கோவை ஜில்லா - பொள்ளாச்சி முதலிய ஊர்களில் முதுகுகளில் பெரிய கொக்கிகளைக்குத்தி அவற்றில் சிறுதேர்களையும், மோட்டார்கார்களையும் பிணித்து, கைகளில் நெருப்புச் சட்டிகளை ஏந்திக்கொண்டு மூடப் பூச்சிகள்களான மக்கள் கொடும் வெய்யிலில் இழுத்துச் செல்லுவது மகாகோர-விபரீதக் காட்சியாக இருக்கும். இவ்வித “நேர்ச்சிக் கடன்''களை நிறைவேற்றுவோருள் சிலர் இவ்வாறு செய்வதை உண்மை யாகவே பக்தி என்று அறியாமையால் நம்பினாலும், அநேகர் மற்றவர்கள் தங்களை வீரர்கள் என்று பாராட்ட வேண்டும் என்ற ஆசை கொண்டே அந்தச் சங்கடமான காரியங்களில் தலையிடுகின்றார்கள் இவர்களிடம் பக்தியோ சிரத்தையோ இருப்பதாகச் சொல்லிவிட முடியாது. இத்தகைய கொடுந்துன்பச் செயல்கள் தேவதைகளின் பேரால் சகஜமாக நடைபெறுவதும், இவற்றிற்குச் சமூகம் இடந்தந்து ஆக்கமளித்து வருவதுதான் கடைசியாக மக்களையே கடவுளர்க்கு நர பலியிடும் படியான மனப்பான்மையையும், உணர்ச்சியையும், மூடத்துணிச்சலையும் கிளப்பிவிடுகின்றன என்று எடுத்துக்காட்ட விரும்புகின்றோம். அடியண்ணாமலையில், பெற்ற மக்களையும், கர்ப்பவதியான மனைவியையும் சித்திரவதை செய்துவிட்டுத் தாமும் தற்கொலை செய்து கொள்ளும்படியான உணர்ச்சியும் மனப்பான்மையும் அந்த வேலாயுதப் படையாச்சிக்கு எங்கிருந்து வந்தது என்று கேட்கின்றோம்? கடவுளின் பேரால் இந்தக் கொலைகளைச் செய்துவிட்டால் பாவமில்லை என்று அவர் கொண்டிருந்த மூட மத நம்பிக்கையே இவ்விபரீதத் துணிச்சலுக்குக் காரணமாகும் என்பதை எவரே மறுக்கத் துணிவார்? நமது நாட்டில் தோன்றிய சைவ-வைணவ-அத்வைத-பௌத்த-சமண முதலிய எந்தச் சமயமும் கடவுளின் பேரால் நரபலி கொடுப்பதையோ ஏனைய உயிர்ப்பலி கொடுப்பதையோ அங்கீகரிக்கவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். ஆனால் சமய தத்துவங்களும் சமய உணர்ச்சியும் வீறிட்டு விளங்குவதாகச் சொல்லிக் கொள்ளும் ஹிந்து சமூகம் இக்கொடுமைகளை நீக்க என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதே நமது கேள்வி. “தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்த வேண்டும் என்றால் மதம் போச்சு - ஒன்றுமறியாத பச்சிளங் குழந்தைகட்குக் கலியாணம் செய்யக்கூடாது என்றால் மதம் போச்சு--பாலிய விதவை கட்கு மறுமணம் செய்ய வேண்டும் என்றால் சாஸ்திர விரோதம் விபசாரத் தீமையை ஒழிக்க வேண்டும் - கோவில்களில் சிறு பெண்கட்குப் பொட்டுக் கட்டும் மானக்கேட்டை நீக்க வேண்டும் என்றால் ஆகம விரோதம் - ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்கள் சதிர் ஆடக்கூடாது என்றால் கலை நாசம்'' என்று கூச்சல் போடும் சாஸ்திரிகளும், பண்டிதர்களும், வைதிகத் தலைவர்களும் – மடாதிபதிகளும் அவர்களைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளுவோரும் இந்த நரபலி-உயிர்ப்பலிக் கொடுமைகளை ஒழிக்கக் கடுகளவேனும் முயற்சி செய்கிறார்களா என்று கேட்கின்றோம். "நமது சமூகம் முன்னேற
