Saturday, August 29, 2020

 

கடவுள் வழிபாடு

கல்வியறிவு ஒழுக்கம் நிறைந்த பத்திரிகாசிரிய ரவர்கட்கும் மற்றப் பெரியோர்கட்கும் சிற்றறிவுடையவனாகிய எனது தாழ்மையான விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகைகட்கு விஷயதானம் புரிவோர், சுருதி - யுக்தி - அநுபோகம், நிரம்பப் பெற்றவராயும் டம்பமின்மை யுடையவராயும் - தம்பெயர், விஷயத்தின் கீழ்ப்பொறித்திருப்பதை யாவருங்கண்டு கொள்ள வேண்டுமென்ற வீண் எண்ணமின்மை யுடையவராயும், கதைகளின் நகலையே வியாசமாக எழுதாதவராயும், தமிழில் வசனநடைகளை சாஸ்திரவல்ல மையினால் தாமே எழுதுபவராயும், அறம்பொருள் இன்பம், வீடு அடைதல் நூற்பயனே, என்பதை விளக்கி எழுதுபவராயும் வன்மை வாய்ந்த இலக்ஷணங்களமைந்துள்ளவரே விஷயதானம் புரிய அதிகாரிகளாவார்கள். ஆயினும் இவ்வியல்பின்மையான யான் பின்னர் வரும் வியாசத்தை, அறிவுடையோர்கள் முன்னர் எழுதப்புகுவது எத்தகையதெனின்,


            அறையு மாடரங் கும்மடப் பிள்ளைகள்
            தறையிற் கீறிடிற் றச்சருங் காய்வரோ
            இறையு ஞானமி லாதவென் புன்கவி
           முறையி னூலுணர்ந் தாரு முனிவரோ

 

என்ற திடத்தை யொக்கும். குற்றங்களிருப்பின் அவைகளை நீக்கிக் குணங்களைக் கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.

 
 கடவுள் வழிபாடு

 

இக்காலத்தில் கடவுள் வழிபாட்டின் நிலைமையைப் பற்றி ஆராயின் மிக்க பரிதாபமாகவே யிருக்கிறது. முற்காலத்தில் " ஆலயந்தொழுவது சாலவு நன்று'' என்ற முதுமொழிக்கிணங்க, அரசர்கள் முதல் ஏழைகள் வரையில் உள்ளவரனைவரும் இந்து நீதி சாஸ்திரங்களிற் கூறப்பட்ட விதிகளை யநுசரித்து, திருக்கோவிலில் சுவாமி தரிசனஞ் செய்யப் புகுந்தால், கடவுள் இன்ன நிலைமையுடையவ ரென்றும் நாமின்ன நிலைமையுடையோ மென்றும் அறிவினா லாராய்ந்து மனவாக்குக் காயமாதிய திரிகரண சுத்தியாய் ஏதாவது சில கையுறையோடு சென்று படைத்தளித்துத் துடைக்கவல்ல பழம்பொருளைக் கண்களினாலே கண்டுகளித்து, நாத்தழும் பேறப்பாடி, உரோமஞ் சிலிர்ப்ப வானந்த பரவசங்கொண்டு, நமஸ்காரஞ் செய்து மிக்க புண்யப்பேற்றினையடைந் தார்கள். எவ்வாறெனிற் கூறுதும்.

 

முற்காலத்தில் மகரிஷிகள் நிறைந்த, ஞான மணங்கமழ்ந்த, அதிகவிகள் மலிந்த இப்பரத கண்டமாகிய இவ்விந்திய க்ஷேத்திரத்தை முத்தமிழில் வல்ல உத்தமர்களாய், சித்த சீலர்களாய், அருளொழுகு மன்பையே யுடைமையாகப் பெற்ற இந்திய மன்னர்களே செங்கொல் வழுவாது ஆண்டு அரசியலை நடாத்தி வந்தனர்.

 

அம்மன்னர்களாலயதரிசனஞ் செய்யப்புகுந்தால் ஒரு ஏழ்மை நிலையுடையவராய் நானென்கின்ற வகங்காரத்தையும் எனதென்கின்ற மமகாரத்தையும் ஒழித்து, ஆண்டான் அடிமையென்ற சம்பந்தத்தோடு ஆடம்பரமற்ற செய்லினராய் சுவாமி தரிசனஞ் செய்து வருவது வழக்கம். மேற்கோளாக சிறிது கூறுவாம்.