வேண்டும் - நாடு முன்னேற வேண்டும் - நாம் விடுதலை பெற்றுச் சுதந்தர இன்பம் அடைய வேண்டும்; ஆகையால் அம் முன்னேற்றங்கட்கு முட்டுக்கட்டைகளாகவுள்ள பொருளற்ற மூடப்பழக்க வழக்கக் கொடுமைகளை நாட்டினின்றும் ஒழிக்கவேண்டும்'' என்றால் முகடுமுட்ட வெறுங் கூச்சல் போடும் குறுகிய நோக்கம் படைத்த சமயத் தலைவர்கள் இருக்கும் வரை கோரமான நரபலிக் கொடுமைகள் நிகழ்வதில் வியப்பொன்றுமில்லை என்பதே நமது கருத்து. அன்பும்-அஹிம்சையும் அடிப்படையாக விளங்கும் சமயங்கள் நிலவிய நமது நாட்டில் இப்பொழுது கொலைக் கொடுமை அடிப்படையாகவுள்ள வெறும் சம்பிரதாயங்கள் மட்டும் வேரூன்றிக் கிடக்கின்றன. உண்மைச் சமய தருமங்களை நாட்டில் பரப்பவேண்டிய மடாதிபதிகளும்-ஆச்சாரியர்களும் இக்காலத்தில் ராஜபோகக் களியாடல்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். தங்கள் கடமைகளை மறந்து லௌகிக கௌரவங்களில் பித்துப்பிடித்தலைகின்றனர். எப்படிப் பேசினால் ஜனங்களிடம் பொருளை எளிதில் பறிக்கலாமோ அப்படிப் பேசிக்கொண்டு திரிகின்றனர். இவர்களா மக்கள் வாழ்க்கையைச் சீர்திருத்துகின்றவர்கள்? இவர்களா ஆன்மார்த்த வழி காட்டுகின்றவர்கள்? என்று கேட்கின்றோம். கிறிஸ்தவ சமயத் தலைவர்கள் நமது நாட்டில் செய்து கொண்டிருக்கும் அற்புதச் செயல்களேனும் இவர்களுடைய கண்களைத் திறந்துவிடவில்லையே. கிறிஸ்தவ மிஷனரிகள் எங்கே பிறந்தவர்கள்? எங்கே வளர்ந்தவர்கள்? எந்நாட்டுப் பொருள்களைக்கொண்டு அவர்கள் இந்நாட்டில் வேலை செய்து வருகிறார்கள்? என்ற விஷயங்களை நமது மடாதிபதிகள்-ஆச்சாரியர்கள் அணுவளவேனும் சிந்தித்துப் பார்க்கின்றார்களா? இல்லை! இல்லை!! ல்லை!!! - என்றே கூறிக் கூறி வருந்தவேண்டி யிருக்கிறது. சமயத் தலைவர்களின் அசட்டுத் தனத்தினாலேயே ஆண்டுதோறும் பல்லாயிரத் கணக்கான ஹிந்து மக்கள் அந்நிய மதத்தவர்களாகி வருகின்றனர். கிறிஸ்தவ சமயத் தலைவர்கள் நமது நாட்டில் நிறுவியுள்ள கல்லூரிகட்கும்-கலாசாலைகட்கும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கட்கும் - ஆஸ்பத்திரிகட்கும் ஒரு அளவு உண்டா? இவ்வேற்பாடுகளின் நுட்பங்களை ஏன் நம்முடைய சமயத் தலைவர்களும் உணர்ந்து கடைப்பிடிக்கக்கூடாது என்று கேட்கின் எறோம். ஆக ஆண்டுதோறும் வரும் லக்ஷக்கணக்கான வருவாய்களை விழலுக் கிறைக்கவா நமது முன்னோர்
கள் மானிய ஏற்பாடு செய்துவிட்டுப் போனார்கள்? கிறிஸ்தவர்களின் நல்ல வழிகளைப் பின்பற்றி நமது சமயத் தலைவர்களும் உண்மைச் சமய தருமங்களை நாட்டில் பரப்ப முயன்றால் தெய்வங்களின் பேரால் நிகழும் நரபலி--உயிர்ப்பலிக் கொடுமைகள் போன்றவை இங்கே தலைகாட்டுமா? வேலாயுதப் படையாச்சி குடும்ப ஆவேசங்கள் நமது சமயத் தலைவர்களையும் மக்களையும் தட்டியெழுப்பி விழிக்கச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம்.

ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1933 ௵ - ஏப்ரல் ௴

 

 

 

No comments:

Post a Comment