 

புண்ய க்ஷேத்திரமாயு முத்தித்தலங்களிலொன்றாயும் விளங்குகின்ற மது ரையம்பதியிலே முன்காலத்திலே அரசியல்கள் நடாத்தி வந்த, பாண்டிய இராஜாக்கள் நாடோறு மாலயத்திற்குச் சென்று சோமசுந்தரக் கடவுளை யபரி மிதமான அன்போடு வழிபாடு செய்து மிக்கவுருக்கமாக நாக்களினாலே பகவானின் ஆடற்குணங்களைப் பாக்களினாற் பக்தியாகப்பாடி, கண்களிலிருந்து ஆனந்த நீர்த்தாரைகளைப் பொழிந்து பக்திப்பிரேமையுடன் மன்னர் முடிபணியும் பொன்னந் தாள்களால் வலப் பிரதக்ஷிணஞ் செய்து அறிய வொண்ணா வானந்த நிலையடைந்துளார்க ளென்பதைப்பற்றி, நம்மினிய பாஷையாகிய தமிழில் பரஞ்சோதிமுனிவர் செய்தருளிய திருவிளையாடற் புராணத்திற் படித்துங் கேட்டு மிருக்கிறோம்.

 

ஆனது பற்றித்தான் நம்முன்னோர்களும் அரசனெப்படி குடிகளப்படியென்று சுருக்கிக்கூறின முதுமொழிக்கேற்ப அனைவருமவ்வாறே ஆத்ம வைக்ய வாலய வழிபாடு செய்து வந்தனர். சுதேசமன்னர்களின் செல்வாக்காகிய வாதிக்கமில்லாத நவீன நாகரீகப் பேய்பிடித்தலைக்கு மிக்காலத்தில் போதிய தாய்ப்பாஷைக் கல்வியின்மையும், பேரறி வின்மையும், பேச்சுரிமை யின்மையும், பக்தியின்மையுமுள்ள சில இந்திய பிரபு முதல் ஏழைகள் காறுமுள்ள ஜனங்கட்குப் பிரதிநிதிகளாகப் பேரறிவுள்ளவர்களே, இந்தியர்கள் எந்தவித நிலைமைகளினின்றுந் தவறாது நடந்து கொள்வதற்கு வழி காட்டியாக விருக்க வேண்டும். அஃதின்றி ஜனப் பொறுப்பாட்சி பெற்ற அவர்களே முன்னிருந்த சைவசமயகுரவர் முதலாகச் சொல்லப்பட்ட மகான்கள் நடந்து காட்டிய ஒழுக்க வழிகளை யெல்லாம் ''புதியன புகுதல் பழையன கழிதல் வழுவலகால வகையினானே'' என்று தப்பர்த்தம் செய்து கொண்டு காலத்துக்குத் தகுந்த கோலமாக ஆலயத்தினுட் புகும்போது ஆண்டான் அடிமை யென்னு மறிவாற்ற லில்லாதவர்களாய் தோன்றி மறையுஞ் சிற்றின்பப் பட்டத்தைப் பெரிதென மதித்து, மேனாட்டு வழக்கவுடை தரித்தவர்களாய் ஆடம் பரத்துடன் செல்கின்றார்கள். அதுகண்ட ஏனைய சுதேச சமஸ்தான ராஜாக்களும், தேவஸ்தான கர்த்தாக்களும் டிரஸ்டி யாபீஸர்களும் மற்ற ஏனையசிப் பந்திகளும், அவ்வாறே கற்றுக் கொள்கின்றனர். அறிவாளிகளுற்றுணருங்கள். உலகத்திலொருவர் எவ்விதகாரண முடைமையாலோ அல்லது இன்மையாலோ ஒரு கொள்கையை நடந்து காட்டினா லாற்றிவு பெற்ற நாமதை (எப்பொரு ளெத்தன்மைத் தாயினுமப் பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு) என்பதற் கிணங்க அவைகளினுண்மைப்பாகு பாட்டையறிந்து நடக்க வேண்டும். மேனாட்டு விதிக்கும் நம்நாட்டு விதிக்கும் யாதொரு சம்பந்தங் கிடையாது. ஏனெனில் அந்நாட்டில் எப்பொழுதும் பனியுமழையு மிகுதியானதினாலே மிகவும் குளிருண்டாகும். அதனாலவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாதத்திற்கு பூட்சும், காலுக்கு உரத்த சட்டையும் மேலுக்கு கடினமும் வெப்பமுமுள்ள பெரிய பிளானல் கோட்டும் தலைக்கு இடமகன்ற நவீன தொப்பியு மவர்கள் சதாகாலமு மணிந்து கொள்வார்கள். அவர்கள் சபைக்குச் சென்றாலும் இயேசு ஆலயங்களுக்குச் சென்றாலும் அவ்வாடம்பர வுடைகளுடன் சென்று தரைமிகவும் குளிராயிருப்பதனால் அங்கு போடப்பட்டிருக்கும் நாற்காலி முதலிய வாசனங்களிலமர்ந்து அப்படியே அவர்கள் கடவுள் வழிபாடு முதலான காரியங்களைச் செய்வார்கள். தேசத்தின் சீதோஷ்ண ஸ்திதிக்குத் தகுந்தபடி அநுஷ்டானங்களுள்ளன. நம்தேசமோ உஷ்ணமிகுந்தது. திருக்கோவிலுள்ளும் இரதோற்சவத்தினும் சன நெருக்க மிகுதியினால் வெப்பம் மிகுதியே. அப்படியிருந்தும் தெய்வப்பிரீதி யில்லாததாயும் ஆடம்பரமுதலிய குணங்களைக் கொடுப்பதாயும் சரீரத்திற்கு வியர்வையினால் நாற்றத்தையும், கஷ்டத்தையுங் கொடுக்கக்கூடிய சட்டை டை முதலியவைகளை அணிந்து, ஈஸ்வர சிந்தனையற்று டாம்பீகத்துடன் செல்வது ஒரு நன்மையும் கொடாது.

 

மற்றும் ஜீவப்பிரம வைக்கியத்தை யடையு மருமையான அறிவாளிகள் வம்சத்திலே தோன்றியுள்ள பிராமணர் முதலாகவுள்ள வைதீக ஹிந்துக்கள் சிரசிலே பசுவின் குளம்படி சிகைவைத்துக் கொள்ள வேண்டு மென்று ஸ்மிருதிகள் கூறுகின்றன. அவற்றை யெல்லாம் அநாகரீகமென்று புறக்கணித்து அம்பட்டனைக்கொண்டு கால்வெட்டு அரைக்கால் வெட்டுகளாக வெட்டித் திருகி, முருக்கி வகிர்ந்து எண்ணெயிட்டு சீவி பாதிநெற்றிபரியந்தம் தொங்கி விழும்படி சிகை விட்டிருக்கிறார்கள். அந்தக் குதிரையின் மயிரைப் போன்று சிகை தொங்கி விழும்படியான நெற்றியிலே சிவச்சின்னமாகிய விபூதியையோ அல்லது திருமண்ணையோ தரித்தால் அதற்கு பங்கம் வந்துவிடுமென்று நினைக்கிறார்கள். பிரசாதங் கொடுக்கும்படியான விபூதியை யப்படியே திலதமிட்டு மற்ற மிகுதியை மார்பிலணிய வேண்டுமென்றாலோ அது சட்டைகளாகிற நாகரீகவுறை யால் நன்றாய் மூடப்பட்டிருக்கின்றது. என் செய்வார். கீழே தூவி விடுகின்றார்கள். இவர்கள் கதியென்ன.


 வாங்கிய திருவெண்ணீற்றை மண்ணின் மேற் பாதிபோட்டே
 யாங்கதைத் தூவித் தூவி யணிகின்ற மூடர்க்கெல்லாம்
 பூங்குழற் கமலைசேராள் புலையரிற் புலையராகித்

 தீங்குள்ள நரகந்தன்னி ற் சேர்வது திண்ணன்தானே 

 

என்றார் ஓர் பெரியார். இக் கதிக்கான கூடாவொழுக்கத்தைவிட்டு கடவுளுண்டென்கின்ற பயபக்தி யுடையவர்களாய் புராதன காலத்து பெரியார் நடந்து கொண்ட விதிகளை அறிவாளிகளூன்றிப் பார்ப்பார்களாக. இவ்விதமின்றி அந்யாய ஆடம்பர வழிபாடெல்லாம் ஒருகாலுந் தெய்வப்பிரீதியாக வேயாகாது, இன்றிருந்து நாளையிறக்குந் தொழிலுடைய மாக்கள் புரியும் ஆடம்பர அந்யாய அநாகரீக வழிபாடானவை குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்வதை யொக்கும். இவையெல்லாம் அறிவாளிகளுக்குத் தெரியாதவையல்ல. எம்பெருமானின் ஆலயத்திலும் அந்நிய நாட்டு ஆசாரவழக்கங்கள் வந்து தாண்டவமாடுகின்றனவே. இதுவு மீசனினுறக்கமோ, கால நிர்ணயவழக்கமோ, கலிகாலத்தி னொழுக்கமோ என்பதை என் மனம் உன்னி யுன்னி, அக்கினியிற்பட்ட மெழுகுபோல வல்லற்படுகின்றது. இக்குறைக ளெல்லா வற்றையும் பேரறி வில்லாத வெம் போன்றவர்களால் பத்திரிகைகள் மூலமாவது பிரசங்கமூலமாவது நிவிர்த்தி செய்ய நினைப்பது கடலிற் காயத்தையுறைப் பதையொக்கும். இக்குறைகளை யருக்கனொளி போன்ற அபார சக்தியுடைய அய்யனாமீச னருள் புரிந்தகற்றுவாராக.


 வை. பெ. பெருமாள் ரெட்டி. 

ஆனந்த போதினி – 1926 ௵ - செப்டம்பர் ௴

No comments:

Post a Comment